தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி, பூம்புகாரில் இருந்து புறப்பட்டு தனது கணவன் கோவலனை இழந்து, மதுரையை எரித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றிப் பாறையில் இருந்து விண்ணுலகம் சென்றார் என இளங்கோவடிகள் எழுதியுள்ளார்.
இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்காப்பியத்திற்கு சான்றாக விளங்கக்கூடியது, அதே நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோட்டம் தான். அத்தகையை சிறப்புமிக்க கண்ணகி கோட்டம், தேனி மாவட்டம், கூடலூர் அருகே விண்ணேற்றிப் பாறையில் அமைந்துள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த ஆய்வாளர் கோவிந்தராஜனால், 1963-இல் கண்டெடுக்கப்பட்ட கண்ணகி கோட்டத்தில், நுழைவு வாயில் பகுதி உள்பட மூன்று கல்கட்டடங்களும் ஒரு சுனையும், சுற்றுச்சுவர் பகுதியும் இருந்தன. இதில் நடுப்பகுதியில் தான் கண்ணகி சிலை இருந்துள்ளது.
இரண்டு பேர் தூக்கிச்செல்லும் அளவுக்கான அந்தச் சிலையை ஆய்வுக்கு உட்படுத்தி அந்தச் சிலை இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளதைப் போல, இமயமலையில் இருந்து எடுத்து வரப்பட்ட கல்லால் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது தலைப்பகுதி, இடைப்பகுதியின்றி இடுப்புக்கு கீழ் இடது காலை மடக்கியும், வலது காலை நீட்டியும் இருப்பது போன்ற பகுதி மட்டுமே உள்ளது.
அந்தச் சிலையின் மீதப்பகுதியை அம்மனாக வடித்து, ஆண்டுதோறும் தமிழக மக்கள் சித்ரா பெளர்ணமி முழுநிலவு திருவிழா வழிபட்டு வருகின்றனர். தொடக்கக் காலத்தில் கம்பம், கூடலூர் பகுதி மக்கள் பொங்கல் வைத்து, கிடாவெட்டி, மொட்டை போட்டு வழிபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் ஒரு வாரம் நடத்தப்பட்டு வந்த சித்ரா பெளர்ணமி முழுநிலவு திருவிழா 1986-க்கு பிறகு ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம், கூடலூர் பளியன்குடியில் இருந்து 6 கிலோ மீட்டர் நடந்து சென்றால், கண்ணகி கோட்டத்தை அடைந்துவிடலாம். ஆனால் இந்தச் சாலையில் பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. குமுளியில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் பயணித்தும், நடைபயணமாகவும் கண்ணகி கோட்டம் செல்ல முடியும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் கேரளாவின் குமுளியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வனப் பாதை வழியாக நடந்தும், ஜீப் மூலமாகவும், சென்று வருகின்றனர்.
அதேபோல் கூடலூர் அருகே பளியங்குடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்தும் கண்ணகி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர். இந்த விழாவுக்கு தேனி மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழாவுக்கு கேரள அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான வேலையைத் தொடங்கியுள்ளது. அதேபோல மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக- கேரள எல்லை அளவீடு பிரச்னை முடித்து பளியங்குடி பாதையை அமைத்து எவ்வித இடையூறும் இன்றி திருவிழா கொண்டாட ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.