திருக்கதைகள்
Published:Updated:

பூஜையறையில் கல் விக்ரஹம் இடம் பெறலாமா?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

காளிகாம்பாள் கோயில் சண்முக சிவாசார்யர்

? பூஜையறையில் கல் விக்ரஹம் இடம் பெறலாமா?

! நம் வீடுகளில் நமக்காகவும் நம் குடும்பத்தில் உள்ள அங்கத்தினர் களுக்காகவும் செய்யக்கூடிய வழிபாடு `ஆத்மார்த்த பூஜை’ என்று கூறப்படுகிறது. அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவாக ஆலயங் களில் செய்யப்படும் பூஜை `பரார்த்த பூஜை’ என்று அழைக்கப்படும்.

விக்ரஹ வழிபாடு
விக்ரஹ வழிபாடு


இவற்றில் விக்ரஹ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. `விக்ரஹம்’ என்றால் எங்கும் பரந்து இருக்கும் அந்தப் பேரருளை நமக்காக ஓரிடத்தில் இருக்கச் செய்து அருள்பெறத் துணைசெய்வது ஆகும். அந்த விக்ரஹங்களுக்குரிய அளவுகளில் வேறுபாடுகள் உண்டு. நமக்காக நாம் பயன்படுத்தும் விக்ரஹத்தின் அளவும் ஆலயங்களில் பரார்த்த பூஜைகளுக்காகப் வழிபடப்படும் விக்ரஹங்களின் அளவும் மாறுபடும். அதன் அடிப்படையில் வீடுகளில் சிறிய அளவில் விக்ரஹம் வைத்து வழிபடலாம் தவறில்லை.

? பூஜையறையில் கல் விக்ரஹங்கள் இடம்பெறலாமா?

! ஆம், நமது பூஜையறையில் ‘சிலா விக்ரஹம்’ என்று கூறப்படும் கல்லினால் செய்யப்பட்ட விக்ரஹங்களை வைத்து பூஜை செய்ய லாம். எனினும் முன்னர் கூறியபடி அளவில் கவனம் செலுத்துவது முக்கியமானது. விக்ரஹம்தானே, கடவுள்தானே என்ற எண்ணத்தில் பெரியளவிலான வடிவை வைத்து வழிபடல் வேண்டாம்.

வீடோ, ஆலயமோ... அந்த தேவதை குறிப்பிட்ட விக்ரஹத்தின் அளவுக்கு ஏற்ப சக்தியை வியாபித்திருக்கும். ஆகவே, அதற்கேற்ப உரிய அளவில் நிவேதனங்கள், உபசாரங்கள் அனைத்தை யும் செய்ய வேண்டும். அவற்றின் அளவுகள் முக்கியமானவை. ஆகவே, வீட்டில் சிறிய அளவில் கல்லால் செய்யப்பட்ட விக்ரஹங்களை வைத்து வழிபடலாம்.? பூஜையறையில் எந்தத் திசையை நோக்கி விக்ரஹங்கள் இருக்க வேண்டும் ?

! பொதுவாக தெய்வங்கள் அனைத்தையும் கிழக்கு நோக்கி வைப்பது முறை. சிவலிங்கத் திருமேனியில் சிவபெருமானை நாம் வழிபடும்போது, `ஆவுடையார்’ பகுதியிலுள்ள கோமுகி பாகம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருத்தல் முக்கியமானது.

நடராஜர், ஷண்முகர் மற்றும் பல தேவதைகளை தெற்கு நோக்கி வைத்தல் சிறப்பானது. அம்பாள் விக்ரஹம் தெற்கு நோக்கி யும் இருக்கலாம் கிழக்கு நோக்கியும் இருக்கலாம். தட்சிணா மூர்த்தி தெற்கு நோக்கி இருத்தல் அவசியம்.

இந்த அடிப்படையில் அந்தந்த தெய்வங்களை ஆலயங்களில் இருப்பது போன்று நம் வீடுகளிலும் அமைத்துக்கொள்ளலாம். ஒருவேளை இடவசதி சரியாக இல்லை எனில், தெய்வ விக்ரஹங்கள் அனைத்தையுமே கிழக்கு நோக்கி இருப்பதுபோல் வைத்துக் கொள்ளலாம்.

அபிஷேக - ஆராதனைகள்
அபிஷேக - ஆராதனைகள்
Vaishuren

? வீட்டில் விக்ரஹங்களுக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகள் செய்ய வேண்டுமா?

! ஆம்! விக்ரஹங்களின் ரூபமாக தெய்வங்களை நாம் வீடுகளில் தினமும் வழிபடவேண்டும். எனினும் பஞ்சலோக விக்ரஹம் வைத்து வழிபடும்போது 15 நாள்களுக்கு ஒருமுறை பெளர்ணமி அல்லது அமாவாசை திதியில் அபிஷேகம் செய்து வழிபடலாம். சிலா விக்ரகங்கள் எனில், தினமும் செய்வது சிறப்பானது.

இதேபோல நிவேதனம், மற்ற உபசாரங்களைச் செய்வதும் அவசியமானது. ஒருநாள் பூஜை செய்துவிட்டோம்; இனி ஒரு மாதம் கழித்துச் செய்யலாம் என்று விட்டுவிடக்கூடாது.

கடவுளை நம் வீட்டில் கொண்டு வந்து வைத்து வழிபடுகிறோம் எனில், வீட்டில் ஒரு குழந்தையை எப்படிப் பார்த்துக்கொள்கிறோமோ, அப்படி அந்த தெய்வத்தைக் கவனிக்கவேண்டும். `குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே’ என்று கூறுவதுபோல், உரிய முறைப்படி அந்த தெய்வத்தை வணங்கிட, நமக்கு வளர்ச்சி உண்டாகும்.

தெய்வத் திருமேனி
தெய்வத் திருமேனி
Chirag Dave

? வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வழிபடலாம்?

! நம் இஷ்ட தெய்வங்களையும், கணபதி, ஸ்கந்தர், சிவபெருமான், பராசக்தி துர்கை, மகாலக்ஷ்மீ, மஹா ஸரஸ்வதி, மஹா விஷ்ணு, ஆஞ்சநேயர், நமது குலதெய்வம் போன்ற தெய்வத் திருமேனிகளை வீடுகளில் வைத்து வழிபடலாம்.

உக்கிரமான தெய்வங்களைக் காரணமின்றி வழிபாடு செய்யக் கூடாது. விசேஷ காரணங்களின் பொருட்டு ஏதேனும் கூறப்பட்டு இருப்பின் செய்யலாம். தெய்வங்கள் எந்த உருவில் அருள்கின்ற னரோ, அதற்குரிய முறையில் நாம் வழிபாடுகளைச் செய்யவேண்டும்.

உக்ரமான தெய்வங்களை வழிபடும்போது, அவர்களின் தன்மைக்கு ஏற்ப நம் வழிபாடுகளின் தன்மை மாறுபடும். ஆகவே, வீடுகளில் சாந்தமான தெய்வத் திருமேனிகளை வைத்து வழிபடுவது சிறப்பானது. சிறப்பு உபாசனை செய்பவர்கள், குறிப்பிட்ட முறை யில் பூஜை செய்ய வசதியுள்ளவர்கள், இடவசதி, ஆற்றல், அமைப்பு உள்ளவர்கள் உரிய தெய்வத் திருமேனிகளை வீட்டில் வைத்து வழிபடலாம்.

நைவேத்தியங்கள்
நைவேத்தியங்கள்
subodhsathe

? கோயிலில் செய்யப்படுவது போன்றே பிரசாதங்கள் படைக்க வேண்டுமா அல்லது எளிய நைவேத்தியங்கள் போதுமா?

! ஆலயங்களில் பரார்த்த பூஜை என்பதால் நிவேதனங்கள் அளவிலும் வகைகளிலும் அதிகமாக இருக்கும். வீடுகளில் குறைந்த பட்சம் தூய அன்னத்தைத் தினமும் கடவுளுக்கு அளித்துவிட்டு, பிறகு நாம் உண்ணவேண்டும். அளவிலும் குறைவாக இருந்தாலும் போதுமானது. விசேஷ தினங்களில் நம்மால் இயன்றவாறு சிறப்பான நிவேதனங்களைக் கடவுளுக்குப் படைத்து வழிபடலாம். அதையே நாமும் பிரசாதமாக ஏற்று இறையருளைப் பெறலாம். நிவேதனங்கள் அனைத்துவிதமான நன்மைகளை அளிக்கக்கூடியவை.