Published:Updated:

இயற்கை மரணத்தை விபத்தாக்கி கோடிகளைச் சுருட்டிய மோசடிக் கும்பல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இயற்கை மரணத்தை விபத்தாக்கி கோடிகளைச் சுருட்டிய மோசடிக் கும்பல்!
இயற்கை மரணத்தை விபத்தாக்கி கோடிகளைச் சுருட்டிய மோசடிக் கும்பல்!

வி.கோபாலகிருஷ்ணன், www.askgopal.com

பிரீமியம் ஸ்டோரி

க்... டக்... யாரோ கதவைத் தட்டும் சத்தம். கதவைத் திறந்து பார்த்தார் அந்தப் பெண்.  முன்பின் தெரியாத நான்குபேர் அவரின் வீட்டின் முன்புறம் நின்றுகொண்டிருந்தார்கள். ‘‘உங்கள் கணவருக்கு  கேன்சரினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா?’’ என்று கேட்க, ‘‘ஆமாம்’’ என்கிறார் அந்தப் பெண். ‘‘உங்களுக்கு உதவ வந்திருக்கிறோம். வீட்டுக்குள் உட்கார்ந்து பேசலாமா?’’ என்றவுடன், அவர்களை உள்ளே அழைக்கிறார் அந்தப் பெண். 

இயற்கை மரணத்தை விபத்தாக்கி கோடிகளைச் சுருட்டிய மோசடிக் கும்பல்!

‘‘உங்கள் கணவருக்கு கேன்சர் வந்து இன்னும் சில மாதங்களில் இறக்கப்போகிறார் இல்லையா...’’ என்று வந்திருந்தவர்களில் ஒருவர் கேட்க, அந்தப் பெண் சோகமாகத் தலையசைத்தார். ‘‘அவர் இறந்த பிறகு குடும்பச் செலவுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்’’ என்று வந்திருந்தவர் கேட்க, அந்தப் பெண் அழ ஆரம்பித்திருக்கிறார்.

‘‘கவலைப்படாதீர்கள். நாங்க சொல்ற மாதிரி நீங்க நடந்துகிட்டீங் கன்னா, உங்களுக்கு லட்சம் ரூபாய் தர்றோம். ஆனா, நாங்க சொல்ற இடத்துல கையெழுத்துப் போடணும். எங்களைப் பத்தி யார்கிட்டயும் சொல்லக்கூடாது’’ என்று அடுத்தடுத்துப் பல நிபந்தனைகளை விதிக்க, வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார் அந்தப் பெண்.  நோயாளியின் பெயரில் இன்ஷூரன்ஸ் எடுக்கப்படுகிறது.

அடுத்த சில நாள்களில் கேன்சர் நோயாளி இறக்கிறார்.  அவருடைய குடும்பத்துக்கு சில லட்சம் ரூபாய் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைக்கிறது. அடுத்த சில வாரங்களில் எல்லோரும் இந்த சம்பவத்தை மறந்துபோய், இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். 

ஆனால், அடுத்தடுத்து இதேமாதிரியான சம்பவங்கள் நடக்க, இன்ஷூரன்ஸ் நிறுவனங் களுக்குச் சந்தேகம் வந்து விசாரிக்கத் தொடங்க, அந்த விசாரணையில் தெரியவந்த தகவல்கள் சினிமாவில் நடக்கும் சம்பவங்களைவிட படுபரபரப்பானவை.

என்ன நடந்தது ஹரியானாவில்?

மரணத் தறுவாயில் இருப்பவர்களைப் பயன்படுத்தி, ஒரு மிகப் பெரிய காப்பீட்டு மோசடியை வெற்றிகரமாகச் செய்துவந்திருக்கிறது ஹரியானாவைச் சேர்ந்த மோசடிக் கும்பல் ஒன்று. இவர்கள் எப்படி இத்தனை பேரை ஒருங்கிணைத்து ஒரு பக்கா நெட்வொர்க்கை அமைத்திருக்கிறார்கள் என்பதுதான் எல்லோரையும் வியக்கவைக்கும் விஷயமாக இருக்கிறது.

இயற்கை மரணத்தை விபத்தாக்கி கோடிகளைச் சுருட்டிய மோசடிக் கும்பல்!

ஹரியானாவின் பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள சில நகரங்களில் இருக்கும் மிகப் பெரிய அரசு மருத்துவமனைகள்தான் இந்த மோசடிக் கும்பலின் முதல் டார்கெட். இந்த மருத்துவ மனையில் உள்ள கணினி அலுவலரைக் கையில் போட்டுக்கொண்டு கேன்சர் நோய்வந்து, வாழ்வின் கடைசி நிலையில் இருப்பவர்களின் பட்டியலை மோசடிக் கும்பல் முதலில் பெற்றுவிடும். இறக்கும் தறுவாயில் உள்ளவர்களின் முகவரியை எடுத்துக்கொண்டு அவர்களின் வீடுகளுக்குச் செல்லும்.
 
நெருங்கிய உறவினர்களைத் தொடர்பு கொண்டு, ‘டீல்’ பேசுவார்கள் கும்பலின் முக்கிய உறுப்பினர்கள். இந்த டீலை குடும்ப உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டவுடன், கேன்சர் வந்த நபரின் பெயரில் ஒரு விபத்துக் காப்பீட்டு பாலிசியை எடுத்துத் தருவார்கள். இணையத்திலேயே இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கிவிடுவார்கள் என்பதால், பாலிசிதாரர் எங்கும் அலைய வேண்டியதில்லை. பாலிசிதாரருக்கான பிரிமீயத்தையும் மோசடிக் கும்பலே இணையம் மூலம் செலுத்திவிடும்.

அந்த நபர் இயற்கையாக இறந்தவுடன், விபத்தில் இறந்ததுபோல செயற்கையாக ஒரு நிகழ்வை நடத்துவார்கள். மாடு நடுவில் வந்ததால், கீழே விழுந்து இறந்துவிட்டார் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். மருத்துவமனையில் இறந்தவரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர், அவர் விபத்தில்தான் இறந்தார் என்று சான்றிதழ் தருவார். காவல்துறையும் இந்த ‘விபத்தினை’ ஆராய்ந்து, எஃப்.ஐ.ஆர் போட்டுத் தரும்.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் பாலிசிதாரருக்கு இழப்பீடு வேண்டும் என்று மோசடிக் கும்பல் அனுப்பும்.  இந்த ஆவணங்களை எல்லாம் ஆராய்ந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டைத் தரும். இந்தப் பணத்திலிருந்து சில லட்சம் ரூபாயை இறந்தவரின் குடும்பத்துக்குத் தந்துவிட்டு, மீதமுள்ள பணத்தை அப்படியே அந்த மோசடிக் கும்பல் எடுத்துக்கொள்ளும்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, பல பேருக்கு பல லட்சம் ரூபாய் வாங்கித்தந்து, பெரும் தொகையை ஒரு கும்பல் மோசடி செய்திருப்பதை அண்மையில் ஹரியானா காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது.  
 
மாஸ்டர் நெட்வொர்க்

இந்த மோசடியில் ஆச்சர்யம் தருவது இதன் மாஸ்டர் நெட்வொர்க்தான். மருத்துவமனை கணினி அலுவலர் தொடங்கி, பல்வேறு ஊழியர்கள், காவல் துறையினர், அரசு இயந்திரம் என எல்லாத் தரப்பினருக்கும் லஞ்சம் தந்து, அவர்களிடமிருந்து முக்கியமான தகவல்களையும் ஆவணங்களையும் வாங்கித்தான் இந்த மோசடி கச்சிதமாக நடத்தப்பட்டுள்ளது. 

இயற்கை மரணத்தை விபத்தாக்கி கோடிகளைச் சுருட்டிய மோசடிக் கும்பல்!

காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையைத் தருவதற்குமுன்  இறந்தவர் குறித்து பல விஷயங்களைப் பரிசீலிக்கும். அப்படிப் பரிசீலித்தபோது, சில விபத்து மரணங்கள் மர்மமானதாகவே இருந்துள்ளன. விபத்தில் இறந்து இழப்பீட்டினைப் பெற்ற பாலிசிதாரர்கள் அனைவரும் விவசாயிகளாக இருந்தது முதல் அதிர்ச்சி. இறப்பதற்கு ஓரிரு மாதங்களுக்குமுன்னர்தான் அவர்கள் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தது இரண்டாவது அதிர்ச்சி. பாலிசிதாரர்களின் நாமினிகளுக்கு பான் கார்டும் வங்கிக் கணக்கும் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்தது மூன்றாவது அதிர்ச்சி. எல்லாவற்றுக்கும் மேலாக, விபத்தில் இறந்த  நபர்கள் அனைவருக்கும் ஒரே இன்டர்நெட் ஐ.டிலிருந்து இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கப்பட்டு, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள்மூலம் பணம் கட்டப்பட்டிருந்தது கடைசி அதிர்ச்சி. 

பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸிமூலம் இதையெல்லாம் கண்டுபிடித்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதைக் காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டுபோனது. காரணம், இந்த மோசடிமூலம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இழந்தது பல கோடி ரூபாய். 

இந்த மோசடிக் கும்பலைப்  பிடிக்க ஹரியானா காவல்துறையும் உடனே ஒரு சிறப்புப் படையை உருவாக்கி, இந்தக் கும்பலையும் அதன் மூளையாகச் செயல்பட்டவனையும் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தது. இந்தப் நிகழ்வை இன்ஷூரன்ஸ் துறையினர் இப்போது பரபரப்பாகப் பேசி வருகின்றனர்.

இன்ஷூரன்ஸ் மிக மிக அவசியம்

நம் நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகக் குறைந்த அளவிலேயே ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு போன்ற வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர். போதுமான விழிப்பு உணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.

ஆனால், இன்ஷூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்கள் கால்பதித்தபிறகு ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கடந்த காலத்தில் க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் குறைவாக இருந்தது, இப்போது குறிப்பிடத் தகுந்த அளவில் அதிகரித்திருக்கிறது. மேலும், இழப்பீட்டுத் தொகையும் குறுகிய காலத்திலேயே கிடைப்பது இன்ஷூரன்ஸ்மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சாதகமான வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், பலரும் காப்பீடு எடுக்கத் தொடங்கி யிருப்பதே காப்பீட்டு நிறுவனங்களுக்குப் பாதகமான சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஹரியானா மோசடிக் கும்பலின் செயல்பாடு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குப் பெரும் நஷ்டத்தை உருவாக்கியதுடன், இனி எந்த விபத்து இன்ஷூரன்ஸாக இருந்தாலும் க்ளெய்ம் என்று வந்தால், தீர விசாரித்தபின்பே இழப்பீட்டைத் தரவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு ஒரு கடினமான சூழலை உருவாக்கி விட்டது.

நம் நாட்டில்  வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையால் காப்பீட்டின் தேவை என்பது அத்தியாவசியமானதாக மாறிவருகிறது. சிறிய ஊர்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் படையெடுப்பதால் வாகனப் போக்குவரத்து பன்மடங்காகப் பெருகியுள்ளது. இதன் காரணமாக விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்ற வற்றுக்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், எதிர்பாராத விபத்துகள் காரணமாக குடும்ப உறுப்பினர்களைப் பொருளாதாரக் கஷ்டத்திலிருந்து காக்க எல்லோரும் ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுப்பது அவசியத்திலும் அவசியம்.

இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும்போது, சில விஷயங்களை இனியாவது கட்டாயம் கவனிக்க வேண்டும். ஒன்று, குடும்பத் தலைவர் இல்லாமல் போகும்பட்சத்தில் அவர்மூலம் இதுநாள் வரை கிடைத்துவந்த வருமானம் இனியும் தொடர்ந்து குடும்பத்துக்குக் கிடைக்கிற அளவுக்கு இழப்பீட்டுத் தொகை இருக்கிறமாதிரி இன்ஷூரன்ஸ் கவரேஜை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். பாலிசி எடுக்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் சிறுபொய்யைக்கூடச் சொல்லாமல், நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையான தகவல்களைத் தரவேண்டும்.

இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, நாம் உண்மையாகவும் உஷாராகவும் இருந்தால், நம்மை யாரும் ஏமாற்ற முடியாது என்பதே உண்மை! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு