Published:Updated:

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையனைப் போற்றிடத் தன் தோழியை அழைக்கிறாள் கோதை! திருப்பாவை 14

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

விடிவதற்கு முன்பாக எழுந்துகொள்வதன் சிறப்பை சாஸ்திரங்கள் சிறப்பாகப் போற்றுகின்றன. அதிகாலை வேளையை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லி, அந்த வேளையில்தான் தேவர்களும் ரிஷிகளும் நீராடப் போகிறார்கள் என்று சொல்கிறது. இந்தக் காலத்தில் எந்த தோஷமும் கிடையாது.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

விஷ்ணு
விஷ்ணு

பொழுதுகள் மாறுவதை மனிதர்கள் மட்டும் முன் அறிவதில்லை. பறவைகள், மிருகங்கள், தாவரங்களும்கூட அவதானிக்கின்றன. பொழுது விடிவதற்குப் பல நாழிகைகளுக்கு முன்பாகவே பறவைகளுக்கு எப்படித் தெரிகிறது... அவை எப்படித் தம் அன்றாட வேலைகளைத் தொடங்குகின்றன... இரவெல்லாம் வேட்டையாடித் திரிகின்ற விலங்குகள் எல்லாம், விடிவதற்கு முன்பாகவே தங்கள் குழிகளுக்கும் வலைகளுக்கும் திரும்பிவிடுவது எப்படி... உயிரினங்கள் மட்டுமா, செடிகொடிகள் கூட விடியலையும் இரவையும் கணித்துவிடுகின்றன.

அல்லி எப்படி இரவில் மலர்கிறது... சூரியகாந்திப் பூக்கள் எப்படி காலையில் மலர்கின்றன... இயற்கை உயிர்கள் அனைத்துக்கும் தந்திருக்கும் கொடை, பொழுதுகளை அறியும் நுண் அறிவு. மனிதர்களுக்கு அந்த நுண்ணறிவு மிக அதிகமாக இருந்தும் அவர்கள் அந்தந்தப் பொழுதுகளுக்கான கடமைகளை மாற்றி மாற்றிச் செய்கிறார்கள். ஒருபோதும் மாலையில் மலரவேண்டிய மலர் காலையில் மலர்வதில்லை. காலையில் மலரவேண்டிய மலர் விடிந்து வெகு நேரம் கழித்து மலர்வதில்லை.

ஆண்டாள்
ஆண்டாள்

விடிவதற்கு முன்பாக எழுந்துகொள்வதன் சிறப்பை சாஸ்திரங்கள் சிறப்பாகப் போற்றுகின்றன. அதிகாலை வேளையை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லி, அந்த வேளையில்தான் தேவர்களும் ரிஷிகளும் நீராடப் போகிறார்கள் என்று சொல்கிறது. இந்தக் காலத்தில் எந்த தோஷமும் கிடையாது. இந்தக் காலத்தில் தொடங்கும் செயல்களும் வேண்டுதல்களும் தவறாமல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதனால்தான், இந்தப் பாவை நோன்பை அதிகாலை நீராடலோடு தொடங்க வேண்டும் என்று விரும்புகிறாள் ஆண்டாள்.

அதிகாலையில் எழுந்து நீராடுவதன் சிறப்பை முன் தினம் சொல்லக் கேட்ட தோழிகள் அனைவரும் அதில் ஆர்வம் கொண்டனர். ஆண்டாள் வரும்போது எழுந்து சேர்ந்துகொள்வதாக ஒரு சிலர் சொல்லினர். ஆனால் ஒருத்தி, ``கோதை நீ கவலைப்பட வேண்டியதில்லை. நான் அதிகாலையே எழுந்து உங்களை எல்லாம் எழுப்புவேன்” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னாள். இப்போது அவள் வீட்டு வாசலில்தான் நிற்கின்றார்கள் ஆண்டாளும் பிற தோழிகளும். எல்லோருக்கும் முன் வருவதாகச் சொன்னவள், எல்லோரும் வந்தபின்னும் உறங்கிக்கொண்டிருப்பது என்ன...

கிருஷ்ணன்
கிருஷ்ணன்

உள்ளே உறங்கிக்கொண்டிருப்பவள், வெறும் வாய்ச் சவடால் விடுபவள் அல்ல என்பதைக் கோதை அறிவாள். அதிகாலையில் எழுந்துகொள்வது என்பது ஒரு பழக்கத்தினால் மட்டுமே சாத்தியமாவது. திடீரென்று ஒரு நாள் எழுந்துகொள்வது என்பது இயலாது. இவள் அந்தப் பழக்கம் உடையவளாய் இருக்க வேண்டும். அல்லது அதிகாலையிலேயே எழுந்து எல்லோரையும் எழுப்ப வேண்டி, உறக்கம் தொலைத்து விழித்திருந்து, தன்னையறியாமல் உறங்கியிருக்க வேண்டும். மறுதினம் மேற்கொள்ளும் அந்த நோன்பையும் அந்த நாராயணனின் மகிமைகளை இரவெல்லாம் நினைத்திருந்து, அதில் உறக்கம் தொலைத்து, விழித்துக்கொள்ளவேண்டிய அதிகாலையில் உறங்கியிருக்க வேண்டும். எதுவாயிருந்தாலும் தோழிகளிடம் வாக்குக் கொடுத்துவிட்டு அதை மீறினால் அவர்கள் கேலியில் இருந்து தப்ப இயலுமா...

``எங்களை முன்னமே எழுப்புவதாக வாய் பேசியவளே, உன் வீட்டின் பின்புறம் இருக்கும் சிறு தடாகத்தைச் சென்று பார். அதிலிருக்கும் அல்லிமலர்கள் எல்லாம் தம் இதழ்கள் மூடிக்கொள்ள, செங்கழுநீர்ப் பூக்கள் எல்லாம் மலர்ந்திருக்கும். காவி நிற உடையணிந்து தங்கள் வெண் பற்கள் தெரியும்படித் திரியும் சந்நியாசிகள் எல்லாம் அதிகாலையிலேயே எழுந்து நீராடி திருமண் இட்டு வழிபாடு செய்யத் திருக்கோயில்களுக்குச் செல்கின்றனர். கோயில்களை சாவியிட்டுத் திறந்துவைக்கும் தவயோகிகளும் செல்கின்றனர்.

கிருஷ்ணன்
கிருஷ்ணன்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த கோதண்டனைப் பாட அழைக்கிறாள் கோதை... திருப்பாவை -13

ஆனால் நீயோ, இன்னும் எழுந்துகொள்ளவில்லை. நீ சொன்னவற்றை நினைத்து உனக்கு வெட்கம் உண்டாக வேண்டாமா... அந்த வெட்கம் உனக்குப் போகவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, தாமரை மலர்போன்ற விரிந்த கண்களையும், சங்கையும் சக்கரத்தையும் தன் வலிமையான கரங்களில் ஏந்துபவனுமான அந்தத் திருமாலின் திருநாமத்தைப் போற்ற வேண்டும். வா, நாம் அனைவருமாக இணைந்து அந்த நாராயணனைப் போற்றுவோம்” என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

அடுத்த கட்டுரைக்கு