சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இறையுதிர் காடு - 32

இறையுதிர் காடு
பிரீமியம் ஸ்டோரி
News
இறையுதிர் காடு

அன்று நவபாஷாண தண்டபாணி சிலை குறித்து போகர் விளக்கியதைத் தொடர்ந்து, ஏராளமான கேள்விகளோடு கிழார்களும் சீடர்களும் போகரைப் பார்த்தனர்.

``உங்கள் விழிகளில் நான் பல வினாக்களைப் பார்க்கிறேன். நான் அளித்த விளக்கம் போதுமானதாயில்லை என்பதும் எனக்குத் தெரிகிறது. தாராளமாய் தாங்கள் கேள்விகள் கேட்கலாம்’’ என்று அவரும் ஒரு வினாவிடை வேள்விக்குத் தயாரானார்.

இறையுதிர் காடு - 32

``மிக்க நன்றி பிரானே! என் சந்தேகமெல்லாம் ஒன்றுதான். தாங்கள் அந்த ஆதிசிவனை தியானித்து வணங்கியவர். அம்பிகையின் தண்ணருளுக்கும் ஆளானவர். அப்படிப்பட்ட தாங்கள், ஒரு சிவலிங்கத்தையோ அல்லது அம்பிகை உருவையோ உருவாக்காமல், முருகப்பெருமானை உருவாக்க விழைவதும், அந்த முருகனின் கோலங்களிலும் ஆண்டிக்கோலமான தண்டபாணிக் கோலத்தை வடிவமைப்பதற்கும், தனித்த காரணம் ஏதும் உண்டா?’’ என்று ஒரு சீடன் கேட்டான்.

``இதற்கான பதிலை நான் பலமுறை கூறிவிட்டேன். முருகப்பெருமானுக்குள் சகலமும் அடக்கம்! பிரம்மபுத்திரனான சனத்குமாரனின் மறுபிறப்பு என்னும் வகையில் பிரம்ம சக்தியும், பீஜாட்சரமான `குமரா’ எனும் ஒலியில் ராமநாம சக்தியும், சிவநேத்ர ஜனிப்பு எனும் வகையில் சிவ சக்தியும், தன்னையே வேலாக்கித் தந்த வகையில் சக்தியின் சக்தியும், சகோதர பாவனையில் கணபதியின் சக்தியும், தெய்வானையைக் கரம்பிடித்த வகையில் தேவர்கள் தலைவனான இந்திரனின் சக்தியும், சுடர் மூலம் என்பதால் சூரிய சக்தியும் என்று இந்த ஆறுமுகத்திடம் எல்லா சக்திகளும் அடக்கம்.

அழகின் வடிவான இந்தக் குமரனின் ஞானக்கோலமே தண்டபாணிக்கோலம். மனிதர்களைப் பசுக்களாகக் கருதி மேய்க்கும் கோலமும்கூட! இவன் கைத்தண்டமாகிய கோல், இரு வகை சிறப்பு கொண்டது. இது கையில் இருக்க நிற்கும், கையை விட, கிடக்கும்! எல்லாம் என் செயல் என்பது நிற்பதைக் குறிக்கும். `அதற்கும் காரணம் நீயே!’ என்று சரண் புகுதல் கிடத்தலைக் குறிக்கும். வேலும் கையுமான பெருமானைவிடக் கோலும் கையுமான பெருமானே நம்மைப் பிறப்பெனும் சூழலிலிருந்து விடுவிக்க வல்லவன்’’ - போகர் பிரானின் விளக்கமே கிழார்களில் ஒருவரிடம் ஒரு கேள்விக்கு வித்திட்டது.

``பிரானே, ஞானத்தைத் தரும் உருவமான இந்தத் தண்டபாணி, மனித வாழ்வுக்குத் தேவைப்படும் 64 கலைகளையும், 16 பேறுகளையும் தருவதாகச் சொன்னது சற்று முரணாகத் தெரிகிறதே!’’

இறையுதிர் காடு - 32

``ஆயகலைகளோடும் பேறு பதினாறோடும், பூரணமான ஒருவனே ஞானத்தை எளிதில் அடைய முடியும். அந்த வகையில், அறிவார்ந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடித்து, இறுதியாக ஞானம் பெற்றுப் பிறப்பெனும் சங்கிலியை வெட்டிக்கொள்பவரே சமர்த்தர். அதற்கு இந்தத் தண்டபாணி துணை நிற்பான்.’’

``பிரான் அவர்களே, ஒரு பழத்துக்கான போட்டியில் தோற்றவன்தானே இந்த முருகன்? அதன் காரணமாக ஆத்திரம்கொண்டு ஆண்டிக்கோலம் பூண்டு இப்பொதினி மலை மேல் வந்து நின்றதுதானே தண்டபாணிக்கான பின்புலம். இவனே தோற்ற ஒருவன்... இவன் எப்படி நம்மைத் தேற்றுவான்?’’

``நல்ல கேள்வி. ஆனால், கேட்டவிதம்தான் சரியில்லை! பழத்துக்கான போட்டி என்பதே ஒரு திருவிளையாடல்தான். கணபதியின் செயல்பாடு உள்ளிருந்து உணர்வதைக் குறிக்கும். வெளியே உள்ள அவ்வளவும் சிவசக்திக்குள்ளும், அந்த சிவசக்தி என்னுள்ளும் உண்டு என்பதே உணரப்பட்ட கருத்து. முருகனின் செயல்பாடு புறத்தில் இருந்து உணர்வதைக் குறிக்கும்.’’

``என்றால் ஞானப்பழத்தை சமமாக இருவருக்கும் பங்கிட்டல்லவா தந்திருக்க வேண்டும்? எதற்காக கணபதிக்கு முழுவதையும் வழங்கி, முருகன் கோபித்துக்கொள்ளும்படி சிவனும் சக்தியும் நடந்துகொண்டனர்?’’

``அப்படி நடந்துகொண்டதால் தானே அழகு முருகன் தண்டபாணிக்கோலம் பூண்டான். விண்ணகம் விட்டு மண்ணகம் வந்து இப்பொதினிக் குன்றின் மீதும் நின்றான். ஒரு சர்ச்சை எழுந்தால்தானே விவாதம் உருவாகும். விவாதம் உருவானால்தானே பதிவுகள் உருவாகும்!’’

``அப்படியானால், பொதினியில் தாங்கள் அமைக்கும் ஆலயம், வணங்குபவர்களுக்குள் நீங்கள் சொன்ன பதிவுக்குரிய சிந்தனைகளை ஏற்படுத்துமா?’’

``நிச்சயம் ஏற்படுத்தும்... ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பமும். மேலும், அமைதியான யுத்தமில்லாத உலகமும், அதனுள் அறிவார்ந்த வாழ்வும், அந்த வாழ்வின் முடிவில் தெளிந்த ஞானமும், மேலினும் மேலாய் வணங்குவோர் அவ்வளவு பேருக்கும் ஆரோக்கியத்தையும் இந்தத் தண்டபாணி வழங்குவான்.’’

``உங்கள் தொலைநோக்கு பாராட்டுக்குரியது. ஆயினும் ஒரு சந்தேகம்...’’

``சந்தேகம் தீரும் வரை கேளுங்கள்...’’

``இந்த உலகில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. ஆயினும் அவற்றில் மனிதனே மேலானவனாக, அவனது ஆறாம் அறிவு காரணமாகக் கருதப்படுகிறான். இந்த மனிதனின் வடிவில்தான் சக்தியோ, சிவமோ அல்லது விஷ்ணுவோ, பிரம்மாவோ இருப்பர் என்று எதைவைத்து ஏற்பது?’’

``நல்ல கேள்வி... அவர்களை நேரில் கண்ட ரிஷிகளும் முனிகளுமே எனக்கு இம்மட்டில் கைகொடுக்கின்றனர். நான் அவர்களை நம்புகிறேன்.’’

``தங்களுக்கு இவர்கள் தரிசனம் வாய்க்கவில்லையா?’’

``அந்த மகாசக்தி, மனோன்மணியாக எனக்குக் காட்சி தந்துள்ளாள். முருகப்பெருமானும் என் தியானத்தில் மனதுக்குள் தோன்றி அருளியுள்ளான்.’’

``அப்படியானால் தங்கள் மனதுக்குள் தோன்றிய வடிவில்தான் தண்டபாணிசிலை வடிவம்கொள்ளுமா?’’

``ஆம்... ஐயனே! அன்று நீ நின்ற கோலத்தை எனக்குக் காட்டி அருள் செய் என்று பீஜாட்சர மந்திர ஜபம் செய்த எனக்குள், ஞானச்சுடராய் கௌபீன சுந்தரனாகக் காட்சிதந்தான்... அந்த ரூபம் எனக்குள் அப்படியே உள்ளது. அதை நான் மூலிகை ரசங்களால் வரைந்தும் பார்த்தேன்.’’

``அப்படியா... எங்களுக்கு அந்தச் சித்திர தரிசனம் கிடைக்குமா?’’

``எல்லோருக்குமே கிடைக்கும். எனது தரிசன அனுபவத்தை நான் உலகப் பொதுவாக்க விரும்புகிறேன். கருவூரிலிருந்து வந்திருக்கும் கருமார்கள் இந்த உருவப்படிதான் சிலைக்கான அச்சை உருவாக்கப்போகின்றனர்’’ - போகரின் பதிலால் எல்லோரிடமும் ஒருவகை பரவசம். ஆயினும் அந்தக் கூட்டத்தில் பலரிடம் மேலும் பல கேள்விகள் இருக்கவே செய்தன.

``இன்னும்கூட கேள்விகள் உள்ளனபோல் தெரிகிறதே?’’ என்று போகர் பிரானே வினாவேள்வியைத் தொடர்ந்தார்.

``ஆம் பிரானே!’’

``கேளுங்கள்... கேளுங்கள்...’’

``இந்த முருகனோ அல்லது சிவனோ ஏன் எளிதில் எல்லோரும் பார்க்கக்கூடிய விதத்தில் இல்லை? தவமாய் தவமிருப்பவர்களுக்குக்கூட சுலபத்தில் இவர்கள் அகப்படுவதில்லையே ஏன்?’’

``எளிதில் காண விரும்பினால், உன் தாய் தந்தை வடிவில் பார்; பிறருக்கு உதவும் கருணை உள்ளவர்கள் வடிவில் பார்; தனக்கென வாழாத தாவரங்கள் வடிவில் பார். ஒளிரும் சுடர் வடிவும், பொழியும் மழையும்கூட அவன் வடிவம்தான்!’’

``பிரானே... தவறாகக் கருதாதீர்கள். இவற்றின் வடிவில்தான் அன்றாடம் பார்த்தபடி இருக்கிறோமே... அதன் பிறகு எதற்கு சிவம் என்றும், விஷ்ணு என்றும், சக்தி என்றும் தனி வடிவம்?’’

``நீ என்ன கூற வருகிறாய்... அப்படி ஒரு வடிவம் அவர்களுக்கு எதற்கு என்றா?’’

``இல்லை... மேலான மனித வடிவில் உள்ளவர்களை நான் இப்படித்தான் பார்க்க முடியுமா? அவர்களுக்கான வடிவில் காண முடியாதா என்பதே என் கேள்வி.’’

``கேள்விகளைத் தெளிவாகக் கேளுங்கள். ஏன் எளிதில் எல்லோரும் பார்க்கக்கூடிய விதத்தில் இல்லை என்று கேட்டதாலேயே அவ்வாறு கூறினேன். அவர்களுக்கான மூல வடிவைக் காண வேண்டுமென்றால், கடிதான தவம் வேண்டும். அடுத்து காணும் விருப்பம் சந்தேகத்தின் தளத்தில் இருத்தல் கூடாது. அதாவது பார்த்தால்தான் நம்புவேன் என்னும் அடிப்படையில் கூடாது. உனைக் கண்டு உன்னுள் கலக்கவே இப்பிறப்பு. உன்னால் உருவான நான் உன்னுள் சேரவே இப்பிறப்பு என்னும் ஞானத்தோடு இருக்க வேண்டும்.’’

``பிரான் அவர்களே, கடவுள் என்பவன் இப்படி ஞானம் பெற்றவருக்கே கிடைக்கக்கூடியவனாக இருப்பது எதனால்? உங்களை நாங்கள் எளிதில் காண்பதுபோல் காண முடிந்தவனாக இருக்கக் கூடாதா?’’

இறையுதிர் காடு - 32

``குருவும் கடவுள்தானப்பா. ஆனாலும் நான்தான் கடவுள் என்று நான் என் வாயால் சொல்லும்போது எல்லோரும் அதை ஏற்பீர்களா? இப்படிக் கேட்ட நீங்களே இகழ்வாய் வேறு மாதிரியும் பேசுவீர்களே! `நம்மைப்போல ஒரு சாமான்ய மனிதர் இவர்... பயிற்சிகள் காரணமாகச் சில விசேஷ சக்திகளைப் பெற்றிருக்கிறார். அதற்காக இவர் கடவுள் என்றால் எப்படி?’ என்று சந்தேகப்பட மாட்டீர்களா?’’

``பிரான் அவர்களே, நாங்கள் எப்படிக் கேட்டாலும் ஒரு பதிலைச் சொல்லிவிடுகிறீர்கள். ஆனால், ஏனோ அதனால் மனது முழு நிறைவுகொள்ள மறுக்கிறது. இந்தக் கடவுள் விஷயம் மட்டும் ஏன் இப்படி உண்டு, இல்லை என்னும் இரட்டைத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது?’’

``நல்ல கேள்வி... இருக்கும் ஒன்றே இல்லாமல்போக முடியும். இல்லாத ஒன்றை நாம் எண்ணியே பார்க்க முடியாது. இந்தப் பூமியில் நாம் உள்ள வரை இந்த இரட்டைத்தன்மையை மறுதலிக்கவும் இயலாது.

வெயில் என்றிருந்தால் நிழல் என்று ஒன்றும் இருக்கும். அதேபோல்தான் இனிப்புக்குக் கசப்பும், இன்பத்துக்குத் துன்பமும், இளமைக்கு முதுமையும், ஆணுக்குப் பெண்ணும், பூமிக்கு இரவும் பகலும் என்கிற அமைப்புகள்... ஆனால், இந்த இரட்டைத்தன்மை அவ்வளவும் ஒன்றின் இரு தன்மைகள் என உணர்தலே ஞானம். ருசி எனும் ஒன்றே இனிப்பு கசப்பு... பூமி எனும் ஒன்றே இரவும் பகலும். உடம்பெனும் ஒன்றே இளமை முதுமை. உணர்வெனும் ஒன்றே இன்பமும் துன்பமும் என்று ஒன்றே இரண்டாக உள்ளது. அது இரண்டாக இருந்தாலே அந்த ஒன்றை நாம் உணர முடியும் என்பதே ஞானம். இரண்டும் ஒன்றுதான் என்பதே ஞானத்தின் உச்சம்.’’

``அப்படியானால், கடவுளை நம்பும் ஒருவன், நம்பாத ஒருவன் இருவரும் ஒன்றுதானா?’’

``ஒரு ஞானியின் பார்வையில் இருவரும் ஒருவர்தானப்பா. இருக்கின்ற இடம், பார்க்கின்ற கோணம் இவையும் மாறுபட்ட நம்பிக்கைகள் உருவாகிடக் காரணம். கடுகளவு சிறிய கல்லை வீசி எறிந்துவிட்டால் அது கண்களுக்கே புலனாகாது. அதே சிறு கல் கண்களுக்கு மிகச் சமீபத்தில் இருந்தால் இந்த உலகம் புலனாகாது. சிறு கல் இருக்கும் இடத்தைப் பொறுத்துக் காட்சிகளே மாறிவிடுகின்றன.’’

``என்றால், நல்ல ஞானம் பெற இடம் மற்றும் கோணம்தான் காரணமாக இருக்கின்றனவா?’’

``அதிலென்ன சந்தேகம். இதே பொதினியில் என் அருகே நீங்கள் இருக்கப்போய் ஆத்ம விசாரம் செய்து இறைச் சிந்தனைக்கு ஆட்பட்டு அதற்கான அலசலில் இருக்கிறீர்கள். இந்தப் பொதினியில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அவ்வளவு பேருக்குமா இந்த வாய்ப்பு அமைந்தது? இங்கேயேகூட அடுமனையில் இருப்பவன் சமையல் குறித்த சிந்தனையில்தானே இருக்கிறான்? அதோ, அங்கே விறகு வெட்டும் கொட்டாரச் சேவகன் இன்றைக்குள் இந்த விறகுகளை எப்படியாவது வெட்டி முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தானே இருக்கிறான்... இருக்கவும் முடியும்?’’

``நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அமைவதில்தான் எல்லாம் இருக்கின்றன என்றல்லவா கருதவேண்டியுள்ளது?’’

``அதிலென்ன சந்தேகம்... அமைவதில்தான் எல்லாமே உள்ளன. நீ மரமானால், நின்ற இடத்தில் பூப்பாய்... காய்ப்பாய்... பழுப்பாய்... உதிர்ப்பாய்! செடியானால் சிறிய கால அளவில் இவற்றைச் செய்து மடிவாய் அல்லது மாறுவாய்! விலங்கானால் உணர்வுகளால் மட்டுமே உயிர் வாழ்வாய்! மனிதனாகும்போது மட்டும் இவற்றைப் பகுத்துணரும் அறிவால் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறாய்!

அப்படி மனிதனாகப் பிறக்கும்போதும் எங்கே, எப்படிப் பிறக்கிறாய் என்பதை வைத்தே உன் அறிவு ஒளிகொள்ளும். உன்னைச் சுற்றி எல்லோருமே கற்றறிந்த சான்றோர் எனில் நீயும் நல்ல கல்வியாளனாக ஆவாய். கேடுகெட்ட மாந்தர் எனில், கெட்டழிந்து வீழ்வாய். ஒரு மனிதன் மேலானவன் ஆவதும் கீழானவன் ஆவதும் பெரும்பாலும் சூழலால்தானப்பா!’’

``அப்படியானால் இதில் விதி எங்கிருந்து வருகிறது, அனைத்துக்கும் தலைவிதியே காரணம் என்று ஏன் நொந்துகொள்கிறோம், சூழலைத்தானே குறை சொல்ல வேண்டும்?’’

``நல்ல கேள்வி... ஒருவகையில் உன் வினைப்பாடுகளால் நீதான் மறைமுகமாய் இந்தச் சூழலைத் தேர்வுசெய்கிறாய்?’’

``இது என்ன பதில் போகர்பிரானே... தவறான சூழலை யாராவது தெரிந்து தேர்ந்தெடுப்பாரா?’’

``மறைமுகமாய் என்று நான் கூறியதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் என்னிடம் இப்படிக் கேட்டால் எப்படி?’’

``மன்னிக்கவும்... அந்த மறைமுகமாய் என்பதை, புரியும்படி விளக்கவும்.’’

``அப்படிக் கேள். இந்த உலகில் நீ எதைத் தருகிறாயோ அதையே திரும்பப் பெறுகிறாய். இது ஒரு சுழற்சியப்பா. நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து நல்லவிதமாகவே வாழும்போது நல்வினைத் தொகுப்பு உருவாகிறது. அதுவே நற்சூழல், நற்காலம் என வடிவம் கொள்கிறது. இது அப்படியே தீவினைகளுக்கும் பொருந்தும்.’’

``அப்படியானால், ஒருவன் அரசன் மகனாய்ப் பிறந்து ஏகபோகமாய் வாழ்வதற்கும், ஆண்டி மகனாய்ப் பிறந்து அலைந்து திரிவதற்கும் இந்த முன்வினைப்பாடுகள்தான் காரணமா?’’

``ஆம்... உன் வினைகளே உன்னை வழிநடத்தும் எஜமானன்.’’

``இது ஒரு மாயா வாதம். துளியும் நம்ப முடியாத ஒன்று. ஒரு பிறப்புதான்... ஒரு போக்குதான். அறிவும் தெளிவும் உள்ளவன் உயர்கிறான்... அது இல்லாதவன் தாழ்கிறான் என்பதே உண்மை என்றொரு கருத்து உள்ளதே?’’

இறையுதிர் காடு - 32

``ஆம்... அப்படி ஒரு கருத்தும் உள்ளது. நான் முன்பே கூறியதுபோல் ஒன்றுதான் இருவிதமான கருத்தாய் உள்ளது. அப்படித்தான் இருக்கும். இதில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதைவைத்தே நம் நிலைப்பாடு உள்ளது.’’

``அப்படி ஒரு கருத்துகொண்டவருக்கு உங்கள் பதில்?’’

``அருமைச் சீடர்களே! மனிதனின் ஆறாம் அறிவு எவ்வளவு கூர்மையானதோ அவ்வளவு ஆபத்தானதும்கூட! முன்பே நான் கூறியதைப்போல் `நான்’ எனும் செருக்குடையோர் தன்னம்பிக்கை என்னும் பெயராலும், பகுத்தறிவு என்னும் பெயராலும் இப்படித்தான் கூறுவர். இப்படிப்பட்டவர்கள் அறச்செயல் புரியும்பட்சத்தில் நல்வினையாளர்களுக்கு ஒப்ப வாழ்வர். ஆயினும் பிறவித்தளையிலிருந்து விடுபடுதல் இவர்களுக்குத் துளியும் சாத்தியமில்லை’’ - போகர் மிக அழுத்தமாய்க் கூறிய இந்தக் கருத்து எல்லோரையுமே மிக ஆழகாய் யோசிக்கவைத்தது.

``யோசியுங்கள்... நன்கு யோசியுங்கள்... அதன் விளைவாய் கேள்விகள் விளைந்தால் கேளுங்கள். `கேளப்பா..!’ என்பதே ஒரு சித்தனின் முதல் வார்த்தை. நீங்கள் யோசித்தபடி இருங்கள். நான் உள்ளே சென்று மூலிகை ரசங்களால் வரைந்த தண்டபாணியின் சித்திரச்சீலையை எடுத்து வருகிறேன்’’ என்று போகர் அங்கிருந்து நகர்ந்தார்.

இன்று பண்டாரம் கழுத்து மாலையைப் பற்றிச் சொன்னதை வைத்து அரவிந்தன் சற்றுக் குழம்பினான்.

``நீங்க சொல்றது புரியலை சாமி...’’ என்றான்.

பண்டாரமும் படுத்திருந்த நிலையிலிருந்து எழுந்தார். பிறகு சோம்பல் முறித்தார். அதற்குப் பிறகு ``பட்டணத்தில் இருந்துதானே வரே?’’ என்று கேட்டார்.

``ஆமாம்...’’

``இளநீர் குடிக்கிறியா?’’ - எதிர்பாராத கேள்வி இது.

``குடிக்கிறேன்...’’ என்றான் அரவிந்தனும்.

``ஆமா... நீ யாருடா?’’ - செந்தில் பக்கம் திரும்பிக் கேட்டார்.

``இவர் பத்திரிகை ரிப்போர்ட்டர். பழநியில இருக்கார். எனக்கு உதவிக்காக வந்திருக்கார். வாஸ்தவத்துல உங்களைப் பத்திச் சொன்னதே இவர்தான்.’’

``அப்ப அந்தக் காயலாங்கடைக்காரன் எதுவும் சொல்லலியா?’’ - பண்டாரத்தின் கேள்வி லேசாய் அறைந்த மாதிரியிருந்தது.

``அவர்தான் முதல்ல சொன்னார்... இவருக்கும் உங்களைத் தெரிஞ்சிருந்தது.’’

``ஆமா... நான் இவனைக் கேட்டா, நீயே பதில் சொல்லிக்கிட்டிருக்கே... உன் வாய்ல என்ன கொழுக்கட்டையாடா?’’

``ஐயோ இல்லை சாமி... என் பேர் செந்தில் சாமி’’ என்று முன்வந்தான் செந்தில்.

``செந்திலா, செந்தில் மாணிக்கமா?’’

``செந்தில் மாணிக்கம்தான் சாமி. ஆனா, செந்தில்னுதான் ரெக்கார்டுல எல்லாம் இருக்கு!’’ என்றான் வியப்போடு.

``பேர்தான்டா உன்னைத் திறக்கிற சாவி. ஏன் பாதிச் சாவியா இருக்கே... முழுச்சாவியா இரு. நல்லா வருவே.’’

``சரிங்க சாமி...’’ - பண்டாரம் பேசிக்கொண்டே அண்ணாந்து தென்னைமரங்களைப் பார்த்து ஒரு குறிப்பிட்ட மரத்தின் கீழ் சென்று உயரப் பார்த்து ``மூணு இளநீரைப் போடுறது...’’ என்றார்.

செந்திலோ, இவருக்கு எப்படி தன் முழுப்பெயர் தெரிந்தது என்ற கேள்வியும் வியப்புமாக இருந்தான்.

பண்டாரமோ திரும்பி வந்து ``என்ன கேட்டே... நான் சொல்றது புரியலைன்னுதானே கேட்டே..?’’ என்றார் அரவிந்தனைப் பார்த்து.

``ஆமாம் சாமி...’’

``உன் கழுத்து மாலையில இருக்கிற பவழமும் பாசியும் மொத்தம் எத்தனைன்னு எண்ணிப் பார்’’ என்று உடனேயே ஒரு கட்டளைக் குரலில் சொன்னார்.

`எதற்கு?’ என்ற கேள்வி, அரவிந்தனுக்குள் எழும்பிற்று. இருப்பினும் கட்டுப்படுத்திக்கொண்டு அந்தப் பவழம், பாசிமணிகளை எண்ணினான். மொத்தமாய் 108 இருந்தது.

``நூற்றெட்டு சாமி...’’ என்றான்.

``இந்த நூற்றெட்டைப் பற்றி நீ அடிக்கடி கேள்விப்பட்டிருப்பேயில்லை...’’

``ஆமாம்...’’

``60 வருஷம்கிறது ஒரு சுத்து. அதைக் கடந்து 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள். மொத்தமா கூட்டினா 108. இந்த நூற்றெட்டுங்கிறது, கண்ணுக்குத் தெரியாத காலத்தோட ஒரு அடையாளம். போலீஸ்காரன் தோள்ள அவன் உயரத்துக்குத் தக்குன பட்டையைக் குத்தியிருப்பான். ராணுவத்துல வில்லையெல்லாம் குத்தியிருப்பாங்க. பார்த்தாலே அவங்க யாருன்னு தெரிஞ்சுடும். இந்தப் பாசிமணி மாலையும் சித்தனுங்களுக்கு அப்படி ஒரு அடையாளம்... புரியுதா?’’

``புரியுது சாமி...’’

``என்ன புரியுதோ... இது ஏன் உன் கழுத்துக்கு வந்துச்சின்னு தெரியுமா?’’

``தெரியலை.’’

``எல்லாம் ஒரு கணக்கு... விட்ட குறை, தொட்ட குறை...’’

``அப்படின்னா?’’

``அப்படின்னாவா?’’ - அவர் கேட்கும்போதே மூன்று இளநீர்க்காய்கள் தென்னை மரத்திலிருந்து உதிர்ந்து சொத் சொத்தென விழுந்தன. அதைப் பார்த்தவண்ணம் ``எலேய் சென்ராயா...’’ என்று பலமான ஒரு குரல் எடுத்தார் பண்டாரம்.

``வந்துட்டேன் சாமீ...’’ என்று முன்பு வந்த அந்தத் தோட்டக்காரன் திரும்ப வந்தான்.

``அந்த இளநியை வெட்டிக் கொடு. அப்புறம் நான் என்ன சொன்னேன்... விட்ட குறை, தொட்ட குறைன்னுதானே?’’

``ஆமாம்...’’

``உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் விட்ட குறை தொட்ட குறை இருக்கு. போன ஜென்மத்துத் தொடர்ச்சி இது.’’

``எந்தப் பொண்ணுக்கும் சாமி?’’

``இப்ப நீ பொட்டிய பார்த்துட்டு அதை எப்படித் திறக்கணும்னு தெரிஞ்சிக்கத்தானே வந்திருக்கே?’’

``அ... ஆமாம் சாமி.’’

``பொட்டி யார் வீட்ல இருக்கு, அந்தப் பொண்ணு வீட்லதானே?’’

``ஆமாம் சாமி...’’

``அப்ப அந்தப் பொண்ணுதான். எந்தப் பொண்ணுன்னு கேட்கிறே?’’ - அரவிந்தனுக்கு பிடரி சிலிர்த்தது.

`தென்னைமரத்திலிருந்து காய்கள் தானாக விழுகின்றன. செந்திலின் முழுப்பெயரை அவன் சொல்லாமலேயே சொல்கிறார். பாரதி, பங்களா, பெட்டி பற்றியும்கூட ஒரு வார்த்தை சொல்ல வில்லை... எல்லாம் போகிறபோக்கில் வருகிறது. மனிதரிடம், அலட்டல் இல்லை... ஆர்ப்பாட்டமில்லை... இதுதான் சித்தன் போக்கா?’ - அரவிந்தன் சிலிர்ப்போடு அவரையே வெறித்தான். நடுவில், வெட்டப்பட்ட இளநீர் வந்தது.

``குடி... தண்ணியில இந்தத் தண்ணி ஏறுன தண்ணி. உழுவற மழைத் தண்ணிய `கழனி’ம்போம். மரத்துல ஏறுன தண்ணிய `எளனி’ம்போம். உழுவற தண்ணியைவிட ஏறுன இது விசேஷமானது. இத்தால தண்டபாணிய நனைச்சு அந்தத் தண்ணிய ஒரு செம்பு குடிச்சா, கணச்சூடு அடங்கி மூத்திரப்பை சுத்தமாகும். உப்பு கட்டியிருந்தா கரைஞ்சு ஓடியே போயிடும்’’ - பண்டாரம் பேச்சு புரிவதுபோலவும் இருந்தது... புரியாததுபோலவும் இருந்தது. இளநீரை ஏறுன தண்ணி என்று கொச்சையாய்ச் சொன்னதில் அபார சிறப்பும் தெரிந்தது. மழைநீர், மேலிருந்துதான் விழும். தண்ணீரே... விழுவது, ஓடுவது, தேங்குவது என்று மூன்றுமானதுதான். அந்தத் தண்ணீர் ஒரு மரத்தண்டின் வழியாக மேலேறி ஒரு குடுவைக்குள் அடைந்தால் அது இளநீர்!’’

`இதனால் தண்டபாணியை நனைச்சு என்றால், அபிஷேகம் செய்வது என்று பொருளா? அந்த அபிஷேக இளநீர் சிறுநீரகத்தையே சுத்தம் செய்யுமா?’ - மனதில் மூண்ட கேள்வியோடு பார்த்தான். பிரமிப்பு உருவானதில் புத்திக்குள் புகைச்சல். எந்தக் கேள்வியை எப்படிக் கேட்பது என்பதில் குழப்பம்.

``குடி... அப்புறம் திருதிருன்னு முழிக்கலாம்’’ - செல்லமாக அதட்டினார் பண்டாரம். அவனும் குடித்தான். கற்கண்டு கலந்தது மாதிரி தித்தித்தது. வாழ்நாளில் அதுவரை உணர்ந்திராத ருசி. ஒரு மரம் தானாய் இளநீரைத் தந்தது மட்டும் என்ன? யாரும் கண்டிராத காட்சி.

செந்திலும் மாய்ந்து மாய்ந்து குடித்தான். பிரமித்தான். முன்சட்டை மேலெல்லாம் நனைச்சல்!

``மெல்லக் குடி... தெம்பா இருக்கும்! ஆமா... இட்லிக் கடைக்காரன் ரொம்ப அலட்டிக்கிட்டானோ?’’ - இந்தக் கேள்வி இடியாய் இடித்தது.

`யார் இவர், இவருக்கு எப்படி எல்லாம் தெரிகின்றன? மேலே சட்டைகூட இல்லை. இடுப்பிலும் பழுப்பேறிய வேட்டிதான். ஆனால் அசாத்திய தெளிவு... திடம்.’

``சாமி...’’

``சொல்லு..’’

``இந்த மாலையைப் பற்றி ஏதோ சொல்ல வந்து, பேச்சு மாறிப்போச்சு.’’

இறையுதிர் காடு - 32

``அட ஆமால்ல... இது ஒரு சித்தன் கழுத்து மாலை! அவன் இப்ப அதோ அந்த மலைக் குகையில அடக்கமாயிட்டான். அடங்குறதுக்கு முந்தி, தன் கழுத்துல போட்டிருந்ததைக் கழட்டி போகன் சமாதியில வெச்சான். அதுதான் இப்ப உன் கழுத்துக்கு வந்திருக்கு. கிட்டத்தட்ட நீயும் இப்ப சித்தன்தான். இதோடு நீ போய் பாம்பைப் புடிக்கலாம், தேளோடு விளையாடலாம், சிங்கம் புலிகிட்டகூட சிநேகமாயிடலாம். இதுக்கு அம்புட்டு சக்தி! ஒரு கரன்ட், வட்டமா உன் கழுத்தைச் சுற்றி இப்ப ஓடிக்கிட்டே இருக்கு. அதை, உப்பு காரத்துக்கு நாக்கு செத்த உங்க கண்ணால பார்க்க முடியாது. அதையெல்லாம் ஒதுக்கி காத்தோடு விளையாடுற சித்தனுங்க பார்த்தா, அவங்க கண்ணுக்குத் தெரியும். அப்புறம் இந்தக் காக்கா, குருவி இதுக்கெல்லாமும் தெரியும்.’’

``எல்லாமே ஆச்சர்யமா இருக்கு. இது எதுக்கு என் கழுத்துல சாமி?’’

``தானாதானே தேடி வந்துச்சு?’’

``ஆமாம் சாமி.’’

``அப்ப போகப் போக தானாவே எல்லாம் புரியும். போ... உனக்கு நிறைய வேலை இருக்கு. கதை எழுதிப் புளுகினதெல்லாம் போதும். புளுகுன்னு உலகம் சொல்ற மெய்ய எல்லாம் நீ பார்க்கப்போறே... யோகக்காரன்டா நீ?’’

``நான் யோகக்காரனா? ஒரு பக்கம் படுத்த படுக்கையா சாகக் கிடக்கிற எம்.பி. இன்னொரு பக்கம் திறக்க முடியாத பொட்டி. அதையே சுற்றி வர்ற பாம்பு. வெளியே சொன்னா, என்னைத் தெருவுல மோடிவித்தை காட்டுற மந்திரவாதியைப் பார்க்கிற மாதிரிதான் பார்ப்பாங்க.’’

``பொட்டி விஷயம் ஒண்ணும் பெரிய விஷயமில்லை. அதோட பேர்தான் சாவி. என்ன... திருப்புளி சங்கரம்னு போட்டிருக்கா?’’

``ஆமாம் சாமி.’’

``நல்லா கேட்டுக்கோ... சங்கரம்கிறது பேர் கிடையாது. அது நாள் நட்சத்திரத்தோட குறிப்பு.’’

``புரியுற மாதிரி சொல்லுங்க சாமி.’’

`` `கடபயாதி’ன்னு ஒரு வடகணக்குப் பாடம் இருக்கு. அதுல நம்பருங்களை எழுத்தால குறிப்பாங்க. அந்த வகையில இத்தனாம் தேதி இந்த நட்சத்திரத்துல இந்தத் திதியில பொறந்தவன் இவன்கிறதுதான் சங்கரன்கிற பேரோட அர்த்தம். ச-வன்னாவுக்கு ஒரு எண், ங்-குக்கு ஒரு எண், க-வுக்கு ஒரு எண்... இப்படி எல்லாமே பிறந்த தேதி, நட்சத்திரத் திதியைக் குறிக்கும். நீ அந்தக் கடபயாதி புத்தகத்தை வாங்கிப் பாரு... எல்லாம் தெளிவாயிடும்.’’

``அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?’’

``பொட்டி கிடைச்ச இடத்துலயே அதுவும் கிடைக்கும்.’’

``பழைய புத்தகக் கடையிலயா?’’

``ஓ... அது பழைய புத்தகக் கடையா?’’ - பண்டாரம் தெரியாத மாதிரி கேட்டதுதான் விந்தை! அரவிந்தன் விழித்தான்.

``ஒருவேளை கிடைக்கலைன்னா?’’

``எலேய்... நீ எது நினைச்சாலும் இனி நடக்கும்டா. நடக்கணும்னு நினைச்சாலும் அது நடக்கும் - நடக்கக் கூடாதுன்னு நினைச்சா அதுவும் நடக்கும். பாத்துடா... தப்பா எதையும் நினைச்சுடாதே. மனோசக்திக்கு இனி நீதான் உதாரணம்.’’

``சாமி, புத்தகத்தைத் தேடிப் பிடிச்சுத் திறக்கல்லாம் நேரமில்லை. நீங்க வந்து கொஞ்சம் திறந்து கொடுக்க முடியுமா?’’

``அவசியமில்ல... நீயே திறப்பே, நீதான் திறக்கணும். போ... இனி ஒரே ரகளைதான்!’’ - சொல்லிவிட்டு மீண்டும் போய், கட்டிலில் படுத்துக்கொண்டார் அந்தப் பண்டாரம். அரவிந்தனும் அரைமனதாய்ப் புறப்பட்டான்.

``தைரியமா போ எழுத்தாளா... இனி ஒரே ரகளைதான்!’’ - படுத்துவிட்ட நிலையில் திரும்ப ஒரு தூண்டல் - அதில் கொஞ்சம் எகத்தாளம்.

சாந்தப்ரகாஷும் சாருபாலாவும், மரச்சாமான் அவ்வளவையும் ஏலம் எடுத்திருந்த சுகாடியா சேட் எதிரில் நின்றிருந்தனர்.

``அச்சா சாப்... எல்லா சாமானும் குடோன்லதான் இருக்குது. ஆனா, அங்க நீங்க சொல்ற மாதிரி பெட்டியெல்லாம் எதுவும் இல்லியே!’’ என்றார் சேட்.

இருவர் முகங்களிலும் அதிர்ச்சி.

- தொடரும்