Published:Updated:

`ஆடாது அசங்காது வா கண்ணா!'

வேங்கடகவி
பிரீமியம் ஸ்டோரி
News
வேங்கடகவி

ஊத்துக்காட்டில் வாழ்ந்தவர், வேங்கடகவி.

பார்வை இல்லாத இவருக்கு இங்குள்ள கண்ணனே இஷ்ட தெய்வம். ஊத்துக்காடு ஸ்ரீகாளிங்கநர்த்தனர் மீது எண்ணற்ற கீர்த்தனைகளை உருகி உருகிப் பாடியிருக்கிறார் வேங்கடகவி.

ஊத்துக்காடுக்கு அருகில் உள்ள ஊர் ஆவூர்; பாடல் பெற்ற தலம். நேபாளத்தில் உள்ள சிவபெருமானது பெயரான ‘பசுபதி நாதர்’ என்பதே இங்குள்ள ஸ்வாமி யின் பெயரும். பசுபதி நாதரைப் போற்றி திருஞான சம்பந்தர் அழகான பதிகங்களைப் பாடியிருக்கிறார்.

மார்கழி மாதத்தில் இங்குள்ள கிராமங்களில் ராதா கல்யாணம் வெகு விசேஷமாக நடைபெறும். வேங்கட கவியும் தனது காளிய நர்த்தன கிருஷ்ணனுக்கு ராதா கல்யாணம் செய்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தொடர்ந்து... கண்ணனுக்கு அலங்காரம் செய்யப் பட்டு, திருவீதியுலா நடைபெற்றது. வேங்கடகவிக்கு, ஊனக் கண்கள்தான் தெரியவில்லையே தவிர, அவரின் உள்ளத்தில் உள்ள கண்கள், எப்போதும் பிரகாச மாகத் திகழ்ந்தன. இந்த வைபவத்தின்போது, பகவான் கண்ணனுடன் தானும் தன்னுடன் உள்ளவர்களும் கோகுலத்தில் இருப்பதாகவே உணர்ந் தார் வேங்கடகவி. அவரைச் சூழ்ந்து வந்த அடியார்கள், அவர் பாடுவதை அப்படியே உள்வாங்கி பாடியபடி வந்தனர்.

`ஆடாது அசங்காது வா கண்ணா!'

வீதியில், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கோலமிடப்பட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன. இறைவனுக்கு ஆரத்தி எடுப்பதற்காக, தேங்காய்- பழத்தட்டுடன் தத்தம் வீட்டு வாசலில் பலரும் காத்திருந்தனர். கண்ணனை... ஆடி ஆடி, அசைத்து அசைத்து, தூக்கி வந்தனர்.

இவை, ஒவ்வொன்றையும் தம் உள்ளக் கண்களால் பார்த்து ரசித்தார் வேங்கடகவி!

வீதியின் இந்த முனையில் கண்ணன் ஊர்வலம் நுழைய... அன்று திருவாதிரை திருநாள் என்பதால், வீதியின் மறுமுனையில், ஆவூரிலிருந்து ஊர்வலமாக வந்த நடராஜ பெருமான் பிரவேசித்தார். இந்தப் பக்கம் பஜனை - நாமாவளி... அந்தப் பக்கம் ருத்ரம்-மேளம்!

நடராஜர் வருவது வேங்கடகவிக்கும் தெரிந்துவிட்டது.

‘நடராஜர் எதற்காக இங்கே வருகிறார்? இது கோகுல மாயிற்றே! ஓஹோ... காளியன்மீது நம் கண்ணன் ஆடிய நாட்டியத்தின் பெருமை, நாட்டியத்துக்கே ராஜாவான நடராஜரின் செவிகளுக்கும் எட்டிவிட்டது போலும்...’ வேங்கடகவியின் இந்தச் சிந்தனை, அவரிடம் இருந்து பாடலாக வெளிப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்

ஆடலைவிட்டு இங்கே கோகுலம் வந்தான்...

- எனப் பாடினார்.

அடுத்ததாக, ‘குழந்தை கண்ணனின் நடனத்தைப் பார்த்து, எவராவது கண் வைத்துவிட்டால் என்னால் தாங்க முடியாது. அப்படியிருக்க, சிவபெருமானுக்கோ மூன்று கண்கள் ஆயிற்றே...’ என்று பதைபதைத்துப் போனார் வேங்கடகவி! உடனே,

கனக மணி அசையும் உனது திருநடனம்

கண்பட்டுப்போனால் மனம் புண்பட்டுப்போகுமே...

- என்ற வார்த்தைகள் வந்து விழுந்தனவாம்!

அன்று, வேங்கடகவிக்கு ஏற்பட்ட அருமையான இந்த எண்ண ஓட்டங்களே, இன்று எல்லோராலும் ‘ஆடாது அசங்காது வா’ என்ற மத்யமாவதி ராகத்தில் அமைந்த கீர்த்தனையாக, கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது. (மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி அருளியது...)

- தி.ராஜா, சென்னை-44