திருக்கதைகள்
Published:Updated:

சத்தியம் காக்கும் தெய்வம்!

தனிப்பெரியாண் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
News
தனிப்பெரியாண் சுவாமி

தனிப்பெரியாண் சுவாமி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி வட்டம் மேலமருதூர் எனும் கிராமத் தில் எழுந்தருளியுள்ளார் பெரியாண்டவர் என்ற சாஸ்தா. திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும் திருத்துறைப் பூண்டியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது மேலமருதூர் கிராமம்.

தனிப்பெரியாண் சுவாமி
தனிப்பெரியாண் சுவாமி


பூரண, புஷ்கலா தேவியருடன் அருளும் பெரியாண்டவர், கலியுகத்தின் காவல் தெய் வமாக திகழ்கிறார் என்கிறார்கள் கிராம மக்கள். இவருக்குத் துணை தெய்வங்களாக, துடிப்பான தெய்வங்களாக அருளோச்சுகிறார் கள், தனிப்பெரியாண் சுவாமியும் தூண்டில் கார சுவாமியும். தனிப்பெரியான் சுவாமியைப் போல் பெரிய தெய்வம் இல்லை என்பதால் இப்படியொரு திருப்பெயராம் அவருக்கு!

கோயிலின் மூலஸ்தானத்தில் பூரண புஷ்கலா சமேத பெரியாண்டவர், கையில் சாட்டையுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்து அருளுகிறார். அவரை தரிசிக்கும் கணத்தில் மனம் பரவசம் கொள்கிறது. பாரமெல்லாம் நீங்கி மனமே பஞ்சானது போன்று ஓர் உணர்வு எழுகிறது.

பூரண புஷ்கலா சமேத பெரியாண்டவர்
பூரண புஷ்கலா சமேத பெரியாண்டவர்


சேர, சோழ, பாண்டியர் - தமிழ் மண்ணின் மூவேந்தர்களுக்கும் தனித் தனிச் சந்நிதிகள் இருப்பது இந்தக் கோயிலின் சிறப்பம்சம். வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் இது. விசேஷ தினங்களில் மூவேந்தர்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் நாக லிங்க மரம். இது மிகவும் பழைமையானது என்கிறார்கள்.

தனிப்பெரியாண் சுவாமி
தனிப்பெரியாண் சுவாமி


மிரட்டும் முறுக்கு மீசையும் கைகளில் சொக்குமாத்தடி, வெட்டரிவாள், வேல் கம்புடன் திகழும் தனிப்பெரியாண் சுவாமி தோற்றத்தில் மறக்கருணையைக் காட்டுகிறார் என்றாலும், அருள்வதில் அறக்கருணை நிரம் பியவர் என்கிறார்கள் பக்தர்கள். இவரின் திருமேனி சுதைச் சிற்பம்.

``தனிப்பெரியாண் சுவாமி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். ஏதாவது ஒரு வம்பு-வழக்கு சண்டை, சச்சரவுன்னு வந்தால்... அது தொடர்பாக யாரேனும் பொய் சொல்கிறார் கள் என்று ஐயம் எழுந்தால், இந்தத் தெய்வதின் முன் சத்தியம் வாங்குவது வழக்கம். பொய் சத்தியம் செய்பவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார் தன்பெரியாண் சுவாமி.

அதேபோல் இங்கு செய்த சத்தியத்தை மீறவும் கூடாது! மதுப் பழக்கத்துக்கு ஆளான வர்கள், அதிலிருந்து விடுபட இங்கு வந்து சுவாமியை வேண்டிக்கொண்டு `இனி குடிக்க மாட்டோம்' என்று சத்தியம் செய்து கொள் வார்கள். அவர்களுக்கு கயிறு கட்டிவிடுவோம். சுவாமியின் மீதுள்ள பயத்தின் காரணமாக, அதன் பிறகு மதுவைத் தொடவும் மாட்டார்கள்! சக்தி வாய்ந்தவர், சத்தியத்துக்காக நின்று பேசுபவர் எங்கள் தன்பெரியாண் சுவாமி'' என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார், பூசாரி சந்திரன் சுவாமி.

தூண்டில்காரன் சந்நிதி, சாம்பான், வீரன் போன்ற காவல் தெய்வங்களையும் இங்கே தரிசிக்கலாம். `கட்டுக் குதிரை' குறித்தும் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்கள் ஊர்ப் பெரிய வர்கள். ``இங்கு குதிரை கட்டும் வழக்கத்தையே அப்துல் காதர் என்ற ஒரு இஸ்லாமியர்தான் தொடங்கி வைத்தார்'' என்றார்கள்.

கட்டுக் குதிரை
கட்டுக் குதிரை


அப்துல் காதர் பல வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் மிராசுதாராக இருந்தவர். புத்தி சுவாதீனம் இல்லாத தன் மனைவி குணமாகிவிட்டால் குதிரை கட்டிவிடுகிறேன் என்று வேண்டிக்கொண்டாராம். விரைவில் அவரின் மனைவி குணமானார். அப்துல் காதரும் வேண்டிக்கொண்டபடியே, இப்படிக் குதிரை கட்டிவிட்டாராம்.

குழந்தைப் பேறு தரும் பரிகாரத் தலமாகவும் இந்தக் கோயில் விளங்குகிறது. இப்பகுதி வேளாண் மக்கள், தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை இங்கே அடுக்கி வைக்கின்றனர். இங்கிருந்தால் நெல் மூட்டைகளுக்கு சேதாரமோ, திருட்டோ நடைபெறாது என்பது நம்பிக்கை. அதற்குக் காணிக்கையாக 101 ரூபாய் பணமும் ஒரு மரக்கால் நெல்லும் பெரியாண்டவருக்குச் செலுத்துகின்றனர்.

அதேபோல், ஏதேனும் பொருள்கள் திருடு போய்விட்டாலும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் அந்தப் பொருள் திரும்ப கிடைத்துவிடுமாம் ஆனி மற்றும் ஆடியில் மூன்று நாள்கள் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் திரளாக வந்திருந்து, தங்களின் வாழ்வைக் காக்கும் தெய்வங்களை வணங்கி, மகிழ்வோடு வரம் பெற்றுச் செல்கிறார்கள்!