Published:Updated:

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கஞ்சி தயாரித்து படையல் இடுவதேன்?

அம்மன் விரதம்
அம்மன் விரதம்

ஒரு சம்பவத்தை நினைவுகூரும் வகையில்தான் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிறந்த தவ முனிவராக விளங்கிய ஜமதக்கனி, பொறாமை காரணமாக கார்த்தவீரியார்சுனன் என்பவரால் கொல்லப்படுகிறார். கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் ஜமதக்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவு செய்து, தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

அப்போது ரேணுகாதேவியை க் காப்பாற்ற இந்திரன் மழைப் பொழிய வைத்துத் தீயை அணைத்தார். என்றாலும் ரேணுகாதேவியின் உடலில் தீக்காயங்களும், கொப்பளங்களும் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகிலிருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். வேப்பிலையால் காயங்கள் மறைந்தன.

அம்மன்
அம்மன்

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அக்கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாகக் கொடுத்தனர். இதனைக் கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார். இதனால் அவர் உடலுக்கு நல்ல வலு கிடைத்தது. இச்சூழ்நிலையில் சிவபெருமானை ரேணுகாதேவி வணங்க,

"உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீர் ஆகாரமாகும். இதனைப் படையலிட்டு உன்னை வணங்கும் பக்தர்களின் வேண்டுதலை தீர்த்து காப்பாயாக" என்று சிவன் வரமளித்தார் என்கிறது புராண வரலாறு.

இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில்தான் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், "ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசிகள் பரவிக் கிடக்கும். இதனால் தொற்று நோய்கள் மக்களுக்கு வரலாம். இதனைத் தவிர்க்கவே ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் வேப்பிலை தோரணம் கட்டி, இளநீருடன் கஞ்சி காய்ச்சி படைத்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர்.

அம்மன்
அம்மன்

அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீறாமுட்டிவேர், கடலாடி வேர் ஆகியவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும். அல்லது கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியை அம்மனுக்குப் படைத்துப் பரிமாற வேண்டும். இப்படித்தான் நோய்த் தீர்க்கும் ஆடிக்கஞ்சியைத் தயாரித்து வழங்குவதை முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர். இதனையே அனைவரும் கடைப்பிடித்து கஞ்சித் தயாரித்தால் அதனை அருந்தும் பக்தர்கள், அம்மன் அருளால் நலம் பெறுவார்கள்" என்கிறார்கள் அம்மன் பக்தர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு