Published:Updated:

மறுபிறவியை நம்பலாமா? - பிளேட்டோ முதல் பட்டினத்தார் வரை சொன்னது என்ன?

மறுபிறவியை நம்பலாமா? -  பிளேட்டோ முதல் பட்டினத்தார் வரை சொன்னது என்ன?
மறுபிறவியை நம்பலாமா? - பிளேட்டோ முதல் பட்டினத்தார் வரை சொன்னது என்ன?

`ம் முந்தைய கர்மவினைகளுக்கு ஏற்பவே நமக்கு மறுபிறவி ஏற்படுகிறது' என்பது இந்து மதத்தின் கோட்பாடு. பகவான் கிருஷ்ணரும் கீதையில், `ஒருவன் மரணிக்கும்போது என்ன நினைக்கிறானோ, அதன்படியே அவனுடைய அடுத்த பிறவி அமைகிறது' என்று கூறியிருக்கிறார். `உறங்குவது போலும் மரணம்; உறங்கி எழுதலைப் போன்றது பிறப்பு' என்கிறது வள்ளுவம். இறந்தவர்கள் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் எகிப்து மக்கள், இறந்தவர்களின் உடல்களை பிரமிடுகளுக்குள் வைத்தார்கள். `எந்த மனிதனின் வாழ்க்கையும் மரணத்துடன் முடிந்துவிடுவதில்லை' என்பது இந்துக்களின் உறுதியான நம்பிக்கை. கடோபநிஷதம், கருட புராணம், திருவாசகம், மணிமேகலை, பட்டினத்தார் பாடல்கள்... என்று பல நூல்களிலும் மறுபிறவி பற்றிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 


கர்மவினைகளைத் தீர்த்துக்கொள்ளவே மனிதர்களுக்குப் பிறவி ஏற்படுகிறது. `மனிதர்களின் கர்மவினைகள் அனைத்தும் தீர்ந்து, மரணிக்கும் மனிதர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை' என்பது சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை. 

மனிதர்கள் தங்கள் கர்மவினைகளின் காரணமாக எத்தனையெத்தனை பிறவிகள் எடுக்க நேரிடுகிறது என்பதை, மாணிக்கவாசகர் தம்முடைய திருவாசகத்தில் தம்முடைய அனுபவமாகப் பின்வருமாறு விவரித்திருக்கிறார்.

`புல்லாய் பூடாய் புழுவாய் மரமாகி
பல் மிருகமாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரராய் தேவராய் சொல்லா நின்ற
இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும்
பிறந்திளைத்தேன் எம்பெருமான்' 

மறுபிறவியைப் பற்றி மணிமேகலையும் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
 

`பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரும் துன்பமும்
யான் நினக்கு உரைத்து நின் இடர்வினை ஒழிக்க
காயசண்டிகை வடிவானேன்'

பட்டினத்தார் ஒருபடி மேலே போய், தமக்கு இனியொரு பிறவி வேண்டவே வேண்டாம் என்று இப்படிப் பாடியிருக்கிறார்...


`மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவோ கை சலித்து விட்டானே - தாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா'  

என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்.


பகவான் கிருஷ்ணர், `எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் என் பிறப்பை நான் நிகழ்த்துகிறேன்' என்று கீதையில் கூறியிருக்கிறார். 

புத்தர், `2,500 வருடங்களுக்குப் பிறகு மைத்ரேஜன் என்ற பெயரில் மீண்டும் பிறப்பேன்' என்று கூறியிருக்கிறார். 
விவேகானந்தர், `நாம் சிரத்தையுடன் முயற்சி செய்தால், முற்பிறவியின் நினைவுகளைப் பெறலாம்' என்று நம்பிக்கையூட்டினார். 
மறுபிறவியைப் பற்றி நம்முடைய இந்துமதத் தத்துவங்களும் ஞானிகளும் மட்டுமல்ல, மேலைநாட்டினரும்கூட பல தருணங்களில் கூறியிருக்கிறார்கள். 

கிரேக்க நாட்டின் தலைசிறந்த தத்துவஞானியான பிளேட்டோ, `மனிதன் மரணமடைந்ததும், அவனுடைய கர்மவினையின்படி மிருக உடலும்கூட எடுக்க நேரிடும்' என்று கூறியிருக்கிறார். திபெத்திய நாட்டின் தந்திரா ஞானியான மார்பா, `மரணம் என்பது கொண்டாட்டத்துக்கு உரியது. ஆன்மா விடுதலை அடைந்து வேறு நிலையை அடைகிறது' என்று கூறியிருக்கிறார். மறுபிறவி யாருக்கு இல்லை என்பதைக் குறிப்பிட வந்த ஜென் ஞானியான பொகுயூ, `கர்மவினைகளைத் தீர்த்து, ஞானமடைந்தவர்கள் மட்டுமே மறுபடியும் பிறப்பதில்லை; மற்றவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள்' என்று கூறியிருக்கிறார். முற்பிறவி, மறுபிறவி போன்ற தத்துவங்கள் மனித வாழ்க்கைக்குப் பயன்படுவதாகவே இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. எப்படி ஒருவன் செய்யும் தவறுகளுக்குச் சட்டம் தண்டனை தருகிறதோ அப்படி, மனிதனின் வினைகளுக்கு ஏற்பவே அவனுக்கு மறுபிறவி ஏற்படுகிறது. ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் சகல வசதிகளுடன் வாழ்வதைப் பார்க்கிறோம். அதே தருணத்தில் மிகவும் நல்லவனாக இருக்கும் ஒருவன் கஷ்டப்படுவதையும் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், `அவன் முன் ஜென்மத்தில் செய்த தீய செயல்களின் விளைவுதான் என்று நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதை உணராமல் அவன் மேலும் மேலும் தீய செயல்கள் செய்துகொண்டே போனால், மாணிக்கவாசகர் கூறியதுபோல் பலப் பல பிறவிகளை எடுத்து அல்லல்படவேண்டியதுதான்.