Published:Updated:

`நந்தவனத்திலோர் ஆண்டி’ தத்துவம் சொன்ன கடுவெளிச் சித்தரின் கதை! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 14

`நந்தவனத்திலோர் ஆண்டி’ தத்துவம் சொன்ன கடுவெளிச் சித்தரின் கதை! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 14
`நந்தவனத்திலோர் ஆண்டி’ தத்துவம் சொன்ன கடுவெளிச் சித்தரின் கதை! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - 14

நந்தவனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

                                                       -கடுவெளிச்சித்தர்
பொருள்:
பத்து மாதம் தவம் செய்து பெற்ற தோண்டி என்பது குழந்தை. ஆண்டி என்னும் மனிதன் ஆடும் கூத்துதான் இந்த மானுட வாழ்வு. தோண்டியைப் போட்டு உடைத்தல் என்பது வாழ்க்கையின் முடிவு! இந்த உடல் நலமாக உள்ளபோதே ஆன்மா கடைத்தேறும் வழியைத் தேட வேண்டும் என்பதே உட்பொருள்!

அந்த ஊரின் குடிமக்களில் அவனும் ஒருவன். எப்போதும் சிரிப்பான். ஏதேனும் பிதற்றுவான். நாட்டுப்புறச் சந்தங்களில் பொருளற்ற வார்த்தைகளால் ஏதேதோ கிறுக்குப் பாடல்கள் பாடுவான். ஊருக்குள் அவன் ஓர் ஆண்டி. பசிக்கும் போது கால்போன போக்கில் ஊரிலுள்ள சில வீடுகளில் பிச்சை எடுத்து உண்பான். பொதுவெளிகளில் நேரம் காலமின்றி படுத்து உறங்குவான்.

ஆண்டி ஒரு நாள் ஊரிலுள்ளகோயில் நந்தவனத்துக்குள் புகுந்து விடுகிறான். கோயிலில் நந்தவனம் அமைத்து, வண்ண வண்ணமான மலர்களைத் தரும் செடிகளை நட்டு வளர்க்கிறான். அவற்றின் வாசனையை ஆர்வமுடன் முகர்கிறான். 'இந்தப் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால் என்ன' என்ற எண்ணம் அப்போது அவனுக்குள் எழுகிறது. உடனடியாக ஊருக்கு வெளியிலுள்ள குயவனின் வீட்டுக்குச் செல்கிறான். ஒரு தோண்டி வேண்டும் எனக் கேட்கிறான். குயவனோ ''தோண்டியின் விலை இரண்டணா... காசு கொடுத்தால் உனக்குத் தோண்டி தருவேன்!" என்கிறான்.

கடுவெளி பரமானந்தநாதரின் ஆலயச் சிறப்புகள்...

சிறிய அகல்விளக்கின் தீபம் தூரத்திலிருந்து பார்க்கும்போது பெரிய தீபமாக தெரிவது கடுவெளியின் அற்புதக் காட்சி...
கடுவெளிச்சித்தரின் நெடுந்தவம் மெச்சி சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து காட்சி கொடுத்த திருத்தலம்.
சூரிய கிரஹதோஷங்களும், பித்ரு தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு அமைய ஒரு மோட்ச தீபம் போதும் என்பது கடுவெளி பரமானந்தநாதரின் ஆலயச் சிறப்பு.


ஆண்டியிடம் காசு இல்லை. ஆனாலும் அவன் தன் முயற்சியை மட்டும் விடவில்லை. குயவனின் மனம் ஒரு நாள் இரங்கும் என்ற நம்பிக்கையில், தொடர்ந்து பல மாதங்கள் அவன் குயவனிடம் செல்கிறான். வெறுங்கையோடு திரும்பி வருகிறான்.

இந்தக் கதை பல மாதங்கள் நடக்கிறது. அதன் பின் ஆண்டியின் முயற்சிக்கு ஒரு நாள் வெற்றி கிடைக்கிறது. குயவன் அவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்கிறாள். இறைவனின் நந்தவனத்துக்கு நீர் ஊற்றத்தானே ஆண்டி தன்னிடம் தோண்டி கேட்கிறான் என நினைத்து, மகிழ்ச்சியுடன் அவனிடம் ஒரு தோண்டியை எடுத்துக்கொடுக்கிறான். ஆண்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை தோண்டியைத் தலையில் வைத்து ஆடிக்கொண்டே நந்தவனத்துக்கு வருகிறான். நந்தவனத்துக்குள் வந்து, அங்கிருக்கும் குளத்தில் செடிகளுக்கு நீர் எடுக்கலாம் என நினைக்கும்போது தோண்டி கைதவறி கீழே விழுந்து உடைகிறது.

ஆனால், தோண்டி விழுந்து உடைந்துவிட்டதைப் பார்த்து ஆண்டி ஆழவில்லை. மாறாக சிரிக்கத் தொடங்குகிறான். சிரித்தபடியே பாடிய பாடல்தான் மேலே நாம் கண்ட பாடல். 'இந்த உடல் நலமாக உள்ளபோதே ஆன்மா கடைத்தேறும் வழியை நீ அறிய வேண்டாமா?' என மனிதர்களைப் பார்த்து இடித்துரைக்கிறார்  சித்தர் கடுவெளியார். 'கடுவெளி' எனில், எல்லையற்று விரிந்த பிரபந்தப் பெருவெளி என்பது பொருள். தன் பாடல்களில் கடுவெளி பற்றி அதிகம் பேசியதால் இவர் கடுவெளிச் சித்தர் என அழைக்கப்பட்டார்.

'கடுவெளி' எனும் சொல்லுக்குப் பரவெளி, உச்சவெளி, வெட்டவெளி, ஆகாயவெளி, சிதாகாசவெளி, பிரபஞ்சவெளி, பேரண்டப் பெருவெளி எனப் பல அர்த்தங்கள் உண்டு. அகம் எனில் உள்ளே; பரம் எனில் வெளியே. உள்ளும் புறமும் ஒருமிக்கும் சக்தியே நிறைந்துள்ளது. அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் இருக்கிறது. ஆகவே, பரமாத்மாவுடன் ஜீவாத்மாவை உரிய சாதகம் செய்து ஒன்றிணைக்கும் தத்துவமே ஞானப்பெருநிலை! இதையே சித்தர்கள் அனைவரும் வெட்டவெளி, சூன்யம், சும்மா, பால்வெளி எனப் பல்வேறு சொற்களால் குறிப்பிடுகின்றனர்.

கடுவெளிச்சித்தர் அவதரித்து வாழ்ந்த காலம் கி.பி. 15-ம் நூற்றாண்டு எனக் கூறப்படுகின்றது. சிவலிங்கம் பிளவுபட்டு, அதிலிருந்து சிவபெருமான் காட்சி கொடுத்ததாகப் பல புராணங்களில் நாம் படித்திருக்கிறோம். திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் திருத்தலத்தில், கடுவெளிச்சித்தர் சிவபெருமானைத் துதித்து மனமுருகி தியானம் செய்தபோது, உள்ளம் மகிழ்ந்த எம்பெருமான் கடுவெளியில் உள்ள சிவலிங்கத்தை இரண்டாகப் பிளந்து 'திருவிளையாடல்' நிகழ்த்தியதாக ஓர் ஐதிகம் இப்போதும் இந்தப் பிளவுபட்ட சிவலிங்கம் கடுவெளியில் உள்ளது.

இந்தத் தத்துவத்தை விளக்கும் ஒரு திருமந்திரப் பாடல் உண்டு.

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை
செல்லும் அளவும் செலுத்துமன் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆகுமே!

கல்போன்று இறுகியிருக்கும் மனதை இளக்கினால், தவம் செய்தால், மாசு மருக்களை அகற்றினால், அத்தகைய மன அழுக்காறுகள் என்னும் இருள் நீங்கி, அதனுள் ஞானப்பிரகாசம் என்னும் பெருவெளி சித்திக்கும் என்பதே இந்தப் பாடலின் பொருள். கடுவெளிச்சித்தரின் ஆழ்தியானமே கடுவெளி சிவனை மனமுருக்கி இரண்டாகப் பிளக்கச் செய்தது என்பர்.

சித்தர் கடுவெளியாரின் சீரிய சிவ தியானத்தை எண்ணியவாறே நாம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தோம். எடையூர் - சங்கேத்தியை அடைந்தோம். எடையூர் கடைத்தெருவிலிருந்து மூன்று கி.மீ.தொலைவில் உள்ளது கடுவெளி.
கடுவெளிச்சித்தர் வாழ்ந்து ஜீவசமாதி ஆனதால், இவ்வூரின் பெயர் 'கடுவெளிச்சித்தராலத்தூர்'. கால ஓட்டத்தில் மருவி 'கடுவெளிச் சித்தாலத்தூர்' என ஆனது.


கடுவெளிச்சித்தரின் ஜீவ சமாதியின் மேல், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பிறவிப் பிணி தீர்க்கும் பரமானந்தநாதர் என்பது கடுவெளியில் அருளும் ஈசனின் திருப்பெயர். 'மோனப் பரவெளியில் ஆனந்தமாகப் பரவியிருக்கும் ஈசன்' என்னும் பெயர் கொண்ட சிவனுடன் வாலாம்பிகை என்னும் திருநாமம் கொண்ட சக்திதேவி உடனுறைந்திருக்கிறாள். அங்கிருந்து கிழக்கே சித்தி விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது. மேற்கு நோக்கிய சந்நிதிக்குப் பின்புறம் ஆலயத் தீர்த்தமாக சிவலிங்கத்தடி திருக்குளம் உள்ளது. பிளவுபட்ட சிவலிங்கமும் சித்தர் கடுவெளியின் சிலையும் எண்ணற்ற இறை அதிர்வுகளை ஏற்படுத்தியவாறு, தேடிவரும் பக்தர்களுக்கும் அடியார்களுக்கும் அருள்பாலித்து வருகிறது.

கோயில் வளாகத்தில் வில்வம், மாவிலங்கண், நொச்சி, கிளுவை ஆகிய தருக்களும் தலவிருட்சங்களாகக் காட்சி தருவது தனிச்சிறப்பு. மேலும் சிவனுக்கு உகந்த கொன்றை, நாகலிங்கம், இலுப்பை ஆகிய மரங்களும் இங்கே உயிர்க்காற்றை வெளியிடுகின்றன.
முற்றிலும் சிதிலமடைந்த வாலாம்பிகையின் சிலை இந்தக் கோயிலின் பழைமையைப் பறைசாற்றுகிறது. கடைசியாக குடமுழுக்கு எப்போது நடைபெற்றது என்ற தகவல் இல்லை. இப்போதுதான் சிவாலயமும் கடுவெளிச்சித்தர் தியான மண்டபமும் கட்டும் பணிகள் மெள்ள மெள்ள நடைபெற்று வருகின்றன.

ஒரு சிறிய அகல்விளக்கில் தீபம் ஏற்றி கடுவெளிச்சித்தரின் ஜீவசமாதியில் வழிபடும்போது, தூரத்திலிருந்து பார்த்தால் அது பெரிய அளவிலான தீபமாகத் தெரிகிறது  என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். பூஜையின்போது பூசாரி சங்கு ஊதுவது அங்குள்ள பைரவர் ஊதுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. கடுவெளியில் உள்ளது கடுவெளிச்சித்தரின் ஒளிசமாதி என்ற நம்பிக்கையும் ஒரு சிலரிடம் நிலவுகிறது.

சித்தர்கள் வழிபடும் வாலையே இங்கு வாலாம்பிகையாக எழுந்தருளியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. வாலையின் ஆற்றலும் இந்த ஆலயத்தில் கூடுதல் இறை அதிர்வுகளை ஏற்படுத்துவதாக உள்ளூர் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். பௌர்ணமி இரவுகளில் பல வெளியூர் பக்தர்கள் கடுவெளியின் வெட்டவெளியில் பால் நிலா தியானத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது எண்ணும் காரியங்கள் கை கூடுகிறது என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

loading...


கடுவெளி என்னும் வெட்டவெளி சூரிய கிரகத்துக்கு உரியது என்றும், அதனால் பரமநாதரையும் கடுவெளிச்சித்தரையும் மோட்ச தீபம் ஏற்றி வணங்கினால், சூரிய கிரக தோஷங்களும் பித்ரு தோஷங்களும் நீங்கும் என்பது கடுவெளியில் நிலவும் நம்பிக்கையில் ஒன்று...


-பயணம் தொடரும்..