Published:Updated:

``மன நிம்மதி கிடைக்க 35 ரூபாய் காணிக்கை வேண்டும்!’’ - பாபாவின் அருளாடல் #SaiBaba

``மன நிம்மதி கிடைக்க 35 ரூபாய் காணிக்கை வேண்டும்!’’ - பாபாவின் அருளாடல் #SaiBaba
``மன நிம்மதி கிடைக்க 35 ரூபாய் காணிக்கை வேண்டும்!’’ - பாபாவின் அருளாடல் #SaiBaba

ஷீரடி பாபா, 'மதங்களைக் கடந்த மகான்' என்று போற்றப்படுபவர். அவர், தம்மை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டதில்லை. தம்மை வழிபடும் பக்தர்கள்கூட, அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்றும் அவர் பார்ப்பதில்லை. அதன் காரணமாகத்தான் பாபா, மதங்களுக்கு அப்பாற்பட்டவராகப் போற்றப்படுகிறார். தம்மை வழிபடும் பக்தர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு அருள்புரிவதுடன், அவரவர்களுடைய மதக் கோட்பாடுகளையே பின்பற்றும்படி அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இதைப் பின்வரும் ஒரு சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

'என்னுடைய மகா சமாதிக்குப் பிறகும், நான் என் பக்தர்களுக்கு அருள்புரிவேன்' என்று பாபா கூறியிருப்பதை நிரூபிப்பதுபோல், இந்தச் சம்பவம்கூட பாபாவின் மகா சமாதிக்குப் பிறகுதான் நடைபெற்றது. 

சுராஜ்கோன் என்ற பக்தை ஜைன மதத்தைச் சார்ந்தவர். காம்போன் என்னும் இடத்தில் வசிக்கும் இவருக்கு பாபாவைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவளுடைய கணவர் உதாபூரில் வசித்து வந்தார். அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட கொடிய புண், அவருடைய உடல்நிலையை மிகவும் பாதித்தது. இதுபற்றி அறிந்துகொண்ட சுராஜ்கோன் மிகவும் வேதனை அடைந்தாள். தனது கணவரின் நிலையைக் கண்டு மிகுந்த கலக்கம் அடைந்தாள். ஒரு நாள் இரவு அவளுக்கு ஒரு கனவு ஏற்பட்டது. 

அவள் கண்ட கனவின் சாரம் இதுதான்...

அவளுடைய கணவர் இறந்துவிடுகிறார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் சுராஜ்கோனும் செல்கிறாள். அப்போது ஒரு மனிதர் எதிரில் வருகிறார். அவருடைய தேஜஸ் நிறைந்த முகத்தைக் கண்டு, அவர் பெரிய மகான் என்று தெரிந்துகொண்டதுடன் அவருடைய கால்களில் விழுந்து வணங்கினாள். அழுதபடி தன்னை வணங்கிய சுராஜ்கோனைத் தேற்றிய அந்த மகான், அவளுடைய கணவர் உயிர் பெற்று எழுவார் என்றும் தெரிவித்தார்.

அவளுக்கு இந்தக் கனவு தோன்றிய அதே தருணத்தில், அவளுடைய கணவர் வயிற்றில் ஏற்பட்ட கொடிய புண் மிகவும் முற்றிப்போய், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தார். பிழைப்பது கஷ்டம் என்று டாக்டர்களும் கைவிரித்துவிட்டனர். ஆனால், டாக்டர்களே அதிசயப்படும்படியாக அவருடைய வலி அடியோடு நீங்கியதுடன், பூரண நலமும் பெற்றார். இந்த விஷயத்தைப் பின்னர் தெரிந்துகொண்ட சுராஜ்கோன், தன் கனவில் தோன்றிய மகான்தான் தன்னுடைய கணவரின் உயிரைக் காப்பாற்றினார் என்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்று சில தினங்களுக்குப் பிறகு சுராஜ்கோன் தன்னுடைய தோழியின் வீட்டுக்குச் சென்றாள். அங்கே ஷீரடி பாபாவின் படம் இருப்பதைப் பார்த்தாள். தன் கனவில் தோன்றிய மகான் அவர்தான் என்பதைப் புரிந்துகொண்ட சுராஜ்கோன், தன் மதத்தினரின் எதிர்ப்புகளையும் மீறி, அவரை  வழிபடத் தொடங்கினாள். சில தினங்களுக்குப் பிறகு ஷீரடிக்கும் சென்று பாபாவை வழிபட்டாள்.

இரண்டாவது முறையாக அவள் ஷீரடிக்குச் சென்றிருந்தபோது மறுபடியும் அவளுக்கு ஒரு கனவு ஏற்பட்டது. அந்தக் கனவில் அவளுடைய மதத்தைச் சேர்ந்தவர்கள், 'சாயிநாத் போலேஜா' என்று பாடியபடி பாபாவை வலம் வந்து வழிபடுவதுபோல் கண்டாள். அவள் பாபாவை வழிபடுவதற்கு ஓர் எளிய மந்திரத்தை இந்தக் கனவின் மூலம் கூறி அருள் புரிந்தார் பாபா.

மறுபடியும் அவளுக்கு ஒரு கனவு ஏற்பட்டது. சுராஜ்கோன் பாபாவைச் சந்திக்கச் செல்கிறாள். அங்கே அவளுடைய மதத்தைச் சார்ந்த மகான்கள் பலர் குழுமியிருக்கிறார்கள். அவர்களுக்கு நடுநாயகமாக ஷீரடி பாபா வீற்றிருக்கிறார். அவள், தன் மதம் சார்ந்த ஒரு சந்தேகத்தை பாபாவிடம் கேட்கிறாள். பாபா அவளிடம், அவளுடைய மதகுருவான சந்த்நாத் பகவான் என்பவரிடம் சென்று கேட்கும்படிக் கட்டளையிட்டார். அவள் கண்ட இந்தக் கனவின் மூலம், ஒவ்வொருவரும் அவரவர் மதக் கோட்பாடுகளின்படியே நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், தங்கள் மத வழக்கத்துக்கேற்பத் தம்மை வழிபடலாம் என்பதையும் உணர்த்தினார்.

***

மற்றொரு பக்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவமும் இதையே குறிக்கிறது...

1960-ம் வருடம் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த குமாரி தத்தன் என்ற பெண்மணி இருந்தாள். அவள்  தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை துறவியாக மடத்திலேயே கழித்தவள். போகப் போக அவளுக்கு ஒரே அறையில் தங்கியிருப்பது எரிச்சலையூட்டியது. கடவுளுக்கு வழிபாடு செய்வதுகூட வெறும் கடமைக்காகச் செய்வதுபோல் தோன்றியது. அவள் அங்கிருந்து வெளியேறலாம் என்று எண்ணினாள். ஆனால், தனது மருமகனைத் தவிர வேறு உறவினர் யாரும் இல்லாத காரணத்தினால் அவளின் அந்த முடிவைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாள். இப்படியாக அவள் அமைதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தபோது, முஸ்லிம் துறவியைப் போன்ற ஒருவர் அவளிடம் வந்து, ``நீ மடத்தினைவிட்டு வெளியேறு. எல்லாம் உனக்கு நன்மையளிக்கும். உன்னுடைய மதக்கோட்பாடுகளின்படி நீ நடந்துகொள்வாய். உனக்கு மன நிம்மதி கிடைக்கும். நீ  உன்னிடமிருக்கும் 35 ரூபாயை எனக்கு காணிக்கையாக அளிப்பாயாக..." என்றார். 

அதற்கு அந்தப் பெண், ''இப்போது என்னிடம் பணம் எதுவும் இல்லையே. நான் எப்படி உங்களுக்குப் பணம் தர முடியும்?'' என்று கேட்டாள். 

அந்த பக்கீரோ, ''உன் அலமாரியில் நான் கேட்ட பணம் இருக்கிறது. அதை எடுத்துக் கொடு'' என்று கூறினார்.

அவளும் சென்று பார்த்தபோது, பக்கீர் குறிப்பிட்டது போலவே அங்கே 35 ரூபாய் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது அந்த பக்கீர் அங்கே இல்லை. ஆனால், அவர் கூறியபடியே அவள் மடத்தைவிட்டு வெளியேறினாள். செல்லும் வழியில் ஒரு கடையில் மாட்டப்பட்டிருந்த ஷீரடி பாபாவின் படத்தைப் பார்த்தவள் திகைத்துப் போனாள். தன்னை மடத்தைவிட்டுச் செல்லும்படி கூறிய பக்கீர் ஷீரடி பாபாதான் என்பதைப் புரிந்துகொண்டு, மானசீகமாக அவரை வணங்கினாள். அந்த பக்கீர் சொன்னதுபோலவே அவளுடைய மருமகன் அவளை நன்றாகப் பார்த்துக்கொண்டான். அவளும் பாபா கூறியபடியே தன் மதத்தைப் பின்பற்றி வாழ்ந்ததுடன், வழிபாடுகளையும் முழு ஈடுபாட்டுடனும் மனநிறைவுடனும் செய்து வந்தாள்.

இப்படி பாபா அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களையும் ஆதரித்தார்;  அவரவர்களுடைய மதங்கள் சொல்லும் முறைப்படி கடமைகளை நிறைவேற்றவும் அருள் புரிந்தார்.

சாயி பற்றி மேலும் அறிந்துக்கொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்...