திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

சந்தனத்தில் நிலமகள் குங்குமத்தில் கெளரிதேவி!

திருமால் தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமால் தரிசனம்

தீபாவளி வழிபாடுகள் - ராமசுப்பு

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் குதூகலத்துடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. வாழ்வில் துன்பம் எனும் இருள் நீங்கி, எப்போதும் மகிழ்ச்சி வெள்ளம் நிறைந்திருக்க வேண்டும் என்று அடியார்கள் ஆண்டவனிடம் வேண்டி வரம் பெற உகந்த திருநாள் தீபாவளி. இந்தப் பண்டிகையைக் கொண்டாடக் காரணம் என்ன?

சந்தனத்தில் நிலமகள் குங்குமத்தில் கெளரிதேவி!

நம்மில் பெரும்பாலானோர் அறிந்த நரகனின் கதைதான் காரணம். ஒருமுறை பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தான் தேவேந்திரன். அங்கே அனந்த சயனத்திலிருந்த பெருமாளிடம் ஒரு விண்ணப்பம் வைத்தான்.

``எம்பெருமானே, நாராயணா! பூலோகத்தில் ப்ரக்ஜோதிஷ புரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரும் நரகாசுரன், தேவர்களையும் பூலோக உயிர்களையும் கொடுமைப்படுத்தி வருகிறான். அவனை அடக்கி எங்களைக் காத்தருள வேண்டும்’’ என்று வேண்டினான். பரம்பொருள் புன்னகைத்தது.

``எல்லாம் விதியின் பயன். அசுரனுக்கும் விதி ஒரு முடிவுரையை எழுதும். அவன் பெண்ணொருத்தியால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்று வரம் வாங்கியிருக்கிறான். அதன்படி அவன் முடிவு அமையும். காலம் வரும் வரை காத்திருங்கள்’’ என்று அருள்பாலித்தது.

அந்தக் காலமும் வந்தது. கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது. பூமிப்பிராட்டியின் அம்சமான சத்யபாமா தேரோட்ட, ப்ரக்ஜோதிஷ புரத்தின்மீது படையெடுத்துச் சென்றார் கிருஷ்ணர். தீவிரமான போரில் மயங்கி விழுவதுபோல் நாடகமாடினார் பகவான். சத்யபாமா பொறுப்பாளா? வெகுண்டெழுந்தாள். அசுரனை அழித்தாள்.

பின்னர், நரகன் தன் மைந்தனே என்பதை பகவான் மூலம் அறிந்தவள், அதர்மவாதிகள் எவராயினும் அவர் முடிவு இப்படித்தான் என்பதை உலகுக்கே தெளிவுபடுத்தினாள். கொடுமை மறைந்த அந்த நாளில் தீபங்கள் ஏற்றிவைத்து உலகமே கொண்டாடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். (நரகாசுரனே இப்படியொரு வரம் கேட்டான் என்பதாகவும் பல கதைகளில் சொல்லப்படுவது உண்டு).

இதன் படி உருவானதே தீபாவளித் திருநாள். சரி, இந்தப் பண்டிகையை நாம் எப்படிக் கொண்டாட வேண்டும்? தீபாவளியில் நம் வழிபாடுகள் எப்படி இருக்க வேண்டும்? இதுகுறித்து சனாதன முனிவர் மூலம் அற்புதமான விளக்கத்தைத் தருகின்றன புராணங்கள்.

சந்தனத்தில் நிலமகள் குங்குமத்தில் கெளரிதேவி!
PicZania

தீபாவளியும் பிரதோஷ வழிபாடும்!

தீ
ர்க்கதமஸ் என்ற முனிவர் ஒரு சோலையின் நடுவே ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். ஒரு முறை, அவரது ஆசிரமத்துக்கு சனாதன முனிவர் விஜயம் செய்தார். அவரை வரவேற்று உபசரித்த தீர்க்கதமஸ், தனக்கு ஒரு நல்ல மார்க்கத்தைக் கூறுமாறு வேண்டினார்.

சனாதன முனிவர், ‘‘தீர்க்கதமஸ்! துன்ப இருளை அகற்றி வாழ்வில் இன்ப ஒளியேற்றும் ஒரு விரதம் உண்டு. துலா மாதம் தேய்பிறை திரயோதசி அன்று (தீபாவளிக்கு முதல் நாள்) மகா பிரதோஷ பூஜை செய்து, எம தீபம் ஏற்றி எமதேவனை வழிபட வேண்டும். இதனால் நமது வாழ்வு நலம் பெறுவதோடு, நரகத்தில் உழலும் நம் முன்னோர் சொர்க்கம் செல்லவும் வழி பிறக்கும். முன்னோர்களது ஆசியும் கிடைக்கும்.

மறு நாள் நரக சதுர்த்தி தினமான தீபாவளி அன்று உஷத் காலத்தில் அதாவது உதய காலத்துக்கு முன் எண்ணெய் (எள் நெய்) தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். இந்த நரக சதுர்த்தி (தீபாவளி) அன்று உஷத் காலத்தில் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சூரியனும், சந்திரனும் சஞ்சரிப்பதால், அன்று புனிதமான நாளாகும். அன்று கடைப்பிடிக்கும் விரத வழிபாடுகளுக்கு பலன் அதிகம்.

இந்தப் புனிதமான நாளில் எண்ணெயில் திருமகளும், அரப்புப் பொடியில் கலைமகளும், சந்தனத்தில் நிலமகளும், குங்குமத்தில் கௌரியும், மலர்களில் மோகினிகளும், நீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், தீபத்தில் பரமாத்மாவும் உறைந்து, அருள் பாலிக்கிறார்கள். எனவே, இந்த நல்ல நாளில் எண்ணெய் தேய்த்து, அரப்புத் தூள் உபயோகித்து, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். இதனால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் உம்மைச் சேரும்.

பிறகு புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்பு பட்சணங்கள் படைத்து இறை வழிபாடு செய்ய வேண்டும். இதுவே தீபாவளி விரதமாகும். இதைக் கடைப்பிடிப்பதால் எல்லா விதமான இடையூறுகளும் நீங்கும். இயற்கை ஒத்துழைக்கும். வழிபாடும் தவமும் தடையின்றி நடைபெறும். நற்கதி உண்டாகும். இந்தத் தீபாவளி விரத வழிபாட்டை ஆண்டுதோறும் கடைப்பிடிப்பதன் மூலம், தோஷங்கள் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்ட வாழ்க்கை அமையும்!’’ என்று விளக்கமாக எடுத்துரைத்தார். அவ்வாறே கடைப்பிடித்து தீர்க்கதமஸ் இறையருள் பெற்றார்.

இனி, எண்ணெய்க் குளியல், குபேர பூஜை, முன்னோர் ஆராதனை குறித்த நியதிகளை அறிந்துகொள்வோம்.

தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாள் இரவே பெரிய பாத்திரங்களில் நீர் நிரப்பி, அதன் இருபுறமும் சூரியன் சந்திரன் படங்களை சுண்ணாம்பு கொண்டு வரைந்து வைப்பார்கள். அந்தத் தண்ணீரில் வாசனைத் திரவியங்களையும் இட்டு வைப்பார்கள். மறுநாள் காலையில் தண்ணீரைக் கொதிக்கவைப்பார்கள். தீபாவளி தினத்தில் இந்த நீரில் கங்கை சங்கமமாவதாக ஐதிகம்.

அதேபோல் அதிகாலையில் நல்லெண்ணெய்யில் ஓமம், மஞ்சள் கலந்து சூடாக்கி வைத்திருப்பார்கள். இதில் மகாலட்சுமி அம்சம் நிறைவதாக ஐதிகம். இந்த எண்ணெயைத் தேய்த்து, சுடுநீரில் நீராடுவார்கள். அப்போது கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவார்கள்.

கங்கேச யமுனேச கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மித் ஸந்நிதம் குரு


இந்த மந்திரத்தைச் சொல்லி நீராடியபிறகு, புத்தாடை அணிந்து பூஜையறையில் தீபங்கள் ஏற்றிவைத்து முறைப்படி இறைவழிபாடு செய்து பட்சணங்கள் படைத்து, என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ வரம் வேண்டி வழிபட வேண்டும்.

தீபாவளியை ஒட்டி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வதும் அவசியம். இந்த நாளில் தர்ப்பணம் செய்து பித்ருக்களை வழிபடுவது, நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும்.

நாமும் இந்தத் தீபாவளித் திருநாளில் மேற்காணும் நியதிகளைக் கடைப்பிடித்து வழிபட்டு வரம் பெறுவோம்.

தீபாவளி ஸ்லோகங்கள்

புத்தாடை அணியும்போது...

‘‘தீப தேவி மகா சக்தீ சுபம் பவது மே சதா
ஓம் நமோ நாராயணாய வாசுதேவாய
ஓம் நமசிவாய’’
என்று மூன்று முறை சொல்ல வேண்டும்.


தீபம் ஏற்றும்போது...

‘‘ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ ’’

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி பக்தியுடன் வழிபட வேண்டும்.

- என்.ராஜலக்ஷ்மி, சென்னை-16

சந்தனத்தில் நிலமகள் குங்குமத்தில் கெளரிதேவி!

குபேர பூஜையும் தாம்பூல பூஜையும்!

தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில், தீபாவளியன்று குபேர பூஜை செய்வதை முக்கியமானதாகக் கருதுகின்றனர். அன்று செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது நம்பிக்கை.

மகாராஷ்டிர மாநிலத்தில் தாம்பூலம் போடும் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று நாம் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாலையில் எழுந்து, ‘உடன்’ எனப்படும் நறுமண எண்ணெயைத் தேய்த்து குளிக்கின்றனர்.

தீபங்கள் எதற்கு?

திருமகள், பாற்கடலிலிருந்து தான் தோன்றிய திருநாளிலேயே மகாவிஷ்ணுவை மணந்தாள். அந்த நாளை தீபாவளி என்று வட இந்தியர் கொண்டாடு கின்றனர்.

அவளை அடைய முற்பட்ட அசுரர்களிடமிருந்து தப்பிக்க மகாலட்சுமி தீபத்தில் புகுந்து தீபலட்சுமியானாள். எனவே, தீபாவளியன்று தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள்.

நந்த விஜயன் என்ற அசுரனை, காளி வதைத்த நாளாகக் கருதி, தீபாவளியன்று தீபங்கள் ஏற்றி, வங்காளிகள் கொண்டாடுவர். இறந்து போன முன்னோர்கள் மேல் உலகம் செல்ல வழிகாட்டும் வகையில் தீபாவளியன்று தீபம் ஏற்றுவதாகவும் சொல்வர்.

சந்தனத்தில் நிலமகள் குங்குமத்தில் கெளரிதேவி!
shylendrahoode

எம தீபம் ஏற்றுங்கள்!

தீபாவளி அன்று மாலை வேளையில் வீட்டின் வெளிப்புறம் தீபம் ஏற்றி வைத்தால், எமதர்மனுக்கு திருப்தி ஏற்படும் என்கிறது பவிஷ்யோத்திர புராணம்.

தீபாவளி அன்று எம தீபம் ஏற்றுவதால், அந்தக் குடும்பத்தில் எவருக்கும் அகால மரணம் நேராது, நரக பயம் இல்லை என்றும் அது கூறுகிறது. யமுனையின் சகோதரனான எமதர்மராஜாவை தீப ஒளிகளால் பூஜித்து, நீண்ட ஆயுளைப் பெறலாம்.

- ஆர். பரிமளம், திருச்சி-21