Published:Updated:

கோவனூர் முருகன் கோயில்... சித்தர்கள் வந்து பூநீர் பருகும் அதிசயம்!

கோவனூர் முருகன் கோயில்... சித்தர்கள் வந்து பூநீர் பருகும் அதிசயம்!
கோவனூர் முருகன் கோயில்... சித்தர்கள் வந்து பூநீர் பருகும் அதிசயம்!

'கோவனூர் பொட்டலிலே குண்டுமணி அம்மன் சந்நிதியிலே சாகா மூலிகை பூத்திருக்கு சாய்ந்து கொட்டடி ஞானப்பெண்ணே'…!  என்று ஒரு பாடல் நம் காதில் விழுந்தது. பாடியவரே ஒரு சித்தர்போல் காட்சி தந்தார். ஏதேனும் ஒரு வித்தியாசமான தகவல் நமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், ''ஐயா, நீங்கள் பாடிய பாடல் சித்தர் பாடல் போல் இருக்கிறதே, யார் பாடியது?'' என்று கேட்டோம்.

சித்தர்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தவர், பிறகு ஏதோ நினைத்தவர்போல் நம்மிடம் பேசத் தொடங்கினார். ''இந்தப் பாடலை அகத்தியர் பாடியதாகக் கேள்வி. சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள கோவனூர்தான் பாடலில் இடம் பெற்றிருக்கும் ஊர்'' என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறிய தகவல்கள் நமக்குப் பெரிதும் வியப்பை ஏற்படுத்தியதுடன், கோவனூருக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் அதிகப்படுத்திவிட்டது. உடனே கோவனூருக்குப் புறப்பட்டுவிட்டோம். சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் இருக்கும் பில்லூர் விலக்கு என்ற இடத்திலிருந்து பிரியும் சாலையில் சென்றால் கோவனூரை அடையலாம். ஊருக்குள் செல்லும்போதே முருகப்பெருமானின் திருக்கோயில் காட்சி தருகிறது. இது, மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

சித்தர்கள் சாகாவரம் பெற்ற ஊர் என்றும், முருகப்பெருமான் அவதரித்த ஊர் என்றும் பல செவிவழிச் செய்திகள் சொல்லப்படுகின்றன. முதலில் சித்தர்கள் இந்த ஊருக்கு வந்தது பற்றிப் பார்ப்போம்.

முற்காலத்தில் அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் திருப்பூவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்தனர். பிறகு காளையார்கோவில் அருள்மிகு சொர்ண காளீஸ்வரரை வழிபடுவதற்காகச் சென்றனர். செல்லும் வழியில், அப்போது காட்டுப் பகுதியாக இருந்த கோவனூரில் தங்கிவிட்டார்கள். காலையில் எழுந்ததும் நீராடி, சிவபூஜை செய்வதற்காக எங்கேனும் நீர்நிலை இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தனர். எங்குமே தண்ணீர் இல்லாத நிலையில், அவர்கள் சிவபெருமானைக் குறித்து வழிபட்டனர். உடனே சிவபெருமான் தம் திருமுடியிலிருந்து கங்கையைப் பெருக்கெடுக்கவிட்டார். அகத்தியர் அந்தத் தீர்த்தத்தைக் கொண்டு பூஜை செய்தபோது, சிறிது தீர்த்தம் அருகிலிருந்த செடியின் மீது பட்டது. செடியின் மீது பட்ட நீர்தான் பூநீராகப் பெருகியது. சித்த மருத்துவத்தில் இந்தப் பூநீருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. 

கோவனூர் தலத்துக்கு மூன்று திசைகளிலும் குண்டுமணி அம்மன், சுந்தரவள்ளி அம்மன், ராக்காச்சி அம்மன் ஆகிய மூவர் காவல் தெய்வங்களாகத் திகழ்கின்றனர். இவற்றுள் கோயிலுக்கு நேர்கிழக்கில் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் குண்டுமணி அம்மன் கோயில்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் குண்டுமணி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமியன்று இங்கே நடைபெறும் விழா மிகவும் பிரபலம். அன்றுதான் சித்தர்கள் சூட்சும வடிவில் கோவனூர் கோயிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபடுகின்றனர். சித்ரா பௌர்ணமியில் மட்டுமல்லாமல், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற நாள்களிலும் சித்தர்கள் இங்கே வந்து வழிபாடு செய்வதாக ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. பின்னர் குண்டுமணி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு, அங்கே கிடைக்கும் பூநீரைப் பருகுவதாகச் சொல்கிறார்கள். அன்றைய தினம் சித்த வைத்தியர்களும் கோயிலுக்கு வந்து பூநீர் சேகரித்துச் செல்வதை இன்றைக்கும் நாம் காணலாம்.

கோவனூரில் உள்ள முருகன் கோயில் விபூதிப் பிரசாதம் அளவற்ற மகிமை கொண்டது. திருச்செந்தூரில் தருவதுபோலவே இங்கும் இலை விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது.