Published:Updated:

ஆதவன் வழிபடும் உதயகிரி வேலவன்!

உதயகிரி வேலவன்!
பிரீமியம் ஸ்டோரி
உதயகிரி வேலவன்!

ர. பிரேம்குமார், படங்கள்: வே.தேனரசன்

ஆதவன் வழிபடும் உதயகிரி வேலவன்!

ர. பிரேம்குமார், படங்கள்: வே.தேனரசன்

Published:Updated:
உதயகிரி வேலவன்!
பிரீமியம் ஸ்டோரி
உதயகிரி வேலவன்!

குமரக் கடவுளின் மகிமையைச் சொல்லும் தமிழ்நாட்டு மலைக் கோயில்களில் ஒன்று, திருப்பூர் மாவட்டம் - மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி கோயில்.

உதயகிரி முத்துவேலாயுத சுவாமி கோயில்
உதயகிரி முத்துவேலாயுத சுவாமி கோயில்


இந்தக்கோயில் மிகவும் பழைமையானது என்கிறார்கள் இப்பகுதி பக்தர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலையப்பாளையம் பகுதியில் வசித்த மக்களின் கனவில் தோன்றி, இங்கே தமக்கு ஆலயம் அமைத்து வழிபடும்படி ஆணையிட்டாராம் முருகப்பெருமான். அதன்படியே இங்கே ஆலயம் உருவானது என்பது செவிவழித் தகவல். ஆய்வாளர்களும், கோயில் இருக்கும் பகுதியை ஆராய்ந்து, இது ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது என்று சான்றளித்து உள்ளார்களாம்.

`வேலுண்டு வினையில்லை’ எனும் வாக்குக்கிணங்க, ஆதியில் வேலாயுதத்தை வைத்தே வழிபட்டுள்ளார்கள். பிற்காலத்தில்தான் சிறந்த கட்டட பாணியுடன் கோயில் உருவானதாம். கோயிலின் தூண்கள் மிகத் துல்லியமாக நேர்க் கோட்டில் அமைந்திருப்பது, இந்த ஆலயத்தின் கட்டுமானச் சிறப்புக்கான சான்று என்கிறார் கள் பக்தர்கள்.

உதயகிரி முத்துவேலாயுத சுவாமி
உதயகிரி முத்துவேலாயுத சுவாமி
உதயகிரி  கோயில்
உதயகிரி கோயில்


குகை போன்ற அமைப்பிலான தியான மண்டபம் ஒன்றும் கோயிலில் உள்ளது. அங்கே அமர்ந்து தியானித்தால் மன அமைதி கிடைக்கும்; சஞ்சலம் தீரும் என்பது நம்பிக்கை. கோயிலின் அருகிலுள்ள சரவணப்பொய்கை, பல நூற்றாண்டுகள் பழைமையானது; இந்த ஊற்றில் நீர் வற்றியதே இல்லையாம்!

இங்கே சிவனார் உமையம்மை சந்நிதிக்கு நடுவே, மேற்கு நோக்கி சந்நிதி கொண்டுள்ளார் முருகப்பெருமான். `வேண்டிய வரம் தரும் வள்ளல் எங்கள் முருகன்’ என்று சிலிர்ப்புடன் கருத்து தெரிவிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

கிருத்திகை நட்சத்திர நாளில் உதயகிரி வேலாயுத சுவாமியை வழிபட வரும் பக்தர்கள் ஏராளம். அன்று சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. இந்த முருகனை வணங்கி ஆறுமுறை பிராகார வலம் வந்து வழிபட்டால், நம் குறைகள் யாவும் நீங்கும்; வேண்டுதல்கள் விரைவில் பலிக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரா பெளர்ணமி வைபவமும், அருணகிரிநாதர் குருபூஜையும் இந்தத் தலத்தில் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன. அதேபோல், சித்திரை மாதம் 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் உதயகிரி வேலவனின் திருமேனியைத் தழுவி வழிபடுவது, கண்கொள்ளா காட்சியாகும்.

இந்தத் தினங்களில் உதயகிரி வேலவனை வழிபட்டால், நம் துன்பங்கள் தீரும்; நினைத்த நற்காரியங்கள் நல்லபடியே நிறைவேறும்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்குச் சிறப்பு சேர்க்கும் விதத்தில் - திருக்குறள் மலைச் சங்கம் சார்பில், 1,330 குறள்களையும் இக்கோயிலைச் சுற்றியுள்ள மலைப்பகுதியில் கல்வெட்டுகளாக வடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னோட்டமாக ஒரு திருக்குறள் இங்கே மலைப்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.

இத்தகு மகிமைகள் கொண்ட இந்த ஆலயத் தில், கடந்த 5.9.22 திங்கள் கிழமை அன்று அருணகிரிநாதர் குருபூஜை ஆண்டுவிழா வைபவம் நடைபெற்றது. உலகுக்கு திருப்புகழ் எனும் அமுதத்தை அளித்த அருணகிரிநாதப் பெருமானைச் சிறப்பிக்கும் விதம், அற்புதமாய் நடந்தேறியது இந்த விழா வைபவம்.

காலை 7 மணி அளவில் படி விழா நடைபெற்றது. தொடர்ந்து சுமார் 9 மணியளவில் முருகப்பெருமானுக்கும் அருணகிரிநாத சுவாமிக்கும் அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன. தொடர்ந்து சக்தி விகடன் சார்பில் வேல்மாறல் பாராயண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வலையப் பேட்டை இரா.கிருஷ்ணன், பவ்யாஹரி
வலையப் பேட்டை இரா.கிருஷ்ணன், பவ்யாஹரி
வேல்மாறல் பாராயணம்
வேல்மாறல் பாராயணம்


முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி - வேலாயுதம். வேல் என்ற சொல் ‘வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு ‘வெற்றிவேல்’ என்று பெயர். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும். பாம்பன் சுவாமிகள் இதனை ‘படை அரசு’ என்று போற்றுவார்.

இத்தகையை வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்றுதான் வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல்வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும், பின்னும், இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்.

ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வழிபட, சகல சௌபாக்கியங்களும் கைகூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும்; சகலவிதமான உடற்பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும் என்பார்கள். அற்புதமான இந்தப் பாராயண வைபவத்தை, திருப்புகழ் அமுதன் வலையப் பேட்டை இரா.கிருஷ்ணன், பவ்யாஹரி ஆகியோர் இணைந்து நடத்தினர்.

மட்டுமன்றி, மகேஸ்வர பூஜை அன்னதானம் என விழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகத்தினரும் `சற்குரு அருணகிரி நாதர் சுவாமிகள் குருபூஜை வழிபாட்டுக் குழு' அமைப்பினரும் சிறப்புற செய்திருந்தனர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த விழா வைபவத்தில் பங்கேற்று, அருள்மிகு உதயகிரி வேலாயுத சுவாமியின் திருவருளைப் பெற்றுச் சென்றனர்.