Published:Updated:

பூமியில் பிறக்க தேவர்கள் விரும்பியது ஏன்? - பெருந்துறை இறைவனின் பெருமை!

தேவர்கள் சொர்க்கத்தில் கிடைக்கும் அனைத்து இன்பங்களையும் துறந்து பூமியில் மனிதர்களாகப் பிறக்க விரும்புகிறார்களாம். அதற்குக் காரணம் என்ன தெரியுமா?

பூமியில் பிறக்க தேவர்கள் விரும்பியது ஏன்? - பெருந்துறை இறைவனின் பெருமை!
பூமியில் பிறக்க தேவர்கள் விரும்பியது ஏன்? - பெருந்துறை இறைவனின் பெருமை!

பூமியில் போய் பிறவாமல் நாள் நாம் போக்குகிறோம் அவமே' என்று தேவர்கள் வருந்துகிறார்களாம். பூமியில் பிறப்பதற்கு தேவர்கள் விரும்புவது ஏன்? அந்தக் காரணம் பற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்தில் விவரித்திருக்கிறார். மாணிக்கவாசகர் திருவாசகம் பாடியதன் பின்னணி பற்றியும் மாணிக்கவாசகரின் பூர்வீகம் எது என்பது பற்றியும் தெரிந்துகொள்ளலாமே...

முற்காலத்தில் ஆகமப் பொருள் உணர விரும்பிய ஆயிரம் முனிவர்கள், அதற்காக திருஉத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தில் தவமியற்றினர். அவர்களின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், இலவந்திகை மரத்தின் அடியில் குருவாக வீற்றிருந்து ஆகமப்பொருள் உரைத்து வந்தார்.

அதே காலகட்டத்தில் ராவணன் மனைவி மண்டோதரி, உத்தரகோசமங்கைப் பெருமானிடம் பேரன்பும் பக்தியும் கொண்டு வழிபட்டு வந்ததுடன், ‘பேரொளி வடிவினனாக ஈசன் தனக்குத் தரிசனம் தரமாட்டானா?’ என்று எதிர்ப்பார்த்து ஏங்கினாள்.
அவள் ஏக்கம் தீரும் காலமும் வந்தது.

தினம் தவறாமல் தன்னை வழிபட்டு, தன் தரிசனமே வரமாகக் கேட்கும் மண்டோதரிக்கு தரிசனம் தந்திடத் திருவுள்ளம் கொண்டார் பரமன். தம்மிடம் ஆகமப்பொருள் கேட்கும் முனிவர்களிடம் தமது எண்ணத்தைக் கூறிய ஈசன், தொடர்ந்து, “யாம் மண்டோதரிக்கு திருக்காட்சி தந்து திரும்பும்வரை, நீங்கள் ஆயிரம் பேர்களும் இந்த ஆகமங்களைப் பாதுகாத்து வருவீர்களாக” என்று கூறினார். 
 அதைக் கேட்ட முனிவர்கள் கலங்கினர். தங்கள் கலக்கத்துக்கான காரணத்தை அவர்கள் சிவபெருமானிடம் தெரிவிக்கவும் செய்தனர்.

``சுவாமி! தாங்கள் கொடிய அரக்கனான ராவணன் இருக்கும் இலங்கைக்குச் செல்கிறீர்கள். அவனால் தங்களுக்கு ஏதும் தீங்கு நேர்ந்துவிடுமோ என்றுதான் நாங்கள் அஞ்சுகிறோம்.”

அதைக் கேட்ட பரமன், “ராவணன் அரக்கனாயினும் அவன் எம் பக்தன். இருந்தாலும் நீங்கள் அச்சப்படுவதால் நாம் ஓர் ஏற்பாடு செய்கிறோம். ராவணன் எம்மைத் தீண்டுவானாகில், இதோ இங்கே இருக்கும் ஆதிகங்கை தீர்த்தத்தில் அக்னிப் பிழம்பு தோன்றும். அதன் மூலம் எமக்கு ஆபத்து வந்திருப்பதைத் தாங்கள் புரிந்துகொள்ளலாம்” என்றார்.

சிவபெருமானின் வார்த்தைகளினால் முனிவர்கள் மன அமைதி பெற்று, ஆகமங்களுடன் ஆதிகங்கை என்னும் தீர்த்தக்கரையில் காத்திருந்தனர். 

ஈசன் இலங்கைக்குச் சென்று, மண்டோதரியின் முன்னால் பேரழகுடனும் பேரொளியுடனும் சர்வாலங்கார திருக்கோலத்தில் தரிசனம் தந்தார்.

தன் விருப்பப்படி தன் முன் திருக்காட்சி தந்த பரம்பொருளை, மண்டோதரி பூஜித்து உபசாரம் செய்தாள். அப்போது ராவணன் அங்கே வருவதை அறிந்த சிவபெருமான், ‘தான் அழகிய உருக்கொண்டு மண்டோதரியுடன் தனித்திருக்கக் கண்டால் ராவணன் என்ன செய்வானோ?’ என்று எண்ணமிட்ட உடனே, சிறுகுழந்தையாக உருக்கொண்டார்.
அங்கே வந்த ராவணன், பேரழகு கொண்டு திகழ்ந்த அந்தக் குழந்தையைக் கண்டு மண்டோதரியிடம், “இது யாருடைய குழந்தை?” என்று கேட்டான்.

அதற்கு மண்டோதரி, ``ஒரு ரிஷிபத்தினி தன் குழந்தையை என் பொறுப்பில் விட்டுச் சென்றாள்” என்று கூறினாள்.
 குழந்தையின் துறுதுறு பேரழகில் மயங்கிய ராவணன் ஆசையுடன் அந்தக் குழந்தையை அள்ளியெடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டான். சற்றுப் பொறுத்து சர்வேஸ்வரியே ரிஷிபத்தினி வடிவில் வந்து அந்தக் குழந்தையைப் பெற்றுச் சென்றாள்.
 ராவணன் குழந்தையைத் தொட்டுத் தூக்கிய வேளையில், திருஉத்திரகோசமங்கை, ஆதிகங்கை தீர்த்தத்தில் அக்னிப்பிழம்பு எழுந்தது. அதைக் கண்ட முனிவர்கள், `ஈசனுக்கு என்ன நேர்ந்ததோ?’ என்று எண்ணி மனம் கலங்கினர். அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது பேரும் அக்னிப்பிழம்பில் விழுந்து உயிர்த் தியாகம் செய்தனர்.

ஒருவர் மட்டும் அவ்விதம் செய்யாமல், ‘தானும் அக்கினியில் விழுந்துவிட்டால், இறைவன் சொன்னபடி ஆகமங்களைக் காக்க முடியாதே!’ என்று எண்ணி வருத்தத்தோடு இருந்தார். 

அப்போது அங்கு வந்த ஈசன், தீயில் விழுந்த முனிவர்களை நோக்கி, ``நீங்கள் அத்தனை பேரும் லிங்கங்களாகத் திகழ்வீர்கள். உங்கள் நடுவாக ஆயிரமாவது லிங்கமாக யாம் இருப்போம். நம்மை சஹஸ்ரலிங்கமாக மக்கள் வழிபடுவர்” என்று அருள்புரிந்தார்.

பின்னர் கரையில் இருந்த முனிவரை நோக்கி, ``சிவபதவியையும் விரும்பாமல் யாம் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு ஆகமங்களைக் காத்த நின் செயல் போற்றுதலுக்கு உரியது. உமக்கு யாம் ஒரு வரம் தருகிறோம். நீ தேன்தமிழ் ஒலிக்கும் தென்பாண்டி நாட்டில் மாணிக்கவாசகராகத் தோன்றி, உரிய காலத்தில் எம்மால் ஆட்கொள்ளப்பட்டு, அழகு தமிழில் கல்மனமும் கரைந்து உருகும்படியாக நம் பெருமையைப் பாடுவாயாக! நீ பாடும் பாடல்கள் எல்லாம் என் அங்கீகாரம் பெற்று மாசற்ற மெய்க்கீர்த்தியுடன் திகழும்.  அவை யாவும் சேர்ந்து ‘திருவாசகம்’ என்றோர் சிறப்புப் பெயரினையும் பெற்று, உலக மக்களின் உண்மைப் பொருள் தேடலுக்கான உந்துசக்தியாக, உதவும் சாதனமாக உலகம் உள்ளவரை திகழும்” என்று வரம் அருளினார்.  

சிவபெருமானின் ஆணைப்படி பாண்டிய நாட்டில் தோன்றிய மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார். திருவாசகம், சிவபுராணம் தொடக்கமாகக் கொண்டு அச்சோப்பதிகம் முடிய ஐம்பத்தியொரு பகுதிகளாக அமைந்துள்ளது. திருவாசகத்தை அதற்குரிய இசையுடன் பாடவும் கேட்கவும் கல்மனமும் கரைந்துருகிப் பரவசநிலை அடையும். 

 ‘நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க’ என்று தொடங்கும் சிவபுராணம், மூலப் பரம்பொருளாம் சிவபெருமானை, அவர்தம் சிறப்புகளை, பெருமைகளை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது.

ஒன்றேயான அப்பரம்பொருளை `ஏகன்’ என்று போற்றும் சிவபுராணம், அந்த ஒன்றிலிருந்தே மற்றனைத்தும் தோன்றுவதால் `அனேகன்,’ அதாவது, `பலவானவன்’ என்றும் சொல்லி, அதனால் நாம் எவரிடத்தும், எவ்விதத்திலும் பேதம் பார்க்கக் கூடாது என்று நமக்கு வலியுறுத்துகிறது.

மாணிக்கவாசகர் தம்மை ஆட்கொண்ட திருப்பெருந்துறை இறைவனைப் பல பதிகங்களில் நினைவுகூர்ந்து போற்றியிருக்கிறார்.

   
`ஈசன் அடிபோற்றி எந்தை அடி போற்றி
நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி...
... சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி’

 என்று பாடும்போது மறவாமல் தாம் ஆட்கொள்ளப்பட்ட பெருந்துறை இறைவனைப் போற்றுகிறார். தம்முடைய மாயப் பிறப்பறுத்து,

தம்மைச் சீர்படச் செய்த தலம் என்பதால் சீரார் பெருந்துறை என்று சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார் போலும்!

அடுத்து தாம் இயற்றிய ‘கீர்த்தித் திருவகவல்’ பகுதியில் பல்வேறு தலங்களில் சிவபெருமான் புரிந்த அருளாடல்களை விவரிக்கையில், பெருந்துறை பற்றிப் பாடுகையில், ‘திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகி...’ என்கிறார். அதாவது, தமக்குச் சிவானந்த அனுபூதி என்னும் திருவினை நிதியத்தை வழங்கிய செல்வன் என்று சிறப்பிக்கிறார்.

மாணிக்கவாசகர் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று பரமனைப் பாடியிருந்தாலும்கூட, அவ்வப்போது தாம் ஆட்கொள்ளப்பட்ட பெருந்துறை இறைவனின் நினைவு அவருக்கு வந்துவிடுகிறது.

பஞ்ச பூதங்களின் நாயகன் சிவபெருமானே என்பதைத் தனக்குத் தெளிவுப்படுத்திய பெருந்துறை இறைவனை, ‘வான் என்றும், நிலம் என்றும், காற்று என்றும், நெருப்பு என்றும், நீர் என்றும் இருப்பதுடன், அவனே உடலாய், உயிராய், உண்மையாய், பொய்ம்மையாய் அதாவது மாயையாய் இருக்கின்றான். ‘யான்’ என்றும் ‘எனது’ என்றும் சொல்லிக்கொள்ளும்படியான எண்ணத்தை ஜீவன்களிடத்தே தோற்றுவித்து, அவர்களைத் தன் விருப்பப்படி ஆட்டுவிக்கும் திறன் கொண்டவனும் அவனே’ என்று பாடியிருக்கிறார்.

மாயை என்னும் நீள் துயிலிலிருந்து தம்மை விழிப்புறச் செய்த பெருந்துறை இறைவன், மற்ற உயிர்கள் அனைத்தும் உய்வுப் பெற அருள்புரிய வேண்டும் என்று திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார்.

 ‘போற்றியென் வாழ்முதலாகிய பொருளே’ என்று தொடங்கும் திருப்பள்ளியெழுச்சி தேன்சுவை நிறைந்த பத்துப் பாடல்களைக் கொண்டதாகத் திகழ்கின்றன. தம்மைத் தடுத்தாட்கொண்ட பெருந்துறைப் பெருமானைத் தரிசிக்கவே வானவர்களும் பூமியில் பிறக்க ஆவல் கொண்டிருக்கின்றனராம். பிறப்பறுக்கும் அப்பிஞ்ஞகனைத் தரிசிக்க, மறுபடியும் பூமியில் பிறந்திட தேவர்கள் விரும்புவது விசித்திரமாக இருக்கிறதல்லவா!  அமரர்தம் ஆசையை விளக்கமுறச் சொல்கிறது இப்பாடல்.
     

     புவனியில் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
          போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி 
      சிவனுய்யக் கொள்கின்ற ஆறென்று நோக்கித் 
          திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
       அவன்விருப் பெய்தவு மலரவன் ஆசைப் 
           படவுநின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
       அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் 
            ஆர் அமுதே பள்ளியெழுந்தருளாயே

சொர்க்கலோகத்தின் சுகபோகங்கள் எல்லாம் நாளடைவில் சலித்துப் போய்விட்டதால், சிவபெருமானுடைய அருளுக்குப் பாத்திரராகி, சிவானந்த அனுபூதியில் திளைக்க பூமிக்கு வந்து பிறக்க விரும்புகிறார்களாம் தேவர்கள். ‘அப்படி அமரரையும் ஆட்கொள்ளும்படியாக பூவுலகில் எழுந்தருளிய சிவபெருமானே! துயில் நீங்கி எழுந்து அருள் புரிவாயாக’ என்கிறார். 

எனவே, பூமியில் பிறப்பெடுத்திருக்கும் நாமெல்லாரும் பெறற்கரிய பேறு பெற்றவர்கள்தான். 

பெறற்கரிய பேறு பெற்றவர்கள்தான் என்றாலும், அப்பேற்றின் இலக்கான சிவானந்த அனுபூதி பெறவேண்டும் அல்லவா!
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

 ‘அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ என்றபடி சிவபெருமான் அருளாலே ஈசனடி பணிந்து பிரார்த்திக்க வேண்டும். ‘பிரார்த்தனைப் பத்து’ என்ற பதிகத்தில், ‘எந்நாளும், எக்காலமும் உன்னையே விரும்புகின்ற மெய்யடியார்கள் பலர் இருக்க, எளியேனான என்னை நின் தனிப்பெருங் கருணையினால் தடுத்தாட் கொண்ட பிரானே! அடியவனின் ஆறாப் பிறவிப்பிணித் துன்பம் அகற்றிய அமுதமே! அரியதும் பெரியதுமான மணிமுத்துக்கு ஒப்பானவனே! தூண்டுகோல் தேவையே இல்லாதபடி சுயம் பிரகாசமாக ஒளிரும் தீபச்சுடர் போன்றவனே! எனக்கு நீ ஒன்றை அருள்புரிய வேண்டிப் பிரார்த்திக்கிறேன். அது என்ன தெரியுமா? வேண்டும் என்று எதையும் கேட்காதபடியும், அப்படி ஓர் எண்ணம்கூடத் தோன்றாதபடியும், உன்னிடம் அன்புடன் பொருந்தியிருத்தல் வேண்டும் என்பதுதான். அது நின் அடியார்க்கும் எளிய தொண்டனாகிய எனக்கு நின் அருளால் வாய்க்கப் பெற வேண்டும்' என்று பிரார்த்திக்கிறார்.

வேண்டிப் பிரார்த்திக்கும்போது அந்தப் பிரார்த்தனை உதட்டளவில் இல்லாமல், உளப்பூர்வமாக இருக்க வேண்டும். கனிந்த மனம் கொண்டு பிரார்த்திக்கும் வேளையில் மன மாசுகளெல்லாம் அகன்றுவிடுகின்றன. அப்போது ஈசனைக் கட்டாயப்படுத்தி, பக்திக்குக் கட்டுப்பட வைத்திட  முடியும். எனவேதான் மாணிக்கவாசகர் ‘பிரார்த்தனை பத்து’ பதிகத்தைத் தொடர்ந்து வரும் ‘குழைத்த பத்து’ பதிகத்தில் பின்வருமாறு இறைஞ்சுகிறார். ‘ஒன்றுக்கும் உதவாத நாயினும் கீழாய்க் கடைப்பட்டிருந்த என்னையும் உய்வித்து ஆட்கொண்ட உன்னுடைய அருள் இப்பொது இல்லாமல் போய்விட்டது ஏன்? உன் திருமேனியில் உமையவளுக்கு சம பங்கு கொடுத்த எம் இறைவனே! என்னதான் மலையத்தனை குற்றங்கள் கொண்டிருந்தாலும், அவற்றையெல்லாம் அருங்குணங்கள்தான் என்று எண்ணி அருள்புரிந்தால் உனக்கு என்னதான் குறை ஏற்படப் போகிறது? எனவே, நாலிரு கரங்களும், முக்கண்களும் கொண்ட எம்பெருமானே! நீ என்னிடத்தே இரங்கி அருள்புரிய வேண்டும்!’ என்று மனம் கனிந்த பக்தியுடன் பிரார்த்தனை செய்கிறார்.

பூமியில் நாம் மனிதராய்ப் பிறந்ததன் நிறைவான லட்சியம் பரம்பொருள் அருள்பெற்று, பரம்பொருளுடனே கலந்துவிடுவது என்பதுதானே? அதற்கு நாம் எல்லோருமே இன்றில்லை என்றாலும் என்றேனும் ஒருநாள் முயற்சி செய்ய வேண்டுமல்லவா? அத்தகைய முயற்சியை இன்றே மேற்கொள்ளக்கூடிய உள்ளத் தவிப்பு, திருவாசகம் படிப்பவர் எவர்க்கும் உடனே ஏற்படும்; அதற்கான முயற்சிகளில் முனைப்புடன் ஈடுபடச் செய்யும் என்பதால் திருவாசகம் அற்புதமானதொரு பக்தி இலக்கியம் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை என்பது உண்மைதான்.
 அப்படியோர் அற்புத பக்தி இலக்கியம் படைத்திட வேண்டுமென்பதற்காகவே மாணிக்கவாசகரைத் தடுத்தாட்கொண்ட பெருந்துறைப் பெம்மானின் திருக்கழல் பணிந்து பிரார்த்திப்போமானால், நமக்கும் சிவானந்த அனுபூதி சித்திக்கும்!