Published:Updated:

உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்ள மட்டுமா தோழியரை அழைக்கிறாள் கோதை? - திருப்பாவை 6

இரவில் உலகைப் போர்த்தியிருக்கும் இருளைப்போல, மாயை மனதை மூடியிருக்கிறது. கிழக்கில் சூரியன் எழுந்ததும் உலகை மூடிய இருள் ஓடிவிடும். ஆனால், மனதில் இருக்கும் `மாயை இருள்' குருவென்னும் அருள்விளக்கின் அருகில் செல்லும்வரை விலகுவதில்லை.

திருப்பாவை - 6
திருப்பாவை - 6

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்,

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,

மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்,

உள்ளம் புகுந்து குளிந்தேலோ ரெம்பாவாய்.

கண்ணன்
கண்ணன்

பாவை நோன்பு நோற்பது குறித்த முன்னறிவிப்பு இல்லாமலா இத்தனை காலையில் வந்து ஆண்டாள் தன் தோழிகளைத் தொந்தரவு செய்வாள்... முன்தினமோ, சில நாள்களாகவோ இதுகுறித்து அவர்கள் கலந்து பேசியிருப்பார்கள். கோதை சொல்லும்போதே மனதில் வரித்துக்கொண்ட தோழிகள் அவள் வருமுன்னரே விழித்துகொண்டு அவளோடு சேர்ந்துவிட்டனர்.

சில பெண்கள் ஆண்டாள் சொன்னதையே மறந்திருக்க வேண்டும். அவர்களை நித்திரை தேவி பற்றிக் கொண்டுவிட்டாள். அவளின் தழுவலில் அயர்ந்திருந்தவர்களைக் கோதை தன் குரலால் எழுப்பினாள்.

விழித்துக்கொண்டு தன் வரவை எதிர்பார்த்திருந்த தோழியரோடு விரைந்து சென்று மார்கழி நீராடி பாவை நோன்பை நோற்றிருக்கலாம் ஆண்டாள். ஆனால், அவள் அவ்வாறு செய்யவில்லை. நல்லவர்க்குக் கிடைக்கும் செல்வம் எப்படி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுமோ, அதேபோல ஆண்டாள் நற்பலன்கள் அருளும் இந்தப் பாவை நோன்பின் பலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள். எல்லோருடைய இல்லத்து வாசல்களிலும் போய் நின்றாள்.

தினம் ஒரு திருப்பாவை
தினம் ஒரு திருப்பாவை

உலகைப் போர்த்தியிருக்கும் இருளைப்போல, மாயை மனதை மூடியிருக்கிறது. கிழக்கில் சூரியன் எழுந்ததும் உலகை மூடிய இருள் ஓடிவிடும். ஆனால், மனதில் இருக்கும் `மாயை இருள்' குருவென்னும் அருள்விளக்கின் அருகில் செல்லும்வரை விலகுவதில்லை. குருவின் அருகில் இருப்பதே நம்மை அனைத்துத் துயரிலிருந்தும் விலக்கும். மாயையிலிருந்து மீளுவதில் தாமதமானால் குரு நம்மை நாடிவந்து காத்தருள்வார்.

ஆண்டாள் ஒரு குருநாதரைப் போன்று தன் தோழிகளை அந்த ஆதிமூலத்தை நோக்கி நடத்துகிறாள். அந்த முயற்சியில் சக தோழிகள் சுணங்கும்போது அவள் பலவற்றையும் சொல்லித் தட்டி எழுப்பி உற்சாகமூட்டுகிறாள். ஒரு தோழியின் வீட்டு வாசலுக்குச் சென்றனர். அந்தத் தோழி எழுந்துகொள்ளவில்லை. ஆண்டாள் பாசுரம் ஒன்றைப் பாடுகிறாள். இந்தப் பாசுரம் பரந்தாமனை அறிந்த விழிப்புநிலையையும் அறிந்துகொள்ளாத மாயையின் துயில்நிலையையும் விளக்கும் விதமாகவே அமைந்தது.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

அதிகாலையின் ரம்மியத்தை விழித்துக்கொண்டவர்கள் மட்டுமே அறிந்து ரசிக்க முடியும். உறக்கம் இனிமையானது என்று கருதுகிறார்கள் உறங்குபவர்கள். ஆனால், அதனினும் இனிமையானவை உள்ளன என்பதை விழித்தெழுந்து வெளியே வருபவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். உலக சுகங்களைவிடப் பரமாத்மாவை அறிந்துகொள்வதன் மூலம் கிடைக்கும் இன்பம் மிகவும் உயர்ந்ததாகவும் இனிமையானதாகவும் இருக்கும்.

``பெண்ணே, அதிகாலையிலேயே பறவைகள் எழுந்து தம் இனிமையான குரலால் தங்களுக்குள் அன்பைப் பரிமாறிக்கொள்வதை நீ கேள். இந்தப் பறவைகளுக்கெல்லாம் தலைவனான `பெரிய திருவடி' எனப்படும் கருடனின் தலைவன் இருக்கும் கோயிலிலிருந்து, `இதோ தேவரீர் சுப்ரபாத தரிசனம் அருள்கிறார், காண வாருங்கள்' என்பதுபோல ஒலித்து அழைக்கும் வெண்சங்கின் முழக்கம் கேட்க வில்லையோ... பெண்ணே எழுந்திரு.

நஞ்சுகலந்த பாலூட்டி, வஞ்சகத்தால் கண்ணனைக் கொல்லவந்த பூதனை என்னும் அரக்கியும், சக்கர வடிவில் வந்து அவனை அழிக்க வந்த சகடாசுரனும் அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.

எடுத்த காரியத்தில் வெற்றி கிட்ட ஆண்டாள் அருளும் அற்புத வழி! திருப்பாவை - 5

குழந்தை அவனை வஞ்சித்துவிடலாம் என்று எண்ணி பூதனையும் சகடனும் ஏமாந்துபோனார்கள். அவன் பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும் அந்த ஆதிமூலமானவன். அவனை முனிவர்களும் யோகியர்களும் தம் உள்ளத்தில் குடியிருத்தி சதாசர்வ காலமும் `ஹரி' என்ற அவன் நாமத்தை மெல்லத்தான் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அநேகம்பேர் இந்தக் காலைவேளையில் ஒன்றுபோல உச்சரிக்க அதுவே பேரரவமாகக் கேட்கிறது. இந்த மார்கழியில் பொழியும் பனியைப் போல இடைவிடாது ஒலிக்கும் இந்த `ஹரி ஹரி' என்னும் ஒலி எங்கள் உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறது. இவற்றைக் கேட்டபின்னுமா நீ உறங்குகிறாய்... எழுந்துகொள் எம்பாவையே..." என்று ஆண்டாள் பாடி எழுப்புகிறாள்.

ஆண்டாளின் இந்தப் பாசுரத்தை தினமும் அதிகாலையில் பாடி வர மாயையின் பிடியிலிருந்து தப்பி அந்த அரங்கன் அருளைப் பரிபூரணமாகப் பெறலாம் என்பது நம்பிக்கை.