Published:Updated:

சோர்வு நீங்கி புத்துணர்வு பெறப்போகும் கடக ராசிக்காரர்களுக்கான 2021 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

கடகம் புத்தாண்டு ராசிபலன்கள்
கடகம் புத்தாண்டு ராசிபலன்கள்

இதுவரை எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

சந்திரனை ராசி அதிபதியாகப் பெற்ற கடகராசி அன்பர்களே, வெற்றி உறுதியாகும் கடைசி நிமிடம்வரை அதற்காக உழைக்கும் பண்பை உடையவர்கள் நீங்கதான். உங்களின் ராசிக்கு 5 - ம் வீட்டில் சுக்கிரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை அதிகரிக்கும். இதுவரை எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் பேச்சுக்குக் குடும்பத்தில் முக்கியத்துவம் தருவார்கள். வாழ்க்கைத் துணை வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்திலிருந்த பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். உங்கள் ராசிக்குள்ளேயே இந்த ஆண்டு பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள்.

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. அவ்வப்போது சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள்.

ராகு
ராகு

ராகு - கேது

இந்த ஆண்டு முழுக்க கேது உங்கள் ராசிக்கு 5 - ம் வீட்டில் நிற்பதால் குடும்பத்தினர் தொடர்பான வருத்தங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் விட்டுப்பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீக சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள்.

தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சித்துப் பேசிக்கொண்டிருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். ஆனால் ராகு உங்கள் ராசிக்கு 11 - ம் வீட்டில் அமர்வதால் பழைய சிக்கல்களைத் தீர்வு கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சகோதர உறவுகளிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.

குரு பகவான் சஞ்சார பலன்கள்

இந்த ஆண்டு 5.4.2021 வரை உங்கள் ராசிக்கு 7 - ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்களைப் பேசி தீர்ப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தள்ளிப்போன கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மூத்த சகோதரிக்குக் கல்யாணம் நடக்கும்.

6.4.2021 முதல் 14.9.2021 வரை குருபகவான் 8 - ம் வீட்டில் சென்று மறைவதால் கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. திடீர் செலவுகள் வந்துப் போகும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளைச் செய்ய வேண்டியது வரும். குடும்பத்தில் அநாவசியப்பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களும், அலைச்சல்களும் வந்து போகும்.

சனி பகவான்
சனி பகவான்

கண்டக சனி

ராசிக்கு 7 - ம் வீட்டில் சனிபகவான் நிற்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டைத் தவிர்க்கப் பாருங்கள். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சில காரியங்கள் இழுபறியாகி முடியும். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெளிவட்டாரத்தில் உஷாராகப் பழகுங்கள். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைத் தரம் பிரித்துப் பார்க்க முடியாமல் தடுமாறுவீர்கள்.

5.1.2021 முதல் 29.1.2021 வரை மற்றும் 31.10.2021 முதல் 10.12.2021 வரை சுக்கிரன் 6 - ல் மறைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். உறவினருடன் மனக்கசப்பு வரும் என்பதால் விட்டுக்கொடுத்துப் போகவும்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்

வியாபாரிகளே!

விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வேலையாள்களின் தொந்தரவு குறையும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். தொல்லை கொடுத்த வேலையாள்கள் மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.

2021
2021

உத்தியோகஸ்தர்களே!

இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சிலநேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் வரும்.

இந்த வருடத்தின் இறுதிப் பகுதி சற்றே இடையூறாக இருந்தாலும் மையப்பகுதி மத்திபமாகவும், முற்பகுதி முன்னேற்றம் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:

திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்கீழ்வேளூர் எனும் கீவலூரில் வீற்றிருக்கும் அருள்மிகு அட்சயலிங்கேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று தரிசியுங்கள். விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள். ஆசைகள் நிறைவேறும்.

அடுத்த கட்டுரைக்கு