Published:Updated:

போரில் அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தபோதும்... அர்ஜுனன் தேர் எரிந்தது ஏன்?

போரில் அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தபோதும்... அர்ஜுனன் தேர் எரிந்தது ஏன்?
போரில் அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தபோதும்... அர்ஜுனன் தேர் எரிந்தது ஏன்?

குருக்ஷேத்திரப்போர் முடிந்துவிட்டது. தர்மம் அதர்மத்தை வென்றுவிட்டது. கௌரவர்களை அழித்துப் பாண்டவர்கள் தர்மபுத்திரர் தலைமையில் தர்மராஜ்யம் ஸ்தாபிக்கும் நன்னாள் பிறந்துவிட்டது. பதினெட்டாம் நாள் போர் முடிந்து சூரியன் அஸ்தமிக்கும் வேளை. அந்தக் கால முறைப்படி வெற்றி பெற்ற மன்னர்கள், மகாரதர்கள் தங்கள் வீரத்திற்கு மரியாதை பெறும் சடங்கு நிகழ வேண்டியிருந்தது.

அவரவர்களின் தேரோட்டிகள் கீழிறங்கி, ரதத்தை வலம் வந்து தரையில் மண்டியிட்டு நிற்க, மகாரதர்களும், மன்னர்களும் தேரிலிருந்து இறங்கி வந்து மலர்மாலைகளை ஏற்று, மக்கள் ஆரவாரத்தைக் கேட்டு மகிழ்ச்சியடையும் நேரம் அது. பாண்டவர்களின் ரதங்கள் வரிசையாக வந்து நிற்கின்றன. யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுல, சகாதேவர்கள் ரதங்களில் வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. 

யுதிஷ்டிரரின் தேர்ப்பாகன் தேரினின்றும் இறங்கி, தேரை வலம் வந்து மண்டியிட்டு மன்னன் யுதிஷ்டிரன் பாதம் பணிந்து நிற்கிறான். யுதிஷ்டிரன் கீழே இறங்கியதும் அவனுக்கு மாலை அணிவித்து 'யுதிஷ்டிரர் வாழ்க' என்று குரல் எழுப்புகிறான். 'வாழ்க வாழ்க' என்று மக்களின் வாழ்த்தொலி வானைப் பிளக்கிறது.

அடுத்து பீமனின் ரதம். பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணமான வீரனல்லவா? துரியோதனனின் தொடையைப் பிளந்தவனல்லவா? மரியாதை சற்று அதிகமாகவே கிடைக்கிறது.

அடுத்து, அர்ஜுனன் ரதம், தேர்ப்பாகன் சாதாரணமானவனா? துவாரகாதிபதி ஶ்ரீகிருஷ்ணன் அல்லவா? பாண்டவர்களும், கௌரவர் களும் பகவானின் அவதாரம் என்று போற்றிப் புகழ்ந்த புண்ணிய புருஷனல்லவா அவனுக்குத் தேரோட்டி! பின் பெருமையிருக்காதா அர்ஜுனனுக்கு? யாருக்கும் கிடைக்காத பெரும்புகழும் பாக்கியமும் தனக்குக் கிடைக்கப்போவதை எண்ணிப் பூரித்தான். தலை கனத்தது. அஸ்திரமெல்லாம் கீழே விழ அஞ்சி நடுங்கி நின்ற நிலையில், ஆசானாக கீதோபதேசம் செய்த அண்ணலை அப்போது தேர்ப்பாகனாக மட்டுமே அவன் எண்ணினான். ஒருகணம் அறிவு மழுங்கி ஆணவம் மேலிட நின்றான்.

ஆனால், தேர்ப்பாகன் கண்ணன் கீழே இறங்கவில்லை. எங்கும் ஒரே அமைதி. அனைவர் மனதிலும் ஒருவித பரபரப்பு. அர்ஜுனன் ஒரு கணம் பொறுத்தான். அவன் அறியாமை அவனுள்ளே பேசியது; 'கர்மத்தைச் செய். பயனை எதிர்பாராதே என்று எனக்கு உபதேசித்தானே கண்ணன், இப்போது தான் மட்டும் தேர்ப்பாகனுக்கு உரிய கர்மத்தைச் செய்யாமல் விதிவிலக்குப் பெற நினைக்கிறானே?' என்று சிந்தித்தான்.

"அர்ஜுனா! நீ முதலில் இறங்கு. இந்தத் தேர் மற்றவர்களின் தேர்களிலிருந்து விதிவிலக்கு" என்ற ஆணை கண்ணனிடமிருந்து பிறந்தது. கண்ணனின் ஆணையை மீறி அறியாதவன் அர்ஜுனன். தேரிலிருந்து இறங்கிவிட்டான்.

கண்ணன் ஏதுமறியாதவன் போல தேரிலிருந்து இறங்கினான். அவ்வளவுதான், அர்ஜுனனின் தேர் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அனைவர் முகத்திலும் அதிர்ச்சி. கண்ணன் பேசினான்.

"அர்ஜுனா, எதிரிகள் உன் ரதத்தின் மீது ஏவிய மந்திர சக்திகளெல்லாம் நான் அமர்ந்திருந்த காரணத்தினால் பலனற்று இருந்தது. உன் தேரின் முடிவுக் காலத்தைத் தெரிந்துகொண்டுதான் உன்னை முதலில் இறங்கச் சொன்னேன். நான் முதலில் இறங்கியிருந்தால், இந்தத் தீயினின்றும் உன்னைக் காப்பாற்ற வேண்டிய நிலை வந்திருக்கும். இப்போதும் உன்னைக் காக்கவே நான் சம்பிரதாயச் சடங்குகளை மீறினேனே தவிர, தேரோட்டியின் கடமையைச் செய்யத் தயங்கியதால் அல்ல. சற்று நில், உன்னை வலம் வந்து மாலையிடுகிறேன்!" என்றான்.

ஆனால், தன்னுடைய அகந்தையையும் அறியாமையையும் எண்ணி வெட்கித் தலைகுனிந்த அர்ஜுனன், கண்ணனின் கால்களில் விழுந்து வணங்கினான். கண்ணனும் அவனை வாரியணைத்துக்கொண்டார். கூடியிருந்தவர்களெல்லாம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.