Published:Updated:

லட்சுமிகடாட்சம்! - 6

லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
லக்ஷ்மி சிவச்சந்திரன்

ஆன்மிகம்... அனுபவம்! லக்ஷ்மி சிவச்சந்திரன்

லட்சுமிகடாட்சம்! - 6

ஆன்மிகம்... அனுபவம்! லக்ஷ்மி சிவச்சந்திரன்

Published:Updated:
லக்ஷ்மி சிவச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
லக்ஷ்மி சிவச்சந்திரன்

சுத்தம் இருக்கும் இடம் லட்சுமி கடாட்சம்! குமுளி கோயிலின் சுத்தம் என்னை ஈர்த்து என் மனதில் தங்கியது போலவே, கோவையில் இன்னொரு நபரின் இல்லத்தில் நான் கண்ட அசுத்தம் என்னை மிகவும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

லட்சுமிகடாட்சம்! - 6

ன்னுடைய தீவிர ரசிகை அவர். ஷூட்டிங்குக்காக எப்போது நான் கோவை சென்றாலும் என்னை வந்து பார்த்துவிடுவார். ஷூட்டிங் முடிந்து கிளம்பும் முன், அவருடைய வீட்டுக்குப் போய்விட்டுத்தான் அடுத்த ஃப்ளைட்டைப் பிடிப்பேன்.

ஏனெனில், அந்த ரசிகை, அவருடைய கணவர், மகள் என எல்லோரும்... எப்போது நான் கோவைக்குச் சென்றாலும் நேரில் வந்து என்னை ‘வீட்டுக்கு வாங்க... வாங்க...’ என்று மிகவும் அன்புடனும் உரிமையுடனும் அழைப்பது வழக்கம்.

“வந்து ஒரு காபியாவது சாப்பிட்டுட்டுப் போங்க..” என்று உரிமையோடு கேட்டுக்கொள்வார்கள்.

ஒருவேளை, கோவையில் இறங்காமல் அதைக் கடந்து கேரளாவுக்கு ரயிலில் செல்கிறேன் என்றால், அந்தக் காலை வேளையில் ஸ்டேஷனுக்கு வந்து காத்திருப்பார்கள். இவர்கள் நிற்பார்களே என்று நான் கோவை ஸ்டேஷன் வரும் முன்னரே எழுந்து, பல்லைத் துலக்கி, முகம் கழுவி, தலை திருத்தித் தயாராவேன்.

மிக அழகாகப் புடவை கட்டி, படு ஃப்ரெஷ்ஷாக நிற்பார் அவர். அந்த விடியற்காலை நேரத்திலேயே அவ்வளவு அலங்காரத்துடன் வந்து நிற்பார். நெக்லஸ் வேறு! அவர் மகளும் முழு மேக்கப்பில் இருப்பார்.

அம்மா, மகள், மகன், அந்தப் பெண்மணியின் தங்கை என்று குடும்பமே வந்திருப்பார்கள். ‘அடேங்கப்பா... இவ்வளவு காலையில் இப்படி லட்சணமா என்னைப் பார்க்கக் கிளம்பி வந்து நிக்கிறாங்களே... காலையில் எத்தனை மணிக்கு எழுந்து ரெடியாகியிருப்பாங்க!’ என்று நினைத்துக்கொள்வேன். ஏனெனில், அவர்கள் வீடு ஸ்டேஷனில் இருந்து தூரம்.

‘எவ்வளவு மங்கலகரமாக இருக்காங்க. காலங்கார்த்தால இவங்களைப் பார்த்துட்டுப் போனாலே போதும். எல்லாமே நல்லாயிருக்கும்!’ என்றும் எனக்குள் தோன்றும். எப்போதும் அவர்கள் வீட்டுக்குப் போனால், முன் வரவேற்பறையுடன் திரும்பிவிடுவேன்.

ஒருமுறை கோவையிலிருந்து கிளம்பும் ஃப்ளைட் தாமதமாகப் புறப்படும் என்று தகவல் வந்தது. ‘சரி.. அதுவரை இவர்கள் வீட்டில் இருந்துவிட்டுக் கிளம்பலாம்’ என்று முடிவு செய்து, அவரிடம் விஷயத்தைக் கூறினேன்.

“அய்யோ... தாராளமா இருங்கம்மா... உங்களுக்கு என்ன வேணுமோ நான் சமைச்சுத் தர்றேன். சாப்பிட்டுட்டுப் போங்க” என்று மிகவும் சந்தோஷமாகச் சொன்னார்.

“ரொம்பவெல்லாம் நீங்க சிரமப்பட வேணாம். நான் லைட்டா ஏதாவது சாப்பிட்டுக்கிறேன்” என்றேன்.

லட்சுமிகடாட்சம்! - 6

வீட்டுக்குப் போய், வழக்கம் போல வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சாப்பிட அழைத்தார்கள். அன்றுதான் அவர்கள் வீட்டுக்கு உள்புறம் நான் முதல்முறையாகச் சென்றது. டைனிங் டேபிள் முன் அமர்ந்தோம். என் எதிரே என் உதவியாளரும் ஹேர் டிரெஸ்ஸரும் உட்கார்ந்திருந்தனர்.

அன்று சனிக்கிழமை. சனிக்கிழமைகளில் உப்பு இல்லாமல் சாப்பிடுவதாக, உப்பிலியப்பன் கோயிலில் நேர்ந்துகொண்டிருக்கிறேன். யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் சனிக்கிழமை அல்லது திருவோண நட்சத்திரத்தன்று உப்பில்லா விரதம் இருந்தால் நல்லது என்று அந்தக் கோயிலில் பட்டர் சொன்னார்.

அந்த நேரத்தில் எனக்கு மிக வேண்டிய ஒருவருக்கு முக்கியமான அறுவை சிகிச்சை நடக்கவிருந்தது. அது முடிந்து அவர் பூரண குணம் பெறும் வரை சனிக்கிழமை மட்டும் உப்பு இல்லாமல் சாப்பிடுவதாக வேண்டிக்கொண்டிருந்தேன்.

எனவே, எனக்கு மோர் சாதம் அல்லது தயிர் சாதம் போதும் என்று சொல்லியிருந்தேன். மற்றவர்களுக்குப் பல கறிகாய்களுடன் சமைத்திருந்தனர். என் ஹேர் டிரெஸ்ஸருக்குக் கத்தரிக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். கத்தரிக்காய் கறியிலிருந்து, ஒரு காயை எடுத்துப் பிரித்த அந்தப் பெண் என்னை ஒரு பார்வை பார்த்தாள்.

“என்னம்மா?” என்றேன்.

“ஒண்ணுமில்லம்மா!” என்று தலையாட்டிவிட்டு, கத்தரிக்காயை இலையில் ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டாள்.

அவள், `ஏதோ சாப்பிட்டேன்’ என்று பேர் பண்ணியது நன்கு தெரிந்தது. பிறகு அங்கிருந்து கிளம்பி ஏர்போர்ட் வந்து ஃப்ளைட்டில் ஏறிய பிறகு, தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

“அம்மா.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அடுத்த தடவை இவங்க வீட்டுக்கு வந்தால், அங்கே சாப்பிட வேணாம்மா.”

“ஏம்மா அப்படிச் சொல்ற?”

“இல்லம்மா... அவங்க அலங்காரங்கள் எல்லாம் ரொம்ப பிரமாதமாதான் இருக்கு. ஆனா நீங்க சமையல் அறைக்குள்ளேயும் பார்க்கல. இன்னிக்குக் கத்தரிக்காயையும் பார்க்கல” என்றாள்.

அவள் கத்தரிக்காயைப் பிரித்தபோது, உள்ளே புழுவோடு சமைத்திருந்ததைப் பார்த்திருக்கிறாள்.

டச்சப் உதவியாளர் அம்மாவும் சொன்னார்கள்...

“ஆமாம்மா. சமையலறைக்குள்ளே போய் காலை வச்சா எடுக்க முடியாதபடி ஒட்டிக்கிற அளவுக்குத் தரையில் பிசுக்கு. அங்கே சமையல்காரர் அவ்வளவு ஒரு அழுக்குப் பனியனைப் போட்டுக்கிட்டு, வாயில வெத்தல பாக்கை மென்னுக்கிட்டு... அப்பப்போ பக்கத்தில் துப்பிக்கிட்டே இருக்கார். ஐயோ... சமையல் மேடை, சுவர் எல்லாமே ரொம்ப அழுக்கும்மா. இவங்க மாத்திரம்தான் அலங்காரம் பண்ணிக்கிறாங்க. எல்லாமே மேல் பூச்சு அலங்காரம்தான்மா!”

எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. வருத்தமும் கூட!

‘ஏன் இப்படிப் பண்றாங்க. நாம அழகாக இருந்தால் மட்டும் போதுமா? வீடு அழகாக இருக்க வேணாமா?’ என்று பலவிதமாக யோசித்தபடியே சென்னை வந்துவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்து, அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு போன் வந்தது.

“எனக்கு ஓர் உதவி வேணும்ங்க”

“என்னம்மா வேணும்... சொல்லுங்க!”

“நாங்க ரொம்பப் பணக் கஷ்டத்தில் இருக்கோம்மா. நான் போட்டிருக்கும் நகைகள்கூட என்னோடது இல்லை. என் தங்கச்சியுடையது. என் நகைகளை எல்லாம் என் பொண்ணுக்குப் போட்டேன். அவளைக் கல்யாணம் பண்ணினவன் நகைகளை எடுத்துக்கிட்டு ஓடிட்டான். ஆரம்பிச்ச புது பிசினஸில் பெரிய நஷ்டம்...” என்று தன் கஷ்டங்களை எல்லாம் அடுக்கிக்கொண்டே போனார் அவர்.

“அம்மா! கடன் கொடுத்தால் உறவும் போயிடும். நட்பும் போயிடும். நான் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன். இப்போதான் வேலை முடிஞ்சு வந்திருக்கேன். அப்புறமா பேசுறேன்” என்று சொல்லி போனை வைத்தேன். வீட்டில் இதுபற்றி கலந்து பேசிவிட்டு, மறுநாள் அவருக்கு டிரங்க்கால் போட்டேன். அந்தப் பெண்ணுடைய தங்கைதான் போனை எடுத்தார்.

“அக்கா இல்லையா?” என்று கேட்டபோது, அவர் மருத்துவமனைக்குச் சென்றிருப்பதாகக் கூறினார்.

“என்னங்க பிரச்னை?” என்று அவரிடம் கேட்டதுதான் தாமதம்; அவர் அப்படியே மடைதிறந்த வெள்ளமெனக் கொட்ட ஆரம்பித்தார்.

- கடாட்சம் பெருகும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism