Published:Updated:

வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 89-வது ஆஞ்சநேயர்!

காடுஅனுமந்தராயர் ஸ்வாமி
பிரீமியம் ஸ்டோரி
காடுஅனுமந்தராயர் ஸ்வாமி

தாராபுரம் காடு அனுமந்தராயர் தரிசனம்!

வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 89-வது ஆஞ்சநேயர்!

தாராபுரம் காடு அனுமந்தராயர் தரிசனம்!

Published:Updated:
காடுஅனுமந்தராயர் ஸ்வாமி
பிரீமியம் ஸ்டோரி
காடுஅனுமந்தராயர் ஸ்வாமி

- பத்மபிரியா பாஸ்கரன்

விஜயநகரத்துக்கு அன்றைய தினம் விசேஷமாய் அமைந்தது என்றே சொல்லவேண்டும். அவை கூடியதும் மன்னரை நாடி வந்த ராஜகுரு மிகவும் வித்தியாசமான ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

“மன்னா! நான் உன் அரியணையில் அரசனாக அமரவேண்டும். அனுமதிப்பாயா?”


மன்னன் ஆச்சர்யப்பட்டுப்போனார். சர்வகாலமும் லோக நன்மையை மட்டுமே நினைக்கும் தன்னுடைய குருநாதர் அரியணையை விரும்புவாரா... அவர் வேண்டினால் வானுலக ஆட்சியே அவரைத் தேடி வருமே? அப்படியிருக்க, அவர் மண்ணுலக மன்னனாக விரும்புவது ஏனோ... என்ற சிந்தனை ஒருபுறம் எழுந்தாலும், தாமதியாமல் தன் இருக்கையிலிருந்து எழுந்து வணங்கி நின்றார் மன்னர். குருவுக்கு வழிவிட்டார். அவரின் குரு அரியணையில் அமர்ந்தார். சில நிமிடங்கள் கழித்துத் தன் மேனியில் படர்ந்திருந்த காவி வஸ்திரம் ஒன்றைத் தூக்கி வீசினார். அந்த வஸ்திரம் தீப்பற்றி எரிந்தது. நொடிப்பொழுதில் சாம்பலானது. மன்னரும் மற்றவர்களும் அதிர்ந்துபோயினர்.

“நடப்பவற்றை எமக்கு விளக்கியருளுங்கள் குருவே...” என்று மிகப் பணிவுடன் வேண்டினார் மன்னன்.

“மன்னா, வானியலில் இன்று விநோத கிரகச் சேர்க்கை; கொஞ்சம் விபரீதமும் கூட. இதை குஹபீடை என்று கூறுவார்கள். இது ஆள்பவரைப் பாதிக்கும் யோகம். அந்தக் கணத்தில் நீ மன்னனாக இருந்தால், அது உனக்கு நல்லதல்ல. அதனால்தான் நான் மன்னனானேன். வந்த பீடையையும் வென்றவனானேன். இனி ஆபத்தில்லை” என்றார் குரு. மன்னவரும் மற்றவரும் குருவின் தாள்பணிந்து போற்றினர். அந்த மன்னன் கிருஷ்ண தேவராயர். அந்த குரு வியாசராஜ தீர்த்தர்.

காடுஅனுமந்தராயர் ஸ்வாமி
காடுஅனுமந்தராயர் ஸ்வாமி

ஓவியங்கள் சிலைகளாகும்!

ஶ்ரீவியாசராஜர் - பக்த பிரஹலாதனின் அவதாரம். ஶ்ரீராகவேந்திரராய் அடுத்த அவதாரமும் எடுத்தவர். தென்னிந்திய கிருஷ்ண பக்தர்கள் அனைவரும் முணுமுணுக்கும் ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ’ எனும் பாடலை அருளியவர்.

ஶ்ரீவியாசராஜர் தன் வாழ் நாளில் 732 ஆஞ்சநேய மூர்த்தங் களை உருவாக்கினாராம். அதுவும் எப்படி... தன்னிடம் உள்ள அங்கார கட்டியைக் கொண்டு (மாத்வர்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமக்கட்டி)ஒரு பாறை மீது அனுமன் உருவத்தை வரைவார். அந்த ஓவியமே, சிலையாகிவிடுமாம்!

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கோடைத் தலைநகரான பெனுகொண்டாவில் மட்டும் ஒராண்டில் 365 ஆஞ்சநேயர் களைப் பிரதிஷ்டை செய்துள்ளார் ஶ்ரீவியாசராஜ தீர்த்தர் என்கிறது அவரின் சரிதம்.

காடுஅனுமந்தராயர் ஸ்வாமி
காடுஅனுமந்தராயர் ஸ்வாமி

விசேஷ திருக்கோலம்!

ஶ்ரீவியாசராஜர் உருவாக்கிய ஆஞ்சநேயர் திருவதனம் பெரும் பாலும் ஒரே மாதிரியாக விளங்கும். வலது கரம் அபய ஹஸ்தமாகவும் இடது கரத்தில் சௌகந்திகா மலரும் காணப்படும். அனுமனின் வால் தலைக்கு மேல் உயர்ந்து வளைந்திருக்கும். அதில் மணி காணப்படும். மேலும் பாதங்கள் பக்கவாட்டில் திரும்பி இருக்கும்.

இந்த மூர்த்தங்கள் சகல வரங்களையும் தர வல்லவை என்கிறார்கள் ஆகம பண்டிதர்கள். இங்ஙனம் ஶ்ரீவியாசராஜர் செய்த பெரும்பான்மை திருமேனிகள் திறந்தவெளியிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிற்காலத்தில் அவற்றில் சிலவற்றிற்கு ஆலயங் கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஶ்ரீவியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் ஆலயங்களில் சில திருப்பூர் மாவட்டம் தாரா புரத்தில் அமைந்துள்ளன. அவற்றில் பிரசித்தி பெற்றது, காடு அனுமந்தராய சுவாமி ஆலயம். இங்கு அருளும் அனுமன், ஶ்ரீவியாசராஜர் பிரதிஷ்டை செய்த 89-வது ஆஞ்சநேயர்.

முற்காலத்தில் தாராபுரம் தலைநகராக இருந்த காரணத்தினால் இங்கு கோட்டையும் அதைச் சுற்றி அடர்ந்த கானகமும் அமைந்திருந்தன. இதற்குள் இந்த அனுமன் விக்கிரகம் இருந்த காரணத்தினால் இவருக்குக் காடு அனுமந்தராய சுவாமி என்ற திருநாமம் ஏற்பட்டது.

இந்த அனுமன் ஏழேகால் அடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ளவராய் அருள்கிறார். உயர்த்திய வலது கரம் அபயஹஸ்தமாக காட்சி அளிக்கிறது. தலைக்குமேல் உயர்ந்த வாலில் மூன்று மணிகள் காணப்படுகின்றன. இடது கரத்தில் சௌகந்திகா மலர். பாதங்கள் பக்கவாட்டில் திரும்பியுள்ளன.

இடுப்பில் வியாசராஜரின் முத்திரையான யாளி காணப்படுகிறது. இவ்வாலயத்தின் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர். இவர், ஶ்ரீவியாச ராஜரின் சிஷ்யரான ஶ்ரீவிஜயேந்திர தீர்த்தரால் உருவாக்கப்பட்டவர். ஶ்ரீவிஜயேந்திர தீர்த்தர் கலைகளில் சிறந்தவர். ஶ்ரீவியாசராஜர், ஶ்ரீராகவேந்திரர் ஆகிய இரு அவதாரங்களையும் நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர். இவர் உருவாக்கிய ராமர், சீதை, ஆஞ்சநேயர் விக்கிரகங்கள் இவ்வாலயத்தின் உற்சவ மூர்த்தங் களாக விளங்குகின்றன.

காடுஅனுமந்தராயர் ஸ்வாமி
காடுஅனுமந்தராயர் ஸ்வாமி

எட்டு தூண்களும் பத்து அவதாரங்களும்

ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் உள்ள எட்டு தூண்களும் அவற்றில் திகழும் தசாவதாரச் சிற்பங்களும் மிகவும் அழகு. இந்தத் தூண்களில் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டிக் கட்டி வைத்துள்ள தொட்டில்கள் தொங்குகின்றன. கருவறையின் வலப்புறம் ஶ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி மற்றும் ஶ்ரீஜயதீர்த்தரின் மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இந்த லட்சுமி நரசிம்மர் திருமேனி பவானி கூடுதுறையில் கிடைத்ததாம்.

ஶ்ரீஜயதீர்த்தர் ஶ்ரீமத்வரின் நேரடி சிஷ்யரான ஶ்ரீஅக்ஷோப்ய தீர்த்தரின் சிஷ்யராவார். இவர் ஶ்ரீமத்வரின் பாஷ்யங்களுக்கு உரை எழுதியதால் `டீகாசாரியர்' என்று வழங்கப்படுகிறார். இவரின் மிருத்திகை பிருந்தாவனத்தில் ஶ்ரீமத்வரின் விக்கிரகம் மற்றும் ஒரு பேழையில் 136 சாளக் கிராமங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவரின் மிருத்திகை பிருந்தாவனங்கள் சேலம், பல்லடம், மற்றும் கோவைபுதூரிலும் காணப்படுகின்றன.

ஆலயத்தின் சேர்மன் குருபிரசாத்திடம் பேசி னோம். “பிரஹலாதனின் மூன்று அவதாரங்களும் அவர்களின் இஷ்ட தெய்வங்களும் இங்கு உள்ளனர். ஶ்ரீராகவேந்திரரின் மிருத்திக்கா பிருந்தாவனத்தில் பிரகலாதனும், தனிச் சந்நிதியில் ஶ்ரீலட்சுமி நரசிம்மரும், வியாசராஜரின் இஷ்ட தெய்வமான ஶ்ரீவேணுகோபால ஸ்வாமியும், ஶ்ரீராகவேந்திரர் மற்றும் அவரின் இஷ்ட தெய்வமான ராமரும் இங்கே கோயில் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள ஶ்ரீவேணு கோபாலன் தன் காலடியில் ஆஞ்சநேயருடன் காணப்படுவது விசேஷம்.

இவ்வாலய வழிபாடுகள் மத்வ சம்ப்ரதாயப் படி செய்யப்படுவதால், இங்கு துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை மற்றும் எலுமிச்சம்பழ மாலைகள் ஏற்கப்படுவதில்லை. துளசி ஆஞ்சநேய ஸ்வாமியின் சிரசில் மட்டும் சூட்டப்படுகிறது. வழிபாடுகள்... ஶ்ரீமத்வர் வகுத்த தந்த்ர ஸார ஸங்கர்ஹத்தினைப் பின்பற்றி, ஶ்ரீஜயதீர்த்தர் அமைத்தபடி நிகழ்கின்றன.

முதலில் சாளக்ராம வழிபாடு. அதன் பிறகு, நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ஜயதீர்த்தர், ராகவேந்திரர் என்ற வரிசையின் படி பூஜைகள் நடைபெறுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பூஜைகள் நடைபெறும். வியாச பூர்ணிமாவின்போது பிரம்மோத்ஸவமும், நரசிம்ம ஜயந்தியின்போது ஶ்ரீராமர் புறப்பாடும் நடைபெறுகின்றன” என்றார் குருபிரசாத்.

இந்த ஆலயத்தைத் தரிசித்தபிறகு, இவ்வூரில் உள்ள ஶ்ரீஉத்தர வீரராகவ பெருமாள் ஆலயத்தில் அருளும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்வது நல்லது என்கிறார்கள், பக்தர்கள்.

எப்படிச் செல்வது?: தாராபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது ஆலயம். காலை 8:30 முதல் 12 மணி வரையும்; மாலை 5 முதல் 7.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

`எமக்குக் கூரை வேண்டாம்!’

த்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம். அந்தக் காலத்தில் கரூர் பகுதியின் கலெக்டராக இருந்தவர் டீலன். இவருக்கு ராஜபிளவை நோய் ஏற்பட்டது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் வியாதி குணமாகவில்லை. மனம் நொந்திருந்த டீலனிடம் சென்று அடியார்கள் சிலர் அனுமந்தராய சுவாமியின் மகிமையை எடுத்துச் சொன்னார்கள்.

டீலன், அனுமந்தராய சுவாமியை நினைத்து மனமுருக வேண்டிக்கொண்டார். என்ன அதிசயம்... அன்று முதல் நோயின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து நாளடைவில் பூரணமாகக் குணமானது. டீலனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

தன் நோய் தீர்த்த அனுமனுக்குக் கோயில் எடுக்க விரும்பி, 1810-ம் ஆண்டு கட்டுமானப் பணியினைத் தொடங்கினார். கோயில் கட்டுமானம் கூரை அமைக்கும் நிலைக்கு வந்தது. அன்று இரவு டீலனின் கனவில் தோன்றிய அனுமன், ``எமக்குக் கூரை அமைக்க வேண்டாம்” என்று கூற, மேற்கூரை அமைக்காமல் அப்படியே விட்டுவிட்டார். இப்போதும் மேற்கூரையில் சாளரம் அமைக்கப்பட்டுள்ளது; அது வழியே வெயில், மழை ஆகியன மூலவரின் மீது விழும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.ஒரே நாளில் தரிசிப்பது விசேஷம்!

தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்த ஊர். ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் தலைநகர். பண்டைய நாளில் இதற்கு ‘விராடபுரம்’ என்று பெயர்.

பஞ்ச பாண்டவர்கள் ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் இருந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இவ்வூரில் ஶ்ரீவியாசராஜர் பத்து ஆஞ்சநேயர் திருவடிவங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இவற்றை ஒரே நாளில் தரிசனம் செய்வது மிகவும் பாக்கியம் என்று கருதப்படுகிறது. இவற்றில் மிக முக்கியமான ஆலயம், ஶ்ரீகாடு ஹனுமந்தராய சுவாமி ஆலயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism