ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், ஆதிபராசக்தியை மூன்று வடிவினளாக்கி, ஒவ்வொரு தேவிக்கும் மூன்று நாள்களை வகுப்பது வழக்கம். முதல் மூன்று நாள்கள், துர்கைக்கானவை. துர்கதி என்கிற தவறான பாதையை மாற்றி, சரி செய்விப்பவள் துர்காதேவி!
அடுத்த மூன்று நாள்கள், மகாலட்சுமியின் அருள் தினங்கள். துர்கதி நீங்கிய நம்மை, சத்கதி (நல்ல பாதை)நோக்கி அழைத்துச் செல்பவள் திருமகள். அடுத்த மூன்று நாள்கள், சரஸ்வதியான கலைமகளின் வழிபாட்டு தினங்கள். துர்கதி நீங்கி, நல்ல பாதையை நோக்கிச் செல்லும் நமக்கு மேலான ஞானத்தை அருள்பவள் கலைவாணி!
புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமை தொடங்கி 9 நாள்கள் நவராத்திரி அனுஷ்டிக்கவேண்டும். நவராத்திரிக்கு முதல் நாள் அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றைச் சேகரிக்கவேண்டும்.
அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்யவேண்டும். அன்று ஒருவேளைதான் உணவு. மறுநாள் பிரதமை முதல் பூஜையைத் தொடங்கவேண்டும். பூஜைக்கு உரிய மண்டபத்தின் அளவு, பீடத்தின் அளவு ஆகியவற்றை வியாசர் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
பூஜா மண்டபம் அமைப்பது எப்படி?
பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்கவேண்டும். அதைப் பசுஞ் சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இடவேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்கவேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீள-அகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்கவேண்டும்.
பிரதமை முதல்...
பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக் குத் தயாராகவேண்டும். பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்கு-சக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்குக் கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை- ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும் (படம் வைத்தும் வழிபடலாம்).
அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக் காகக் கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி மஞ்சள் கலந்து (இயன்றால் தங்கம், ரத்தினம் ஆகியவற்றையும் போட்டு), மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் தொடங்க வேண்டும்.
‘`அம்மா... உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப்போகிறேன். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்யவேண்டும்’’ என்று மனதார வேண்டிக்கொண்டு பூஜிக்கவேண்டும்.

பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்களையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
இப்படி, தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். 9 நாள்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ணவேண்டும். தரையில் படுத்துத் தூங்கவேண்டும்
அஷ்டமிக்கு என்ன விசேஷம்?!
ஒன்பது நாள்கள் விரதம் இருக்க இயலாத வர்கள்... சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாள்கள் விரதமிருந்து வழிபடலாம்.
அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் மட்டுமாவது, அம்பாளைப் பூஜித்து வழிபட்டு அருள்பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாளாம். அதனால் இந்த தினம் விசேஷமானது. இந்த அஷ்டமி தினத்தில் அம்பாளைத் தியானித்து வழிபட்டால், நம் கஷ்டங்கள் யாவும் விலகும்.