Published:Updated:

கல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம்! - பள்ளி மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி

சி.வெற்றிவேல்

வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் பள்ளி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி...

கல்வெட்டுப் பயிற்சி
கல்வெட்டுப் பயிற்சி

மிழகத்தின் வரலாற்றை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில், சேலம் மாவட்டப் பள்ளி மாணவிகளுக்கு, சேலம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் இன்று கல்வெட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

கல்வெட்டுப் பயிற்சி
கல்வெட்டுப் பயிற்சி

பாடப்புத்தகத்தில் மட்டும் படிப்பதோடு மட்டுமல்லாமல், கள ஆய்வு செய்தும் அறிந்துகொள்வதன் மூலமே வரலாற்றை நன்கு புரிந்துகொள்ளமுடியும் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில், சேலம் வரலாற்றுமையத்தினர் 300 க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆறகழூர் சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்தனர். இந்தப் பயிற்சியில், கல்வெட்டுகளை வாசித்தல், படி எடுத்தல், சிற்பங்களை ஆய்வுசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாணவிகளுக்கு அளித்தனர்.

இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறும்போது, ``பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சியின் பேரில் இந்தக் கல்வெட்டு பயிற்சியைத் தொடங்கியிருக்கிறோம். மாணவிகள் பயிற்சி மேற்கொண்ட ஆறகழூர் சிவன் கோயில் 900 ஆண்டுகளுக்கு முன் `பொன்பரப்பின வாணகோவரையன்' என்ற மன்னரால் கட்டப்பட்டது. அவர், ஆறகழூரை தலைநகராகக் கொண்டு மகதை நாட்டைச் சோழர்களின் கீழ் சிற்றரசனாக ஆட்சி செய்து வந்தார். இந்தக் கோயிலில் மொத்தம் 37 கல்வெட்டுகள் உள்ளன.

கல்வெட்டு பயிற்சி
கல்வெட்டு பயிற்சி

அவற்றில் மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டே மிகப் பழைமையானது. இங்கு சோழர்கள், வாணகோவரையர்கள், பாண்டியர்கள், ஹெய்சாளர்கள், விசயநகரபேரரசு, நாயக்கர் கால மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் வரும் தேவரடியார் மண்டபம், ஆறைநாயகன் மண்டபம், செல்வன் சிறுதொண்டன் என்பவர் 5,000 பொற்காசுகள் தானமாக கொடுத்த செய்தி ஆகியவற்றைக் கல்வெட்டுகள் மூலம் மாணவிகளுக்கு விளக்கினோம்.

கோயிலில் உள்ள கல்வெட்டுகளை எப்படிப் படி எடுத்து, வாசிக்க வேண்டும் என்பது பற்றியும் பயிற்சி அளித்திருக்கிறோம். இந்தப் பயிற்சி மூலம் மாணவிகளுக்கு வரலாற்றின் மீது ஈடுபாடு அதிகரித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த மாதிரியான வரலாற்றுக் கள ஆய்வுப் பயிற்சி வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

ஆறகழூர்
ஆறகழூர்

வரலாற்றை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு சென்று, நம் புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார்.