Published:Updated:

சரணாகதி அடையுங்கள்... சாய்பாபா உங்கள் கரம் பற்றுவார்! #SaiBaba

சரணாகதி அடையுங்கள்... சாய்பாபா உங்கள் கரம் பற்றுவார்! #SaiBaba
சரணாகதி அடையுங்கள்... சாய்பாபா உங்கள் கரம் பற்றுவார்! #SaiBaba

'நாம் பாபாவையே பூரணமாக சரணாகதி அடைந்துவிட்டோம். அப்படியிருக்க ஏன் நம் நோயைக் குணப்படுத்தாமல் கஷ்டப்படுத்துகிறார்? என்று டாக்டர் பிள்ளைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் பூர்வ ஜன்மத்தில் செய்திருக்கும் பாவச் செயல்களே காரணமாக இருக்கின்றன. நாம் குருவின் பரிபூரண அருளைப் பெற்றிருந்தாலும்கூட, சில நேரங்களில் நம்முடைய வினைப்பயன் காரணமாக சில கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது. நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நம்முடைய குருவிற்குத் தெரிந்திருந்தாலும்கூட, முதலில் அவர் அதில் தலையிடாமல், வினைப்பயன் ஓரளவு தீர்ந்த பிறகே நம்முடைய கஷ்டங்கள் நீங்கும்படி அருள்புரிகிறார். அப்படி சாய்பாபா புரிந்த அருளாடல் இது...

பாபாவின் பக்தர்களில் டாக்டர் பிள்ளை என்பவரும் ஒருவர். எல்லாம் பாபாவே என்று பாபாவிடம் பூரணமாக சரணாகதி அடைந்துவிட்டவர். பாபாவும் அவரிடம் வாஞ்சையுடன் நடந்துகொண்டார். பல விஷயங்களைக் குறித்து இருவரும் உரையாடுவது வழக்கம். 

ஒருமுறை டாக்டர் பிள்ளை சிலந்தி நோய் வந்து மிகவும் கஷ்டப்பட்டார். வலியின் வேதனையை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இரவும் பகலும் உணவும் தூக்கமும் இல்லாமல் தவித்தார். ஒரு கட்டத்தில் சிலந்தி நோய் முற்றி சீழ் பிடித்துவிட்டது. வலியும் அதிகமாகிவிட்டது. வேதனையின் உச்சத்துக்கே சென்றுவிட்ட டாக்டர் பிள்ளை, வாழ்க்கையில் விரக்தி அடைந்து விட்டார். 
தன்னுடைய நண்பரும் பாபாவின் பக்தருமான காகா சாகேப் தீட்சித் என்பவரிடம், ''சிலந்தி நோய் என்னைக் கடுமையாகத் துன்புறுத்து கிறது. வலி தரும் வேதனை பொறுக்கமுடியாததாக இருக்கிறது. எதுவுமே செய்ய முடியவில்லை.  உயிரை விட்டுவிடலாம் போல் இருக்கிறது'' என்று கதறினார். 

காகா சாகேப் தீட்சித், ''கவலைப்படாதீர்கள். நம்முடைய அனைத்துப் பிரச்னைகளையும் தீர்ப்பவராக பாபா இருக்கும்போது நீர் ஏன் கவலைப்படுகிறீர்? வாருங்கள் பாபாவிடம் செல்வோம்'' என்று கூறி அவரை அழைத்துச் சென்றார். 

அவர்கள் பாபாவை தரிசிக்கச் செல்லும்போதே, டாக்டர் பிள்ளைக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. 'நாம் பாபாவையே பூரணமாக சரணாகதி அடைந்துவிட்டோம். அப்படியிருக்க ஏன் நம் நோயைக் குணப்படுத்தாமல் கஷ்டப்படுத்துகிறார்?' 

இப்படி அவர் சந்தேகப்பட்டாலும்கூட பாபாவிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை மட்டும் இழந்துவிடவில்லை. காகா சாகேபும், டாக்டர் பிள்ளையும் துவாரகாமாயியை அடைந்து பாபாவை தரிசித்து வணங்கினர். 

ஏற்கெனவே டாக்டர் பிள்ளை சிலந்தி நோயினால் அவதிப்படுவதைப் பற்றி காகா சாகேப் பாபாவிடம் சொல்லியிருந்தார். 

பாபா, டாக்டர் பிள்ளையைப் பார்த்து, ''உனக்கு ஏற்பட்டிருக்கும் துன்பம் பூர்வஜன்ம வினைப் பயனாக ஏற்பட்டது. அதை அனுபவித்துவிடுவதுதான் நல்லது என்று நினைத்துத்தான் நான் உன்னுடைய துன்பத்தைப் போக்க முயற்சி செய்யவில்லை. இப்போது நீ துவாரகாமாயிக்கு வந்துவிட்டாய். இங்கு வந்துவிட்டாலே உன்னுடைய அனைத்துத் துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்'' என்று கூறி, அவருக்கு ஒரு தலையணையைக் கொடுத்து துவாரகாமாயியிலேயே படுத்துக்கொள்ளும்படி கூறியவர் தொடர்ந்து,
''நன்றாக ஓய்வு எடுத்துக்கொள். ஆண்டவனை எப்போதும் நினைத்துக்கொண்டிருங்கள். அவரே உங்கள் கவலைகளைப் போக்குவார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே ஒரு காக்கை வந்து உங்களைக் கொத்தும். அதன் பிறகு நீங்கள் பூரண குணம் பெறுவீர்கள்'' என்று கூறினார். 

பாபா இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாபாவின் பக்தர்களில் ஒருவரான அப்துல்லா என்பவர் துவாரகாமாயியை சுத்தப்படுத்துவதற்காக வந்தார். வந்தவர் டாக்டர் பிள்ளையைத் தெரியாமல் பலமாக மிதித்துவிட்டார். அதுவும் சரியாக சிலந்திப் புண் இருந்த இடத்தில் அழுத்தி மிதித்துவிட்டார். அவ்வளவுதான். டாக்டர் பிள்ளை வலி பொறுக்கமுடியாமல் அலறினார்.

ஆனால், அப்துல்லா மிதித்த மிதியில் சிலந்திப் புண் உடைந்து அதிலிருந்து சீழும் புழுக்களும் வெளியேறத் தொடங்கின. வலியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. வலி குறைந்து தெளிவு ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த பாபாவிடம், ''பாபா, அப்துல்லா மிதித்த மிதியிலேயே என் உயிர் போய்விட்டது. காகம் வேறு வந்து கொத்தும் என்றீர்களே. என் கதி என்ன ஆகும்?'' என்று கேட்டார்.

பாபா சிரித்தபடியே, ''அப்துல்லாதான் நான் சொன்ன காகம். அதான் வந்து மிதித்துவிட்டுப் போய்விட்டானே. இனி காகம் வராது. பயப்படவேண்டாம். பத்து நாள்களில் பூரணமாக நலம் பெற்றுவிடுவீர்கள்'' என்று டாக்டர் பிள்ளைக்கு ஆறுதல் கூறினார்.
நம்முடைய பூர்வஜன்ம வினைப்பயனாக ஏற்படக்கூடிய கஷ்டங்களை சகித்துக்கொண்டு பாபாவிடம் பூரண நம்பிக்கையுடன் இருந்தால் விரைவில் நம் கஷ்டங்கள் தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். 

பாபா பற்றிய கட்டுரைகளை வாசிக்க , இங்கே க்ளிக் செய்யவும்...

அடுத்த கட்டுரைக்கு