Published:Updated:

வேளாங்கண்ணி: கொரோனா காரணமாகக் குறைவான பக்தர்களுடன் எளிமையாகக் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ்!

வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி

கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக வேளாங்கண்ணி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

உலக புகழ்ப்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகக் குறைவான பக்தர்களுடன் எளிமையாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக இந்தாண்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் எளிமையாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. வருடாவருடம் விண்மீன் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் இந்த வருடம் இல்லை. கொரோனா அச்சம் காரணமாக சேவியர் திடல் திறந்த வெளி மாநாட்டு அரங்கில் சுமார் 2,500 பக்தர்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்றிரவு 11.00 மணியளவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது.

சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்! #XMas2020

இதில் கிருபா ஆசீர்வாதம், மறையுரை, தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜபம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் நள்ளிரவு 11.30 மணி அளவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி தத்துரூபமாக நடத்திக் காண்பிக்கப்பட்டது. 

பின்னர் பேராலய அதிபர் பிரபாகர், பங்கு தந்தை அற்புதராஜ் ஆகியோர் குழந்தை இயேசு சொரூபத்தை கிறிஸ்துமஸ் குடிலில் வைத்து இயேசு பிறப்பை அனைவருக்கும் அறிவித்தனர். அதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும், கைகளில் கிருமி நாசினியால் சுத்தம் செய்து கொண்டும் விழாவில் பங்கேற்றனர். அதற்கான ஏற்பாடுகள் பேராலயம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி

கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக வேளாங்கண்ணி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இயேசு பிறப்பு நிகழ்ச்சியைக் காண கடந்த 4 நாள்களுக்கு மேலாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

இதுபற்றி பக்தர்கள் சிலரிடம் பேசியபோது,

"வருடா வருடம் மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவோம். கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயம் வெறிச்சோடிக் காணப்படுவது இதுவே முதல்முறை" என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு