திருக்கதைகள்
Published:Updated:

அவர் ஆத்ம ஞானி!

சிவன் சார்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன் சார்

சிவன் சார் அற்புதங்கள்

‘கிரேஸி’ மோகனின் நாடகக் குழுவில், அவருடைய நாடகங்கள் அனைத்தையும் இயக்கியவரும் கிரியேட்டிவ் டைரக்டருமான எஸ்.பி.காந்தன், சிவன் சாரின் தீவிர பக்தர். மகா பெரியவாளின் ஓரிருக்கை மணிமண்டபம், சேஷாத்திரி சுவாமிகள், சத்குரு சிவன் சார் போன்ற பல மகான்களைப் பற்றிய ஆவணப் படங் களை இயக்கியவர். சொல்லப்போனால், மகா பெரியவாள் மணி மண்டபம் குறித்த ஆவணப்படம்தான் இவருக்கு சிவன் சாரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சிவன் சார்
சிவன் சார்

“2017-ம் வருஷம்… ஒரு நாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சிவசாகரம் ட்ரஸ்ட்டிலிருந்து சிவராமன் பேசுறேன்’னு அழைத்தவர், தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார். `நீங்க ஓரிருக்கை மகா பெரியவா மணிமண்டபம் பத்தி மூணு படம் பண்ணியிருக்கேள். நான் யூட்யூபில் பார்த்தேன். ரொம்ப நல்லாயிருக்கு. அதே மாதிரி சிவன் சாருக்கும் நீங்க படம் பண்ணிக் கொடுக்கணும்’னு சொன்னார்.

உடனே நான் ‘மன்னிச்சுக்குங்க சார். சிவன் சார்னா யார் சார்?’னு கேட்டேன். அவர் ‘உங்களுக்குத் தெரியாதா’ன்னு கேட்டப்போ, ‘இல்ல சார்.. எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.

‘அவர் ஒரு பெரிய ஆத்மஞானி சார். மகா பெரியவாளுடைய பூர்வாஸ்ரம தம்பி’ – இப்படி அவர் சொன்னதும் நான் வெலவெலத் துப் போய்ட்டேன்.

‘என்னடாது.. இந்த மாதிரி ஓர் ஆத்மஞானியைப் பற்றித் தெரிஞ்சுக்காமலேயே இருக்கோமே’ங்கற சிந்தனையோட அவரிடம், ‘சார் நிச்சயமா நான் அவரைப் பற்றிப் பண்றேன் சார். எனக்கு அடிப்படையான தகவல்கள் வேணுமே’ன்னு கேட்டேன்.

உடனே அவர் ‘சிவசாகரத்தில் சில அலைகள்’ புத்தகத்தைத் தருவதாகவும், அதைப் படிச்சு அவரைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டு, அதன் பின்னர் ஷூட் பண்ணலாம்னும் சொன்னார். எப்போதுமே ஆரம்ப நிலையில் என் ஸ்கிரிப்டை என் மகள் த்விஜாவந்தி பரத்கிட்டதான் டிஸ்கஸ் பண்ணுவேன்.

அதேமாதிரி அந்தப் புத்தகத்தை அவகிட்டே கொடுத்தேன். அவள் முழுவதும் படிச்சிட்டுப் பரவசமாகி, ஒரு ‘ரஃப் ஸ்கிரிப்ட்’ தயாரிச்சுக் கொடுத்தாள். ரஃப் ஸ்கிரிப்ட் வந்துட்டாலுமே அதுக்குமேல ஸ்கிரிப்டிங் ஆரம்பிக்கிறதுக்குச் சின்னத் தயக்கம் இருந்தது. அதுக்கு ரெண்டு காரணங்கள் உண்டு.

ஜி.என்.பி., பாலக்காடு மணி ஐயர், லால்குடி ஜெயராமன், பிருந்தாம்மா, கன்யாகுமாரி போன்ற பல சங்கீத மேதைகளைப் பற்றி நான் டாக்குமென்டரி பண்ணியிருக்கேன். எல்லாப் படங் களிலுமே ஓப்பனிங்கில் என் பாணியைக் கையாண்டிருப்பேன். சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றுடன் தொடங்கி, பெயரைச் சொல்லாமல் அவரைப் பற்றிச் சொல்லிட்டே போய் பார்வையாளர்களின் ஆர்வத்தைப் பலமடங்கு ஏற்றிவிட்டு, கடைசியா ‘அந்த அவர் இவர்தான்’னு சம்பந்தப்பட்டவரின் பெயரைச் சொல்லி, டைட்டில் வருவது போலச் செய்வது என் வழக்கம்.

ஆனால் சிவன் சாரை எப்படி இந்த மாதிரிக் கொண்டு வர முடியும்? அவர் பெரியவா மாதிரி மடாதிபதி இல்லை. பாபா மாதிரியும் இல்லை. சாதாரண மனிதர்தானே. இவரை எப்படி நாம ‘ஆத்மஞானி’ன்னு அந்தப் பிரிவில் கொண்டுவர முடியும்! எப்படி இவரைப் பற்றி இத்தனை நாளா தெரிஞ்சுக்காமலேயே இருந்தோம்’னு நினைச்சுக் குழம்பிப் போய்ட்டேன்.

எஸ்.பி.காந்தன்
எஸ்.பி.காந்தன்

அதனால ஸ்கிரிப்டிங் பண்ண கொஞ்சம் கால தாமதம் ஆயிடுச்சு. எனக்கு இதைப் பண்றதில் ஆர்வம் இல்லையோன்னு சிவராமன் சார் நினைச்சுட்டார். ‘அப்படி எல்லாம் இல்லை சார். சில முக்கியமான விஷயங்கள் எனக்கு இன்னும் மனசில் படல. அதனால்தான் காத்திருக்கேன்’னு சொன்னேன்.

இது நடந்து கொஞ்ச நாளில், ஒரு நாள் ராத்திரி வீட்டில் நான் அசந்து தூங்கிட்டிருக்கும்போது ஒரு கனவு.

திடீர்னு, ‘சிவன் சார் உங்க கிரஹத்துக்கு வர்றார்’னு ஒரு தகவல். அது எப்படி வந்ததுன்னு தெரியாது. எனக்கு உதிச்சது... உடனே நான் தூக்கத்திலிருந்து எழுந்து குளிச்சிட்டு, பட்டு வேஷ்டி கட்டிட்டு, என் மனைவி, பொண்ணையும் எழுப்பி, ‘எல்லாரும் கொஞ்சம் மடி கட்டிட்டு வாங்கோ. சிவன் சார் வர்றார்’ன்னு சொன்னதும் அவங்களும் ரெடியானாங்க.

காலிங் பெல் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தால் சிவன் சார் வர்றார். எங்க வீட்டு சோபாவில் வந்து உட்காந்துக்கறார். நாங்க எல்லாரும் நமஸ்காரம் பண்றோம். இதெல்லாமே கனவுன்னு நான் நினைச்சிட்டிருந்தேன்.

காலையில் எழுந்ததும் என் மனைவியிடம், `நேற்று ராத்திரி என்ன நடந்தது தெரியுமா?’ என்று கேட்டதும், `அதான் தெரியுமே. நீங்க குளிச்சிட்டு பட்டு கட்டிட்டு, எங்களையும் குளிச்சிட்டு மடிசார் கட்டிக்கச் சொன்னேள். சிவன் சார் வர்றார்னு சொன்னீங்க.

ஆனால் எங்களுக்குத் தெரியல. உங்க கண்ணுக்குத் தெரிஞ்சார் போல. நீங்க அவர் சோபாவில் உக்கார்றார்னு சொன்னீங்க.நாங்களும் அவர் உட்கார்றதா நினைச்சு எல்லாரும் நமஸ்காரம் பன்ணினோம். அதுக்கப்புறம் போய் படுத்துட்டோமே. உங்களுக்கு ஞாபகம் இல்லையா?”ன்னு மனைவி கேட்டதும், உறைந்துபோனேன்.

அப்போதுதான் எனக்குப் புரிஞ்சுது! இந்த மாதிரி மகான்களையும் தெய்வங்களையும் நாம தேடிப் போகணும்கிறது இல்ல. நமக்கு எப்போ தேவையோ, அப்போ அவங்களாகவே கருணாமூர்த்தியாக நம்மைத் தேடி வருவாங்க’ என்பதை அன்னிக்கு நான் உணர்ந்தேன்.

இது நடந்து சில நாள்களுக் குள்ளேயே, என்னுடைய குழப்பங் கள் நீங்கிடுச்சு. சிவன் சார் ஆவணப் படத்துக்கான ஓப்பனிங்கில் என்ன சிச்சுவேஷன் வைக்கணும்னு பொறி தட்டியது.

ஒரு பெரிய கல்யாண மண்டபம். சிவன் சாரை உள்ளே விடாமல் தடுக்கும் போலீஸ்காரர் ஒருவர், அவரை மண்டபத்துக்கு வெளியே பிச்சைக்காரர்களோடு உட்கார வைத்துவிடுகிறார்.

காசி யாத்திரைக்காக வெளியே வரும் மாப்பிள்ளை பிச்சைக்காரர் வரிசையில் அமர்ந்திருந்த சிவன் சாரைப் பார்த்துப் பதைபதைத்துப் போகிறார். அவரைப் பணிந்து வணங்கி நூறு முறை மன்னிப்பு கேட்டு மேடைக்கு அழைத்துச் செல்கிறார். பின்னர் சிவன் சாரின் கையால் தாலி எடுத்துத் தரச் சொல்லிக் கட்டுகிறார்.

இந்த அற்புதத்தையே ஓப்பனிங் கில் வைத்தேன். சிவன் சார் ரோட்டில் பிச்சைக்காரர்களுடன் அமர்ந்ததையும் மணமேடையில் விவிஐபி-யாக அமர்ந்ததையும் ஒரே மாதிரி பாவித்த சம்பவத்தைச் சொல்லி, ‘ஆத்மஞானி’ என்பதற்கு ஒரு டெஃபனிஷன் கொடுத்து ஓப்பனிங் வைத்திருந்தேன்.

அதன் பிறகு சிவன் சாரின் சித்தாந் தத்தை எடுத்துக்கொண்டேன். நாம பகவானிடம் எனக்கு அது வேணும், இது வேணும்னு வேண்டிக்கிறோம். பகவான் நேரா நம்மகிட்ட வந்து நமக்கு அனுகூலம் பண்ண முடியாது. அவருடைய பிரதி நிதிகளாக சிவன் சார் போன்றவர்கள் தோன்றி, நமக்கு வேண்டிய நல்லதைச் செய்வார்கள்.

அதேபோல், நாம் சிவன் சாரைத் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு எப்போது தேவையோ, அப்போது அவரே ஆண்டவனால் அனுப்பப்பட்டு, நம்மிடம் வருவார்’ என்று ஸ்கிரிப்டில் எழுதினேன். ஏனென்றால், எனக்கே தனிப்பட்ட முறையில் பல அனுபவங்கள் கிடைத்தன!

அதன் பிறகு மளமளன்னு வேலைகள் நடந்து, அந்த வருஷம் சிவன் சார் ஆராதனை விழாவில் அவருடைய ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இப்போதும் சிவசாகரம் யூட்யூப் சானலில் அந்தப் படம் இருக்கிறது.

இதில் என்ன விசேஷம்னா... அந்த வருஷத் தோட இந்தத் தொடர்பு முடிஞ்சுடல. அதுக்கப்புறம் தான் சிவசாகரத்தோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுச்சு. இன்றுவரையிலும் வாரம் தோறும் சிவ சாகரத்துக்குப் போய் அங்கே நடக்கும் பூஜையில் கலந்துகொள்கிறேன். பெரிய பாக்கியத்தை சிவன் சார் எனக்குக் குடுத்திருக்கார்.

இதுல இன்னொரு விசேஷம் என்னன்னா... எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் கிரஹத்தில் மகாபெரியவா படங்கள் இரண்டு மட்டுமே உண்டு. ஒன்று பூஜையிலும் மற்றொன்று ஹாலி லும் இருக்கும். ஹாலில் இருந்தது கறுப்பு-வெள்ளை போட்டோ.

கலர் போட்டோ இல்லாத அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் இருப்பது போன்ற கறுப்பு வெள்ளை படத்தை சிவன் சார்தான் தனது பெயிண்டிங்கால் வண்ணத்தில் மாற்றினாராம். குறிப்பிட்ட அந்த கலர் படத்தைப் பல இடங்களில் இப்போது பார்க்கிறேன்.

ஆக, ஆரம்பத்தில் மகாபெரியவா படங்கள் இரண்டு மட்டுமே இருந்த எங்கள் வீட்டில், சிவன் சார் ஆவணப் படம் வெளியான பிறகு, நிறைய படங்கள் குவிய ஆரம்பித்தன. ஒவ்வொரு ரூமிலும் நான்கைந்து பெரியவா படங்கள் இருக்கின்றன. எல்லாமும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் கொடுத்ததுதான்!

மேலே சொன்ன நிகழ்ச்சி மூலமாக எங்கள் குடும்பத்தில் அவர் மீது பக்தி பெருகி, முழுமையா சிவன் சாருடன் ஐக்கியம் ஆகிவிட்டோம். என் வாழ்வில் அவரால் நிறைய அற்புதங்கள் நடந்திருக்கு. என் மகள் போன வருஷம் இரண்டாவது குழந்தை யைக் கருவுற்றிருந்தாள். நிறை மாசத்தில் அவளுக்கு கோவிட் வந்துருச்சு. அப்போ சாரைத் தவிர வேற சரணாகதியே கிடையாது!

என்ன நடந்தது தெரியுமா?

- சிலிர்ப்போம்...

'அருளும் ஆறு முகங்கள்!'

முருகப்பெருமானின் ஆறுமுகங்களின் அருளும் தன்மையை அடியார்கள் பலரும் சிறப்பிக்கிறார்கள்!

உலகைப் பிரகாசிக்கச் செய்ய, பக்தர்களுக்கு அருள, வேள்விகளைக் காக்க, ஞான உபதேசம் செய்ய, தீயோரை அழிக்க, பிரபஞ்ச நலனுக்காக வள்ளியுடன் குலாவ... என்று ஆறுமுகங்களும் அருள்வதாக, தனது திருமுருகாற்றுப்படையில் விளக்குகிறார் நக்கீரர்.

ஊமையாக இருந்த தன்னைப் பேசவைத்ததுடன், முதல் அடியும் எடுத்துக் கொடுத்த முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களைப் போற்றி குமரகுருபரர் பாடியது என்ன தெரியுமா?

‘சத்ரு சம்ஹாரத்துக்கு ஒருமுகம்; முக்தி தருவது ஒருமுகம்; ஞானம் அருள்வது ஒருமுகம்; அஞ்ஞானம் அழிக்க ஒருமுகம்; சக்தியுடன் இணைந்து அருள ஒருமுகம்; பக்தர்களுக்கு அருள ஒருமுகம்!’ என்று போற்றுகிறார் அவர்.

அருணகிரிநாதரோ... ‘ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே; ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே; கூறும் அடியார் வினை தீர்க்கும் முகம் ஒன்றே; குன்றுருவ வேல் தாங்கி நின்ற முகம் ஒன்றே; மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே; வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்றே!’ என்கிறார்.

நாமும் ஆறுமுகனை வணங்கி அருள்பெறுவோம்.

- ஆர்.ராதா, கோவை