Published:Updated:

இறைவனிடம் பக்தர்கள் என்னென்ன கேட்கலாம்? - கோதை மணிவண்ணனிடம் வைக்கும் வேண்டுதல்கள்! - திருப்பாவை 26

திருப்பாவை
திருப்பாவை

இறைவனே பேரின்பப் பரம்பொருள். அவனிடம் நாம் இப்படிப்பட்ட உலக வாழ்க்கை சுகங்களையும், பொருள்களையுமா கேட்பது என்று தோன்றுகிற கணத்தில், அதற்கான விடையையும் தருகிறது அந்த வேதம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!

திருப்பாவை
திருப்பாவை

மனித வாழ்வில் தேவைகள் எண்ண முடியாதன. இறைவன் சந்நிதிக்குப் போய் கைகூப்பி நிற்கும்போது, வேண்டுவனவற்றைப் பட்டியல் இட்டால், அது மிக நீண்டதாக இருக்கும். சில நேரம் இப்படியெல்லாம் இறைவனிடம் கேட்கலாமா என்றுகூடத் தோன்றும். அந்த அளவுக்கு நமக்குள் தேவைகளும் அவற்றுக்கான வேண்டுதல்களும் குவிந்துகிடக்கும். சரி, இறைவனிடம் கேட்காமல் பக்தர்கள் வேறு யாரிடம் உரிமையாகக் கேட்கமுடியும்...

வேதங்களில், சமகம் என்ற ஒரு பாகம் உண்டு. மனித வாழ்வில் நமக்கு வேண்டுகிற அனைத்தையும் அது இறைவனிடம் வேண்டிக் கேட்கும். பால், தயிர், நெய் அவை தொடர்ந்து கிடைக்க வளமான பசுக்கள், தேவைக்கு மழை, தேவைக்கு வெயில், ஆரோக்கியமான உடல், நீண்ட ஆயுள் என்று என்னென்ன வேண்டுமோ அவற்றை எல்லாம் பட்டியல் இட்டு, 'இறைவா நீ எனக்கு இவற்றையெல்லாம் வழங்கு' என்று கேட்கும்.

திருப்பாவை
திருப்பாவை
வென்று பகைகெடுக்கும் வேல்கொண்ட கோபாலனைப் பாட அழைக்கும் கோதை... திருப்பாவை - 24

இறைவனே பேரின்பப் பரம்பொருள். அவனிடம் நாம் இப்படிப்பட்ட உலக வாழ்க்கை சுகங்களையும், பொருள்களையுமா கேட்பது என்று தோன்றுகிற கணத்தில், அதற்கான விடையையும் தருகிறது அந்த வேதம். இவையனைத்தும் எனக்காக அல்ல இறைவனே, எல்லாம் யக்ஞத்துக்காக (யக்ஞேன கல்பதாம்) என்று சொல்கிறது. இந்த உலகில் இயக்கங்கள் அனைத்தும் இடையறாது நடைபெற, அந்தந்தக் காலத்துக்குரிய யக்ஞங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு லோக க்ஷேமத்துக்காகச் செய்யப்படும் யக்ஞங்களைச் செய்ய, நமக்கு இந்த உலகப் பொருள்கள் எல்லாம் தடையறக் கிடைக்க வேண்டும். அதற்காகவே சமகம் இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண்டாள் பாவை நோன்பு நோற்கிறாள். அவள், முதன்முதலில் அந்த நோன்பைத் தொடங்கி வைத்தவள் அல்ல. அவளுக்கு முன்பாக பல ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் பாவை நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்ததற்கான இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. அதேபோன்று, இத்தகையதொரு நோன்பை கோகுலத்தில் கோபியர்கள் பின்பற்றியதாகப் புராணங்கள் சொல்கின்றன. நோன்பும் அதற்கான வழிமுறைகளும் முன்பாகவே உயர்ந்த பக்தி உடையவர்களால் வகுக்கப்பட்டுள்ளன. ஆண்டாளும் அவளது தோழியரும் அந்த மாலவனின் சந்நிதிக்கு முன்வந்து நின்று, தம் வேண்டுதல்களை வைத்தனர்.

திருப்பாவை
திருப்பாவை

"கரிய நிறமுடைய பெருமாளே, இந்த மார்கழி நீராடும் வைபவம் எங்களுக்கு எங்கள் முன்னோர்களால் வழங்கப்பட்டது. அதை நாங்கள் வழுவாமல் காத்துவருகிறோம். அந்த நோன்பின் தூய்மையையும் சிறப்பையும் நீ உணர்வாய். ஆகையால், நாங்கள் சில வரங்களைக் கேட்கிறோம். அவற்றையெல்லாம் எங்களுக்குத் தந்தருள்வாயாக.

இந்த உலகமே நடுங்கும் வண்ணம் ஒலியெழுப்பக்கூடியதும் பால் போன்ற வெண்மை நிறத்தை உடையதுமான உன் பாஞ்சசன்னியம் போன்ற சங்குகள் வேண்டும். அந்தச் சங்குகளை முழங்கிக்கொண்டே உன் திருநாமத்தை இசைக்க வேண்டும். அதற்கு, மிகப் பெரிய பறைகள் வேண்டும். நீண்ட தூரம் ஒலிக்கக் கூடிய அந்தப் பறைகளோடு இசைந்து, உனக்குப் பல்லாண்டு பாடும் பாடகர்கள் வேண்டும்.

திருப்பாவை
திருப்பாவை
கிருஷ்ணன் அவதரித்த முதல்நாள் நிகழ்ந்தவை உணர்த்தும் தத்துவங்கள் என்ன? -திருப்பாவை 25

உன் சந்நிதியில் ஏற்றிவைக்க அழகிய கோலம் கொண்ட விளக்குகளும் உன் சந்நிதானம் இங்கு இருக்கிறது என்று தொலைவிலேயே பிறர் அறிந்துகொள்ளும்வண்ணம் பறக்கும் கொடியும் வேண்டும். ஊழிக்காலத்தில், ஆலிலை மீதிருந்து அருளிய இறைவா, நீ எங்களுக்கு இவற்றையெல்லாம் அருள்வாயாக" என்று வேண்டினாள் ஆண்டாள்.

ஆண்டாள் வேண்டும் எல்லாம், அந்தப் பரந்தாமனின் சேவைக்கு தேவைப்படுவன. ஓர் ஆலயத்தில் முழங்கும் பறையும் சங்குகளுமே, ஆலயத்தைச் சுற்றியுள்ள ஊர் மக்களுக்குக் காலக் கணக்கு. சங்கின் ஒலியும் பறை இசையும் கேட்காதவரை வீட்டில் முடங்கியிருந்தவர்கள்கூட இந்த ஒலிகளைக் கேட்டு அதை இறைவன் தன் இல்லத்துக்கு அழைக்கும் அழைப்பாக நினைத்து ஆலயங்களை நாடிவருவர். ஓசைகள் எட்டாத தொலைவையும் ஒளி எட்டும். அதனால்தான் கொடிகள் வேண்டும் என்கிறார்.

திருப்பாவை
திருப்பாவை

இந்த தேசத்தில் புனித யாத்திரைகளை மேற்கொள்கிறவர்கள், தொலைவிலேயே இந்தக் கொடிகளைக் காண நேர்ந்தால், அந்த இடத்திலே நாராயணனின் கோயில் உள்ளதையும் கோயில் இருந்தால் அதைச் சுற்றி குடிகள் இருக்கும் என்பதையும் அறிந்து தரிசித்து மகிழவும், ஓய்வுகொள்ளவும் இங்குவந்து கூடுவர். ஒலியும் ஒளியும் அந்த கோபாலனின் இருப்பைத் தெரியப்படுத்த நிறைய மக்கள் அவனை நாடிவந்து தரிசித்துப் பயன்பெறுவர். ஆண்டாள் நாச்சியார், பூமிப்பிராட்டியின் அவதாரம்.

சீரிய சிங்கம்போல் தோன்றி எம் குறைதீர்ப்பாய் கோவிந்தா... கோதையின் திருப்பாவை 23!

அதனால்தான், தனக்கென்று ஒன்றைக் கேட்பதைவிட மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காலம் காலமாக தரிசித்து வழிபட வேண்டுவனவற்றை கேட்டு, தன் பிள்ளைகளான இந்த உலக மக்கள் அனைவரும் எல்லாக் காலமும் அருள்பெற உதவும் வழிகளைக் கேட்கிறாள். கோதை கேட்டு கண்ணன் மறுப்பானா... மேலும், கேட்பவளே கொடுப்பவளும்... கோதையின் அருள்பிரசாதம் பல நூறு ஆண்டுகள் கடந்து இந்தப் பாசுரமாய் நம் கைகளில் வந்து சேர்ந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு