Published:Updated:

9 கோடி சித்தர்களோடு ஆழ்ந்து உறங்கும் கோரக்கர்! - சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்-5

9 கோடி சித்தர்களோடு ஆழ்ந்து உறங்கும் கோரக்கர்! -  சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்-5
9 கோடி சித்தர்களோடு ஆழ்ந்து உறங்கும் கோரக்கர்! - சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்-5

9 கோடி சித்தர்களோடு ஆழ்ந்து உறங்கும் கோரக்கர்! - சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்-5

ஆமே கேளிது நிலையற்ற வாணிபுக்கி
ஆனபதி பொய்கைப் பூங்கா சொன்னேன்
தேகமே பரிவிருத்தி ஆயிரத்துத்
திகழ் நூற்றிருபது ஆறதாண்டில்
பாமேவு சித்தர்களும் வெளியாய் வந்து
பட்சமுடன் மனுக்களையும் ஆள்வார் மண்ணில்
பூமேவு பொக்கிஷங்கள் பூரணிக்கும்
பூரணியாள் பதமாய்ச் சொன்னேன் சித்தே

 -கோரக்கர்
(தனிநூல் தொகுப்பு 4, 5, 6)

பாடலின் பொருள் : 

பொய்கைநல்லூர் என்னும் ஊரைச் சொன்னேன். பரிவிருத்தி ஆயிரத்து நூற்று இருபதாம் ஆண்டில் ஆற்றல் சித்தர்கள் வெளியே வந்து ஆன்மிக ஆட்சியை ஆள்வார்கள். அப்போது சித்தர்களின் பல அற்புத கருத்துப் பொக்கிஷங்கள் முழுமையடையும் என்பதை பூரணியின் அருளுடன் சொல்கிறேன்.

'கடல் நாகை' என தேவாரம் கூறும் நாகப்பட்டினமும் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களும் பல வரலாறு மற்றும் புராணச் சிறப்புகளைக் கொண்டது. நீலாயதாட்சி சமேத காயாரோகணர் கோயில் இங்கு அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இங்கு பௌத்தமதம் தழைத்தோங்கி இருந்தது.

நாகையிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 2கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்குப் பொய்கை நல்லூர். இங்குதான் கோரக்கச் சித்தர் ஜீவசமாதி கொண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெய்யன்பர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

நாகையிலிருந்து வடக்குப் பொய்கை நல்லூர் வழியே நாம் பயணித்த போது, வழியெங்கும் மீன் வலைகளும் படகுக் கட்டுமானங்களுமாக நெய்தல் நிலக் காட்சிகளே நிறைந்திருந்தன. மீன் வணிகத்தில் சிறந்து விளங்கும் அக்கரைப்பேட்டை கிராமத்தின் மேம்பாலத்தைக் கடந்து போகும்போது வடக்குப் பொய்கை நல்லூரின் வரலாற்று - புராணச் சிறப்புகள் நம் நினைவில் எழுந்தன...

நெய்தல் வளமும் மருத வளமும் இணைந்து சிறந்த சிற்றூர் வடக்குப் பொய்கை நல்லூர். இவ்வூரில் பால்மொழி அம்மை சமேத நல்லூர் நாதர் என்னும் பழைமையான சிவாலயம் உள்ளது. இது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று திருநாவுக்கரசர் தமது க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் இவ்வூரை 'பொய்கை நல்லூர்' எனக் குறிப்பிடுகிறார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய புகழ்பெற்ற, 'திருநாகைக் காரோண புராணம்' என்னும் தலபுராண நூல் வடக்குப் பொய்கை நல்லூரின் பழைய பெயர் 'சித்தாச்சிரமம்' எனக் குறிக்கிறது.


தேவர்களால் போற்றப்பெற்ற 'சித்தாச்சிரமம்' ஒன்று இவ்வூரில் இருந்ததையும், அதில் பல சித்த புருஷர்கள் தவவாழ்வு வாழ்ந்ததையும் இந்நூலின் வழியே அறிய முடிகிறது. கோரக்கரின் ஜீவசமாதிக்குச் செல்லு முன்பு அவரின் வாழ்க்கைச் சுருக்கத்தைப் பார்ப்போம்...
கொல்லிமலையில் நெடுந்தவம் இருந்த சித்தர் மச்சேந்திரர் ஒரு நாள் அங்கிருந்து புறப்பட்டு பொதிய மலை செல்லும் விருப்பத்துடன் தென்திசைநோக்கிப் பயணித்தார். மக்களைச் சந்திக்கவும் அவர்களின் வாழ்க்கைத் துயர் போக்கவும் எண்ணம் கொண்ட மச்சேந்திரர், விண்வழிச் செல்லும் சித்து தவிர்த்து நடைப்பயணம் மேற்கொண்டார்.

வழி நடையில் சம்பல்பட்டி என்ற ஓர் சிற்றூரில் அவருக்கு தாகம் எடுத்தது. அங்கிருந்து ஓர் இல்லத்தில் சென்று குரல் கொடுத்து நின்றார். அந்த இல்லத் தலைவன் சிவராம தீட்சிதர் அப்போது வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டுமே இருந்தார். வந்திருப்பவர் எவர் என அறிய முடியவில்லை எனினும், அவர் ஒரு சிவனடியார் என்பது  தெரிந்து, நீர் மட்டுமே கேட்ட அவரை வீட்டுக்குள் அழைத்து அன்பொழுக இலை போட்டு பசியும் தாகமும் தீர்த்து பணிந்து வணங்கினார்.


உபசரிப்பில் மனம் குளிர்ந்தவராக, அம்மையாரை வாழ்த்திய மச்சமுனி சித்தர், அம்மையாரின் முகத்தில் இழையோடிய சோகத்தைக் குறிப்பால் உ ணர்ந்தார். ''உன் வாழ்வில் ஏதோ ஒரு பெரும் குறை. அது என்ன தாயே?" என்று வினவினார். தயங்கியபடி அவரும் தன் வாழ்வில் எல்லா வளநலமும் இருந்தும் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

தன் இடையில் இருந்த திருநீற்றை எடுத்த மச்சேந்திரர், அதை ஒரு பச்சிலையில் வைத்து வழங்கி "அம்மையே! உன் கணவனுடன் நீராடி சிவத்தியானம் செய்து இந்தக் கவசத் திருநீற்றினை இருவரும் அணிந்து வணங்குங்கள் எஞ்சியதை தூய நீரில் இட்டுப் பருகுங்கள். உங்கள் நெடுநாள் குறை விரைவில் நீங்கும். பரமஞானி ஒருவன் உங்களுக்கு மகவாக வந்துதிப்பான்!" என ஆசீர்வதித்து விட்டு பொதிகை மலை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

பிறகு சிவராம தீட்சிதரின் துணைவியார் நீராடச் சென்றார். நீராடுவதற்கு உடன் வந்த பெண்களிடம், சிவனடியார் கொடுத்த கவசத் திருநீறு பற்றிய விஷயத்தைக் கூறினார். அதைக் கேட்ட அந்தப் பெண்கள், ''கண்டவன் தரும் திருநீற்றை அணியாதே. அவன் பெண்களை வசியம் செய்யும் மந்திரக் கயவனாக இருக்கலாம்!" என எச்சரிக்கின்றனர். பயந்துபோன அம்மையார் அடுப்பு நெருப்பில் மச்சேந்திரர் கொடுத்த திருநீற்றைப் போட்டு விட்டார். பத்து ஆண்டுகள் உருண்டோடின...


பொதியமலை சென்று யோகம் புரிந்து பல சித்திகள் பெற்ற மச்சேந்திரர் மீண்டும் சம்பல்பட்டி வழியாகவே கொல்லிமலை நோக்கிப் பயணம் செய்கிறார். அப்போது சிவராம தீட்சிதரின் வீட்டில் உணவு உண்டது நினைவுக்கு வருகிறது. அவரின் இல்லம் செல்கிறார். வாயிலில் நின்றிருந்த தீட்சிதரின் மனைவிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. மச்சேந்திரர் ''அம்மா! என் அருளால் உனக்கு வாய்த்த உன் மகன் நலமாக இருக்கிறானா?" எனக் கேட்கிறார். பயந்து கூனிக்குறுகி, அவர் கொடுத்த திருநீற்றை அச்சம் காரனமாக அடுப்பு நெருப்பில் எரித்ததைக் கூறி மன்னிப்பு வேண்டுகிறார்.

அவரின் அறியாமை கலந்த அச்சத்தை உணர்ந்த மச்சேந்திரர் தன் சினம் மறைத்து, அடுப்புச் சாம்பலைக் கொட்டும் இடத்துக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படி கட்டளை இடுகிறார். அம்மையார் கொல்லைப் பக்கம் உள்ள குப்பை மேட்டுக்கு மச்சேந்திரரை அழைத்துச் செல்கிறாள். அதற்குள் அங்கு தெரு ஜனங்கள் கூடி விடுகின்றனர். மச்சேந்திரர் குப்பைமேட்டை நோக்கிக் கண்மூடி தியானித்த பின் ''கோரக்கா! வெளியில் வா!" என்கிறார். ''இதோ வருகிறேன் குருநாதரே!" என்ற குரலுடன் பத்து வயது தோற்றத்தில் பாலகன் ஒருவன் முகப்பொலிவுடன் விபூதி மணக்க வெளியே வருகிறான். அம்மையார் ஆனந்தக் கண்ணீர் உகுக்கிறார். கூடியிருந்தோர் வியந்து மச்சேந்திரனின் காலில் விழுந்து வணங்குகின்றனர். 

"உன் தாயை வணங்கு கோரக்கா! சிவனருளால் என்னிடம் சித்துகள் பயின்று உன் பெற்றோர் வியக்கும் சித்தனாக நீ நீண்டகாலம் சிவத்தொண்டு புரிவாய்!" என ஆசீர்வதிக்கிறார். குருவை வணங்கியபின் தாயை வணங்கி எழுகிறான் சிறுவன் கோரக்கர்.


வடக்குப் பொய்கை நல்லூரை நாம் அடைகிறோம். சாலையின் வலதுபுறம் அமைந்துள்ள நந்திராதேஸ்வரர் ஆலயத்தைக் கடந்ததும் சாலையின் வலப்பக்கம் பிரம்மாண்டமான முகப்புத்தோற்றத்துடன் எழுந்துள்ளது கோரக்க சித்தரின் ஜீவசமாதிபீடம் அமைந்துள்ள கோரக்க சித்தர் ஆஸ்ரமம். வாயில் மண்டபத்தில் காவி உடை தரிசித்த சிவனடியார்கள் நிறைந்துள்ளனர். பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும், கார்களிலும் பக்தர்கள் கூட்டம் குவிந்தபடி இருக்கிறது. இது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை யாத்திரீகர்கள் பேருந்துகளில் கோரக்கரை தரிசிக்க வந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஆசிரமத்தின் உள்ளே நுழையும்போதே ஏதோ ஓர் இனம்புரியா அமைதி நமக்குள் ஊடுருவுவதை உணர முடிகிறது. ஒன்பது கோடிச் சித்தர்கள் முக்தி அடைந்த இடம் என்னும் புராணக்குறிப்பு அப்போது சிலிர்ப்புடன் நமக்கு நினைவு வருகிறது!

வடக்குப் பொய்கை நல்லூரின் இதயப்பகுதியாக அமைந்துள்ளது கோரக்கரின் ஜீவ சமாதி பீடம். கிழக்கு நோக்கிய பீடத்தின் முன், அழகிய பெரிய அர்த்த மண்டபம் உள்ளது. கருவறை ஸ்தூபி மின்னும் பொற்கூரைபோல் விளங்குகிறது. எப்போதும் நறுமணம் கமழும் புதிய பூக்களால் சூழப்பட்டிருக்கும் சித்தர் கோரக்கரின் ஜீவசமாதி பீட லிங்கத்தின் முன் கண்மூடி சில நிமிடங்கள் தியானிக்கும் போதே உடலும் மனமும் மிக லேசாவதை உணர முடியும். இதுவே ஜீவ சமாதி பீடங்களின் அதிர்வலை தரும் ஆனந்தம்!

ஆசிரமத்தின் கருவறைப் பகுதியில் நீள் சதுர வடிவில் செங்கற்களால் கட்டப்பட்ட சமாதிமேடை அமைந்துள்ளது. இந்த மேடைக்குக் கீழ் அமைந்துள்ள நிலவறையில்தான் போகர், கோரக்கரை சமாதியிட்டார். சமாதி மேடையின் மேல் முன்பகுதியில் கருங்கற்களால் செய்யப்பட்ட பாதரட்சையுடன் கூடிய இரண்டு திருவடிக்கமலங்கள் உள்ளன. அடுத்து பின்பகுதியில் அரை அடி தூரத்தில் இரண்டு சிறிய திருவடிக் கமலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்தத் திருவடிகள் லிங்கத் திருமேனிகளாகக் கருதப்பட்டு, கோமுகியுடன் கூடிய ஆவுடையார் அமைப்பின் மேல் இடம்பெற்றுள்ளன. பெரிய திருவடிகளின் கீழாக இருபத்து நான்கு உருத்திராட்ச மணிமாலை ஒன்றின் இடையில் ஆறு இதழ் கொண்ட சுதை மலர் ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரிய திருவடிகள் சிவபெருமானின் பாதங்களாகவும் சிறிய திருவடிகள் உமையவளின் பாதங்களாகவும் கருதப்பட்டு, இவற்றுக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

தியானம் முடித்து பீடத்தை வலம் வரும்போது பிரகாரத்தில் உள்ள நாகலிங்க மரமும் நமக்கு ஆசிகளை வழங்கும் விதமாக இலைகளை உதிர்த்தபடியே இருக்கிறது.! கோரக்கர் எவ்வாறு வடக்குப் பொய்கை நல்லூர் வந்து, சித்தர் போகரால் சமாதி வைக்கப்பட்டார் என்பதை நாம் இத்தொடரின் மூன்றாவது அத்யாயத்தில், போகரின் பாடல்கள் மூலம் விளக்கியிருப்போம். அதை இங்கே நினைவுப்படுத்திக்கொள்ளலாம்.

ஆசிரம ஜீவசமாதியை விட்டு வெளியே வந்தால் திருச்சுற்றில் நந்தவனமும் கிடைத்தற்கரிய சிற்றகத்தி முதலிய மூலிகை வகைகளும் உள்ளன. மக்கள் தங்கி இளைப்பாற இருபுறங்களிலும் அழகிய தாழ்வாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன...

இந்தக் கட்டுரையைப்  படித்துவிட்டீர்களா?  இந்த க்விஸை கிளிக் செய்து பதில் சொல்லுங்கள் பார்ப்போம்...

loading...


-பயணம் தொடரும்

சித்தர்களின் அற்புதங்களைப் பற்றி உங்கள் அனுபவங்களை கமெண்டில் பகிர்ந்துகொள்ளலாமே!

அடுத்த கட்டுரைக்கு