Published:Updated:

`அத்தி வரதருக்காக 48 நாள்கள் சிறப்பு ரயில்!' - நொடியில் சாத்தியப்படுத்திய நிர்மலா சீதாராமன்

கலிலுல்லா.ச
சத்யா கோபாலன்

அத்திவரதர் பெருவிழாவைக்கண்டு களிக்கும் வகையில் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது தென்னக ரயில்வே.

அத்திவரதர்
அத்திவரதர்

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் எண்ணற்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்தி வரதர் பெரு விழா. கடந்த ஜூலை 1-ம் தேதி தீர்த்த குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்தி வரதர் அன்று முதல் 48 நாள்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார். கடந்த மூன்று நாள்களில் மட்டும் நான்கு லட்சம் பக்தர்கள் வரை அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் பக்தர்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு சில சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது தென்னக ரயில்வே. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ.க செயலாளர் கே.டி ராகவன், “ நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு, டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலுள்ள நிதியமைச்சர் அலுவலகத்தில் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்தேன். காஞ்சி நகரில் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு 48 நாள்கள் காஞ்சிபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் விட உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.

அமைச்சரும் தரிசனம் செய்ய வர வேண்டுமென கேட்டுக்கொண்டேன். தான் தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வரவுள்ளேன் என்று சொன்ன நிதியமைச்சர், தன்னுடைய செயலாளரை அழைத்து ரயில்வே அமைச்சர் எங்கு இருக்கின்றார் எனக் கண்டறிய உத்தரவிட்டார். அமைச்சர் சதானந்த கௌடா அலுவலகத்தில் பியூஷ் கோயல் உள்ளதாக தன்னுடைய செயலாளர் சொன்னதையடுத்து, வாங்க ராகவன் நேரே அவரை பார்ப்போம் என அழைத்துச் சென்றார். அத்திவரதர் வைபவத்தை மிகச்சிறப்பாக அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் சதானந்த கௌடா விடம் எடுத்துரைத்து, எங்களுடைய கோரிக்கையான சிறப்பு ரயில்களை காஞ்சிபுரத்திற்கு இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட கோரினார்.

கே.டி.ராகவன்
கே.டி.ராகவன்

பியூஷ் கோயல் உடனடியாக அதை ஏற்று, தன்னுடைய ரயில்வே துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று டெல்லியிலிருந்து சென்னை வருவதற்குள் ரயில்வே அதிகாரிகள் காஞ்சிபுரத்திற்கு வந்து பார்வையிட்டு சென்று தகவல்களை சொன்னார்கள். இன்று சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ள அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். அதன்படி முதல் சிறப்பு ரயில் நாளை காலை 4:25 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு காலை 6 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். இரண்டாவது சிறப்பு ரயில் காலை 4:25 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு காலை 7:15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். செங்கல்பட்டியிலிருந்து காலை 10 மணி, மதியம் 12 மணி, 3:10 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் காஞ்சிபுரத்திலிருந்து காலை 7:30 மணி முதல் இரவு 8 மணி வரை 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. எத்தனை நாள்களுக்கு இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்பது போன்ற எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால், இந்தச் சிறப்பு ரயில்கள், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.