Published:Updated:

ஸ்ரீரங்கத்தில் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் கருட சேவை! - மாசி தெப்போற்சவம் #Srirangam

ஸ்ரீரங்கத்தில் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் கருட சேவை! - மாசி தெப்போற்சவம் #Srirangam
ஸ்ரீரங்கத்தில் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் கருட சேவை! - மாசி தெப்போற்சவம் #Srirangam

பூவுலகில் உள்ள 106 வைணவத் தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். முறையாக வழிபாடு நடக்கும் ஆலயங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோயிலே மிகப் பெரியது. (அங்கோர் வாட் ஆலயம் பெரியது என்றாலும், அங்கு முறையான வழிபாடுகள் இல்லை).  ஏழு பிராகாரங்கள், 21 கோபுரங்கள் என 156 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக மேலெழுந்து நிற்கிறது இந்த ஆலயம். `பூலோக வைகுண்டம்' எனப்படும் இந்த ஆலயத்தைச் சுற்றியும், மையப்படுத்தியும் நிகழ்ந்ததாக எண்ணற்ற சரித்திர, புராணச் சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. 


'கோயில் என்றாலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான்' என்று போற்றிச் சொல்லப்படும் பெருமை கொண்டது திருவரங்கத் திருத்தலம். இந்தத் தலத்தில் மாசி மாத தெப்பத்திருவிழா பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த விழாவின் சிறப்பம்சமான கருடசேவை விழா நாளை (21.02.2018) நடைபெற உள்ளது. வெள்ளி கருட வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி, ஆண்டாள் ஆகிய நாச்சியார்களுடன் ரங்கநாதர் காட்சியருளும் சேவை, பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும். வரும் 26-ம் தேதி திருமஞ்சனம் விழா நடக்கிறது. திருமஞ்சனம் நிறைவுற்ற பிறகு, ஒற்றை பிரபை வாகன உலாவோடு இந்தத் தெப்பத் திருவிழா நிறைவுபெறுகிறது. `ஏழு லோகங்களும், ஒன்பது புண்ணிய நதிகளும் அடங்கியிருக்கும் ஆலயமாகப் போற்றப்படும் இந்தப் பூலோக வைகுந்தத்தில் பெருமாளைக் கருட வாகனராக தரிசிப்பது பெரும்பேறு கொடுக்கும் புண்ணியக் காட்சி' என ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன. 


"குடதிசைமுடியை வைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே."


எனத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிப் பரவசமடைந்த இந்த ஸ்ரீரங்கத்தில் அருளும் ஸ்ரீரங்கநாதர், சூரிய வம்சத்தைச் சேர்ந்த இஷ்வாகு மன்னரின் காலத்திலிருந்து வழிவழியாக அயோத்தியை ஆண்டு வந்த மன்னர்களால் வழிபடப்பெற்ற தெய்வ மூர்த்தமாகும். பின்னர், விபீஷணன் விரும்பிக் கேட்டதால், தங்கள் முன்னோர் வழிபட்டு வந்த திருமூர்த்தத்தை விபீஷணனுக்குக் கொடுத்து அருளினார் ஸ்ரீராமபிரான். அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன், தேன்தமிழ் ஒலிக்கும் தமிழகத்தில் தவழ்ந்தோடும் காவிரிக்கரையை அடைந்தான். காவிரியும் கொள்ளிடமும் இரண்டு ஆரங்களாகப் பிரிந்து அழகுசெய்யும் பகுதியையும், அங்கிருந்த இயற்கைச் செழிப்பையும் கண்ட எம்பெருமான், தாம் காவிரிக்குக் கொடுத்த வரத்தை அருள்புரிய அதுதான் சமயம் என்று திருவுள்ளம் கொண்டு, விபீஷணனுக்கு உடல் சோர்வை ஏற்படுத்தினார். அதனால் சற்று இளைப்பாற விரும்பிய விபீஷணன், பெருமானின் திருவுருவத்தை கீழே வைக்கக் கூடாது என்பதால், அப்போது அங்கு வந்த ஓர் அந்தணச் சிறுவனிடம் அதைக் கொடுத்துவிட்டு ஸ்நானம் செய்யச் சென்றான். காவிரியின் குளிர்ச்சியில் தன்னை மறந்து ஸ்நானம் செய்துகொண்டிருந்த விபீஷணன் சொன்ன நேரத்துக்குள் வரவில்லை. எனவே, அந்த அந்தணச் சிறுவன் பெருமானின் திருவுருவத்தைக் கீழே வைத்துவிட்டு ஓடி மறைந்தான்.


ஸ்நானம் முடித்து வந்த விபீஷணன் எம்பெருமானின் திருவுருவம் கீழே இருக்கக் கண்டு அதிர்ச்சியடைந்தான். திருவுருவத்தை எடுக்க முயற்சி செய்தான். எவ்வளவு முயன்றும் அவனால் எடுக்க முடியவில்லை. அந்த திருமூர்த்தம் அங்கேயே நிலைகொண்டுவிட்டது. பின்னர், அந்தத் திருமூர்த்தத்தைக் கண்ட தர்மவர்ம சோழன் என்பவர், தன் ஆட்சிக்காலத்தில் பெருமாளுக்குக் கோயில் கட்டினார். காலப்போக்கில் ஆலயம் சிதிலமடைந்துவிட்டது. எனவே, தர்மவர்ம சோழனின் வம்சத்தில் வந்த கிள்ளி என்னும் மன்னர் ஒரு கிளியின் வழிகாட்டலின்படி பெருமாளுக்குக் கோயில் கட்டினார். இந்தத் தகவல் 'கோயிலொழுகு' என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது. 
இந்த ஆலயத்தின் ஏழு சுற்றுகளையும் ஏழு லோகங்களாகச் சொல்வார்கள். அவற்றில், திருமாடங்கள் சூழ்ந்த சுற்று `பூலோகம்’ என்றும், திரிவிக்ரம சோழன் சுற்று `புவர்லோகம்’ என்றும், அகளங்கன் சுற்று எனும் கிளிச்சோழன் சுற்று `ஸுவர்லோகம்’ என்றும், திருமங்கை ஆழ்வார் சுற்று `மஹர்லோகம்’ என்றும், குலசேகர ஆழ்வார் சுற்று `ஜநோலோகம்’ என்றும், ராஜமகேந்திரச் சோழன் சுற்று `தபோலோகம்’ என்றும், ஆதிதர்மவர்ம சோழர் சுற்று `சத்யலோகம்’ என்றும் போற்றப்படுகிறது. 


மேலும், இங்குள்ள ஒன்பது தீர்த்தங்களும் இந்தியாவின் புனிதமான ஒன்பது நதிகளின் அம்சமாக அடங்கியுள்ளன என்கிறார்கள். சந்திர புஷ்கரணி கங்கையாகவும், வில்வ தீர்த்தம் யமுனையாகவும், சம்பு தீர்த்தம் சரஸ்வதியாகவும், பகுள தீர்த்தம் கோதாவரியாகவும், பலாச தீர்த்தம் கிருஷ்ணாவாகவும், அசுவ தீர்த்தம் நர்மதாவாகவும், ஆம்ர தீர்த்தம் துங்கபத்ராவாகவும், கதம்ப தீர்த்தம் கண்டகி நதியாகவும், புன்னாக தீர்த்தம் காவிரியின் வடிவாகவும் இங்கு போற்றப்படுகின்றன. விண்ணகத்து லோகங்களும், மண்ணகத்து நதிகளும் ஒருசேர அமைந்திருக்கும் புண்ணியத்தலம் திருவரங்கம்.


'இந்திரப்பதவி தரினும் வேண்டேன், இந்த அரங்கமாநகரத்து ஆலயம் போதும்' என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பெருமைக்குரிய ஆலயத்தில் மாசி மாத தெப்பத்திருவிழாவைக் காண்பது சிறப்பானது. அதிலும், நாளைய கருட வாகனச் சேவையைத் தரிசித்தால் மனதில் மண்டியிருக்கும் அச்சங்கள் அகலும். முதலையிடம் சிக்கிய கஜேந்திரனைக் காத்த மூர்த்தியல்லவா அந்தக் கருட வாகனர். உங்களின் அச்சமும், அறியாமையும் நீங்க நாளை திருவரங்க கருட வாகனரை தரிசித்து பலன் பெறலாம்.