Published:Updated:

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை 9 | நிறம் மாறும் கல்... பீடமாக கோவலன் கண்ணகி... கோவலன் பொட்டல்!

கோவலன் பொட்டல்
News
கோவலன் பொட்டல்

இன்று நம் மூதூர் மதுரையின் அடையாளங்களுள் ஒன்று என்று சொல்கிற 'கோவலன் பொட்டல்' பழங்காநத்தம் பகுதியில் இருக்கிறது. மதுரை என்றாலே மீனாட்சியம்மையோடு, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைச் சினந்த கண்ணகியும் சிலப்பதிகாரமும் நம் நினைவில் வந்துவிடும்தானே!

Published:Updated:

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை 9 | நிறம் மாறும் கல்... பீடமாக கோவலன் கண்ணகி... கோவலன் பொட்டல்!

இன்று நம் மூதூர் மதுரையின் அடையாளங்களுள் ஒன்று என்று சொல்கிற 'கோவலன் பொட்டல்' பழங்காநத்தம் பகுதியில் இருக்கிறது. மதுரை என்றாலே மீனாட்சியம்மையோடு, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைச் சினந்த கண்ணகியும் சிலப்பதிகாரமும் நம் நினைவில் வந்துவிடும்தானே!

கோவலன் பொட்டல்
News
கோவலன் பொட்டல்

மதுரையை மாநகர் என்று சொன்னாலும், புறநகர் மதுரையானது கிராமப்புறங்களைப் போலவே இருக்கும். இன்னும் பல பகுதிகளில் பொட்டல்கள் என்று அழைக்கப்படும் பெரும் வெட்டவெளிகள் இருக்கின்றன. இந்தப் பொட்டல்கள் பழங்காலத்தில் நெற்கதிர்களைப் போரடிக்கவும், ஊரின் பொதுநிகழ்வுகளை நடத்தவும் பயன்பட்டுவந்தன. இன்றும்கூட வருவாய்த்துறை ஆவணங்களில் ‘பொட்டல்கள் வரி’ என்று குறிப்புகள் இருப்பதைக் காணலாம்.

இப்போது நெற்கதிர்களைப் போரடிக்கும் வேலை எங்கே ஊருக்குள் நடைபெறுகிறது? இப்போது காலியாகக் கிடக்கும் இந்தப் பொட்டல்களில் விளையாட்டுகள், ஜல்லிக்கட்டு, அரசியல் பொதுக்கூட்டங்கள் எனப் பொது நிகழ்வுகளே நடக்கின்றன.

கோவலன் பொட்டல்
கோவலன் பொட்டல்

மதுரை நகரில் இப்படியான முக்கியமான பொட்டல்களில் சிலவற்றின் பெயர் இன்னும்கூட நம் காதுகளில் அவ்வப்போது ஒலிக்கும். இப்போது செல்லூர்க் காவல் நிலையம் அமைந்திருக்கும் இடம் செல்லூர் களத்துப் பொட்டல் என்கிற இடமாகும்.

மதுரையின் முக்கியச் சாலைகளில் ஒன்றான காமராசர் சாலையில் உள்ள புகழ்பெற்ற அரசமரப்பிள்ளையார் கோயில் எதிரே உள்ள பகுதி காந்தி பொட்டலாகும். இந்த இடத்தில் மகாத்மா காந்தி விடுதலைப்போராட்டக் காலத்தில் உரையாற்றியதை அடையாளப்படுத்தவே இன்றும் அது 'காந்தி பொட்டல்' என்றே அழைக்கப்படுகிறது.

மதுரை சிம்மக்கல் மைய நூலகத்தின் மேற்குப்புறம் ஆட்டு வியாபாரம் நடந்த இடம் 'ஆட்டு மந்தைப் பொட்டல்' என்றே அழைக்கப்படுகிறது. இதே பெயரில், நெல்பேட்டையில், ஹலால் செய்து ஆடு அறுக்கும் தொழில் நடைபெறும் இடமும் ஆட்டு மந்தைப் பொட்டல் என்றே அழைக்கப்படுகிறது.

மதுரை நகரின் மையத்தில் உள்ள, இப்போது ஜான்சி ராணி திடல் என்று அழைக்கப்படுகிற மேங்காட்டுப்பொட்டல் பகுதி, வாகனங்கள் நிறுத்துமிடமாகி, போக்குவரத்து நெருக்கடி மிகுந்து, மக்களின் நடைபாதையாகிவிட்டது.

கண்ணகி
கண்ணகி

இன்று நம் மூதூர் மதுரையின் அடையாளங்களுள் ஒன்று என்று சொல்கிற 'கோவலன் பொட்டல்' பழங்காநத்தம் பகுதியில் இருக்கிறது. மதுரை என்றாலே மீனாட்சியம்மையோடு, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைச் சினந்த கண்ணகியும் சிலப்பதிகாரமும் நம் நினைவில் வந்துவிடும்தானே!

கோவலன் பொட்டல் என்கிற இந்த இடத்தில்தான் ஆலமரங்கள் சூழ்ந்த பகுதியில், பாண்டியர் இடுகாடாய் இருந்த பகுதியில், கோவலன் தலை துண்டிக்கப்பட்டதாகச் செவிவழிக்கதையாய்ப் பல நூறு ஆண்டுகளாய்ச் சொல்லி வருகிறார்கள். 1981-ல் தொல்லியல்துறை இப்பகுதியில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள், கறுப்பு சிவப்பு வண்ண மட்பாண்டங்கள், புதிய கற்கால கைக்கோடரி, மீன்சின்னம் பொறிக்கப்பட்ட சில செப்புக்காசுகள் கிடைத்தன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரமாக இதனைக் கொள்ளலாம். இந்தப் பொருள்களை இன்றும் திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அருங்காட்சியகத்தில் நாம் காணலாம்.

கோவலனின் சிரமறுத்த இடமாகச் சொல்லப்படும் வெட்டுப்பாறையும், வடக்கு பார்த்த முகமாக இருக்கும் வெறும் பீடங்கள் மட்டுமே உள்ள கோவலன் கண்ணகிக்கான கோயிலும் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை திறந்தவெளியாகவே இருந்தன. இப்போது, இவ்விடம் தேவேந்திர குல வேளாளர் குலத்திற்குப் பாத்தியப்பட்ட மயான இடமென பாதுக்காக்கப்பட்டிருக்கிறது. இன்றும் இப்பகுதியை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகள் 'கோவலன் நகர்' என்றே அழைக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் ஏதேனும் கூடுதல் சுவாரஸ்யமான தகவல் கிடைக்குமா என்று அங்குள்ள பெண்களோடு பேசிக்கொண்டிருந்தபோது கிடைத்த தகவல், நம் சமூகப் பண்பாட்டுக் கதைகளுக்குக் கொஞ்சம் தீனி போடலாம்.

கோவலன் பொட்டல்
கோவலன் பொட்டல்

கோவலன் பொட்டலை ஒட்டியுள்ள இருளப்பசாமி கோவில் தெருவில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்றது. கண்ணகியின் சிலைகள் சுதைச் சிற்பமாக உள்ள இக்கோயிலில், பிள்ளை வரம் கேட்பவர்கள் இக்கோயிலில் உள்ள கல்லை மடியில் கட்டிக்கொண்டு ஏழு முறை வலம் வருவார்களாம். இக்கல் கங்கோத்ரியில் இருந்து எடுத்துவரப்பட்டது என்றும், இக்கல் கறுப்பு, சிவப்பு, பச்சை என நிறம்மாறும் தன்மை கொண்டது என்றும் சொல்கிறார்கள். அத்தோடுகூட, ஒவ்வொரு சுற்றுக்கும் இக்கல்லின் கனம் கூடிக் கொண்டே வருவதை உணரமுடியும் என்றும் சொன்னார்கள்.

இக்கோயிலுக்குள் கண்ணகி வந்த வரலாறு என்ன என்பதும், பிள்ளை வரமும் கண்ணகியும் எப்படி கருமாரி அம்மனோடு இணைந்தார்கள் என்பதும் சுவாரஸ்யமான கேள்விகளாய் இருக்கின்றன.

2,000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இன்னும் சிலப்பதிகார காலப் பெயர்களோடும் கதைகளோடும் இப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இன்றைய மதுரையின் வரலாறு. கோவலன் பொட்டலில், இடுகாட்டின் தெற்கு எல்லைப்பகுதியில், வடக்குப் பார்த்துக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் கோயில் கட்டியிருக்கின்றனர். உருவமில்லாமல், கல் பீடமாக வைத்து வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாடானது அன்று முதல் இன்றுவரை நடைபெற்று வருவது வியப்புக்குரியதுதானே! கோவலனின் மரபினர்கள் இன்றைக்கும் வாழ்ந்துவருவதாகவும், அவர்கள் பழநி மலைக்குப் பக்கத்தில் உள்ள ஊர்களில் வசித்துவருவதாகவும், வருடம் ஒரு முறை கோவலனைத் தங்கள் குலதெய்வமாக எண்ணி, மயானத்திற்கு வந்து வணங்கிச் செல்வதாகவும் சொல்கிறார்கள்.

கோவலன் பொட்டல்
கோவலன் பொட்டல்

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதப் பௌணர்மி நாளன்று, பழங்காநத்தம் பகுதியில் உள்ள குடும்பர்கள் கோவலன் பொட்டல் இடுகாட்டிலுள்ள குழிமேட்டிற்கு வந்து, தங்கள் மூததையர்களின் சமாதியை அலங்கரித்து, பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் இருந்திருக்கிறது. கடந்த ஐந்தாறு வருடங்களாக இவ்வழக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றும் கோவலன் பொட்டல் பகுதியில் அடர்ந்து, உயர்ந்து நிற்கும் ஆலமரமும், உருவமற்ற பீடங்கள் மட்டும் உள்ள கண்ணகி கோவலன் கோயிலும், பாண்டியர் இடுகாடு என்கிற புதைமேடுகளும் இப்பகுதிக்கு ஓர் அமானுஷ்யத்தையும், அவலச்சுவை உணர்வையும் நமக்குள் நிரப்புகிறது என்றால் மிகையில்லை.