Published:Updated:

காசிக்குப் போக அவசியம் இல்லை!

விருத்தாசலம்
பிரீமியம் ஸ்டோரி
விருத்தாசலம்

விருத்தகாசி...விருத்தாசலம்!

காசிக்குப் போக அவசியம் இல்லை!

விருத்தகாசி...விருத்தாசலம்!

Published:Updated:
விருத்தாசலம்
பிரீமியம் ஸ்டோரி
விருத்தாசலம்

விருத்தாச்சலம் - இந்தத் தலத்தில் வசிக்கும் அன்பர்களும், ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வந்தவர்களும் காசிக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லையாம். ஆம்! காசிக்கு நிகரான புண்ணியங்களை அருளும் அற்புத க்ஷேத்திரம் இது. அதனால்தான் இதை `விருத்த காசி’ என்றே போற்றிப் புகழ்கின்றன ஞானநூல்கள்.

விருத்த காசி
விருத்த காசி


 புராணங்களும் சமய இலக்கியங்களும் போற்றும் பெயர் திருமுது குன்றம். முது-பழைய, குன்றம்- மலை. இதுவேதான், வடமொழியில் விருத்தாசலம் என்று வழங்குகிறது. விருத்த- முதிய; அசலம்- மலை. இங்கு அருளும் மூலவரின் திருப்பெயரும் பழமலை நாதர் என்பதே.

 நடுநாட்டில் மணிமுக்தா நதிக்கரையில் அமைந்திருக்கிறது விருத்தாசலம். பாடல் பெற்ற 22 நடுநாட்டுத் தலங்களில் இது 9-வது தலம். உலகில் மலைகள் தோன்றுவதற்கு முன்பு, சிவபெருமானே இங்கே மலை வடிவில் வெளிப்பட்டதாகவும், பின்னர் இந்த மலை இறைவன் திருவருளால் அமிழ்த்தப்பட்டுவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

 `மூத்ததான இந்தப் பழமலை பூவுலகுக்கு அச்சாணியாக மண்ணுக் குள் அழுந்தி, மேலே சிவலிங்கமாக விளங்கி நிற்கும். எமது அந்த லிங்கத் திருமேனியை வழிபடுவோர், விரும்பிய பலனை அடைவார்கள்’ என்கிறது விருத்தாசலப் புராணம்.

 சிவபெருமானின் சிறப்புமிக்க ஆயிரத்தெட்டுத் தலங்களில், நான்கு தலங்கள் மிக முக்கியமானவை; அவற்றுள், விருத்தாசலமும் ஒன்று காசி, சிதம்பரம், காளஹஸ்தி ஆகியவை ஏனைய மூன்று.

 சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பிரமாண்டமான கோயில், நான்குபுறமும் 26 அடி உயர மதில்களுடன் திகழ்கிறது. நான்கு புறமும் 7 நிலை கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன. மொத்த கோபுரங்கள் ஐந்து. சுமார் 13½ கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்த `இரிடேசியஸ்’ வகையைச் சேர்ந்த சுண்ணாம்புப் பாறைகளின்மீது இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்கிறார்கள், புவியியல் ஆய்வாளர்கள்.

1760-ல் ஆங்கிலேயர்கள் இந்தக் கோயிலைச் சுற்றிலும் அகழி வெட்டி கோட்டையாகப் பயன்படுத்தினார்களாம். அதன் அடையாளமாக இன்றும் கோயிலைச் சுற்றியிருக்கும் தெருக்கள் தென்கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி என்று குறிப்பிடப்படுகின்றன.1803-ம் ஆண்டு கார்ரோ என்ற ஆங்கில ஆட்சியாளர், அகழிகளை மூடி மீண்டும் கோயிலாக மாற்றினார்.

கோயிலின் இறைவன் விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரீஸ்வரர், விருத்தகிரிநாதர், விருத்தலேஸ்வரர் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இறைவி விருத்தாம்பிகை எனும் பெரிய நாயகி. பாலாம்பிகை எனும் இளையநாயகியாகவும் அருள் தருகிறாள்.

எப்படிக் கயிலாச மலையைச் சிவபெருமானாகக் கண்டு வணங்குகிற மரபு இருக்கிறதோ, அப்படித்தான், விருத்தாசல பழைய மலையையும் இறையனாராகக் காணும் மரபு இருந்திருக்கிறது.

முதுகுன்றம்
முதுகுன்றம்


இந்த தலத்தில் உயிர் துறப்பவர்களைப் பழமலைநாதர் தன் தொடையின் மீது கிடத்திக்கொண்டு `சிவாயநம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்ய, அன்னை பெரியநாயகி தனது முந்தானையால் வீசி இளைப்பாற்றுவாளாம். `தூசினால் அம்மை வீசத் தொடையின் மேல்கிடத்தித் துஞ்சும் மாசிலா உயிர்கட்கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி...’ எனப் பாடுகிறது, கச்சியப்பரின் கந்தபுராணப் பாடல்.

சுந்தரருக்குப் பொற்காசுகள் கிடைத்த தலம் இது. ஊர் ஊராகச் சென்று சிவ தரிசனம் செய்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருமுதுகுன்றம் சென்றார். ஊர்ப்புறத்தே வரும்போது, ஊரின் பெயர் என்ன என்று கேட்டார். ‘முதுகுன்றம்’ என்றனர். கிழக் கடவுளை, அதுவும் கிழ ஊரில் போய்க் காண்பதா! யோசனையில் ஆழ்ந்த சுந்தரர், இந்த ஊர் வேண்டாமென்று திரும்பிவிட்டாராம்.

பொறுப்பாரா பழைமலைநாதர்! தேவாரப் பாட்டுக் கேட்காமல் அவரால் நிம்மதியாக இருக்க முடியுமா, என்ன! முருகப்பெருமானை அனுப்பி சுந்தரை அழைத்து வரும்படி பணித்தார். அப்படியே சென்ற முருகப்பெருமான் சுந்தரரை வழிமறித்தார். தந்தையின் கட்டளையைச் சொன்னார். ஆனால் சுந்தரரோ, ``பரம்பொருள் இளமைக் கோலம் கொண்டு காட்சி தருவார் எனில், அவரைச் சந்திக்கச் சம்மதிக்கிறேன்.’’ என்று கூறினார்.

விருத்தகிரீஸ்வரர்
விருத்தகிரீஸ்வரர்

முருகப்பெருமான் மூலம் சுந்தரரின் விருப்பத்தை அறிந்த பெரிய பழைமலைநாதர், சுந்தரருக்காகச் சிறிய பழைமலைநாதராக மாறி நின்றார். அம்மையும் பாலாம்பாள் கோலம் கொண்டு காட்சி தந்தாள் என்கிற திருக்கதை ஒன்று உண்டு.

சுந்தரர் விருத்தாசலம் வந்து சுவாமியைப் பாடிப் பரவினார். ஒருபாடலில், `ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம்தொறும் பாடிப்படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ...’ எனக் கேட்கிறார் சுந்தரர். ‘அடியாரையும் சேர்த்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று நீர் பாடியும் ஆடியும் சேர்த்த பொருளெல்லாம் உம் தேவி உமையாருக்கு மட்டும் தானா?’ என்பது பொருள். அதாவது, `எங்களுக்குத் தர மாட்டீரா?’ என்று சுந்தரர் மறைமுகமாக கேள்வி தொடுத்தார் போலும். தம்பிரான் தம் தோழருக்கு அருள்செய்ய சித்தம்கொண்டார்; பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார்.

ஐந்து தேர்கள்
ஐந்து தேர்கள்


பன்னிரண்டாயிரம் பொற்காசுகளையும் தன்னந்தனியே எப்படித் திருவாரூர் வரை கொண்டு செல்வது? அவற்றை இங்கே ஆற்றில் போட்டு, பின்னர் திருவாரூர் குளத்தில் எடுத்துக் கொள்ளச் சொன்னார் சிவனார் என்பதும் ஊர் வரலாறு.

சுந்தரர் பன்னிரண்டாயிரம் பொற்காசுகளை நதியில் போட்டார். அப்போது ஆற்றின் ஆழத்தில் அமர்ந்து, சுந்தரர் போட்ட காசுகளை எண்ணி, பன்னிரண்டாயிரம் எனச் சரியாகக் கணக்குப் பண்ணிச் சொன்னார் பிள்ளையார். அவர்தான் இங்கு ஆழத்துப் பிள்ளையாராக அருள்கிறார்.

விநாயகரின் அறுபடைகளில் 2-வது தலம் இது. இங்கே 18 அடி ஆழத்தில் ஆழத்துப் பிள்ளையாராக அருள்கிறார் கணபதி. விபசித்து முனிவரின் மேற்பார்வையில் கோயிலின் கோபுரத் திருப்பணி நடந்தபோது, அது மெள்ள மெள்ள சாய ஆரம்பித்தது. உடனெ எதிர் திசையில் பூமியைத் தோண்ட தோண்ட கோபுரம் நிமிர்ந்தது. அப்படித் தோண்டப்பட்ட பள்ளத்தில்தான் ஆழத்து விநாயகர் அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள ஈசனை அப்பரும் பாடிப் பரவுகிறார்.

தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த

தீங் கரும்பைத் திருமுதுகுன்றுடையான் தன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்தவாறே, என்று பாடித் தொழு கிறார் திருநாவுக்கரசர்.

ஐந்து தீர்த்தங்கள்
ஐந்து தீர்த்தங்கள்

அம்பாளின் சந்நிதி தனிக்கோயிலாக இரட்டைத்தளப் பிராகாரத் துடன் திகழ்கிறது. அம்பாள் சந்நிதிக்குத் தனியான கொடிமரமும், வாகனமாக நந்தியும் உள்ளன. நான்கு திருக்கரங்கள். பாசாங்குசம் தாங்கி, அபயமும் வரமும் காட்டி, நின்ற திருக்கோலத்தில் அருளாசி வழங்குகிறாள், அருள்மிகு விருத்தாம்பிகை.

விருத்தாசலம் ஆலயத்தில் உற்சவத்தின்போது சுவாமி- அம்பாள் எழுந்தருள்வதிலும் ஒரு சிறப்பு உண்டு. ஸ்வாமி - அம்பாள் உற்சவ மூர்த்திகள் பெரிய நாயகர்-பெரியநாயகி ஆகிய திருப்பெயர்களில் திகழ்கிறார்கள். அதேபோல் விருத்தாம்பிகை மற்றும் பாலாம்பிகை இருவருக்கும் உற்சவர் உண்டு.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்
ஆழத்துப் பிள்ளையார்
ஆழத்துப் பிள்ளையார்
63 நாயன்மார்
63 நாயன்மார்


உற்சவ நேரத்தில், விருத்தாம்பிகையும் பாலாம்பிகையும் உற்சவத் திருமேனிகளில் எழுந்தருளிவிட்டால்... பெரிய நாயகியும் அருகிருக்க... மூன்று சக்திகளுடன் சுவாமி காட்சி கொடுப்பார் ஸ்வாமி. ‘இச்சா சக்தியும் கிரியா சக்தியும் ஞான சக்தியும் எல்லாமும் அந்த அம்மை யப்பனே!’ என்று விளக்குவதாகவே இந்தக் காட்சி அமையும்.

குபேரனை வென்று அவன் செல்வங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டு புஷ்பக விமானத்தில் ஆகாயத்தில் பறந்தான் ராவணன். வழியில் திருமுகுன்றம் வானோங்கி வளர்ந்து நின்றதால் இந்தத் தலத்தை அவனால் கடக்கமுடியவில்லை. உடனே, அங்கிருந்த நந்தியை அழைத்து மலையை நகர்த்தும்படி சொன்னான் ராவணன். நந்தியோ அம்மையும் அப்பனும் சயனத்தில் உள்ளதால் மலையை வலமாகச் சுற்றிச் செல்லும்படி பணித்தார். உடனே ராவணன், ``குரங்கே! எனக்கே புதந்தி சொல்கிறாயா...’’ என்று கோபத்துடன் கத்தினானாம். நந்திதேவரும் கோபம் கொண்டார். `என்னை குரங்கு என்றா அழைக்கிறாய்... ஆணவம் பிடித்த ராவணா! உன் கதை குரங்கால்தான் முடியும்!’’ என்று சாபம் இட்டாராம்!

இங்கே 28 ஆகமங்களையும் 28 லிங்கங்களாக பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம் முருகப்பெருமான். கோயிலின் வடமேற்கு திசையில் தனிச் சந்நிதியில் முருகப்பெருமான் வணங்கும் அமைப்பில் 28 லிங்கங்களையும் தரிசிக்கலாம். தெற்கு வரிசை லிங்கங்களுக்கு நடுவில் விநாயகரும், வடக்கு வரிசை லிங்கங்களுக்கு நடுவில் தேவியருடன் முருகப்பெருமானும் காட்சி தருகின்றனர். வேறெங்கும் காண்பதற்கரிய அமைப்பு இது என்கிறார்கள்.

இங்குள்ள தீர்த்தங்களும் பிரசித்திபெற்றவை. கோயிலின் வடக்குக் கோபுரத்திற்கு நேர் வடக்கு திசையில் இருக்கும் மணிமுத்தாற்றுப் பகுதி `புண்ணிய மடு’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பெரிய ஆறாக ஓடிக் கொண்டிருந்த மணிமுத்தா நதி, இப்போது சிறிய மடுவாக மட்டுமே காணப்படுகிறது. காசியிலுள்ள கங்கையில் நீராடினால் என்ன பேறு உண்டோ, அவ்வளவு பேறு இந்தப் புண்ணிய மடுவில் நீராடுவதாலும் கிடைக்கும்.

இந்தப் புண்ணிய மடுவில், இறந்தவர்களின் அஸ்திகளைக் கரைத்து விட்டு, உறவினர்கள் தலைமுழுகுவது வழக்கம். அந்தக் காலத்தில் இந்தக் கோயிலில் இருந்தவர்கள் காசிக்குச் செல்வதில்லை என்ற மரபைக் கடைப்பிடித்துள்ளார்கள். காசியைவிட அதிகமான வீசம் கொண்டது விருத்தாசலம் என்கின்றனர் அடியவர்கள்.

பிராகாரத்தில் தென்மேற்கில் நந்தவனத்தில் அமைந்த சக்கரத் தீர்த்தத்தைத் திருமால் உருவாக்கினார். அதில் திருமகளுடன் நீராடி சிவனாரை தரிசித்தார். அக்னி மூலையில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு பிரம்மன் பேறு பெற்றார். நம் பாவங்களைப் பொசுக்கவல்லது இந்தத் தீர்த்தம்.

அதேபோல் வன்னி மரத்துக்கு மேற்குப் புறம் அமைந்த நித்தியானந்த கூபம் மோட்சம் அருளும் என்கிறார்கள். கோயிலுக்கேற்ப ஸ்தல விருட்சமான வன்னியும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள்.

தேவலோகத்துக் கற்பக மரமே இங்கு வன்னிமரமாக வந்து பழமலைநாதர் திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இந்தத் தலத்தில் வழிபட்டவர்களெல்லாம், சிறு சிறு சிலைகளாக வன்னி மரத்தடியில் நிற்கிறார்கள் - விபசித்து முனிவர், ரோமச மகரிஷி, விதர்க்கணச் செட்டியார் ஆகியோர். கூடவே குபேரனின் தங்கையையும் இங்கே தரிசிக்கலாம்.

தேவ மாதருள் ஒருத்தியான குபேரன் தங்கை, தன் தோழிப் பெண்களுடன் மணிமுத்தாவில் தீர்த்தமாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய மூக்கணி (மூக்குத்தி) காணாமல் போய் விட்டது. அதைத் தேடி அவள் கலங்கிக் கொண்டிருக்க, அங்கு வந்த விபச்சித்து, அதைத் தேடிக் கொடுத்தார். மகிழ்ந்து போன அவள், விபச்சித்துக்கு பல்வேறு ஆபரணங்களைப் பரிசாக வழங்க, அவற்றைக் கொண்டு ஆலயத் திருப்பணி செய்து, உற்சவமும் நடத்தினாராம் விபச்சித்து முனிவர்.

இங்கு திருப்பணிகள் செய்த விபசித்து முனிவர், வேலை செய்தவர் களுக்கு வன்னி மரத்தின் இலைகளையே முடிப்பு ஒன்றில் வைத்துக் கூலியாகக் கொடுப்பாராம். அவர்கள் வீட்டுக்கு சென்று முடிப்பை அவிழ்த்துப் பார்த்தால், அன்று அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப, இலைகள் பொற்காசுகளாக மாறியிருக்குமாம்! விபசித்து முனிவருக்குச் சிவப் பரம்பொருள் காட்சிகொடுத்த வைபவம், மாசி மாதம் 6-ம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

விபசித்து முனிவர் மட்டுமா? ரோமசர், நாதசர்மா, அநவர்த்தனி மற்றும் குமாரசர்மா. ஆக ஐந்து மகான்கள் வழிபட்ட திருத்தலம் இது. சுக்கிரன், யாக்ஞவல்கியர், அகத்தியர், அத்திரி, காசியபர் ஆகிய ஐந்து ரிஷிகளும் வழிபட்ட தலம் இது.

விருத்தாசலம் திருக்கோயில் ஐந்து எனும் எண்ணிக்கையிலான பெருமைகளைப் பெற்றுத் திகழ்வது சிறப்பம்சம்.

ஐந்து பிராகாரங்கள்: ஆலயப் பிராகாரம் மூன்று, தேரோடும் வீதி மற்றும் பஞ்சவர்ணப் பிராகாரம் (மானசிக ஆன்மப் பிராகாரம்). அதேபோல் கோபுரங்களும் கொடிமரங்களும் ஐந்து உள்ளன.

ஐந்து தீர்த்தங்கள்: அக்னி, சக்கர, குபேர, மணிமுத்தா நதி மற்றும் நித்யானந்த கூபம் (இறைவ னோடு இணையும் ஆனந்த ஆன்ம அனுபவம்).

ஐந்து விநாயகர்கள்: ஆழத்துப் பிள்ளையார், வல்லப விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், தசபுஜ விநாயகர், முப்பிள்ளையார்.

ஐந்து தேர்கள்: விநாயகர், பழைமலைநாதர், பெரிய நாயகி, சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள்.

ஐந்து தேவர்கள் வழிபட்ட தலம்: திருமால், பிரம்மா, இந்திரன், குபேரன் மற்றும் குபேரனின் தங்கை.

ஐந்து மண்டபங்கள்: தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபச்சித்து மண்டபம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் இசை மண்டபம் (கோயில் முகப்பில் இருக்கும் மண்டபம், அம்மன் சந்நிதி முன் மண்டபம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் இன்னும் அதிகமாகும்).

கி.பி.1193-ல் ஏழிசை மோகனான குலோத்துங்கச்சோழக் காடவ ராதித்தன் என்ற குலோத்துங்க சோழன், ஏழிசை மண்டபத்தை அமைத்தாராம். அந்த மண்டபத்தில் தலைப்பாகையுடன் காணப்படும் உருவம் ஏழிசை மோகனனுடையது என்று கூறப்படுகிறது.

பராந்தகன், கண்டராதித்தன், செம்பியன்மாதேவி, உத்தமச் சோழன், ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், அரச நாராயணன், கச்சிராயன் உள்ளிட்டோரின் பெயர்கள், இங்குள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன. பல்லவன் கோப்பெருஞ்சிங்கன் போர்க்களத்தில் பலரையும் கொன்று குவித்த பழி நீங்க, பழமலைநாதருக்கு வைரமுடி காணிக்கை செய்து வைத்த குறிப்பும் கல்வெட்டில் காணப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism