Published:Updated:

லாரியில் வந்து பொக்லைன் மூலம் நிறுவப்பட்ட கருப்பண்ணசாமி அரிவாள்!

2 டன் இரும்பு... 2.50 லட்சம் செலவு... லாரியில் கொண்டு வரப்பட்டு பொக்லைன் மூலம் நிறுவப்பட்ட கருப்பண்ணசாமி அரிவாள்!

லாரியில் வந்து பொக்லைன் மூலம் நிறுவப்பட்ட கருப்பண்ணசாமி அரிவாள்!
லாரியில் வந்து பொக்லைன் மூலம் நிறுவப்பட்ட கருப்பண்ணசாமி அரிவாள்!

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மூடுபாறை கருப்பண்ணசாமி கோயிலுக்கு பக்தர் ஒருவர் 18 அடி உயர பிரமாண்ட அரிவாளை நேர்த்திக்கடனாகக் கொடுத்த சம்பவம், அப்பகுதி மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்துள்ள பழையகோட்டை ஊராட்சிப் பகுதியில் அமைந்திருக்கிறது மூடுபாறை கருப்பண்ணசாமி திருக்கோயில். சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமான இந்தக் கோயிலுக்குக் கடந்த வாரம் பக்தர் ஒருவர் 18 அடி உயரத்தில், 7 அடி அகலத்தில் சுமார் 2 டன் அளவு இரும்பினால் செய்யப்பட்ட பிரமாண்ட அரிவாளை நேர்த்திக்கடனாகக் கொடுத்திருந்தார். அந்த அரிவாள் கடந்த மே - 15 ம் தேதி பக்தர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரிவாளின் நடுப்பகுதியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் பூசியிருப்பதைப் போன்று பெயின்ட் அடிக்கப்பட்டு, அரிவாளின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் மணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அரிவாளைத் தாங்கிப்பிடிக்கும் வகையில் அதன் அருகே இரும்புத் தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2.5 லட்சம் செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த அரிவாளை பொக்லைன் இயந்திரம் மூலம் கோயில் ஊழியர்கள் நட்டு வைத்தபோது, அந்தப் பகுதி மக்கள் அந்தக் காட்சியைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள் .

அரிவாளை நேர்த்திக்கடனாகச் செலுத்திய ஈரோடு பக்தர் சுரேஷிடம் பேசினோம். ``இந்தத் திருக்கோயில் கருப்பண்ணசாமிதான் எங்களுக்குக் குலதெய்வம். கடந்த 5 வருஷங்களுக்கு முன்பு, நானும் என் தம்பி சரவணனும் சேர்ந்து எங்கள் ஊர் மாமரத்துப்பாளையத்தில் சொந்தமாக ஒரு பிரின்டிங் பட்டறையைத் தொடங்கினோம். அடுத்த 3 மாதத்திலேயே நான் ஒரு சாலை விபத்தில் சிக்கிவிட்டேன். உயிருக்கே ஆபத்தாகிவிட்டது. உடனடியாக என்னை ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள். அங்கிருந்த டாக்டர்கள் என் நிலைமையைப் பார்த்துவிட்டு, உயிர் பிழைப்பது ரொம்பக் கஷ்டம். கோயம்புத்தூரில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் பாருங்கன்னு சொல்லிட்டாங்க. அதன்பிறகுதான் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப்போய் சேர்த்தார்கள். உடனே ட்ரீட்மென்டும் ஆரம்பித்துவிட்டார்கள். ஒருபக்கம் நான் எப்படியாவது உயிர் பிழைக்கவேண்டுமென்று என் மனைவி நித்யாவும், தம்பி சரவணனும் கருப்பண்ணசாமிகிட்ட வேண்டிக்கொண்டார்கள். கிட்டத்தட்ட மருத்துவச் செலவே 20 லட்சம் வரை ஆனது. எப்படியோ ஒருவழியா உயிர் பிழைத்துவிட்டாலும், பழைய நிலைமைக்கு வர 1 வருடமாகி விட்டது.

 எனவே, என் மனைவியின் வேண்டுதல் பலித்ததற்குக் காரணமான எங்க குல தெய்வம் கருப்பண்ணசாமி கோயிலுக்கு, புதிதாக ஒரு அரிவாள் செய்து, நேர்த்திக்கடனா கொடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோயில் நிர்வாகத்திலும் அதற்கு சம்மதம் சொன்னார்கள்.

அப்போதுதான் மதுரைப் பக்கம் கார்த்திக்னு ஒருத்தர் ஏற்கெனவே கின்னஸ் சாதனைக்காக 33 - அடியில் ஓர் அரிவாளை உருவாக்கியிருப்பதாக நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. உடனே அவரிடம் பேசி, மதுரை திலகர் திடலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு வெல்டிங் லேத்ல நம்ம அரிவாளுக்கான ஆர்டரைக் கொடுத்தோம். சரியா 4 மாதத்தில் அரிவாளை நல்லபடியா செய்து கொடுத்தார்கள். அங்கே இருந்து லாரியில் வைத்து எடுத்துக்கொண்டு வந்தோம். சரியா வைகாசி 1-ம் தேதி சிறப்பு பூஜை நடத்தி, பொங்கல் வைத்து நம்ம அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஊர் மக்கள் எல்லாம் ஆச்சர்யத்தோட வந்து பார்த்தார்கள். தமிழ்நாட்டிலேயே அதிக எடையுள்ள அரிவாள் இதுதான். எங்கள் குலசாமிக்கு என்னால முடிந்த நேர்த்திக்கடன் இது. மனதுக்கு ரொம்பவும் நிம்மதியா இருக்கு சார்!'' என்றார் மகிழ்ச்சியுடன்.

கம்பீரமான கருப்பண்ணசாமிக்கு அரிவாள் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது !