Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: `பாம்பாக வந்தாள்... பாட்டு கேட்க வந்தாள்!’

எங்கள் ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
எங்கள் ஆன்மிகம்

ஒரு கட்டத்தில் சரணம் உச்சஸ்தாயியில் போகிறது. வில்லின் ஓசையோடு போட்டி போடுகிறது இடி.

திருவிழா தொடங்கியது. வில்லுப்பாட்டுக் கோஷ்டி ஊர் வந்து சேர்ந்தது. ஊரின் மத்தியில் கூரையில்லாத சின்ன மேடை.

வில்லுப் பாட்டைத் தன் தெய்வமாக மதிக்கும் அந்த மாமனிதரும் அவரின் விரல் பிடித்து நடந்து வந்த... பாவாடை கட்டி வரும் பாலாம்பிகை போன்ற சின்ன மகளும் பாட ஆரம்பிக்கிறார்கள்.

கணபதி துதி எல்லாம் முடிந்து இப்போது மாரியம்மன்மீது பாட வேண்டும். அந்தத் தகப்பன். தன் பெண்ணுக்குக் கண் ஜாடை காட்டவும் அவள் பாட ஆரம்பிக்கிறாள்.

மழையே மாரியே வா வா வா

மக்கள் துயர்தீர்க்க வா வா வா... என்று, புகழ் பெற்ற ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ என்ற பாடலின் மெட்டில் அவள் பாடுகிறாள். அனுபல்லவி முடிந்து சரணம் தொடங்க வேண்டும். கீழ் வானம் மின்னுகிறது. மக்கள் எல்லாம் அந்தச் சின்னப் பெண்ணின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் ஆன்மிகம்: `பாம்பாக வந்தாள்... பாட்டு கேட்க வந்தாள்!’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு கட்டத்தில் சரணம் உச்சஸ்தாயியில் போகிறது. வில்லின் ஓசையோடு போட்டி போடுகிறது இடி. பாடல் முடியும் தருணம், ‘மாரியம்மா’ என்று அவள் மூச்சடக்கி முழங்கிய போது, அதற்கு மேல் பொத்திவைத்துக் கொள்ள முடியாமல் தவித்த வானம், மழையை அந்த ஊர் மீது பொத்துக்கொண்டு கொட்டிவிட்டது.

குழந்தை பாடலை நிறுத்தவில்லை. பாடுகிறவர்கள், வாத்தியக் காரர்கள், வாத்தியங் கள் எல்லாரும் எல்லாமும் நனைந்தாயிற்று. ஆனாலும் பாடல் நிறுத்தப்படவேயில்லை. மக்கள் அருள்மழையும் பெருமழையும் ஒருங்கே பொழிவதைக் கண்டு சிலிர்த்தனர்.

கச்சேரி முடியும்வரைக்கும் பெருமழை. முடிந்ததும் ஊரில் வயதான மூதாட்டி தேடி வந்து அந்தச் சிறுமியை உச்சி முகர்ந்தாள்.

“ஐயா, இந்தப் பிள்ளைக்கு அந்த அம்மனோட அருள் பரிபூரணமா யிருக்கு...” என்று சொல்லிக் கண்ணீர் வடித்தார். அந்தக் கணத்தில் பெருமிதம் பூண்டது அந்தத் தந்தை மனம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்தத் தகப்பன் வேறு யாருமல்ல. அவர்தான் வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம். அந்தப் பெண் அவரின் இசை வாரிசு மகள் திருமதி. பாரதி திருமகன். அவரின் ஆன்மிக அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளுமாறு பாரதி திருமகனிடம் கேட்டோம். பரவசத்தோடு பகிர்ந்துகொண்டார்:

“வில்லிசை நம் கிராமங்களின் உயிர்மூச்சு. எளிய மக்களின் கலை. நாள் எல்லாம் உழைத்துக் களைத்து வரும் பாட்டாளிக்குக் கொஞ்சம் பொழுதுபோக்கவும் நிறைய பக்தியும் சேர்க்க உண்டான கலை. அந்தக் கலையை ஆதரிக்க யாரும் இல்லாமல் இருந்த காலத்தில் அதில் தன் கவனத்தைச் செலுத்தி அதற்கு நாடெங்கும் பெருமதிப்பை உருவாக்கித் தந்தவர் அப்பா.

எங்கள் ஆன்மிகம்: `பாம்பாக வந்தாள்... பாட்டு கேட்க வந்தாள்!’

கலைவாணர் என்.எஸ்.கே, பாவேந்தர், பெரியார், அண்ணா ஆகியோரோடு பழகியவர். இவரின் கலைக்கு அவர்கள் ரசிகர்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நாத்திகத் தலைவர்களோடு தொடர்பில் இருந்தாலும் தன் ஆத்திக நம்பிக்கையைக் கைவிடாதவர் அப்பா. பெருந்தலைவர்கள் அத்தனைபேரும் இருக்கும் மேடையிலும் நெற்றி நிறைய திருநீறு பூசி நிற்பவர்.

`‘எப்படிண்ணே, மேடைல பெரியார் இருக்காரு, பாரதிதாசன் இருக்காரு, நீங்க திருநீறோட தைரியமா நிக்கிறீகளே...” என்று கேட்பவர்களுக்கு, “எல்லாரும் இருக்காங்கதான். ஆனா அவங்க எல்லாருக்கும் தெரியும். இது என் நெத்தின்னு. உனக்கு ஒண்ணு சொல்றேன் குறிச்சிக்கோ, நெத்தியும் புத்தியும் அடுத்தவனுக்காக இருக்கக்கூடாது’’ என்று சிந்தனைத் தெறிப்போடு பதில் சொல்வார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால்தான் அவரைக் காஞ்சிபுரத்து மகாபெரியவா முதல் கடைக்கோடி கிராம மனிதன் வரைக்கும் பிடித்திருந் தது. அப்படிப் பட்டவருக்கு மகளாகப் பிறந்துவிட்டு, ஆன்மிக அனுபவம் இல்லா மல் இருக்க முடியுமா?!

ஏழு வயதிருக்கும்போதே அப்பாவோடு கச்சேரிகளுக்குப் போக ஆரம்பித்தேன். சில பாடல்களும் அத்துப்படி. முதல் வருஷம் ஒரு கிராமத்துக் குக் கச்சேரிக்குப் போனோம்.

எங்கள் ஆன்மிகம்: `பாம்பாக வந்தாள்... பாட்டு கேட்க வந்தாள்!’

சுற்றிலும் வயல்வெளி. நடுவிலிருந்த சின்ன நிலத்தில் பலகைகளைப் போட்டு மேடை போல செய்திருந்தார்கள். மக்கள் அதிகபட்சமாய் அறுபதுபேர் இருப்பார்கள். அனைவரும் விவசாயிகள். கச்சேரி தொடங்கியது. நான் பாடத் தொடங்கினேன். அந்த ஊர் கோயில் அம்மன் பெயர் நாகாத்தம்மன் என்பதால், நாகம் தொடர்பான பாடல் ஒன்றைப் பாடச் சொன்னார் அப்பா.

நானும் பாட ஆரம்பித்தேன். ஆரம்பித்த சில நொடிகளில் ஒரு பாம்பு மேடைக்கு அருகிலேயே வந்துவிட்டது. வந்த பாம்பு மேடைக்கு முன்பாகப் படம் எடுத்து நிற்கிறது. எனக்கோ குரல் வெளியே வரவில்லை. என்னைத் தவிர யாரும் பதற்றம் ஆனதுபோல் தெரியவில்லை.

அப்பா என்னை நோக்கிப் ‘பாடு... பாடு’ என்பதுபோல சைகை காட்டினார். நான் கொஞ்சம் தெம்பு வந்து பாடினேன். பாடல் பாடி முடிக்கவும் பூசாரி வந்து பாம்புக்குக் கற்பூர ஆரத்தி எடுத்தார். பார்க்கவே ஆச்சர்யமாக இருந்தது. ஆரத்தி முடிந்ததும் அந்தப் பாம்பு வந்த வழியே போய்விட்டது.

எங்கள் ஆன்மிகம்: `பாம்பாக வந்தாள்... பாட்டு கேட்க வந்தாள்!’

ஊரே மேடைக்கு அருகே வந்துவிட்டது. ‘அம்மாவே உம் பாட்டக் கேக்க வந்தா பாத்தியா...’ திருஷ்டி கழித்துக் கொஞ்சி மகிழ்ந்தனர். அப்போதுதான் எனக்குள் ஆன்மிகத்தின் முதல் விதை விழுந்தது.

அப்படி விழுந்த விதை துளிர்விட்ட இடம் மேல்மருவத்தூர். இப்போதிருக்கும் பெரும் ஊர் இல்லை அப்போதைய மேல்மருவத்தூர். கீற்றுக் கொட்டகையில்தான் அம்மா இருந்தாள். பக்தர்கள் வரத்தும் நிறைய கிடையாது. ஆனால் அன்று ஆடிப்பூரம் என்பதால் கொஞ்சம் கூட்டம். எனக்கு அப்போது 10 வயதிருக்கலாம்.

இரவு தாமதமாகத்தான் கச்சேரி ஆரம்பமானது. புதிதாக மழை பெய்திருந்ததால் நல்ல குளிர். என்னால் குளிரைத் தாங்க முடிய வில்லை. முதலில் நடுக்கமும் பின்பு வலிப்பும் போல வந்துவிட்டது. அப்பா பதறிப்போனார். அடிகளார் இருந்த குடிசைக்கு ஓடினார்.

அவர் ஆசுவாசப்படுத்தி, ‘அவ அம்மாவோட குழந்தை. ஒண்ணும் ஆகாது. கற்பூரமும் தேங்காய் எண்ணெயும் கலந்து உள்ளங்கால்ல தேச்சிவிடு’ ன்னு சொன்னார். அப்பா அப்படியே செய்ய, அடுத்த 5 நிமிடத்தில் நான் ரொம்ப சாதாரணமாயிட்டேன்.

மறுபடியும் கச்சேரி தொடங்கியது. புதுத் தெம்பு வந்ததுபோல் இருக்க அன்றைக்கு வழக்கத்தைவிட நான் நிறைய பாடினேன். அதுபோன்ற ஒரு நோய் எனக்கு இதுவரை திரும்ப வரவேயில்லை. இதெல்லாம் அம்மாவின் ஆசி இல்லாமல் வேறென்ன!

எங்கள் ஆன்மிகம்: `பாம்பாக வந்தாள்... பாட்டு கேட்க வந்தாள்!’

மேல்மருவத்தூரில் துளிர்விட்ட அந்த ஆன்மிகக் கிளையை விருட்சமாக்கியது மகாபெரியவாளின் கருணை. பெரியவாளுக்கு அப்பா மேல நல்ல வாஞ்சை இருந்தது.

‘சுப்பு, இந்த வில்லுப்பாட்டுக்கு ஒரு மகத்துவம் இருக்கு தெரியுமோ... வில்லைப்பாத்தா நேக்கு ராமேஸ்வரம் கோதண்ட ராமர் தெரியறார், உடுக்கையைப் பாத்தா காசி விஸ்வநாதன் தெரியறார். சுப்பு நீ ஒருத்தன்தான்டா, நேஷனல் இன்டகரேஷனையே கைல வச்சிண்டுருக்க’ன்னு சொல்லுவார்.

அந்த அளவுக்கு அந்நியோன்யம். அப்படிப் பட்ட அந்த மகான் மகாசமாதி அடைஞ்சு முதல்வருஷ குருபூஜை தினம். நானும் அப்பாவும் காஞ்சிபுரம் போய் பாடினோம்.

அப்பா, மகாசுவாமிகள் மேல, ‘சுவாமிநாதன் ஒரு ஆறுமுகம்’னு ஒரு பாட்டு எழுதியிருந்தார்.

அம்மையிடம் வரம் கேட்கும் குழந்தைமுகம் ஒன்று

அன்பருக்கு அருள் நோக்கும் குருவின் முகம் ஒன்று

செம்மையுறு ஹிந்துமதத் தலைவர் முகம் ஒன்று

தம்மையே தாம் இழந்த தியாகமுகம் ஒன்று

தாய்போல அணைத்திடும் அன்புமுகம் ஒன்று

நம்மிடையே காட்சிதரும் ஆறுமுகம் என்று

நமஸ்காரம் புரிகின்றோம் பெரியவரை இன்று!

இந்தப் பாட்டைப் பாடும்போது அப்பாவுக்கு உணர்வுப் பெருக்கு தாங்கவில்லை. நான் வாங்கிப் பாடினேன். எனக்கும் அதே நிலைதான். இந்தப் பாடலைப் பாடி, ‘நமஸ்காரம் புரிகின்றோம் பெரியவரை இன்று!’ன்னு முடிக்கிறபோ, மகா சுவாமிகளின் விக்கிரகத்தோட தலை உச்சில இருந்த ஒரு பெரிய மலர் அப்படியே மெள்ள உதிர்ந்து அவர் திருவடிகள் கிட்டே வீழ்ந்தது.

அவ்வளவு நேரமும் அந்த மலர் உதிர்ந்திருக்க லாமே, பாடி முடித்த அந்தக் கணத்துல உதிர்ந் ததும் எனக்கு சிலிர்த்துப்போச்சு. அங்க இருந்த பெரியவாளோட தொண்டர்கள் எல்லாம், ‘மகாபெரியவா மனப்பூர்வமா பண்ணின ஆசிதான் இது’ என்று சொன்னார்கள்.

சத்தியமாக சொல்றேன், இன்றைக்கு நான் இருக்கும் நிலைக்கு அந்த மகான்களோட அனுக்கிரகமும் ஆசீர்வாதமும்தான் காரணம். அதை நான் உறுதியா நம்புறேன்.

சென்னை, அசோக்நகர்ல நவசக்தி காளியம்மன் கோயில் இருக்கு. என் சொந்த அம்மாவைவிட நான் தினமும் வணங்குற அம்மா அந்தக் காளி அம்மாதான். என் சின்னச் சின்ன சந்தோஷங்களில் இருந்து பெரிய பெரிய கஷ்டங்கள் வரைக்கும் எல்லாத்தையும் நான் அந்த அம்மாவிடம் சொல்லிவிடுவேன்.

என் கூடவே இருந்து காக்குற தெய்வம் அவள்ங்கிறது என் நம்பிக்கை. எனக்கு ஒரு நல்ல கணவர் அமைஞ்சது, அவர் என் தந்தைக்கு நல்ல மருமகனாகவும் அமைஞ்சது, எங்க இரண்டுபேருக்கும் கலைவாரிசா ஒரு மகன் பிறந்தது எல்லாமே அந்த அம்மாவோட கருணைதான்.

அதனால்தான் என் மகன் கலைமகன் பிறந்த போது முதல்ல என் அம்மாகிட்ட காட்டணும்னு கூட எனக்குத் தோணவில்லை; இந்த அம்மாகிட்ட காட்டணும்னுதான் விரும்பினேன். மூணு நாளில் ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு வந்துட்டேன். பத்தாவதுநாள், கோயிலுக்குப் போலாம்னு சொன்னதும், அம்மாகிட்ட ஓடிப்போய் அவள் சந்நிதி முன்னாடி போட்டு வேண்டினேன். அவளோட ஆசியால்தான் அவனும் கலைஞானத்தோட வளர்ந்திருக்கான். யுவகலாபாரதி பட்டம் வாங்கி இன்னைக்குக் கலாக்ஷேத்ரால ஆசிரியரா இருக்கான்.

அப்பா, அம்மா, நான் மூவருமே சாரதாதேவி யின் பக்தர்கள். சுவாமி ரங்கநாதானந்தாவிடம் தீக்ஷை எடுத்துக் கொண்டவர்கள். ஓசூரில் ஒரு மாநாடு. கலைமகன் ‘போ ஷம்போ’ பாடினான். அங்க இருக்கிற ஜனங்கள் அவ்வளவுபேரும் மெய்ம்மறந்து ரசிச்சாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் மகராஜ் கௌதமானந்தாஜி கலைமகனை அழைத்து அவன் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்தார். அப்பாவுக்கும் எனக்கும் மகான்களோட ஆசிகள் கிடைத்ததுபோல கலைமகனுக்கும் கிடைக்கிறது என்பது எவ்ளோ மகிழ்ச்சியான விஷயம்.

ஒருத்தரோட பெரிய சொத்தே பெத்தவங்க தான். என் அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் உடம்பு முடியாம ஆஸ்பத்திரில சேர்த்து இனி பிழைக்கமாட்டங்கன்னு டாக்டர் சொன்னப்போ, நான் நம்பினது நவசக்தியைத் தான். அதிலும் என் அம்மாவுக்கு ஒரு பெரிய சர்ஜரி. அம்மா உடம்பு அதைத் தாங்காதுன்னு சொன்னாங்க.

ஆனா, நவசக்தி அம்மா கூடவேயிருந்து அம்மாவைக் காப்பாத்திக் கொடுத்தான்னு நான் உறுதியா நம்புறேன். அதனால்தான் அவள் நாமத்தை எப்பவும் சொல்லிக்கிட்டே இருக்கிறேன். அவ மேல பாடல்கள் எழுதிக்கிட்டே இருக்கேன்.

என் தாயையே மீட்டுத் தந்த தாய்க்கு என் வாழ்க்கைல நான் என்ன கைமாறு செய்ய முடியும்... காலமெல்லாம் அவ நாமத்தைப் பாடுறதைத் தவிர, சொல்லுங்க” என்று சொல்லி அவர் முடிக்கும் போது அவர் கண்கள் குளமாகியிருந்தன.