Published:Updated:

ராமனைவிட ராமநாமம் உயர்ந்தது ஏன்?- ஶ்ரீராமநவமி சிறப்புப் பகிர்வு! #SriRamaNavami

ராமனைவிட ராமநாமம் உயர்ந்தது ஏன்?- ஶ்ரீராமநவமி சிறப்புப் பகிர்வு! #SriRamaNavami
ராமனைவிட ராமநாமம் உயர்ந்தது ஏன்?- ஶ்ரீராமநவமி சிறப்புப் பகிர்வு! #SriRamaNavami

காவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், பத்து அவதாரங்களை முக்கியமானதாகப் போற்றுகிறார்கள் வைணவர்கள். அந்தப் பத்து அவதாரங்களிலும், ஶ்ரீராமனையும் ஶ்ரீகிருஷ்ணனையும்தான் பெரிதும் வழிபடுகிறார்கள். அதற்குக் காரணம், மனிதனாக அவதாரம் எடுத்திருந்தாலும், தெய்வநிலையிலேயே வாழ்ந்ததற்கு பகவான் ஶ்ரீகிருஷ்ணனே சிறந்த உதாரணம். மனிதனாகப் பிறந்து, தர்ம நெறியின் பாதையில் தெய்வாம்ச நிலையை அடைவதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ஶ்ரீராமனே. அந்த ஶ்ரீராமனின் அவதார தினம் நாளை (25-03-2018) ஶ்ரீ ராமநவமி. `அவரது பாதங்களைப் பற்றி, பேரின்பநிலையை அடைய, ராம நாமத்தை நாளும் உச்சரித்தாலே போதும்’ என்கிறார்கள், ஆன்மிக அன்பர்கள். ராமநாமம் ஏன் அத்தனை உயர்ந்தது என்பது பற்றி வைணவ ஆச்சார்யர் வாசஸ்பதி அனந்தபத்மநாப சுவாமிகளிடம் கேட்டோம்...

`பகவானைவிட உயர்ந்தது இந்த உலகில் ஏதாவது உண்டா?’ என்று கேள்விகேட்டால், 'எதுவுமில்லை' என்பதாகத்தான் பதில் வரும். ஆனால் பகவான், ராமாவதாரம் எடுத்தபோது ராமனைவிட உயர்ந்த ஒன்றை விசுவாமித்திர மகரிஷி கண்டுணர்ந்து உலகுக்கு வெளியிட்டார்.

`விச்வம்’ என்றால் பகவான் மஹாவிஷ்ணு அல்லது மஹாலஷ்மி, அல்லது இந்த உலகம் என்பது பொருள். `மித்ரம்’ என்றால் நண்பர். ராமன், சீதை இருவருக்கும் மணம் முடித்த காரணத்தால் அவர்கள் இருவரின் நண்பர் விசுவாமித்திரர். இந்த உலகுக்குப் பல நன்மைகளைச் செய்ததாலும் விசுவாமித்திரர், உலகத்து மக்களுக்கெல்லாம் சிறந்த நண்பரானார்.

அப்படியென்ன கண்டுபிடித்தார்... அதைப் பார்க்கலாம். `கருவனம்’ என்னும் சித்த ஆசிரமத்தில் தான் இயற்றும் வேள்வியைக் காக்க `ராமனைக் கொடு’... என தசரதனிடம் வேண்டினார் . பலமுறை தயங்கியும், பின்னர் குலகுரு வசிஷ்டரின் வார்த்தையால் தெளிந்ததும் மகரிஷியுடன் ராமனையும் லட்சுமணனையும் அனுப்பிவைத்தார் தசரத சக்கரவர்த்தி.

வசிஷ்டர், விசுவாமித்திரர் இருவரும் எந்த விஷயத்திலும் ஒன்றிணைந்து போக மாட்டார்கள். ஆனால், இங்கு ராமனின் மேன்மையை உலகுக்கு உணர்த்த இரு மகரிஷிகளும் கூட்டணியாகச் செயல்பட்டனர். காரியம் முடிந்தவுடன் விசுவாமித்திரர்; ராமனைப் பெற்றவுடன், வசிஷ்டரிடம்கூட சொல்லாமல் கிளம்பிவிட்டார்.

வெகு வேகமான நடைப்பயணம். அரண்மனையிலிருந்து ராம- லட்சுமணர்கள் பின்தொடர, சரயூ நதியின் தென்கரைக்கு வந்தவர் முதன்முதலாகத் திரும்பி, 'ராமா...' என்று அழைத்தார்.

அரண்மனையிலிருந்து புறப்பட்டதிலிருந்து ராமனைத் திரும்பியும் பார்க்கவில்லை. அழைக்கவுமில்லை. இதுவரை வாய் திறவாதவர் மெய்சிலிர்த்து, கண்களில் நீர்வழிய, உள்ளம் நடுங்க தழுதழுத்த குரலுடன் இனிமையாக `ராம...' என்றார். ஏன்?

சுவையான ஆராய்ச்சியொன்றின் முடிவை அறிஞர்கள் வெளியிடுகின்றனர். வசிஷ்டர் குழந்தைக்குப் பெயர் வைத்தார். அவரோ குலகுரு. ராமனின் ஆசார்யர். அதேபோன்று இனி தானும் ராமனின் ஆசார்யராகப் போகிறேன். அதனால் வசிஷ்டர் வைத்த திருநாமத்தைவிட அழகிய வேறு திருநாமத்தைத்தான் சூட்ட வேண்டும். அதுகொண்டே ராமனை அழைக்க வேண்டும் என்று தீர்மானித்தவராக பலமுறை பகவானின் ஆயிரம் நாமங்களை சொல்லிக்கொண்டே வந்தார்.

ஆனால், அதில் எதுவுமே இவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. 'ராம' எனும் இரண்டெழுத்தின் இனிமைக்கு வேறொன்றும் ஈடாகவில்லை என்றுணர்ந்தவராக மனது நிறைந்த பூரிப்புடன் வாய்நிறைய 'ராம' என்றழைத்தார்.

மஹாவிஷ்ணுவின் சிறந்த ஆயிரம் நாமங்களுள் எது சிறந்தது என்று சிவபெருமானை, பார்வதி கேட்கிறார். அதற்கு 'ராம' எனும் திருநாமம் ஆயிரம் நாமங்களை ஜபிப்பதன் பலனைத் தரவல்லது' என்றார் சிவபெருமான்.

அதனால்தான் ராமனைவிட 'ராம நாமம்' மேன்மையானது. உலகில் ஒருவரிடம் கட்டித்தங்கம் உள்ளது. ஆனால், அவரின் அவசரத் தேவைக்கு அதைக் கொண்டு ஆபரணம் செய்ய முடியுமா? மற்றொருவரிடம் ஆபரணத்தங்கம் உள்ளது. உடனடியாக தனக்குத் தேவையான நகைகளை அவர் செய்துகொள்ள இயலுமல்லவா! அதைப் போன்றதுதான் பெருமாள் ராமன், கட்டித்தங்கம். ஆனால் அவனின் திருநாமம் 'ராம' என்பது ஆபரணத்தங்கம் போன்று நாம் அணிந்து அழகு பார்ப்பதற்கு ஏற்றது.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே...

ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே...

இம்மையே ராம எனும் இரண்டெழுத்தினால்...'' என்கிறார் அனந்த பதமநாப சுவாமிகள்.