பைரவருக்கு தீப வழிபாடு!
தினமும் சிவாலயங்களில் பைரவர் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடு வதால், நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். ஒருமண்டல காலம் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் சொத்துகள் விரைவில் திரும்ப கிடைக்கும்.

மிளகைச் சிறுதுணியில் மூட்டையாகக் கட்டி அகலில் வைத்து நெய், நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது ‘பைரவ தீபம்’ எனப்படுகிறது. இப்படி ‘பைரவ தீபம் ஏற்றுவதன் மூலம் வறுமை நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது ஐதிகம்.
சகல சுபிட்சங்களும் அள்ளித் தரும் பைரவ வழிபாடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். சிவபெருமான் இந்த உலகில் ஐந்தொழில்களையும் புரியும் வகையில் வக்ரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை என்னும் ஐந்து குணங்கள் கொண்ட தன் அம்சங்களை அவர் பிறப்பித் தார். அத்தகைய சிவாம்ச மூர்த்திகளில் பைரவரும் ஒருவர்.
63 நாயன்மார்களில் சிறுத்தொண்டர், இயற்பகையார், மானக்கஞ்சாறர் முதலிய பல அடியார்கள் பைரவரை வழிபட்டு பேறு பெற்றவர்கள். பைரவரை வழிபட்டால் சத்ரு பயமும் தீவினை பாதிப்புகளும் நீங்கும்; சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்!
பைரவரை வழிபட
உகந்த நேரமும்
நாள்களும்...
பைரவர், கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார். எனவே, இந்தப் புண்ணிய தினம் `காலபைரவ அஷ்டமி’ என்று போற்றப்படுகிறது.
இந்தத் திருநாளில் மட்டுமன்றி மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி, சதுர்த்தி திதி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் வணங்குவது சிறப்பு. இந்த தினங்களில் சிவப்பு வஸ்திரம் சாத்தி, செந்நிற மலர்களைச் சமர்ப்பித்து, செந்நிற பழங்களை நிவேதித்து பைரவரை வழிபட,
நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்; சிந்தனை சிறக்கும்; வாழ்க்கை செழிக்கும்.
திருமணம் யோகம் கைகூட...

பலவிதமான தோஷங்களால் திருமணத் தடை ஏற்பட்டு வருந்தும் அன்பர்கள் பைரவரைச் சரண்புகலாம்.
வெள்ளிக்கிழமை, ராகு கால நேரத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், தடைகள் யாவும் நீங்கி, திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.
குழந்தை பாக்கியம் பெற...
தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்குச் செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வறுமையும் பிணிகளும் நீங்கிட...
வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வறுமை அகலும்; வீட்டில் செல்வம் சேரும்.
ஞாயிற்றுக்கிழமை - ராகுகாலம், தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, பைரவருக்கு மஞ்சள் மற்றும் சந்தன அபிஷேகம் செய்து, எலுமிச்சம்பழ மாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் நோய்கள் மறையும்; யம பயம் நீங்கும்.
சொர்ணாகர்ஷண பைரவர்!

பைரவர் திகம்பரராகத் திகழ்ந்த போதிலும் அன்பர்களுக்குப் பொன் பொருளை அள்ளித் தருபவர். பண்டைய நாள்களில் அரசர்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவரை நிறுவிச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனால், நிதிச் சாலையில் பொன் குவிந்துகொண்டே இருக்கும் என்பது நம்பிக்கையாகும். அவர் பொன்னை இழுத்துத் தருபவர் என்பதால் ‘சுவர்ண ஆகர்ஷ்ண பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இவர் செல்வகடாட்சம் அருள்பவர் ஆதலால், இடது கையில் கபாலத்திற்குப் பதில் அட்சய பாத்திரம் ஏந்தியருள்கிறார். இவரை வேண்டிக் கொள்ள செல்வ வளம் பெருகும்; தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்; தடைகள் நீங்கும். இந்தப் பைரவருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட எலுமிச்சைப் பழம் பூஜையறையில் இருந்தால் வீட்டில் மங்கலம் பெருகும் என்பது நம்பிக்கை.
கஷ்டங்கள் தீர்க்கும் அஷ்ட பைரவர் துதி!
பைரவ மூர்த்தியின் எட்டு திருவடிவங்களை அஷ்ட பைரவர் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். பைரவருக்கு உகந்த தினங்களில் அவரை வழிபடும்போது, கீழ்க்காணும் அஷ்ட பைரவ துதியைச் சொல்லி வழிபடுவதால், எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும்; நம் கஷ்டங்கள் யாவும் நீங்கும்.
துண்டமதி புனைந்து அகல்விண்தோய்
சிகரத்தினில் அமர்ந்த
அண்டர் பிரான் கணத்தலைமை
அசிதாங்கன் கபாலி
சண்டன் ருரு குரோதனன்
சங்காரன் பூஷணன் சீர்
கண்டருளும் உன்மத்தன்
கழற்கமலம் பரவுவாம்
கருத்து: நிமிர்ந்து உயர்ந்திருக்கும் உமாமகேஸ்வரர் ஆலய விமானத்தின் சிகரத்தில் அமர்ந்திருப்பவரும், பிறைச் சந்திரனை அணிந்தவரும், சிவ கணங்களுக்கெல்லாம் தலைமை வகிப்பவரும்... அசிதாங்கன், கபாலி, சண்டன், ருரு, குரோதனர், சங்காரர், பூஷணன், உன்மத்தன் ஆகிய எட்டு வடிவங்களைத் தாங்கி வந்து அன்பர்களுக்கு அருள்புரிபவரும் ஆகிய வடுக மூர்த்தியின் கழல்களைப் போற்றிப் பணிகிறேன்.