Published:Updated:

வலி, வேதனையோடு வந்தவர்களுக்கு `கருணை’ மருந்து கொடுத்த பாபா! #SaiBaba

பாபாவின் `கருணை’ மருந்துகள்...

வலி, வேதனையோடு வந்தவர்களுக்கு `கருணை’ மருந்து கொடுத்த பாபா! #SaiBaba
வலி, வேதனையோடு வந்தவர்களுக்கு `கருணை’ மருந்து கொடுத்த பாபா! #SaiBaba

பாபாவின் மகிமைகள் அற்புதமானவை. மருத்துவர்களால்கூட குணப்படுத்த இயலாத நோய்களை பாபா தனது கருணை எனும் மருந்தினால் போக்கினார். அவரின் மருத்துவ முறை விசித்திரமானது. எதை அளித்தால் நோய் முற்றிவிடுமோ, அதைத் தந்தே அந்தந்த நோய்களை விரட்டியடித்தார். பின்வரும் கதைகளே அதற்கு உதாரணம்.

ஸ்ரீமான்பூட்டி என்பவர் சாய்பாபாவின் பக்தர். அவர் ஒருமுறை காலரா நோயால் மிகவும் அவதியுற்றார். பல மருத்துவர்களிடம் காட்டியும், ஏராளமான மருந்துகளை உட்கொண்டும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மருத்துவர் கைவிடும்போதுதான், நம் கண்களுக்குக் கடவுள் காட்சியளிக்கிறார். அதுபோலவே பூட்டியும் சாயிநாதரிடம் சென்று தனது நோயைக் குணப்படுத்துமாறு மனமுருகி வேண்டினார்.

பூட்டி மீது கருணைகொண்டார். சர்க்கரை கலந்த பாலில் வால்நட், பிஸ்தா போன்ற பருப்புகளைக் கலந்து, அதைப் பூட்டிக்கு அளித்து குடிக்கச் சொன்னார். அப்படிக் குடித்தால் நோய் முற்றிவிடும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரின் மீதிருந்த நம்பிக்கையால் பூட்டி பாலை அருந்தினார். பூட்டியைத் தாக்கிய நோய், அவரின் மகிமையால் பறந்தோடிவிட்டது. பூட்டியின் உடல்நலமும் தேறியது.

மற்றொரு சம்பவம்:

பாபாவின் மற்றொரு பக்தர் காகா மஹாஜனி. மசூதியின் தாழ்வாரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்குக் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால், தன் பணி தடைப்படக் கூடாது என்பதற்காக அது குறித்து அவர் யாரிடமும் கூறவில்லை.அவர் தன் நோயைக் குணப்படுத்துவார் என்று அமைதியாக இருந்துவிட்டார்.

எல்லோரும் அவரவர் பணியில் ஈடுபட்டிருந்தனர். எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று, அவர் கோபத்தில் சத்தம் போட்டுக் கத்தினார். என்னவென்று தெரியாததால், அருகிலிருந்தவர்கள் வேறுபக்கம் ஓடினார்கள். காகா, அவரை நோக்கிச் சென்றார். அப்போது, காகாவின் கையைப் பிடித்து தன் அருகில் அமர்த்திக்கொண்டார் பாபா.

பதற்றத்தில் யாரோ ஒருவர், அந்த இடத்தில் சிறிய நிலக்கடலைப் பையை கீழே போட்டு ஓடியிருந்தார். சாய்பாபா அந்தப் பையை எடுத்தார். அதிலிருந்த கடலைப்பருப்புகளின் தோலை ஊதி, சுத்தப்படுத்தினார். கொஞ்சம் பருப்புகளை தான் சாப்பிட்டு, காகாவுக்கும் கொடுத்து, சாப்பிடச் சொன்னார். பின்னர், காகாவைச் சிறிது தண்ணீர் எடுத்து வரச் சொல்லி அருந்தினார். பிறகு, காகாவையும் குடிக்கச் சொன்னார். இதற்குள் ஓடியவர்கள் எல்லாம் திரும்பிவந்துவிட்டனர்.

காகாவிடம், ``உன் வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது. நீ தாழ்வாரத்தின் பணியில் ஈடுபடலாம்” என்றார். பொதுவாக, மருத்துவப்படி நிலக்கடலை வயிற்றுப்போக்கை அதிகரித்துவிடும். நோயைக் குணப்படுத்தாது. ஆனால், பாபாவின் மீது பற்று வைத்திருந்ததால், நோய் குணமடைந்தது.

பாபாவின் அற்புதத்தை விளக்கும் மேலும் ஒரு சம்பவம்:

நானா என்னும் பக்தர் பாபாவின் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். அவருக்கு முதுகில் ஒரு கட்டி இருந்தது. அது மிகுந்த வலி கொடுத்தது. அவர் எவ்வளவோ மருந்துகளைச் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. வலியால் துடிதுடித்தார் நானா. `பக்தர்களின் வலியை, தான் எடுத்துக்கொண்டு, அவர்களைக் குணப்படுத்திவிடுவார் பாபா’ என்பதை நானா அறிந்திருந்தார். எனவே, அவர் பாபாவிடம் செல்லாமலேயே இருந்தார்.

கட்டியின் வலி தாங்க முடியாமல் தவித்தார் நானா. வேறுவழியின்றி, மருத்துவரை அணுகினார். அவரோ, ``அறுவைசிகிச்சை செய்வது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. ஆனால், அது மிகவும் ஆபத்தானது” என்று சொன்னார். இதைக் கேட்ட நானா மிகவும் பயந்து போனார். எனவே அவர் பாபாவின் படத்தைத் தன் தலையணைக்கு அடியில் வைத்து, படுத்துக்கொண்டார்.

மறுநாள் அறுவைசிகிச்சை ஆரம்பிப்பதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாக நானா குப்புறப்படுத்துக்கொண்டிருந்தார். அப்போது மேலிருந்து ஓர் ஓடு சரியாக அவர் முதுகிலிருந்த கட்டியின் மீது விழுந்தது; கட்டி உடைந்தது. ஓடு விழுந்ததால் ஏற்பட்ட வலியால் நானா அவதிப்பட்டார். மருத்துவர்கள் வந்து, அவரைச் சோதித்துப் பார்த்துவிட்டு ``இனி அறுவைசிகிச்சை அவசியமில்லை” என்று கூறியதைக் கேட்டு நானா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் சில நாள்கள் கழித்து பாபாவைத் தரிசிக்கச் சென்றார். அங்கே, பாபா அங்கிருந்தவர்களிடம், ``நானாவின் கட்டியை என் விரலால் அழுத்தி உடைத்துவிட்டேன்...” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இதைக் கேட்டதும் நானாவுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. அவர் பாபாவின் பாதத்தில் வீழ்ந்து, வணங்கினார்.

இப்படி பாபாவின் எத்தனையோ செயல்பாடுகள், மருத்துவர்களால் சிகிச்சையளிக்க முடியாத பல நோய்களைக் குணப்படுத்தியிருக்கின்றன. எனவே, பாபாவை வணங்குவோம்; அருளைப் பெறுவோம்!

சாயி பற்றி மேலும் அறிந்துகொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்...