Published:Updated:

கண்ணன் பிறந்தால் கதவுகள் திறக்கும்... புதுவழி பிறக்கும்... கோகுலாஷ்டமி மகிமைகள்!

எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு நிவேதனம், வாய் நிறைய அவன் நாமாவளி, அவ்வளவுதான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோகுலத்துக்குக் கண்ணன் பாலகனாக வந்து சேர்ந்த இரவு கோகுலாஷ்டமி. கோகுலம் வருவதற்கு முன்பே கண்ணன் தன் அவதாரத்தில் நிகழ்த்த வேண்டிய அற்புதங்களைத் தொடங்கிவிட்டான். அவையே நம்மை கோகுலாஷ்டமி கொண்டாடத் தூண்டுகின்றன.

இந்த உலகில் தொடர் தோல்விகளால் திண்டாடுபவர்கள் அநேகர் உண்டு. பகைவர்களால் பல காலமாக முடக்கப்பட்டுக் கொஞ்சமேனும் வெளிச்சம் கிடைக்காதா என்று ஏங்குகிறவர்கள் உண்டு. தன் முன்னே காலம் கொண்டுவந்து சேர்த்திருக்கும் பிரச்னைகளைக் கண்டு இதில் தப்பிப் பிழைக்க நமக்கொரு வழி பிறக்காதா என்று ஏங்குகிறவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களாகத்தான் கண்ணன் பிறக்கும் நாள்வரை வசுதேவனும் தேவகியும் இருந்தார்கள். சிறைவாசம்; பிறக்கும் குழந்தைகளைப் பறிகொடுக்கும் நிலை. இதைவிட வாழ்வை வெறுக்க வேறு என்ன வேண்டும்...

கண்ணன்
கண்ணன்

கண்ணன் பிறந்தான். அந்த நொடியிலிருந்தே அற்புதங்கள் தொடங்கிவிட்டன. சிறையின் கதவுகள் திறந்துகொண்டன. பகைவனின் காவலர்கள் மயக்கமுற்றனர். வசுதேவன், பாலகனாகப் பிறந்த கண்ணனைச் சுமந்துகொண்டு யமுனைக்கரைக்கு வருகிறார். எதிரே யமுனை பிரவாகமெடுத்திருக்கிறது. மறுகரை செல்ல வேண்டும். வெள்ளம் பிரிந்து வழிவிடுகிறது. வசுதேவர் நதியைக் கடந்து மறுகரை சென்று கோகுலத்தில் கண்ணனை விட்டுவிட்டு வந்தார்.

கண்ணன் பிறப்பதற்கு முன்பாக இந்த அதிசயங்கள் நிகழவில்லை. கண்ணன் பிறந்த மறுகணமே காலமும் காட்சிகளும் மாறிவிட்டன. அதேபோன்று நம்முள்ளும் கண்ணன் பிறந்துவிட்டால் நம்முடைய பிரச்னைகள் எல்லாம் மாறிப்போய்விடும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். வசுதேவனுக்கும் தேவகிக்கும் நிகழ்ந்த அற்புதம் நமக்கும் நிகழும் அதற்காகத்தான் நாம் கோகுலாஷ்டமி கொண்டாட வேண்டும்.

கண்ணன்
கண்ணன்

கோகுலாஷ்டமி எப்படிக் கொண்டாடுவது?

எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு நிவேதனம், வாய் நிறைய அவன் நாமாவளி, அவ்வளவுதான்.

கோகுலாஷ்டமி அன்று மாலையில் வீட்டைச் சுத்தம் செய்து கிருஷ்ணர் படம் இருந்தால் அதை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். விளக்கேற்றி வைத்து ஏதேனும் ஒரு ஊதுபத்தி போன்ற தூபம் காட்ட வேண்டும். பலர் வீடுகளில் கிருஷ்ணர் கால் வரைவது வழக்கம். சின்னக் குழந்தையாகக் கிருஷ்ணன் நடந்து நம் வீட்டுக்குள் வருவதாக ஐதிகம். அப்படிக் கோலமிடுகிறவர்கள் வீட்டு வாசலில் இருந்து சுவாமி இருக்கும் இடம்வரைக் கோலமிட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாதாரண அவல் தந்து சாதித்துக் கொள்ளலாம்

கிருஷ்ண ஜயந்தி என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவை பட்ஷணங்கள்தான். முறுக்கு, சீடை, அதிரசம் என்று பலகாரங்கள் பலவும் செய்து கிருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் உண்டு. ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமானவை அல்ல. இவை எல்லாம் இருந்தால்தான் கிருஷ்ணன் அருள் கிடைக்கும் என்றும் இல்லை. கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமான இரண்டு நிவேதனங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே அவனின் அருளைப் பெற்றுவிடலாம்.

ஒன்று குசேலர் கொண்டு சென்றது, மற்றொன்று கோபிகைகளின் இல்லம் புகுந்து அவரே திருடி உண்டது. கிருஷ்ணனுக்கு அவல் போல விசேஷமான நிவேதனம் வேறு இல்லை. சுதாமா கட்டிக் கொண்டுவந்த கொஞ்சம் அவலை அன்போடு ஏற்றுக்கொண்டு கிருஷ்ணர் அவருக்கு அளித்த செல்வங்கள் ஏராளம். செல்வ வளம் வேண்டுபவர்கள், வறுமையிலிருந்து விடுபட விரும்புகிறவர்கள் கிருஷ்ணனுக்குக் கொஞ்சமாக அவல் நிவேதனம் செய்தாலே போதுமானது. சாதாரண அவல் தந்து வேண்டுவனவற்றைச் சாதித்துக் கொள்ளலாம்.

மற்றொரு நிவேதனம் நவநீதம். கோபிகைகள் கண்ணன் வந்து தங்கள் வீட்டுக்கு வந்து வெண்ணெய் உண்ண மாட்டானா என்று ஏங்குவார்களாம். வெண்ணெய் என்பது தயிரிலிருந்து பிரிந்து தயாராவது. இந்த உலக இன்பங்களிலிருந்து பிரிந்து உயர்ந்த பக்குவமான நிலையை அடைவதுவே வெண்ணெயின் குறியீடு. அத்தகைய வெண்ணெயைக் கண்ணனுக்கு சமர்ப்பித்தால் நமக்குப் பிறவித் துன்பம் இல்லாமல் வைகுண்டப் பேற்றினை அருள்வான் என்பது ஐதிகம். எனவே, இந்த இரண்டு நிவேதனங்களில் ஏதேனும் ஒன்றைப் படைத்து கண்ணனை வரவேற்கலாம்.

கிருஷ்ணர்
கிருஷ்ணர்

ஹரே கிருஷ்ணா...

கலியுகத்தின் தர்மங்களில் உயர்ந்தது நாம சங்கீர்த்தனம். கிருஷ்ணனின் நாமத்தைப் போற்றும் பஜனைப் பாடல்களையும் பாட வேண்டும். `எங்கெல்லாம் பக்தர்கள் நாம சங்கீர்த்தனம் செய்கிறார்களோ அங்கெல்லாம் பகவான் நாராயணன் அமர்ந்து கேட்பார்’ என்கிறார் நாரத மகரிஷி. எனவே, கிருஷ்ணனைப் போற்றும் பாடல்களைப் பாடுங்கள். அதுவே உயர்ந்த பூஜையாகும். பாடத் தெரியாதவர்கள் கிருஷ்ணனின் நாமத்தை ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாம ஜபமும் நாம சங்கீர்த்தனமே கிருஷ்ணனைத் திருப்தி செய்யப் போதுமானவை என்பது ஆன்றோர் வாக்கு.

இன்று கோகுலாஷ்டமி. இந்த நாளின் மாலையில் கிருஷ்ணனைத் தவறாது வழிபட்டு இறையருள் பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு