Published:Updated:

சங்கடங்கள் சூழும்போது சங்கரனை சரண்புகுவோம்... வீட்டிலேயே சனி மகாபிரதோஷ வழிபாடு செய்வது எப்படி?

Lord Shiva
Lord Shiva

ஆலயம் சென்று வழிபடுவதுபோலவே வீட்டில் சிவ வழிபாடு செய்வதும் சிறப்பு வாய்ந்தது. வீட்டில் சிவநாமம் ஒலிப்பதன் மூலம், அதன் நல்லதிர்வுகளால் வீட்டில் நல்ல சூழல் நிலவும். எனவே, இந்தமுறை சனிப் பிரதோஷத்தை வீட்டிலேயே சிவபூஜை செய்து வழிபடலாம்.

வாழ்க்கையில் நம்மைத் துன்பம் சூழும்போதுதான் இறைவனின் கருணையை மனம் நாடும். திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை. ஆபத்துக்காலத்தில் அவனை அழைத்தால் அவன் ஓடிவந்து காப்பான் என்கின்றன சாஸ்திரங்கள். பாற்கடலைக் கடைந்தபோது விஷம் வந்தது. தேவர்களும் அசுரர்களும் அலறி ஓடினர். காரணம் விஷம் நம்மை வீழ்த்திவிடுமோ என்ற பயம். மரண பயம் வந்ததும் அவர்கள் சரணடைந்தது மகாதேவனையே. பரமேஸ்வரனை சிவநாமம் சொல்லி மனமுருகப் பிரார்த்தனை செய்தபோது அவர் ஓடிவந்து அந்த விஷத்தை உண்டு அவர்களைக் காத்தார்.

சிவலிங்கம்
சிவலிங்கம்

காலன் துரத்திக்கொண்டு வந்தபோது மார்க்கண்டேயன் சிவபூஜை செய்து லிங்கத்தைக் கட்டிக்கொண்டான். யமனின் பாசக்கயிறு சிவன்மேல் விழ சிவன் வெகுண்டு யமனை அழித்தார். அதனால்தான் அவருக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்படி பயமும் பிரச்னைகளும் சூழும் நேரம் சிவனைச் சரணடைந்து சங்கடங்கள் தீர்க்கப் பெற்றார்கள் நம் முன்னோர்கள். அதிலும் பிரதோஷ வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து இடர்களையும் களைந்துவிட முடியும் என்று கண்டு அதை ஒரு நியமமாக வகுத்தனர். அதிலும் குறிப்பாக சனிக்கிழமை வரும் சனிப் பிரதோஷத்தின் மகிமைகளை எடுத்துரைத்து அதைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினர்.

வழக்கமாக சனிப்பிரதோஷத்தின்போது நாம் சிவாலய வழிபாடு செய்வோம். ஆனால், இந்தமுறை அதில் சிக்கல் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கையாக யாரும் ஆலயங்களுக்கு வரவேண்டாம் என்று ஆலய நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. ஆலயங்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெறும் என்றாலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிலையில், அனைவரும் வீட்டிலிருந்தே சிவவழிபாடு செய்து சனிப்பிரதோஷத்தின் விசேஷ மகிமையைப் பெறலாம்.

ஆலயம் சென்று வழிபடுவதுபோலவே வீட்டில் சிவ வழிபாடு செய்வதும் சிறப்பு வாய்ந்தது. வீட்டில் சிவநாமம் ஒலிப்பதன் மூலம் அதன் நல்லதிர்வுகளால் வீட்டில் நல்ல சூழல் நிலவும். எனவே, இந்த முறை சனிப் பிரதோஷத்தை வீட்டிலேயே சிவபூஜை செய்து வழிபடலாம்.

பூஜை
பூஜை

சிவபூஜை செய்யத் தேவையான பொருள்கள்

1. ஷணிக லிங்கம். - மஞ்சள் அல்லது சந்தனத்தில் உருவாக்கிக்கொள்ளலாம்.

2. மலர்கள், இலைகள் ஆகியனவற்றைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். மலர்களில் புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், அரளி, பாதிரி, செந்தாமரை ஆகியன சிவ வழிபாட்டுக்கு உகந்த மலர்கள். இவை கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் ரோஜா, மல்லி ஆகிய மலர்களையும் பயன்படுத்தலாம். இலைகளில் வில்வம் விசேஷம்.

3. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். சிவனுக்கு பசும்பால், பசுந்தயிர், பஞ்சாமிருதம் தேன், நெய், சர்க்கரை, இளநீர், கருப்பஞ்சாறு ஆகிய விசேஷமான அபிஷேகங்கள் இவற்றில் எது கிடைக்கிறதோ அதை மிகக் குறைவான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. நைவேத்தியங்கள். - சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், பாயசம் முதலியன நைவேத்தியம் செய்யலாம். எளிமையாக ஒரு பழம் வெற்றிலைபாக்கு வைத்து வழிபட்டாலும் சிறப்பே.

5. தூபம், தீபம் ஆகியன.

பூஜை முறைகள்

முதலில் மஞ்சளில் மஞ்சள் பிள்ளையாரையும் ஷணிக லிங்கமும் செய்துகொள்ள வேண்டும். முதலில் மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அட்சதை மற்றும் மலர்களை எடுத்துக் கைகளில் வைத்துக்கொள்ளவும். பிள்ளையார் ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டு தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்.

பிள்ளையார் ஸ்லோகம்

ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே

கவிம் கவீனா-முபமஸ்ர-வஸ்தமம்ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந

:ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

அல்லது

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

என்ற பாசுரத்தைப் பாடி கையிலிருக்கும் பூ மற்றும் அட்சதையை கணபதியின் மீது போடவும். ஏதேனும் ஒரு பழம், வெற்றிலை நைவேத்தியம் செய்யவும். பின்பு கற்பூரம் காட்டி வணங்கவும். கரம்கூப்பி, ``கணபதியே இந்தப் பிரதோஷ பூஜை எந்தத் தடையும் இன்றி நடக்க அருள்புரிவாய் என்று வணங்க வேண்டும்.” பின்பு மஞ்சள் அல்லது சந்தனத்தால் செய்த சிவலிங்கத்துக்கு பூஜைகள் ஆரம்பிக்க வேண்டும்.

உபசார பூஜை
உபசார பூஜை
பிரசன்னா. கே. எம்

மீண்டும் ஒருமுறை கையில் அட்சதை மற்றும் மலர்களை எடுத்துக்கொண்டு ``சிவபெருமானே, இப்போது நாங்கள் செய்ய இருக்கும் பூஜையில் நீங்கள் மனமகிழ்வீராக. ஈசனே உமது திருவருளால் எங்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அனைத்தும் அபிவிருத்தியாகட்டும். எங்களின் சந்ததி தழைக்கட்டும். எங்களுக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் இல்லாமல் போகட்டும். அனைத்து புருஷார்த்தங்களும் எங்களுக்கு ஸித்திக்கட்டும் என்று சொல்லி, கையிலிருக்கும் மலரையும் அட்சதையையும் லிங்கத்தின் மீது போட்டு, ``சிவனே உம்மை இந்த லிங்கத்தில் ஆவாஹனம் செய்கிறோம்” என்று சொல்லி வணங்க வேண்டும். ஆவாஹனம் செய்ததும் ஏதேனும் ஒரு பழத்தை சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.

அபிஷேகப் பொருள்களை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடுபவராக இருந்தால் அந்த லிங்கத்துக்கே அபிஷேக ஆராதனைகளைச் செய்யலாம். ஷணிக லிங்கமாக இருந்தால் அபிஷேகப் பொருளை லேசாகத் தொட்டு தெளித்தால் போதுமானது. லிங்கத்துக்குப் பக்கத்திலேயே ஒரு சிறு கிண்ணத்தை வைத்துவிடுங்கள். அதிலே அபிஷேக மற்றும் அர்க்கியங்களைச் சமர்ப்பிக்கலாம்.

மனக்கண்ணில் இறைவன் சகல உபசாரங்களையும் ஏற்று நம் பூஜைக்குத் தயாராக இருப்பதை உணர்ந்து சிவார்ச்சனையை ஆரம்பியுங்கள். சிவ அஷ்டோத்திரங்கள் வடமொழியிலும் தமிழிலும் நிறைய கிடைக்கின்றன. அல்லது திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய போற்றித் திருத்தாண்டகத்தைப் பாடி ஒவ்வொரு போற்றிக்கும் ஒரு மலர் சாத்தி வழிபடலாம்.

சிவார்ச்சனைக்கு உகந்த போற்றித் திருத்தாண்டகம் 

மலர்கள் கொண்டு அர்ச்சித்து முடித்ததும் எழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும். தூபம் காட்டி வழிபட வேண்டும். அதன் பின்பு நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி சிவனை ஜோதிரூபமாகவும் தரிசனம் செய்ய வேண்டும். பின்பு நம்மை நாமே நமசிவாய நாமம் சொல்லிக்கொண்டு சுற்றிப் பின்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதன்பின் முடிந்தால் சிவபுராணம் வாசித்து இந்தப் பிரதோஷ பூஜையை நிறைவு செய்யலாம். வீட்டிலேயே சிவபூஜை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி செல்வ வளம் சேரும். குபேரன் சிவபூஜை செய்தே குறையாத செல்வ வளத்தைப் பெற்றான். எனவே, குறையாத வளமும் ஆரோக்கியமும் வேண்டுபவர்கள் தவறாமல் இந்த சனிப்பிரதோஷத்தன்று வழிபாடு செய்து பயன் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு