Published:Updated:

உடல்நோய், மனநோய் தீர்க்க இறைவன் முருகன் அருளும் மாமருந்துகள்!

உடல்நோய், மனநோய் தீர்க்க இறைவன் முருகன் அருளும் மாமருந்துகள்!
உடல்நோய், மனநோய் தீர்க்க இறைவன் முருகன் அருளும் மாமருந்துகள்!

உடல்நோய், மனநோய் தீர்க்க இறைவன் முருகன் அருளும் மாமருந்துகள்!

முருகன் அருள்திறம், உடலில் ஏற்படும் பிணிகளை மட்டுமல்லாமல், உள்ளத்தில் ஏற்படக்கூடிய பிணிகளையும் போக்க வல்லது. மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மருத்துவர் முருகப் பெருமான். ஒரு மருத்துவர் பலரறிய புகழ் பெற வேண்டுமானால், அது அவரிடம் வைத்தியம் பார்க்க வருபவர்களால் மட்டுமே முடியும். அவர் எந்த அளவுக்குச் சிறப்பாக வைத்தியம் பார்க்கிறார் என்பது அவரிடம் சிகிச்சை பெறும் நோயாளிக்குத்தான் தெரியும். அவர்தான், அந்த மருத்துவரை கைராசிக்காரர் என்று மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வார்.

அதேபோல், தமக்கு ஏற்பட்டிருந்த குறையை செந்திலாண்டவரின் அருள் என்னும் மாமருந்து எப்படி போக்கி அருளியது என்பது பற்றி குமரகுருபரர் மிக அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

குமரகுருபரரைப் பேச வைத்த செந்திலாண்டவர்

தண்பொருநை தாமிரபரணி தவழ்ந்தோடும் ஶ்ரீவைகுண்டம் திருத்தலத்தில் தோன்றியவர் குமரகுருபரர். பேச முடியாமல் ஊமையாக இருந்த குமரகுருபரரைப் பேசவைத்து, பாடல்கள் இயற்றவும் அருள்புரிந்தார் திருச்செந்திலாண்டவர்.
தமக்கு அருள்புரிந்த செந்திலாண்டவரின் கருணைத் திறம் குறித்து, தாம் இயற்றிய 'கந்தர் கலி வெண்பா'வில்
'பல்கோடி விக்கினமும் பல்பிணியும் பல்கோடி பாதகமும் செய்வினையும்
பொடிபடுத்தி விடுவான்!' என்று மிக அழகாகப் பாடியிருக்கிறார்.

முருகப் பெருமான் தரும் மருந்தின் சிறப்பு:

நோய் தீர்க்க மருத்துவர் கொடுக்கும் மருந்துக்கும், முருகப் பெருமான் கொடுக்கும் மருந்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து கசப்பானது. ஆனால், நம் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் தரும் மருந்தோ மிகவும் இனிப்பானது. சொல்லும்போதே வாய் மணக்க மணக்க சுவையைக் கூட்டும் பொருள்கள் தேன், கற்கண்டு, வாழைக்கனி, வெல்லம், நெய். இந்தப் பொருள்கள் தனித் தனியாக இருக்கும்போதே இனிப்பு நிறைந்திருக்கும். இவை ஐந்தும் ஒன்றாகக் கலந்தால் இனிப்பிற்கும், சுவைக்கும் குறைவே இருக்காது. இந்த ஐந்தும் கலந்ததே 'பஞ்சாமிர்தம்' என்று அழைக்கப்படுகிறது. 

பழநி முருகனுக்கு  இந்தப் பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டு, அதுவே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தப் பிரசாதமே பல நோய்களுக்கு அருமருந்தாகவும் செயல்படுவதாக பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
இதையே அறிவியல் ரீதியாக நோக்கினால், பழநியில் முருகக்கடவுளின் திருமேனி பல்வேறு தாதுப்பொருள்களால் (நவபாஷாணம்) ஆனது. எனவே, முருகப்பெருமான் திருமேனியில் அர்ப்பணித்து எடுக்கும் பஞ்சாமிர்தத்தில், தாதுப்பொருள்களின் மருத்துவத் தன்மையும்  சேருவதால், அந்தப் பஞ்சாமிர்தமே உடற்பிணியை நீக்குகிறது. தாதுப்பொருள்கள் அப்பெருமானது அருளால் அமிர்தமாக மாறி, அருந்துபவரின் நோயினைக் குணப்படுத்துகிறது. இவ்வாறு அறிவியல்ரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும் இந்த உண்மை நமக்கு விளங்குகிறது.

இதற்கும் மேலாக அப்பெருமானது மருந்து ஒன்று உண்டு. அதுவே அவனது திருநீறு ஆகும். இதையே 'மந்திரமாவது நீறு'  என்று திருஞானசம்பந்தர் போற்றியிருக்கிறார். எந்த மருந்தினாலும் குணப்படுத்த முடியாத நோய்களையும் இந்தத் திருநீறு போக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. 

உடலில் நோய்கள் வராமல் இருக்க என்ன வழி?

உடலில் நோய்கள் எதுவும் அணுகாமல் இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலில் நோய்கள் எதுவும் அணுகாமல் இருக்கவேண்டுமானால், நம் உள்ளத்தைச் சீராக வைத்திருக்க வேண்டும். உள்ளம் சீராக இல்லாமல், கள்ளமும் கபடும் புகுந்துவிட்டால், அதன் விளைவாக நம் உடலைப் பல்வேறு விதமான நோய்கள் தாக்கும். எனவேதான், இதை எடுத்துச் சொல்லும் வகையில் சொக்கநாதப் புலவர் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். (இந்தப் பாடலை காளமேகப் புலவர் பாடியதாகவும் சொல்வதுண்டு).

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச் சரக்கை மங்காத
சீரகத்தைத் தந்தீரேல்தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே!

இந்தப் பாடலில் தமிழ் மருத்துவப் பொருள்கள் ஐந்து குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த ஐந்து மருத்துவப் பொருள்களும் இரண்டு பொருள்படும்படியாக அமைந்திருப்பதுதான் பாடலின் தனிச் சிறப்பு.

பாடலின் முதல் பொருள்:

வெங்காயம் காய்ந்து சுக்குபோல் ஈரம் இல்லாமல் சருகானால், ஒன்றுக்கும் பயன்படாது. அதன் பின்னர் அதனோடு வெந்தயம் சேர்த்தாலும் பயன் இல்லை. வெந்து அயம் போல் ஆனாலும் பயனில்லை. எனவே பயனில்லாத இந்த மூன்று சரக்குகளையும் வைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. தூக்கி எறிய வேண்டியதுதான். ஆனால், எந்த நிலையிலும் சீரகம் தரப்படுமானால் இந்தப் பெரிய உடம்பைப் பேணுவதற்கு வேறு எதையும் தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. எனவே, அழகான இல்லத்தில் கடை வைத்து வணிகம் செய்யும் செட்டியாரே நற் சீரகத்தைத் தாரும்! 

பாடல் கூறும் மறைபொருள்:

வெம்மையான காயமாகிய உடம்பு, சுக்குப் போலக் காய்ந்து ஒடிந்து விடுமானால், அதன்பிறகு அந்த உடம்பை புடம் போட்டு வெந்த அயத்தாலும் (பஸ்பத்தாலும்) உயிரூட்ட முடியாது. சுக்காகக் காய்ந்துவிட்ட பிறகு இந்த உடம்பை வைத்துக் கொள்வது, பெரும் நாற்றமாகும். மண்ணுக்கோ அல்லது நெருப்புக்கோ இரையாக்கிவிடவேண்டியதுதான். ஆனால், எந்தக் காலத்துக்கும் கேடில்லாத சீரான உள்ளத்தை, அதாவது உன்னை நினைத்து நெறியாக வாழும் உள்ளத்தை, ஏரகம் என்னும் சுவாமிமலையில் இடங்கொண்ட முருகனே, நீ அருள்புரிந்தால், அதன்பின் இந்த உடம்பைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இதுவே பாடல் உணர்த்தும் மறைபொருள்.

அன்பைப் பணமாகப் பெற்று அருளை வழங்கும் வணிகனாக - செட்டியாராக முருகப் பெருமான் உள்ளார். அவர் இருக்கும் அழகிய இடம் திருவேரகம் என்னும் சுவாமிமலை. அவனைச் சரணடைந்தால், நமக்கு சீரான அகத்தை - மாசற்ற, கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தை அருள்புரிவார். எனவே, திருவேரகப் பெருமானை நாளும் பொழுதும் தியானித்து, நல்ல எண்ணங்களால் நிரம்பப் பெற்ற உள்ளத்தைப் பெற்று, நலமும் வளமும் பெற்றுச் சிறப்புற வாழ்வோம்.
 

அடுத்த கட்டுரைக்கு