Published:Updated:

கயிலையிலிருந்து வந்த கயிலாசநாதனின் ஆலயம் சீர்பெறுமா? - அடியார்களின் கோரிக்கையை கவனிக்குமா அரசு?

காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்

காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்: வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காரணாம்பட்டில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 வருடப் பழைமையான கயிலாசநாதர் ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடுகள் சிவனடியார்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

கயிலையிலிருந்து வந்த கயிலாசநாதனின் ஆலயம் சீர்பெறுமா? - அடியார்களின் கோரிக்கையை கவனிக்குமா அரசு?

காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்: வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காரணாம்பட்டில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 வருடப் பழைமையான கயிலாசநாதர் ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடுகள் சிவனடியார்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

Published:Updated:
காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்

'கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்

சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு

மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த

கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!' என்பார் மாணிக்கவாசகர் எனும் ஞானவள்ளல்.

காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்
காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்

கருணைக்கடலான ஈசனின் திருஆலயம் ஒன்று கேட்பாரின்றிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்கலம் என்று பொருள் தரும். அன்பாக அருள்பெருஞ்ஜோதியாக, இன்பமாக மங்கலமாக மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கயிலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் எழுந்தருளச் செய்து வழிபட்ட பெருமைமிக்கது நமது புண்ணிய பூமி. சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்களும், இதிகாசங்களும் , உபநிஷதங்களும், புராணங்களும், சைவ நூல்களும் எடுத்துரைக்கின்றன.

பிறப்பிலா பெருமானை நம் ஆதிசிவன் சகலருக்கு சகலமும் வழங்குபவன். சிவத்தை நம்பியோர் அவத்தை ஏதுமின்றி வாழ்வார் என்பது நம்பிக்கை. இந்நிலையில் சித்தர்களின் தபோவனமாம் வேலூர் மாவட்டத்தில் ஆதிசித்தனாம் ஈசனின் ஆலயம் ஒன்று சிதைந்து போயுள்ளது என்று அறிந்து விரைந்தோம். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த காரணாம்பட்டில் அமைந்துள்ள இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 500 வருடப் பழைமையான கயிலாசநாதர் ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடுகள் சிவனடியார்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆலயத்தின் சுவர்கள் சேதமடைந்து, சுவற்றுக்கு இடையே செடி ,கொடிகள் முளைத்து, ஆங்காங்கே விரிசலும் சேதமும் உண்டாகி ஆலயமே சிதைவுற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த ஆபத்தான நிலையிலும் பக்தர்கள் கயிலாசநாதரை வழிபட்டு வருகின்றனர் என்பது நெகிழ்வை உண்டாக்கியது.

காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்
காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்

இதுகுறித்து அந்தக் கோயிலில் 30 வருடமாக பூஜை செய்து பராமரித்து வரும் அந்த ஊரைச் சேர்ந்த பிரபாகரிடம் பேசினோம் "ஐயா எம்பெருமான் என் வாழ்க்கையில் செய்த அதிசயங்கள் ஏராளம். இந்த சுவாமியைக் கண்டதும் என்னுள் எத்தனையோ மாற்றங்கள். அதுமுதல் இவரைப் பற்றிக் கொண்டேன்.

'துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்

தொடக்கெலாம் அறுத்தநற்சோதி

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே...' என்பது என்வரையில் உண்மை.

விஜயநகர மன்னர்களின் காலத்தில் கயிலாயப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சுவாமி இவர். இவருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். அதனாலேயே சுவாமிக்கு கயிலாசநாதர் என்று திருநாமம். இந்தக் கோயில் 30 வருடத்திற்கு முன்பு வரை பராமரிப்பு இல்லாமல் எந்த ஒரு பூஜையும் நடக்காமல் கைவிடப்பட்டிருந்தது. இந்தக் கோயிலைச் சுற்றி இருந்த செடி, கொடிகள், புதர்களை அகற்றிவிட்டு 30 வருடமாக பூஜை செய்து வழிப்பட்டு வருகிறோம். ஊர் மக்கள் மட்டுமல்லாமல் காட்பாடியைச் சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து பக்தர்கள் இந்த சிவத் தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். பிரதோஷ நாளில் சிவனுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் பஜனைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னிலையில் வழிபாடும் சிறப்பு ஆராதனைகளும் தேவார-திருவாசக முற்றோதல்களும் நடைபெறும்.

காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்
காரணாம்பட்டு கயிலாசநாதர் ஆலயம்

தங்களுடைய எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறுவதால் பக்தர்கள் தாங்களாகவே பூஜைகள் மற்றும் பிரசாதத்திற்குப் பண உதவி செய்கிறார்கள். இப்படிப் பல பக்தர்கள் வந்து வழிபடும் இந்தக் கோயிலின் சுவர்களில் சேதம் அடைந்து சுவற்றில் செடி, கொடிகள் முளைத்த நிலையில் இருக்கிறது. இதனைப் பலமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நாங்கள் எடுத்துச்சென்றும் எந்தவித நடவடிக்கையும் இன்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். மேலும் இந்தக் கோயிலுக்குச் செல்ல மெயின் ரோட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு முறையாக வழி இல்லை, அந்த 100 மீட்டர் தொலைவுக்கு முறையாக வழி ஏற்படுத்தித் தர வேண்டும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழிபடப்பட்டு வரும் எங்கள் ஐயன் கோயிலை அரசு முன்வந்து புனரமைத்துக் கொடுத்தால் சிவன் அடியார்கள் எல்லோரும் மகிழ்ந்து போவோம் ஐயா" என்றார்.

நாளும் சாதனைகள் பலவற்றைச் செய்கிறோம் என்று கூறிக் கொள்ளும் இந்து அறநிலையத்துறை இந்த பக்தர்களின் கோரிக்கையை ஏற்றுக் கோயிலைப் புனரமைத்துத் தரும் என்ற நம்பிக்கையில் சுவாமியை வணங்கி விடைபெற்றுக் கொண்டோம்.