Published:Updated:

அமுதமாய் எழுந்தருளிய வெள்ளை லிங்கம்!

வெள்ளை லிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளை லிங்கம்

கரியமேனியராக லிங்க வடிவத்தில் கோயில் களில் அருள்பாலிக்கும் சிவனாரை தரிசனம் செய்திருப்பீர்கள். வெள்ளை வெளேரென, பால்வண்ண மேனியராக அவர் காட்சியளிக்கும் கோலம் அபூர்வம்.

வட இந்தியத் தலங்கள் சிலவற்றில், வெள்ளை மார்பிளில் செய்யப்பட்ட லிங்க வடிவத்தை அவ்வாறு தரிசித்திருக்கலாம். ஆனால், மரத்துக்கு நடுவிலிருந்து வெண்ணிற லிங்கமாக வெளிப்பட்ட ஈசன், பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே நிறத்துடன் பால்வண்ண மேனியனாக - பாலீஸ்வர ராக அருள்பாலிக்கிறார், ஒரு திருத்தலத்தில்.

சென்னை பழவேற்காடு அருகேயுள்ள திருப்பாலைவனம்தான் அந்தத் திருத்தலம்.

அமுதமாய் எழுந்தருளிய வெள்ளை லிங்கம்!

எச்செயலைத் தொடங்கினாலும், சிவபூஜை செய்தபிறகு தொடங்குவது, தேவர்களின் வழக்கம். பாற்கடல் அமுதத்தைப் பருகுவதற்கு முன் அவ்வாறே சிவபூஜை செய்ய அவர்கள் நினைத்தனர். ஆனால், அங்கு லிங்கம் பிடித்து வழிபட ஏதுவாய் அருகில் ஏதுமில்லை. அதற்காக, அப்படியே விட்டுவிட முடியுமா... சிவ பக்தனான இந்திரன்தான் விட்டுவிடுவானா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘அமுதம் கடைந்தெடுக்க அருளிய இறைவனாரை, அந்த அமுதத்தாலேயே எழுந்தருளுச் செய்யுங்கள்’ என உத்தரவிட்டான். அவ்வளவுதான், தேவர்கள் தங்களின் கரங்களால், அங்கிருந்த பாலை மரத்தின் அடியில் அமுதத்தையே லிங்கமாகப் பிடித்துவைத்து வழிபட்டனர். அந்த மூர்த்திக்கு அமுதத்தையே நிவேதனம் செய்து வணங்கி, அவரருளினைப் பெற்றனர். ஈசனும் மனமுவந்து அருளி, தேவர்களின் வேண்டுகோள்படி அந்தத் தலத்திலேயே குடிகொண்டார்.

அமுதத்தால் உண்டானவர் என்பதால் இந்த ஈசனுக்கு ‘அமுதேஸ்வரர்’ என்றும், பாலை மரத்தின் நடுவே கோயில்கொண்டதால் ‘பாலீஸ்வரர்’ என்றும் திருநாமம் ஏற்பட்டது.

பழவேற்காடு அருகில், கடல் மணற்பரப்பை ஒட்டி அமைந்த தலம் என்பதாலும் பாலை மரங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், ‘திருப்பாலைவனம்’ என்று இத்தலத்துக்குப் பெயர் உண்டாயிற்று.

அமுதமாய் எழுந்தருளிய வெள்ளை லிங்கம்!

காலப்போக்கில், சுற்றிலும் அரண்போல பாலை மரம் வளர்ந்துவிட, லிங்கம் விருட்சத்துக் குள் மறைந்துபோனது. பிற்காலத்தில் தன் இருப்பிடத்தை உலகுக்கு உணர்ந்த விரும்பிய சிவனார், அதற்காக ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலாம் ராஜேந்திர சோழன் தன் படை பரிவாரங்களுடன் வடநாட்டுக்குச் சென்று வென்று திரும்பினார். சிவபக்தரான அவர், இந்தப் பகுதியின் வழியே வந்தபோது, ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது, அவர் படையிலிருந்த யானை மற்றும் குதிரைகளைப் படை வீரர்கள் லிங்கம் மறைந்திருந்த பாலை மரத்தில் கட்டிப் போட்டனர். சற்றுநேரத்தில் அவை மயக்கமடைந்து அங்கேயே சரிந்தன. ஒருகணம் பதறிப்போனார் மன்னர். இந்தச் சம்பவத்துக்கான காரணம் மரத்துக்குள் இருக்கலாம் என்று நினைத்தார்.

அமுதமாய் எழுந்தருளிய வெள்ளை லிங்கம்!

உடனே மரத்தை வெட்ட ஆணையிட்டார். மரத்தைப் படை வீரர்கள் வெட்டியபோது, அதன் நடுவே லிங்கத் திருமேனி இருந்ததைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்தனர். அதிலும் அத்திருமேனி, கண்ணைப் பறிக்கும் வெண்மை நிறத்துடன் இருந்ததால், பெரிதும் வியப்படைந்தார் மன்னர்.இறைவனின் அருளை எண்ணி எண்ணி மகிழ்ந் தார். அந்த ஈசனுக்கு அங்கே பிரமாண்டமாய் ஓர் ஆலயத்தை நிர்மாணம் செய்வித்து, அதன் பராமரிப்பு மற்றும் வழிபாட்டுக்காகப் பொன்னையும் பொருளையும் அள்ளித் தந்தார். மாணிக்கவாசகர், தனது திருவாசகத்தில் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.

அமுத லிங்கமாய் இருப்பதால், இங்கு அபிஷேக முறைகள் மற்ற கோயில்களிலிருந்து மாறுபடுகின்றன. பால், பன்னீர், இளநீர் மற்றும் விபூதி அபிஷேகங்கள் மட்டுமே இவருக்குச் செய்யப்படுகின்றன. அதையும் உடனுக்குடன் துணியால் தொட்டுத் துடைத்துவிடுகின்றனர். இந்த ஈசனின் நெற்றியில் சூட்டப்பட்டிருக்கும் வெள்ளிப் பட்டையில்தான் சந்தனம் சாத்துகின்றனர்; பாணத்தில் வைத்தால் எளிதில் கரைந்துவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

அதேபோல், பக்தர்கள் தரும் தேனை, ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகிக்கின்றனர். ஐப்பசி அன்னாபிஷேக வைபவத்தன்று, அன்னத்தை ஆவுடையாருக்கு மட்டுமே சாத்தி பூஜிக்கின்றனர். லிங்க பாணத்தின் முன், மேற்பகுதியில் மரத்தை வெட்டும்போது கோடரி பட்ட தழும்பு இப்போதும் இருக்கிறது. ருத்ராட்சப் பந்தலின் கீழ் குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு, அதிகப்படியான மாலைகள் அணிவிப்பது இல்லை. வில்வ மாலை மற்றும் ஏதோவொரு பூமாலை என எளிமையாகவே அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பெரிய பிராகாரத்துடன் அமைந்திருக்கும் கோயில் இது. சிவனின் கர்ப்பக்கிரகம் எதிரே வாசல் இல்லை. கல்லாலான சாளரம் உள்ளது. அதற்கும் அப்பால் நந்தியும், கொடிமரமும் அமைந்துள்ளன. சிவனுக்கு வலப்புறம் ஸ்ரீலோகாம்பிகை குடிகொண்டிருக்கிறாள். இருவரின் சந்நிதிகளுக்கு நடுவே ஸ்ரீஆறுமுகப்பெருமானின் சந்நிதி உள்ளது. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் இவரைப் போற்றிப் பாடியுள்ளார்.

சிவன் சந்நிதி முன்மண்டபத்திலுள்ள ஸ்ரீநடராஜருக்கு, தரிசிப்போரை வசீகரிக்கும் திருவடிவம். ஆண்டில் 6 அபிஷேகங்களும் சிறப்பாய் நடக்கின்றன. ஆனித் திருமஞ்சன விழாவின்போது, நடராஜர் வீதியுலாவும் இங்கு நடைபெறுகிறது. ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீபைரவர், சூரியன், சந்நிதிகளும் இங்குள்ளன.

அமுதமாய் எழுந்தருளிய வெள்ளை லிங்கம்!

இந்த ஆலயத்திள் அருளும் கதவிற்கணபதி வரப்பிரசாதியானவர். பல ஆண்டுகளுக்குமுன், கோயிலின் திருக்கதவில் தீப்பற்றிக்கொண்டு எரிந்ததாம். கதவு முழுதும் எரிந்தும், அதில் சிற்ப வடிவமாக இருந்த இந்தக் கணபதிக்கு மட்டும் ஒன்றும் நேரவில்லை. எனவே, இவருக்கு இந்தப் பெயர் நிலைத்துவிட்டது.

பொருள் களவுகொடுத்த அன்பர்கள், எதையாவது தொலைத்துவிட்டு அது திரும்பக் கிடைக்கவேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், இந்தப் பிள்ளையாரை வழிபட்டு வேண்டிக் கொண்டால், அந்தப் பொருள்கள் விரைவில் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. அவ்வாறு கிடைத்துவிட்டால், இந்தப் பிள்ளையாருக்கு ஏழு தேங்காய்களை உடைத்து, நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

வாசுகி நாகம், இங்கே ஈசனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாம். உள் பிராகாரத்தில் உள்ள வாசுகியின் சந்நிதியில் வேண்டிக்கொண்டால், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகியவை நிவர்த்தியாகின்றன என்கின்றனர் பக்தர்கள்.

வெளிப்பிராகாரத்தில் தல விருட்சமான பாலை மரத்தடியில் நாகர் சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதியில் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

சிவபெருமான் அற்புதமான, அழகான லிங்கத் திருமேனியராக, பால்வண்ண நாதராக கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்துக்கு, நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு, வரம்பெற்று வாருங்கள்.

சென்னையை அடுத்த பொன்னேரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில், பழவேற்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது திருப்பாலைவனம். பொன்னேரியிலிருந்து பஸ் வசதி உண்டு.

இந்தத் திருக்கோயில் காலை 7:30 முதல் 12:30 மணி வரையும்; மாலை 4 முதல் இரவு 7:30 மணி வரையும் திறந்திருக்கும்.

சஷ்டியப்த பூர்த்திக்கு இங்கே வாங்க...

திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரராக அருளும் இறைவனே, இங்கே அமுதேஸ்வரராக அருள்பாலிக்கிறாராம். எனவே, இந்தத் தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் ஆகியவை அதிகளவில் நடைபெறுகின்றன. ‘அமுதேஸ்வரரை வேண்டிக்கொள்ள தம்பதியர் பூரண ஆரோக்கியத்துடன் நலம் பெற்று வாழ்வர்’ என்பது பக்தர்களின் நம்பிகை. அவரவர் நட்சத்திர நாளில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜைகள் செய்யலாம். அப்போது தரப்படும் தீர்த்தப் பிரசாதத்தைப் பருகினால் நோய்நொடிகள் அண்டாது என்கின்றனர் பக்தர்கள்.

தவளையில்லாத திருக்குளம்

கோயில் கோபுரத்துக்கு எதிரே வெளியில் பெரிய தீர்த்தக்குளம் இருக்கிறது. கடற்பரப்பை ஒட்டியிருந்தாலும் உப்பு நீராக இல்லாமல், கடுமையான கோடை காலத்திலும் நீர் வற்றாமல் திகழ்கிறது. இந்தக் குளத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. பாற்கடல் அமுதத்தைப் பருகிய தேவர்கள், அதன் புனிதம் கருதி இந்தக் குளத்தில் கைகளைக் கழுவினார்களாம். அமுதத்தை எப்படியாவது பருகிவிட வேண்டும் என துடிதுடித்த அசுரர்கள், தவளை வடிவில் இந்தக் குளத்துக்கு வந்தனர். இதனையறிந்த தேவர்கள், அசுரர்கள் இந்தக் குளத்துக்கு வரமுடியாதபடி சாபமிட்டனர். இப்போதும் இந்தக் குளத்தில் தவளைகள் வசிப்பது இல்லை என்பது ஆச்சர்யம்.