Published:Updated:

குருப்பெயர்ச்சி தலங்கள்: வில்வம் தோன்றிய முதல் ஊர்!

திருலோக்கி சுந்தரேஸ்வரர்

குரு பலம் அருளும் திருலோக்கி சுந்தரேஸ்வரர்

குருப்பெயர்ச்சி தலங்கள்: வில்வம் தோன்றிய முதல் ஊர்!

குரு பலம் அருளும் திருலோக்கி சுந்தரேஸ்வரர்

Published:Updated:
திருலோக்கி சுந்தரேஸ்வரர்

மாங்கல்ய தோஷத்தை நீக்கி குருபலம் அருளும் அற்புதத் தலம், சிவபெருமான் ரிஷபாருடர் கோலத்தில் கல் திருமேனியராக அருளும் க்ஷேத்திரம், பூவுலகில் வில்வம் தோன்றிய முதல் ஊர், திருமகள் சிவ பெருமானை வழிபட்ட அற்புதப் பதி!

இவ்வளவு சிறப்புகளையும் கொண்ட திருத்தலம் எது தெரியுமா?

‘திரைலோக்கிய மாதேவி சதுர்வேதமங்கலம்’ என்று சரித்திர நூல்கள் போற்றும் திருலோக்கி தலம்தான் அது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள சிவக்ஷேத்திரம் இது. இங்கே, அருள்மிகு அகிலாண்டேஸ்வரியுடன் மிக அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சுந்தரேஸ்வரர்.

அளவில் உயரமான ஆவுடையார், குட்டையான பாணத்துடன் லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்கிறார் இந்த ஈசன். வலப்புறத்தில் அம்பிக்கையும் கிழக்குநோக்கி அருள்கிறாள்.

‘ஏமம்’ என்ற சொல்லுக்கு ‘பொன்’ என்றொரு பொருளும் உண்டு. நவ கிரகங்களில் ‘குருபகவான்’ என்றழைக்கப்படும். ‘பிரஹஸ்பதிக்கு’ பொன்னவன் என்று பெயர். அப்படி குரு வழிபட்டு அருள் பெற்றதால் அவ்வூருக்கு ‘ஏமநல்லூர்’ என்ற பெயர் உண்டாயிற்று.

இன்று இத்தலத்தின் பெயர் ‘திருலோக்கி’ என்பதாகும். தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனது அருமை மகன் கங்கை கொண்ட சோழனாகிய ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றில் இத்தலம் ‘இராஜேந்திர சிம்ம வளநாட்டு மண்ணி நாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கி மாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று குறிப்பிடப்படுகிறது.

திருலோக்கி சுந்தரேஸ்வரர்
திருலோக்கி சுந்தரேஸ்வரர்
திருலோக்கி
திருலோக்கி
திருலோக்கி சுந்தரேஸ்வரர்
திருலோக்கி சுந்தரேஸ்வரர்
ரதி மன்மதன்
ரதி மன்மதன்ராஜராஜ சோழனது பட்டத்து அரசிகளில் ஒருத்தி ‘திரைலோக்கிய மாதேவி’ என்ற பெயர் உடையவள். அவளது பெயரில் வேதம் பயில வல்லார்க்கு ராஜேந்திர சோழன் இவ்வூரைத் தானமாக வழங்கினான். தொன்மை வாய்ந்த்அ இவ்வூர் முற்காலத்தில் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த வனமாக இருந்துள்ளது. எனவே இத்தலத்து ஈசனும் தன் தலத்திற்குரிய விருட்சமாக கொன்றை மரத்தையே ஏற்றுள்ளார்.

சிவபெருமான் காமனை எரித்தத் திருக்கதை தெரியும்தானே?

சிவ பூஜை
சிவ பூஜை


சூரபதுமனை வீழ்த்த சிவசக்தி மைந்தன் பிறந்தாக வேண்டும். சிவமோ கடும் தவத்தில் ஆழ்ந்திருந்தது. அவரிடமிருந்து வெளிப்பட்ட தவாக்னியால் உலகம் தகித்தது. தேவர்கள் சிவனாரின் தவத்தைக் கலைக்க விரும்பினர். அதற்குக் காமதேவனைக் கருவியாக்கினர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்மதன் சிவபெருமான் மீது மலர்க்கணை தொடுத்தான். அதனால் தவம் கலைந்த சிவனார் கோபம் கொண்டார். நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார்.

கணவனை இழந்த ரதிதேவி கலங்கிக் கதறி சிவபெருமானைப் பிரார்த்தித்தாள். அதனால் மனம் இரங்கிய பெருமான் மன்மதனை உயிர்ப்பித்தார். அவனின் திருவுருவம் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் என்று அருள்பாலித்தார்.

இந்தக் கதையின்படி, ரதிதேவி தனது மாங்கல்ய பலத்துக்காக பல தலங்களில் சிவ பூஜை செய்தாளாம். அவற்றுள் மிக முக்கியமானது இந்தத் திருலோக்கி.

அத்துடன் லட்சுமிதேவியும் தன் மகனான மன்மதன் உயிர்த்தெழ வேண்டி, தவமிருந்த பல சிவத்தலங்களில் இது பிரதானமானது என் கின்றன ஞானநூல்கள்.

ரிஷபாரூடர்
ரிஷபாரூடர்திருமகளின் கடும் தவத்தின்போது அவளது சுவாசத்திலிருந்து எழுந்த கலைகள், திரிதள வில்வ பத்ரங்களாக மாறி, பூவுலகில் விருட்சங்களாகத் தோன்றினவாம்.

அப்படி, பூலோகத்தில் முதன்முதலாக வில்வம் தோன்றியது இவ்வூரில்தான் என்கின்றன புராணங்கள். மேலும், மகாவிஷ்ணு வில்வ இலைகளை உவந்து ஏற்கும் தலம் இது என்றும் ஞானநூல்கள் சிறப்பிக்கின்றன.

திருமாலின் திருமார்பில் நிரந்தரமாக இடம்பெற்று மகிழ எண்ணிய திருமகள், மார்க்கண்டேய மகரிஷி சொன்ன உபாயத் தின்படி, இந்தத் தலத்தில் சிவபெருமானை நோக்கித் தவமியற்றினாள். அவளின் தவத்தால் மகிழ்ந்த ஈசன், ரிஷபாரூடராகக் காட்சியளித்து அவள் விரும்பியபடியே வரம் அளித்தார்!

ஆக, மாங்கல்ய பலம் வேண்டியும் தம்பதி ஒற்றுமை மேலோங்கவும் கணவன் - மனைவி இணைபிரியாமல் வாழவும் வரம் தரும் அற்புத க்ஷேத்திரம் இது என்பதை மேற்காணும் திருக் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆலய மகிமைகளை எண்ணி வியந்தபடியே, வலம் வந்தோம். மூலஸ்தானத்தில் சுந்தரேஸ்வர பெருமானை தரிசித்து வெளி மண்டபத்தில் அகிலாண்டேஸ்வரி அம்பிகையை வழிபட்டு வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி, முருகப்பெருமான், விஸ்வநாதர், பைரவர், சண்டிகேஸ்வரரையும் வணங்கி மகிழலாம்.

கணிதச் சக்கரவர்த்தி என்பவரால் நிர்மாணிக் கப்பட்ட 36 தூண்கள் மற்றும் எண்கோண அமைப்பிலான விதான த்துடன்கூடிய பெரிய மண்டபம் இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்று.

ஆலயச்சிறப்புகள் குறித்து இக்கோயிலின் குருக்கள் ஆலால சுந்தரத்திடம் பேசினோம்.

“ஜாதகப்படி, குருபகவான் தனுசு மற்றும் மீன‌ ராசிகளுக்கு உரியவர். கடக ராசிக்கு உச்சம். மகரத்துக்கு நீசம். இந்த ராசிக்காரர்கள் இத்தலத்து குரு பகவானை வழிபட்டால், வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள்.

குறிப்பாக, மகர ராசிக்காரர்கள் குருவினால் நற்பலன்களைப் பெற்றிட வணங்கவேண்டிய தலம் இது. ஜாதகத்தில் குருபகவான் பலம் இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வு வளமாகும் என்பது கண்கூடு.

நீண்டநாள்களாக கல்யாணத் தடையால் வருந்தும் அன்பர்கள், குரு வாரமாகிய வியாழக் கிழமைகளிலும் பிரதோஷ காலங்களிலும் இங்கு வந்து ரிஷபாருடரையும் குருபகவானையும் தரிசித்து வழிபடுவதால், தடைகளும் தோஷங்களும் நீங்கும்; விசேஷ பலன்கள் கைகூடும்; விரைவில் கல்யாண மாலை தோள்சேரும்.

அதேபோல், ஆளுயர அளவில் - ஒரே கல்லில் திருவாசியுடன் அமைக்கப்பட்டுள்ள ஆலிங்கபாவனையிலான ரதி-மன்மதன் சிலை இக்கோயிலின் கலைப்பொக்கிஷமாகும். புனுகு சாத்தி இவர்களை வழிபடுவது இத்தலத்து ஐதிகம்.

\இல்லறத்தில்‌ பிணக்கு ஏற்படும் தம்பதியர் இவர்களை வழிபட்டு நன்மை அடையலாம். இந்தச் சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டு, பிரசாதமாகத் தரப்படும் புனுகுச் சாந்தினைத் தரித்துக்கொள்வதால், மாங்கல்ய தோஷம் நீங்கும்” என்றார்.

மகாலட்சுமி
மகாலட்சுமிஅப்பர் தமது திருத்தாண்டகப் பாடலில் இத்தலத்தை வைப்புத் தலமாகப் போற்றுவார். முதலாம் ராஜராஜன் காலத்தில் மிக உயர்ந்த நிலையில் போற்றப் பட்ட தவசீலரும் அரச குருவுமான கருவூர்த்தேவர், திரைலோக்கிய சுந்தரரை காந்தாரப் பண்ணில் திருவிசைப்பாவில் பாடி மகிழ்கிறார்.

இந்தத் தமிழ் மாலையை இசையோடு பாடி வழிபடுவோர் இனிமையான இல்லற வாழ்க்கையைப் பெற்று நல்லறங்கள் பல புரிந்து இன்புறுவர் என்று கருவூர்த்தேவர் இப் பதிகத்தில் போற்றுகிறார். இவரது திருவுருவத்தை இக்கோயிலின் வெளிமண்டபத்தூணில் கண்டு இன்புற முடிகிறது.

அற்புதமான இந்தத் தலத்துக்கு நாமும் ஒருமுறை சென்று அம்மை அப்பனையும் குருவையும் தரிசித்து குருவருளையும் திருவருளையும் ஒருங்கே பெற்றுச் சிறப்போம்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - திருப்பனந்தாள் அருகே சுமார் 5 கி.மீ. தொலைவிலும், ஆடுதுறை- துகிலி வழியில் துகிலியிலிருந்து 5 கி.மீ.தொலைவிலும் திருலோக்கி ஆலயம் அமைந்துள்ளது.

குருபலம் அருளிய ரிஷபாரூடர்!


ருமுறை, நவகிரகங்களில் சுபரான குருபகவான் தாம் பலம் குன்றி வருந்திய நிலையில், மத்யார்ஜுனம் எனப்பெறும் திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானைத் தொழுது வேண்டினார். அந்த இறைவனின் ஆணைப்படி இந்தத் திருலோக்கி தலத்தை நாடி வந்தார்.

காவிரியின் வடகரையில் அமைந்த இந்த ஏமநல்லூரில் அருளாட்சி புரியும் சுந்தரேசப் பெருமானது லிங்கத் திருமேனிக்கு குருபகவான் விசேஷமாக வழிபாடு செய்தார். பசுநெய்யால் விளக்கேற்றினார். கொன்றை மாலை அணிவித்து முல்லைப்பூவால் அர்ச்சனை செய்தார். தயிர் அன்னம் நிவேதனம் செய்து பெருமானது திருவருளை வேண்டினார்.

அவரது அன்பான பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு அனுக்கிரஹம் செய்தார்.

“ப்ரஹஸ்பதியே! பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த நீ முக்கிய காரணமாக இருப்பாய்; உமது பார்வை மூலம் எல்லாவிதமான தோஷங்களும் விலகி ‘குருபலம்’ பெற்று இனிய இல்லறம் அமைய உமது பலம் பெருகட்டும்” என்று அருள்புரிந்தார்.

குரு இப்படி சுந்தரேஸ்வரப் பெருமானிடம் அனுக்கிரஹத்தால் ‘குருபலம்’ பெற்ற அற்புதமான திருத்தலமே ஏமநல்லூர்.

குரு பகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த கோலத்தில் இக்கோயிலில் திகழும் உமாமகேச்வரர் வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் காண்பதற்கரிய அற்புத வடிவாகும்.

பிரதோஷ காலத்தில் வழிபட வேண்டிய ரிஷபாரூடனர் திருக்கோலமானது ஏனைய தலங்களில் உலோகத்திருமேனியாகத் திகழும். அம்மையும் அத்தனும் இணைந்து ரிஷப வாகனத்தவராய், கல் திருமேனியராய்க் காட்சி தருவது காட்சி தருவது இத்தலத்தில் மட்டுமே‌.

ஒற்றைக் கல்லில் எழில் வாய்ந்த இத்தகையதோர் அமைப்பு சிற்பக்கலையின் உச்சம்! ராஜேந்திரசோழர் தம் வட இந்திய படையெடுப்பின் வெற்றிச் சின்னமாகக் கொண்டு வரப்பெற்ற நுளம்பர் படைப்பு இது என்கிறார்கள்.

எதிரே இந்த ரிஷபாரூடனரை கை கூப்பி வணங்கும் பாவனையில் நவகிரக குருபகவான் நிலைபெற்றுள்ளார். இதுவும் மிகுந்த விசேஷமானதோர் அரிய கோலமாகும்.

துர்கை தரிசனம்!

துர்கை தரிசனம்
துர்கை தரிசனம்


கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் திருத்தலத்தில் மூன்று கண்களுடனும் எட்டுத் திருக்கரங்களுடனும் காட்சி தரும் துர்கை, பக்தர்களைக் காக்க உடனே புறப்படும் தயார் நிலையில் உள்ளாள். இவளது எட்டுக் கரங்களில் ஒன்றில் கிளியை வைத்திருப்பது சிறப்பு.

சுருட்டப்பள்ளி ஈஸ்வரன் திருக்கோயிலில் அருள் புரியும் துர்க்கை, பிடாரியின் மீது நின்று காட்சி தருகிறாள். இது ஓர் அபூர்வ திருக்கோலம் என்பர்.

புதுக்கோட்டை மாவட்டம் மலையப் பட்டியில் உள்ள சிவன் குடவரைக் கோயிலின் மேற்குச் சுவரில், தாமரை மலரில் நின்ற கோலத்தில் துர்க்கையானவள் எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள்.

காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் உள்ள மேற்புற தேவ கோஷ்டத்தில் துர்க்கையானவள் மகிஷன் மீது நின்று சங்கு- சக்கரம், அபயம்- வரதம் என்ற அமைப்பில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism