Published:Updated:

அரவணைக்கும் காற்று, சந்திரனின் குளிர்ச்சி போன்றது பாபாவின் கருணை! #saibaba

அரவணைக்கும் காற்று, சந்திரனின் குளிர்ச்சி போன்றது பாபாவின் கருணை!  #saibaba
அரவணைக்கும் காற்று, சந்திரனின் குளிர்ச்சி போன்றது பாபாவின் கருணை! #saibaba

சாய்பாபா கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக அவதரித்தவர். எவரிடமும் பேதம் பாராட்டாமல் கருணை மழை பொழிந்தவர். பொருள் வேண்டி வருவோர்க்குப் பொருளும், ஞானம் வேண்டி வருவோர்க்கு ஞானமும் அருளிய கருணைக்கடல் சாய்பாபா. அவருடைய அருள் ஒன்றே நம்முடைய கர்ம வினைகளையெல்லாம் இல்லாமல் செய்யும். நம்முடைய கஷ்டங்களுக்கான காரணங்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அறிந்தவர் சாய்பாபா. நம்முடைய பிரச்னைகளிலிருந்து விடுபட ஒரே வழி, அவருடைய திருவடிகளில் சரண் அடைவதுதான்.

நாராயண்காங்க் என்ற ஊரில் வசித்த பீமாஜி பட்டேல் என்பவர், தீவிரமான காசநோயால் பீடிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டார். எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்து, பல மருந்துகளை எடுத்துக்கொண்டும் நோய் குணமாகவில்லை. நோயின் கடுமை காரணமாக அடிக்கடி ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். என்ன செய்வது என்று அறியாமல் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். தன்னுடைய முடிவு எப்போது வருமோ என்ற கவலையில் இருந்த பீமாஜி பட்டேலை, ஷீரடி சாய்பாபாவிடம் செல்லும்படி வலியுறுத்தினார் நானா சாஹேப் சாந்தோர்க்கர். நானாவும் ஷாமாவும் அவரை ஷீரடிக்கு அழைத்து வந்தனர். 

முதலில் பாபா அவரைக் குணப்படுத்த இசையவில்லை. பீமாஜி பட்டேல் முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமாகவே அவர் இப்படி அவதியுறுகிறார் என்றும், அதில் தாம் தலையிட விரும்பவில்லை என்றும் கூறி மறுத்துவிட்டார். ஆனால், நோயாளியோ தாம் ஆதரற்றவர் என்றும், பாபாவையே சரணாகதி அடைந்திருப்பதாகவும் கூறி அவரின் பாதத்தடியில் வீழ்ந்தார். 

தம்மிடமே பரிபூரணமாக சரணடைந்துவிட்ட பீமாஜி பட்டேலிடம் பாபாவுக்குக் கருணை ஏற்பட்டது. 

அதுவரை அடிக்கடி ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார் பீமாஜி பட்டேல். பாபாவின் கருணைப் பார்வை அவர்மீது பட்டதுமே ரத்த வாந்தி எடுப்பது நின்றுவிட்டது. தொடர்ந்து பின்வருமாறு கூறினார்...

"இந்த துவாரகாமாயியில் பாதம் வைத்தவுடன் உன்னுடைய அனைத்துத் துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. இங்குள்ள பக்கீர் மிகவும் கருணையுள்ளவர். அவர் உனது நோயினைக் குணப்படுத்துவார்'' என்று கூறி பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

இவ்வாறு பாபா ஆசி வழங்கிய உடனே பீமாஜி பட்டேல் மெள்ள மெள்ள குணமடையத் தொடங்கினார். தொடர்ந்து அவரை பீமாபாயின் வீட்டில் தங்கியிருக்கும்படி கூறினார் அவர். முற்றிலும் சுகாதாரமற்ற அந்த வீடு, காசநோயால் அவதிப்படும் பீமாஜி பட்டேலுக்கு ஏற்ற இடமல்ல. இருந்தாலும், பாபா சொன்னதன் காரணமாக அவர் அந்த வீட்டில் தங்கினார். அங்கே இரண்டு கனவுகளின் மூலமாக அவரை குணப்படுத்தினார். முதலில் தன்னை ஒரு பையனாகவும், மராட்டிய செய்யுள் ஒப்பிக்காததால், ஆசிரியரிடம் அடி வாங்குவதாகவும் கனவு கண்டார். அடுத்த கனவில், யாரோ ஒருவர் தன் நெஞ்சின் மீது ஒரு பெரிய கல்லை வைத்து, மேலும் கீழுமாக உருட்டுவதுபோலவும், கடுமையான வலி ஏற்படுவதுபோலவும் கனவு கண்டார். 

அதன் பிறகு நோயாளி பூரண குணமடைந்தார். அவர் பாபாவிடம் ஆசி பெற்று தனது சொந்த கிராமத்துக்குச் சென்றார். அவரது கிராமத்தில் வியாக்கிழமைதோறும் சத்யநாராயண பூஜை அனுஷ்டிப்பது வழக்கம்.

ஆனால், பீமாஜி பட்டேல் சத்யநாராயண பூஜைக்குப் பதிலாக சாயி சத்ய விரத பூஜையைத் தொடங்கினார்.

வாயில்லாத பிராணிகளிடமும் கருணை...

அந்த கருணை, இயற்கையின் கொடைகளான மழை, சூரிய ஒளி, சந்திரனின் குளிர்ச்சி, அரவணைக்கும் காற்று ஆகியவற்றைப் போன்றது. இயற்கையின் கொடைகள் எப்படி எவரிடமும் பேதம் பார்ப்பதில்லையோ அப்படியே சாய்பாபாவும் எவரிடமும் பேதம் பார்ப்பதில்லை. அவருடைய கருணை அனைவரிடமும் சமமாகவே இருந்தது.

அவர் மனிதர்கள் மீது மட்டுமின்றி வாயில்லா ஜீவன்கள் மீதும் கருணை கொண்டிருந்தார். அதைப் பின்வரும் சம்பவம் உணர்த்துகிறது.

1932-ம் ஆண்டு ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும், நெற்றியில் சூலம் குறியாக அணிவிக்கப்பட்டதுமான காளை ஒன்று ஷீரடியில் இருந்தது. ஒருநாள் உள்ளூர் பூங்காவுக்குச் சென்று அங்கிருந்த அனைத்தையும் மேய்ந்துவிட்டது. காளையின் அந்தச் செயலைப் பொறுக்காத சிலர், அதைப் பிடித்துக் கட்டி வைத்தனர். பிறகு ஒரு நபரின் மூலம்  ஏவோலா என்னும் இடத்தில் இருக்கும் கொட்டடிக்கு அனுப்பி வைத்தனர்.

அன்றிரவு அப்பாஜி பட்டேல் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் பாபா தோன்றி, 'தான் ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் விற்கப்பட்டிருப்பதாகவும், தன்னை வந்து விடுவிக்குமாறும்' கூறினார். பாபா சொல்வதன் அர்த்தம் அவருக்குப் புரியவில்லை. என்றாலும், அவர் கூறியபடி  அப்பாஜி பட்டேல் உடனே ஏவோலாவுக்குச் சென்று பார்த்தபோது, கொட்டடிக்கு அனுப்பப்பட்டிருந்த காளை அங்கு கட்டப்பட்டிருந்ததைக் கண்டார். பாபா தாம் கட்டப்பட்டிருப்பதாகக் கூறியது அந்தக் காளையைத்தான் என்பதையும், அந்தக் காளையைக் காப்பாற்றவே பாபா தம்மை அங்கே அனுப்பியிருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டார். பாபாவின் உத்தரவின்படி அங்கிருந்த காளையை விடுவித்துக் கொட்டகையில் சேர்ப்பித்தார். மேலும், காளையை கசாப்புக்காரருக்கு விற்றுவிட்டவனுக்கு இரண்டு மாதம் சிறை தண்டனையும் விதித்தார். இப்படி கசாப்புக் கடைக்காரரிடம் விற்கப்பட்டு கொல்லப்பட இருந்த காளையை பாபா தம்முடைய கருணையினால் காப்பாற்றி அருளினார்.
 

சாய்பாபா பற்றி மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...