Published:Updated:

விழாக்கள் விசேஷங்கள் - இனிது இனிது இறை தரிசனம்!

விழாக்கள் விசேஷங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
விழாக்கள் விசேஷங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகராகத் தரிசிக்கிறோம். இக்குளத்தில் தை மாதம் நிகழும் தெப்போற்ஸவம் விசேஷமானது.

இறையருளின் மகிமையை உலகுக்கு உணர்த்துபவை திருவிழாக்கள். பக்தர்களைத் தேடி பரமனே வருவதும், பேதமும் ஏற்றத் தாழ்வும் இன்றி ஊர் கூடி தேர் இழுப்பதும், நீரின் அவசியத்தைச் சொல்லாமல் சொல்லும் தெப்பமும் நீராட்ட உற்சவங்களும், மண்ணின் மகிமையைப் பேசும் இன்னும்பல வைபவங்களும் விழாக்களின் அங்கங்கள்.

மனிதனைத் தெய்வச்சிந்தையில் கரைந்துருகச் செய்யும் நம் மண்ணின் விழாக்கள் அநேகம். அவற்றில், கடந்த தினங்களில் நிகழ்ந்த சில வைபவங்கள் உங்களுக்காக இங்கே!

விழாக்கள் விசேஷங்கள்
விழாக்கள் விசேஷங்கள்

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா!

துரை தெப்பக்குளம் மாரியம்மன் - இந்தத் திருப்பெயரைக் கேட்டதுமே மதுரைவாழ் பக்தர்களிடம் அப்படியொரு சிலிர்ப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு அன்பர்களின் மனத்தில் குடிகொண்டிருக்கிறாள் இந்த மாரியன்னை. திருமலை நாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மதுரையின் மிகப்பெரிய தெப்பக்குளம், மன்னரின் பெயரில் அழைக்கப்படாமல் மாரியம்மன் பெயரில் ‘மாரியம்மன் தெப்பக்குளம்’ என்றே பிரசித்தி பெற்றிருக்கிறது.

மாரியம்மன் கோயில் தெப்பம்
மாரியம்மன் கோயில் தெப்பம்

அரண்மனைக் கட்டுமானத்துக்காக தோண்டப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தையே நாயக்க மன்னர் திருக்குளமாக அமைத்தாராம். இங்கே மண் தோண்டப்பட்டபோது கிடைத்த பெரிய விநாயகரையே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகராகத் தரிசிக்கிறோம். இக்குளத்தில் தை மாதம் நிகழும் தெப்போற்ஸவம் விசேஷமானது. இந்த வருடம் தைப்பூசம் தெப்பத் திருவிழா கொடியேற்ற வைபவம் கோலாகலமாக நடந்தேறியது.

மரகத நடராஜருக்குச் சந்தனக்காப்பு

பாண்டிய நாட்டின் 14 சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்தரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்தார். ‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். எனவேதான் இந்தத் தலம் திருஉத்திரகோச மங்கை என்று அழைக்கப்படுகிறது.

இறைவன் ஸ்ரீமங்களநாதர்; இறைவி ஸ்ரீமங்களநாயகி. இங்கு ஆதி சிதம்பரேசன் என்று போற்றப்படும் மரகதநடராஜர் சுமார் ஆறு அடி உயரமுள்ளவர். மரகதத் திருமேனி மெல்லிய அதிர்வைக்கூடத் தாங்காது என்பதால், அவர் சந்நிதியில் மேள வாத்தியங்கள் இசைப்பதில்லை. மேலும் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடனேயே காட்சி தருவார்.

உத்தரகோசமங்கை
உத்தரகோசமங்கை

ஆருத்ரா அன்று மட்டும்தான் அவருடைய திருமேனி அழகை நாம் தரிசிக்க முடியும். அன்று மட்டும்தான் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அன்றிரவே மறுபடியும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டுவிடும். முதலில் களையப்பட்ட சந்தனத்தைப் பக்தர்கள் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர்.

இங்கே, ஆருத்ரா நாயகனின் சந்தனக்காப்பு அலங்காரத்தையே நீங்கள் தரிசிக்கிறீர்கள்.

வல்லபை ஐயப்பனுக்கு நீராட்டு

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வல்லபை ஐயப்பசுவாமி திருக்கோயில். தோற்றத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலைப் போன்றே அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயம் இந்தப் பகுதியில் பிரசித்திபெற்றது. கொரோனா பெருந்தொற்று பாதிப்புத் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சபரிமலை தரிசனத்துக்குப் பல கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், எண்ணற்றோர் இந்த ஆலயத்துக்கு வந்து இருமுடி செலுத்தியது குறிப்பிடத்தக்கது

வல்லபை ஐயப்பசுவாமி
வல்லபை ஐயப்பசுவாமி


ஐயன் ஐயப்பன் வரப்பிரசாதியாக அருளும் இந்த ஆலயத்தில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. அந்த அற்புத தரிசனம் இங்கே.

விசேஷ பலன்கள் அருளும் வெண்ணெய்க்காப்பு!

ராம நாமம் கூறி மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து, வெண்ணெய் உருகுவதுபோல் உள்ளம் கசிந்துருகி அருள்செய்வாராம் அனுமன். இலங்கையை எரியூட்டிய அனுமன் அங்கு அசுரருடன் செய்த சண்டையால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக வெண்ணெய் தந்தார் சீதாதேவி என்ற தகவலும் உண்டு. ஆக, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் ஆஞ்சநேயருக்கு மிகவும் உவப்பானது என்பார்கள்.

அனுமன்
அனுமன்

வெண்ணெய்க்காப்பிட்டு அனுமனை வழிபடுவதாலும் வெண்ணெய்க் காப்புடன் அருளும் அனுமனை தரிசிப்பதாலும், அவரின் விசேஷ அருளைப் பெற்று மகிழலாம். நம் வேண்டுதல்கள் பலிக்கும் என்பது ஐதிகம். அவ்வகையில், மதுரை ஸ்ரீபிரசன்னவேங்கடேச பெருமாள் கோயிலில் அருளும் அனுமனின் வெண்ணெய்க் காப்பு அலங்கார தரிசனம் உங்களுக்காக!

திருப்புல்லாணி பகல் பத்து அலங்காரம்!

யோத்தி முதலாக தமிழகத்தின் ஆறு தலங்களைச் சேர்த்து சப்தராம திருத்தலங்களாகச் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். அவற்றில் ஒன்று திருப்புல்லாணி. ராமநாதபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவு. புல்லாரண்யம், தர்ப்ப சயனம் ஆகிய சிறப்புப் பெயர்களும் இதற்கு உண்டு. திருமங்கையாழ்வார் பாடியருளிய தலம்.

கிருத யுகத்தில் அரச மர உருவில் தோன்றி புல்லவர், கால்வர், கண்வர் ஆகிய மூன்று மகரிஷிகளையும் அசுரர்களிடம் இருந்து காத்தவர் இவ்வூர் பெருமாள். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தலத்தில் சங்கு சக்ரதாரியாக அபய முத்திரையுடன் ஜெகந்நாதப் பெருமாளாக இங்கே கோயில் கொண்டார். தாயாரின் திருநாமம் பத்மாசனி தாயார்.

திருப்புல்லாணி
திருப்புல்லாணி

ஸ்ரீராமன் தர்ப்பசயனம் கொண்ட தலம் இது. இங்குள்ள பெருமாளை வழிபட்டு, அவரின் திருவருளால் `பாணம்’ ஒன்றைப் பெற்றுச் சென்ற ராமன், அதைக் கொண்டே ராவணனை அழித்ததாகச் சொல்வர்.

ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த இந்தக் கோயிலில் மார்கழியில் பகல் பத்து, இராப் பத்து வைபவங்களும், பங்குனி புனர்பூசத்தைத் தொடர்ந்து பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்கே நீங்கள் தரிசிப்பது, பகல்பத்து வைபவ காலத்தில் - சிறப்பு அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும்.