என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 9 - பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது?

ஆண்களைப் புரிந்துகொள்வோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்களைப் புரிந்துகொள்வோம்!

பெண்களை மதிக்கிற ஆணால்தான், அவளுடைய அழகைத்தாண்டி பெண்ணின் அறிவையும் இயல்பையும் நேசிக்க முடியும்

க இலக்கியங்களில் ஆரம்பித்து முகநூல் கவிதைகள் வரைக்கும், பெண் களின் குணத்தைவிட அவர்களுடைய புற அழகைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆண் ஏன் காலங்காலமாக இப்படி இருக்கிறான், இப்போதாவது மாறி யிருக்கிறானா என்பன குறித்துப் பேசுகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் டாக்டர் தமிழ்ச்செல்வன் பழனிச்சாமி.

‘‘பெரும்பான்மை ஆண்கள் பெண்களின் புற அழகால்தான் முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், இவர்களை பெண்ணின் இயல்பை நேசிக்கத் தெரியாதவர்களாக மட்டும் பார்க்காமல், ஐயோ பாவமாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இவர்களைப் பொறுத்தவரை அழகான பெண்கள் எல்லோருமே புத்திசாலிகளாக இருப்பார்கள், நல்லவர்களாக இருப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதை நாங்கள் Hallow effect என்று சொல்வோம்.

ஆண், பெண்ணின் உருவத்துக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறான் என்பதற்கு இன்னோர் அழுத்தமான உதாரணம்... விரும்பிய பெண்ணுடன் உடல்ரீதியான உறவு கொண்ட பின் அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் இங்கே மிக மிகக் குறைவு. அவர்கள் எந்த விஷயத்தில் முதலில் ஈர்க்கப்பட்டார்களோ அது கிடைத்தவுடன் அந்தப் பெண் மீதான ஈர்ப்பு குறைந்து விடுகிறது. கந்தர்வ திருமணத்தில் ஆரம்பித்து லிவிங் டுகெதர் வரைக்கும் இதுதான் நிலைமை. விதிவிலக்கு ஆண்களையும் ‘அவர்களுடைய வாழ்க்கையின் கடைசி நொடி வரைக்கும் இப்படியே தொடர்கிறார்களா’ என்பதை வைத்துதான் தீர்மானிக்க முடியும். இனி திருமணமான ஆண்களுக்கு வருவோம்.

தமிழ்ச்செல்வன் பழனிச்சாமி
தமிழ்ச்செல்வன் பழனிச்சாமி

‘உங்கள் மனைவியின் இயல்பைப் பார்த்து

தான் திருமணம் செய்தீர்களா...’ என்றால், பெரும்பாலான கணவர்களின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.

இந்த இடத்தில் பெண்கள் மீதான ஒரு வருத்தத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆண் தன்னுடைய உருவத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பது தெரிந்தும், அதை அன்பு என்று அந்தக்காலப் பெண்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். இந்தக் காலப் பெண்களோ அழகு தொடர்பான பாராட்டுகளுக்கு மயங்கிவிடுகிறார்கள். தன்னுடைய உருவம் மட்டுமல்ல, இயல்பும் சேர்ந்ததுதான் என்ற எண்ணம் பெண்களுக்கு வராத வரைக்கும் இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்’’ என்றவர், ‘உருவ’க்காதல், ‘இயல்பு’காதல் இரண்டையும் எப்படிப் பிரித்தறிவது என்பதையும் சொன்னார்.

‘‘ ‘நீ எப்படியிருந்தாலும் உன்னை அப்படியே ஏத்துக்கிறேன்’ என்கிற வரி கேட்பதற்கு பாசிட்டிவ்வாக இருந்தாலும், அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பதில் உருவக்காதலே விஞ்சி நிற்கும். உங்கள் இயல்பு, படிப்பு, குடும்பம் என எல்லாவற்றையும் கவனித்து, ‘இந்தப்

பெண்ணைக் காதலிக்கிறேன்’ என்று எல்லோரிடமும் அறிமுகப்படுத்துகிறான் என்றால், இதில் உடல்சார்ந்த ஈர்ப்பு இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் ரகசியமாகச் சந்திருக்கிறான், உங்கள் அழகை வர்ணிக்கிறான் என்றால், அது உடல் சார்ந்த கவர்ச்சி மட்டுமே. பெண்களை மதிக்கிற ஆணால்தான், அவளுடைய அழகைத்தாண்டி பெண்ணின் அறிவையும் இயல்பையும் நேசிக்க முடியும். இந்த மதிப்பு இல்லையென்றால், சமூகத்தின் அளவீட்டில் அழகு குறைவு என ஜட்ஜ் செய்யப்பட்ட ஒரு பெண் புத்திசாலித்தனமாக ஒரு கருத்தை முன் வைத்தால், ‘ஆங்... இவ பெரிய ஐஸ்வர்யா ராய்’ என்று தன்னுடைய ஆணாதிக்க முகத்தை வெளிக்காட்டி விடுவான். இந்த விஷயத்தில் இந்தக்கால ஆண்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாமே தவிர, மாறிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. போன தலைமுறையில் கடிதங்களில் பெண்ணை வர்ணித்தவர்கள் இப்போது வாட்ஸ்அப் மெசேஜ்களில்

டி.பி-யை வர்ணித்துக்கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 9 - பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது?

பெண் மீதான ஆணின் ஈர்ப்பு பற்றி இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்த நினைக்கிறேன். ஒன்று, பெண்ணின் புற அழகால் ஈர்க்கப்படுகிற ஆண்கள் பாலியல் வன்கொடுமை வரைக்கும் செல்ல மாட்டார்கள். அப்படி நடந்து கொள்பவர்கள் சமூக ஒழுக்கங்களின் மீது எந்த பயமும் இல்லாத மனநோய் கொண்டவர்கள். இரண்டாவது, பெண்கள்மீது சிறிதுகூட ஈர்ப்பில்லை என்றால், அந்த ஆணுக்கு உளவியல்ரீதியாக பிரச்னையிருக்கிறது என்று அர்த்தம்.

பெண்களைப் பொறுத்தவரைக்கும், ‘பொண்ணுக்கு கண் நிறைஞ்ச கணவன் வேணும்’ என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் ‘ஆம்பளைக்கு எதுக்கு அழகு’ என்று சமூகம் அவர்களைக் குழப்பினாலும், அவர்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். காதல், திருமணம் என்று சின்சியராக வரும்போது ஆணின் உருவத்துக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள். அவன் நம்பிக்கையானவனா, தன்னையும் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளையும் பாதுகாக்கிற அளவுக்குப் பொருளாதார பலம் உள்ளவனா என்று பல விஷயங்களையும் யோசித்துதான் முடிவெடுக்கிறார்கள்’’ என்கிறார்.

தோழியை எப்போது காதலியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள்... அடுத்த இதழில்

நந்தினியோட இயல்பை பார்த்துதான் விரும்பினேன்!

பாடலாசிரியர் மதன் கார்க்கி

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 9 - பெண்ணின் புற அழகா, இயல்பா... எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது?

``காதல் ஒரே உணர்வுன்னாலும், புற அழகுதாண்டி இயல்பு, அறிவு, பழகும் விதம்னு ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறு காரணங்களால வரும்கிறது என்னோட கருத்து. என் காதலையே இதுக்கு உதாரணமா சொல்லலாம். நான் படிச்சது எப்பவும் கணிதமும் இயற்பியலும் பேசுற பொறியியல் கல்லூரியில. அங்க, நந்தினி கலீல் ஜிப்ரான் கவிதைகள் பத்தியும் சைக்காலஜி பத்தியும் ஒரு டாக் கொடுத்திட்டிருந்தாங்க. அதுக்கு முன்னாடியே பல தடவை நான் நந்தினியைப் பார்த்திருக்கிறேன்னாலும், அந்த நிமிஷம்தான் அவங்க மேல ஈர்ப்பு வந்துச்சு. திரைப்படங்களையும் விளம்பரங்களையும் பார்த்து ஓர் ஆண் இப்படித்தான் இருக்கணும், பெண் இப்படித்தான் இருக்கணும். இதுதான் அழகு, இந்த மாதிரி இருக்கிறவங்க நம்மகூட இருந்தா நல்லா இருக்கும்னு முடிவெடுத்திடுறாங்க. நம்ம துணையை திரைப்படங்களையும் விளம்பரங்களையும் அளவீடா வெச்சு தீர்மானிக்காம இருக்கலாம். தவிர, எல்லா மிருகங்கள்லேயும் குரல், தோற்றம்னு ஆண் மிருகங்களுக்கான வர்ணனை இருக்கு. ஆனா,

மனித இனத்துல மட்டும்தான் எல்லா இலக்கியங்களும் பெண்களைத்தான் அழகுக்கான பாடுபொருளா எடுத்துகிட்டு, ஆண்களை வீரத்துக்குன்னு பிரிச்சு வெச்சிருக்கு. வெறும் ஈர்ப்புக்கு வேணும்னா அழகும் வீரமும் போதுமானதா இருக்கலாம். ஆனால், வாழ்க்கைக்கு அதையும்தாண்டி நிறைய தகுதிகள் தேவைப்படுது.’’