Published:Updated:

தமிழ் மாதங்களில் மார்கழிக்கு முக்கியத்துவம் ஏன்? தனுர் மாதத்தின் சிறப்புகள் இவைதாம்!

கண்ணன்

'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்ச்சியாகும்.

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழியாகும். இம்மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படுகிறது. இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வாசலில் வண்ணக் கோலம் இட்டு, இறைவழிபாடு செய்வது வழக்கமாகக் மேற்கொள்ளப்படுகிறது. சுத்தமான காற்றைச் சுவாசித்து, உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் நடத்தப்படுகிறது.

இம்மாத இறைவழிபாடு பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். அதிகாலை வழிபாட்டில் கோயில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

மார்கழி
மார்கழி
இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது.

மிருத்யுஞ்ச ஹோமம் செய்ய இம்மாதம் சிறந்தாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம் போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

திருவாதிரை திருவிழா மார்கழிப் பௌர்ணமியை ஒட்டிய நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது சிவபெருமானின் வடிவமான ஆடலரசன் நடராஜருக்குக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தங்களது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சிதம்பரத்திலும், உத்திரகோச மங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருவாதிரைக் களியும், ஏழுகறிக்கூட்டும் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன. 'திருவாதிரைக்கு ஒருவாய் களி' என்பது பழமொழியாகும்.

வைகுண்ட ஏகாதசி மார்கழி வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது. அன்று திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.

ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா
ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா
'காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்ச்சியாகும்.

வைகுண்ட ஏகாதசியன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு விழித்திருந்து திருமாலைத் துதிக்கும் பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. 'இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும்' என்று கருதப்படுகிறது.