Published:Updated:

பாரதி, கண்ணதாசன், வாலி கவிதைகளில் உறவாடும் கண்ணன்! #Gokulashtami

பாரதி, கண்ணதாசன், வாலி கவிதைகளில் உறவாடும்  கண்ணன்! #Gokulashtami
பாரதி, கண்ணதாசன், வாலி கவிதைகளில் உறவாடும் கண்ணன்! #Gokulashtami

பாரதி, கண்ணதாசன், வாலி கவிதைகளில் உறவாடும் கண்ணன்! #Gokulashtami

காவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக உன்னதமான அவதாரம் ஶ்ரீகிருஷ்ணாவதாரம். மற்றெந்த அவதாரங்களை விடவும் ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தைப் பற்றி ஶ்ரீமத் பாகவதம் மிக விரிவாகப் பேசுகிறது. மற்றெந்த கடவுளரை விடவும் ஶ்ரீகிருஷ்ணனைப் பற்றிப் பாடிய கவிஞர்கள் ஏராளம். லீலாசுகரின் கிருஷ்ணகர்ணாமிர்தம், நாராயணபட்டத்திரியின் கிருஷ்ணலீலா தரங்கிணி, பெரியாழ்வாரின் கண்ணன் பாசுரங்கள், ஆண்டாளின் பாசுரங்கள் என்று பல நூல்கள் கிருஷ்ணரின் புகழைப் பாடுகின்றன. 

அந்தக் காலக் கவிஞர்கள்தான் என்றில்லாமல், பிற்காலக் கவிஞர்களும் கிருஷ்ணனைப் பற்றிப் பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர். 

கிருஷ்ணர் இறைவனின் அவதாரமாக இருந்தாலும், அவர்தான் தம்மை எப்படியெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்?!

கோகுலத்தில் குறும்புக்காரக் குழந்தையாக; சிறுபிராயத்திலேயே பல அசுரர்களை வதம் செய்த வீரனாக; குருவிற்குச் சிறந்த சீடனாக; பாண்டவர்களுக்குத் துணைவனாக; குருக்ஷேத்திரக் களத்தில் தேரோட்டும் சாரதியாக என்று அவர்தான் தன்னை எப்படியெல்லாம் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்!

கண்ணன் இப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டதை பாரதி அனுபவித்துப் பாடியிருக்கிறார். கண்ணனை தோழனாக, சேவகனாக, நண்பனாக என்று பல நிலைகளில் வைத்து பாரதி பாடிய தேனினுமினிய பாடல்கள் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துபவை.

'எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுகள் பாடியும் 

ஆறுதல் செய்திடுவான்...

அன்பர் கூட்டத்திலேயிந்தக் கண்ணனைப் போலன்பு

கொண்டவர் வேறுளரோ' 

என்று கண்ணனை விட அன்பு செலுத்துபவர்கள் எவருமில்லை என்று தீர்க்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல தான் காணும் யாவற்றிலும் கண்ணனின் அம்சங்களே தோன்றுவதை அழகாகப் பாடியிருக்கிறார்.

''காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்

பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா''

இதைவிட கண்ணனின் மீது வேறு எவரால் பக்தி கொள்ளமுடியும்.   

*******

கண்ணனையும் அவன் திருக்கரத்தில் இருக்கும் புல்லாங்குழலையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. கண்ணனின் இடையையும் இதழையும் தழுவி முத்தமிடும் புல்லாங்குழலிடம் தன் கண்ணனின் புகழைப் பாடும்படிக் கேட்கிறார் கண்ணதாசன்.

'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்

புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்' 

என்று பாடும் கண்ணதாசன், பாடலின் முத்தாய்ப்பாக கண்ணன் பாஞ்சாலிக்கு துகில் கொடுத்ததையும், குருக்ஷேத்திரக் களத்தில் சங்கு ஏந்தியதையும், பாண்டவர்களுக்கு உரிய பங்கினைப் பெற்றுத் தந்ததையும், அனைத்துக்கும் மேலாக நாம் படித்து நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள கீதை என்னும் பாடத்தைக் கொடுத்ததையும் அழகாகக் குறிப்பிட்டு, அவனைச் சரணடைந்தால் நம் கவலைகள் யாவும் தீரும் என்று உறுதியளிக்கிறார். 

கண்ணனிடம் தீராக் காதல் கொண்டவர் கண்ணதாசன். அதன் காரணமாகவே அவர், முத்தையா என்ற தன்னுடைய பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் பின்னணி பற்றி அவர் குறிப்பிடுகையில்,

''திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்தபோது, என்னுடைய பெயர் முத்தையா என்றால் மதிப்பிருக்காது என்று தோன்றியது. கவிஞன் என்பவனுக்கு ஒரு தனிப் பெயர், 'கவிதைப் பெயர்' தேவை என்று பட்டது. பஸ்ஸில் போகும்போது யோசித்தேன். எட் டாவது மகன் கண்ணன். நானும் எட்டாவது மகன். ஏன் கண்ணன் என்றே வைத்துக் கொள்ளக்கூடாது? அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா? அந்தக் காலத்தில் பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதிதாசன், கம்பதாசன்... அவ்வளவுதான்! கண்ணதாசன் பிறந்துவிட்டான்.''

தான் கண்ணதாசன் என தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டது பற்றிச் சொல்லியிருக்கிறார்.

***********************

 கண்ணன் என்னும்  தலைப்பில் பல நூறு திரைப்பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். 

கவிஞர் வாலியும் கண்ணனை பாடு பொருளாக்கி பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில் எழுதியிருக்கிறார். 

''கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்

குழலெடுப்பான் பாட்டிசைப்பான்''

 என்ற பாடலை எழுதி, அந்தப் பாடலும் பெரிய அளவில் ஹிட் ஆனது. பி.சுசீலாவின் கானக் குரலில் அந்தக் கால வானொலியில் ஒலிக்காத நாளே இல்லை என்றே சொல்லலாம். அறுபதுகளில் இளம் தாய்மார்கள் இந்தப் பாடலைப் பாடித்தான் குழந்தைகளைத் தூங்கவைப்பார்களாம்.

கவிஞர் வாலி கண்ணனை முதலடியாகக் கொண்டு 'பத்ரகாளி' திரைப்படத்தில் இளையராஜா இசையில் எழுதிய பாடல் வரிகள்

கண்ணன் ஒரு கைக்குழந்தை 

கண்கள் சொல்லும் பூங்கவிதை 

கன்னம் சிந்தும் தேனமுதை 

கொண்டு செல்லும் என் மனதை 

கையிரண்டில் நானெடுத்து 

பாடுகின்றேன் பாடுகின்றேன் ஆராரோ 

மைவிழியே தாலேலோ 

மாதவனே தாலேலோ'' 

எனும் இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடியிருந்தார்கள். 1976 - ல் வெளியான 'பத்ரகாளி' திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. 

திரைப்படப் பாடல்களுக்கும் கண்ணனுக்கும் அப்படியொரு தொடர்பு. 

'கண்ணனை  நினைக்காத நாளில்லையே', 'கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல', 'கண்ணா வருவாயா?', 'கண்ணா கருமைநிறக் கண்ணா', 'கண்ணன் வந்தான் ஆங்கே கண்ணன் வந்தான்', ' கண்ணன் வரும் வேளை' , கண்ணன் வந்து பாடுகின்றான்' ,  என்று கண்ணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட திரைப்படப் பாடல்கள் யாவும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. கண்ணன் புகழைச் சொல்வதென்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.

அனைவருக்கும் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்! 

 கிருஷ்ணர் பொம்மை விற்பனை படங்களை பார்க்க...  இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு