Published:Updated:

`கடந்த இரண்டுமுறை இல்லாத சிறப்பு!'- குடமுழுக்கு விழாவில் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை செய்யப்படுமா?

ராஜராஜ சோழன் சிலை
ராஜராஜ சோழன் சிலை ( ம.அரவிந்த் )

பெரியகோயில் பெருவுடையார் சந்நிதிக்கு எதிரே உள்ள தியாகராஜர் மண்டபத்தில் கண்ணாடி பிரபைக்குள் ராஜராஜ சோழன், உலகமாதேவி ஆகியோரது சிலைகளை வைத்து இரும்புக் கம்பிகள் கொண்டு பாதுகாப்புக்காக அடைக்கப்பட்டது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்ற கடந்த இரண்டு குடமுழுக்கு விழாவுக்கு இல்லாத சிறப்பு தற்போது நடைபெற உள்ள குடமுழுக்குக்கு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு ராஜராஜன் சோழன் மற்றும் அவரின் பட்டத்து இளவரசியான உலகமாதேவி சிலைகள் பெரிய கோயிலுக்குள் வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடும் அவர்கள், குடமுழுக்கு தினத்தில் சிலைகள் தகுந்த பாதுகாப்புடன் வெளியே கொண்டுவரப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்படுவதை ராஜராஜன் பார்வையிடும் வகையில் வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ராஜராஜ சோழன் சிலை
ராஜராஜ சோழன் சிலை

இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான நல்லதுரையிடம் பேசினோம், ``தஞ்சாவூர் பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து சோழர்களின் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது. மேலும், யுனஸ்கோவால் உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கோயிலைக் காண்பதற்கு உலகம் முழுவதில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இக்கோயிலைக் கட்டிய ராஜராஜசோழன், அவரது பட்டத்தரசியான உலகமாதேவி ஆகியோர் சிலைகள் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு பெரியகோயில் மூலவருக்கு எதிரே பெருவுடையாரை வணங்குவதுபோல் வைக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு சிலைகளும் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. காணாமல் போன சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜராஜ சோழன் சிலை
ராஜராஜ சோழன் சிலை

குஜராத்தில் உள்ள ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகளை மீட்க வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த வருடம் குஜராத் மாநிலத்துக்குச் சென்று அங்குள்ள ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகளை மீட்டுக் கொண்டுவந்தனர்.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரியகோயில் பெருவுடையார் சந்நிதிக்கு எதிரே உள்ள தியாகராஜர் மண்டபத்தில் கண்ணாடி பிரபைக்குள் ராஜராஜ சோழன், உலகமாதேவி ஆகியோரது சிலைகளை வைத்து இரும்புக் கம்பிகள் கொண்டு பாதுகாப்புக்காக அடைக்கப்பட்டது. இதன் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸார் எப்போதும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

நல்லதுரை
நல்லதுரை

சிலைகளைப் பாதுகாக்க இதுபோன்று செய்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். தற்போது குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு குடமுழுக்கு விழாவுக்கு இல்லாத சிறப்பு தற்போது நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவுக்கு உள்ளது. அதாவது இரண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றபோது ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகள் இங்கு இல்லை. ஆனால், தற்போது இங்குதான் இருக்கிறது.

இந்த நிலையில், அடைக்கப்பட்டிருக்கும் இருவரது சிலைகளையும் தகுந்த பாதுகாப்புடன் வெளியே எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து விமான கோபுரக் கலசங்களில் தண்ணீர் ஊற்றுவதைப் பார்க்கும் வகையில் சிறிய அளவிலான மேடை அமைத்து வைக்க வேண்டும். அன்றைய தினத்தில் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சிலை அடைபட்டு கிடக்கக் கூடாது. குடமுழுக்கு விழாவில் மொத்தம் பத்து லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியகோயில்
பெரியகோயில்

இந்த விழாவுக்கு வரும் அனைவரும் ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகளைப் பார்வையிடும் வகையில் தகுந்த பாதுகாப்புடன் காட்சிக்கு வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை அரசும் அறநிலையத்துறை அதிகாரிகளும் உடனடியாக எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் குடமுழுக்கு முழுமை பெறும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு