Published:Updated:

வினைகள் தீர்க்கும் வேல் மாறல் பாராயணம் திருப்பூரில்... இன்பங்கள் சூழ எல்லோரும் கலந்து கொள்ளுங்கள்!

வேல் மாறல் பூஜை

நீங்கள் எளிதில் புரிந்து பாராயணம் செய்து வழிபடும் வகையில் வேல்மாறல் பாராயணம் இங்கே உங்களுக்காக...

வினைகள் தீர்க்கும் வேல் மாறல் பாராயணம் திருப்பூரில்... இன்பங்கள் சூழ எல்லோரும் கலந்து கொள்ளுங்கள்!

நீங்கள் எளிதில் புரிந்து பாராயணம் செய்து வழிபடும் வகையில் வேல்மாறல் பாராயணம் இங்கே உங்களுக்காக...

Published:Updated:
வேல் மாறல் பூஜை
திருப்புகழ் எனும் அரிய மந்திரத்தை அருளிய ஸ்ரீஅருணகிரி சுவாமிகளின் குருபூஜை நிகழும் சுபகிருது ஆண்டு ஆவணி மாதம் 20-ம் நாள் அதாவது 5-9-2022 திங்கள்கிழமை வரவுள்ளது. இந்த அற்புதத் திருநாளில் திருப்பூர் மாவட்டம், மலையப்பாளையம் ஸ்ரீஉதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீஅருணகிரிநாத சுவாமியின் குருபூஜைப் பெருவிழா வெகு விமரிசையாக 53-ம் ஆண்டாக நடைபெற உள்ளது.

இந்த விழாவை ஸ்ரீஉதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் நிர்வாகமும் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளது. காலை 7 ஆம்னி முதல் பிற்பகல் 4 மணி வரை அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ள இந்த விழாவில் சிறப்பு அம்சமாக வினைகள் தீர்க்கும் வேல் மாறல் பாராயணம் நடைபெற உள்ளது. 5-9-2022 திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் திருப்புகழ் அமுதர் வலையப்பேட்டை கிருஷ்ணன் மற்றும் திருமதி பவ்யா ஹரி குழுவினர் நடத்த உள்ள இந்த வேல் மாறல் பாராயணம் கேட்பவர்களுக்கும் இணைந்து பாடவிருப்பவர்களுக்கும் எல்லா நலன்களையும் அளிக்கக் கூடியது.

ஸ்ரீஅருணகிரிநாதர்
ஸ்ரீஅருணகிரிநாதர்

முருகப்பெருமானின் வழிபாட்டுக்கும் மூத்தது வேல் வழிபாடு என்கிறது வரலாறு. அதிலும் முருகப்பெருமானின் கைவேலைப் போற்றும் வேல்மாறல் மந்திரம் மனிதர்களுக்கு மருந்து போன்றது. ஒரு மருந்து நோய்களைத் தீர்ப்பதுபோல இந்த மந்திரம் புற, அக நோய்களை நீக்கும். பிறவிப் பிணியை ஒழிக்கும். ஞானவேல் என்பதால் இதை பாராயணம் செய்தால் ஞானத்தையும் பேரின்ப வாழ்வையும் கொடுக்கும். வீரவேல் என்பதால் காரிய ஸித்தியை வழங்கும். சக்திவேல் என்பதால் காரிய ஸித்தி அளிக்கும்.

ஸ்ரீஅருணகிரிநாதர் அருளிய இந்த வேல் மாறல் பாடல் தொடர்ந்து ஒரு மண்டல காலம் பாராயணம் செய்வோருக்கு சகல சௌபாக்கியங்களும் கைகூடும். சஷ்டி, கார்த்திகை, விசாக நாள்களில் தொடங்கிப் பாராயணம் செய்வது நலம் அளிக்கும். முருகன் வேறு அல்ல, அவன் கரம்பற்றிய வேல் வேறு அல்ல. வினைகளை வேரறுக்க வல்ல வேலாயுதத்தைப் போற்றி வணங்கினால் நம் விருப்பங்கள் நிறைவேறும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள `வேல் மாறல் வகுப்பு’ பாடல் எல்லாப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகித் தீர்த்தருளவல்லது என்று எண்ணிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்து அருளினார்.

அன்பான விகடன் வாசகர்களே! அச்சமும் துயரமும் உங்களை வாட்டுகிறது என்றால், நீங்கள் வேலை வழிபடுவது அவசியம். இதனால் நம் வாசகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் அனைத்து செல்வங்களும், சகல சௌபாக்கியங்களும் பெற்று, வாழ்வில் சிறந்தோங்கவேண்டும் என்கிற நோக்கத்தில், ஸ்ரீஉதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் நிர்வாகமும் சக்தி விகடனும் இணைந்து பெருமைமிக்க இந்த வேல் மாறல் பாராயண வழிபாட்டை நடத்தவுள்ளது. திருப்புகழ் முதலான ஞானநூல்கள் குறித்த ஆய்வுகள் செய்தவரும், சிறந்த கட்டுரையாளரும் சொற்பொழிவாளருமான திருப்புகழ் அமுதர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், பாடகி பவ்யா குழுவினர் இணைந்து நடத்தும் இந்த வழிபாட்டு வைபோகத்தில் அனைவரும் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளையும் ஸ்ரீஅருணகிரிநாதரின் அருளையும் பெற வேண்டுகிறோம்.

வேல்மாறல்
வேல்மாறல்

வேல்மாறல் பாராயணம்:

அருணகிரியார் அருளிய 'வேல் வகுப்பு’ பாடல்களின் பதினாறு அடிகளை மேலும் கீழும் ஆகவும், முன்னும் பின்னும் ஆகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, 64 அடிகள் கொண்ட வேல்மாறலாக தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்.

16வது அடியாகிய 'திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.

இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப்பாகும்.

வேல்மாறல் பாராயணம்
வேல்மாறல் பாராயணம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீங்கள் எளிதில் புரிந்து பாராயணம் செய்து வழிபடும் வகையில் வேல்மாறல் பாராயணம் இங்கே உங்களுக்காக.

திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன்மலை

விருத்தன்என(து) உளத்தில்உறை

கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

(இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும். அதேபோல், கீழே தொடர்ந்து வரும் ஒவ்வோர் அடியின் முடிவிலும் 'திரு’ என்ற இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூற வேண்டும்)

1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கருத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி

விழிக்குநிகர் ஆகும் (திரு)

2. திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன்மலை

விருத்தன்என(து) உளத்தில்உறை

கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு)

3. சொலற்(கு) அரிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்தபகை அறுத்(து)எறிய

உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திரு)

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி

தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை

கழற்குநிகர் ஆகும் (திரு)

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

கஜக்கடவுள் பதத்(து) இடு(ம்)நி

களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு)

6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

குறைத்தலைகள் சிரித்(து)எயிறு

கடித்துவிழி விழித்(து) அலற மோதும் (திரு)

7. துதிக்கும்அடி யவர்க்(கு) ஒருவர் கெடுக்கஇடர்

நினைக்கின் அவர் குலத்தைமுதல்

அறக்களையும் எனக்(கு)ஓர்துணை ஆகும் (திரு)

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண

வழைப்ப(து)என மலர்க்கமல கரத்தின்முனை

விதிர்க்கவளை வாகும் (திரு)

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

கவிப்புலவன் இசைக்(கு)உருகி

வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு)

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

முளைத்த(து)என முகட்டின் இடை

பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் (திரு)

வேல்மாறல் பாராயணம்
வேல்மாறல் பாராயணம்

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி

ஒளிப்ப அலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்

ஒளிப்பிரபை வீசும் (திரு)

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு

வலத்தும்இரு புறத்தும்அரு(கு)

அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் (திரு)

13. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்

ஒழித்தவுணர் உரத்துதிர

நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு)

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

குடித்துடையும் உடைப்படைய

அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு)

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி

தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்

இடுக்கண் வினை சாடும் (திரு)

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

பெருத்தகுடர் சிவத்ததொடை

எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு)

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி

தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறுன்

இடுக்கண் வினை சாடும் (திரு)

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

பெருத்தகுடர் சிவத்ததொடை

எனச்சிகையில் விருப்பமொடு சூடும் (திரு)

19. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்

ஒழித்தவுணர் உரத்துதிர

நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் (திரு)

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

குடித்துடையும் உடைப்படைய

அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு)

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி

ஒளிப்ப அலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்

ஒளிப்பிரபை வீசும் (திரு)

22. தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு

வலத்தும்இரு புறத்தும்அரு(கு)

அடுத்(து)இரவு பகற்றுணைய ஆகும் (திரு)

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

கவிப்புலவன் இசைக்குருகி

வரைக்குகையை இடித்துவழி காணும் (திரு)

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

முளைத்ததென முகட்டின் இடை

பறக்கஅற விசைத்ததிர ஓடும் (திரு)

25. துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்

நினைக்கின்அவர் குலத்தைமுதல்

அறக்களையும் எனக்கொர்துணை ஆகும் (திரு)

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண

வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை

விதிர்க்கவளை வாகும் (திரு)

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

கஜக்கடவுள் பதத்திடும்நி

களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் (திரு)

28. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி

விழித்தலற மோதும் (திரு)

29. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழும்

அறத்தைநிலை காணும் (திரு)

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி

தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை

கழற்குநிகர் ஆகும் (திரு)

வேல் மாறல் பாராயணம்
வேல் மாறல் பாராயணம்

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கருத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி

விழிக்குநிகர் ஆகும் (திரு)

32. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தன்என துளத்தில்உறை

கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு)

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி

தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை

கழற்குநிகர் ஆகும் (திரு)

34. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கிஎழும்

அறத்தைநிலை காணும் (திரு)

35. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தன்என துளத்தில்உறை

கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே (திரு)

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கருத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி

விழிக்குநிகர் ஆகும் (திரு)

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண

வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை

விதிர்க்கவளை வாகும் (திரு)

38. துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்

நினைக்கின்அவர் குலத்தைமுதல்

அறக்களையும் எனக்கொர்துணை ஆகும் (திரு)

39. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு

குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி

விழித்தலற மோதும் (திரு)

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

கஜக்கடவுள் பதத்திடும்நி களத்துமுளை

தெறிக்க வரம் ஆகும் (திரு)

41. தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு

வலத்தும்இரு புறத்தும்அரு கடுத்திரவு

பகற்றுணைய தாகும் (திரு)

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி

ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்

ஒளிப்பிரபை வீசும் (திரு)

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

முளைத்ததென முகட்டின்இடை பறக்கஅற

விசைத்ததிர ஓடும் (திரு)

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை

இடித்துவழி காணும் (திரு)

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில்

விருப்பமொடு சூடும் (திரு)

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி

தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்

இடுக்கண்வினை சாடும் (திரு)

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரம்

நிறைத்துவிளை யாடும் (திரு)

48. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்

ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்

புசிக்கஅருள் நேரும் (திரு)

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது

குடித்துடையும் உடைப்படைய

அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும் (திரு)

50. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்

ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்

புசிக்கஅருள் நேரும் (திரு)

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்

பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில்

விருப்பமொடு சூடும் (திரு)

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி

தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்

இடுக்கண்வினை சாடும் (திரு)

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை

முளைத்ததென முகட்டின்இடை பறக்கஅற

விசைத்ததிர ஓடும் (திரு)

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை

இடித்து வழி காணும் (திரு)

55. தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு

வலத்தும்இரு புறத்தும்அரு கடுத்திரவு

பகற்றுணைய தாகும் (திரு)

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி ஒளிப்ப

அலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்

ஒளிப்பிரபை வீசும் (திரு)

57. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்

வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு

கடித்துவிழி விழித்தலற மோதும் (திரு)

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள

கஜக்கடவுள் பதத்திடும்நி களத்துமுளை

தெறிக்கவரம் ஆகும் (திரு)

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண

வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை

விதிர்க்கவளை வாகும் (திரு)

60. துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்

நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்

எனக்கொர்துணை ஆகும் (திரு)

61. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தன்என துளத்தில்உறை கருத்தன்மயில்

நடத்துகுகன் வேலே (திரு)

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை

கருத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி

விழிக்குநிகர் ஆகும் (திரு)

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி

தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை

கழற்குநிகர் ஆகும் (திரு)

64. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை

அடுத்த பகை அறுத்தெறிய உறுக்கிஎழும்

அறத்தைநிலை காணும் (திரு)

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை

விருத்தன்என துளத்தில்உறை

கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

(குறிப்பு: முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும்)

தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்

கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்

நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்

பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட

தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் வாரி

குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்

தொளைத்தவேல் உண்டே துணை.

வேலும் மயிலும் துணை!

வேல் மாறல் பாராயணம்
வேல் மாறல் பாராயணம்

வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!

பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த 'வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும். அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.