Published:Updated:

சனங்களின் சாமிகள் - 20

சனங்களின் சாமிகள் - 20
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 20

அ.கா.பெருமாள் - ஓவியம்: ரமணன்

சனங்களின் சாமிகள் - 20

அ.கா.பெருமாள் - ஓவியம்: ரமணன்

Published:Updated:
சனங்களின் சாமிகள் - 20
பிரீமியம் ஸ்டோரி
சனங்களின் சாமிகள் - 20

வடக்குவாய் செல்வி!

தெ
ன்மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் சிறப்பித்து வழிபடப்படும் அம்பிகை முத்தாரம்மன். பெரும்பாலும் வடக்கு நோக்கி சந்நிதிகொண்டிருப்பதால், இவள் `வடக்குவாய் செல்வி’ என்றும் அழைக்கப்படுகிறாள். தீவினைகள் நீங்கவும் மகப்பேறு வாய்க்கவும் இவள் சந்நிதி கொண்டிருக்கும் கோயில்களுக்கு வந்து மனமுருகி வழிபட்டுச் செல்வார்கள் பக்தர்கள்.  

சனங்களின் சாமிகள் - 20

‘முப்பொழுதும் நம்மைக் காத்து நிற்பாள் முத்தாரம்மன்’ என்ற பக்தர்களின் நம்பிக்கைக்குச் சான்றாக அவர்களின் காவல் தெய்வமாகத் திகழும் முத்தாரம்மனின் திருக்கதை, பல கிளைக் கதைகளைக் கொண்டது!

முற்காலத்தில் அரக்கியர் மூவர் அகத்தியரை வேண்டி வணங்கி அவர் கொடுத்த முத்துப் பரல்களை விழுங்கி, ஆளுக்கொன்றாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். விதிவசத்தால் அந்தக் குழந்தைகள் வனத்தில் விடப்பட்டன. அங்கே அந்தக் குழந்தைகளுக்கு நந்திதேவரின் அன்பும் அணுக்கமும் கிடைத்தன. நந்திதேவர் அந்தக் குழந்தைகளுக்கு முப்புராதியர் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.

இவர்களின் கதை இப்படியிருக்க, முன்னதாகச் சக்தி என்றொரு  முனிவர் பெரும் யாகம் வளர்த்தார். அந்த யாகத்தில் எழுந்த புகை எங்கும் சூழ, அதன் விளைவால் உலகாளும்  உமையாளுக்கு உடம்பு வியர்த்ததாம். அதிலிருந்து முத்தாரம்மன் தோன்றினாள். மிகச் சாந்நித்தியத்துடன் திகழ்ந்த அந்தத் தேவியைச் சிவனாரிடம் அழைத்துச் சென்றாள் உமையவள். முத்தாரம்மனுக்குச் சக்தி எனும் ஆயுதமும், தேர் வாகனமும், பிரம்பும், கப்பறையும் கொடுத்து, ‘‘பூலோகத்துக்குச் சென்று கோயில் கொள்வாய்’’ என்று அருள்பாலித்து அனுப்பிவைத்தார்.

சிவனாரின் ஆணைப்படி பூலோகம் வந்து கோயில்கொண்டாள். முத்தாரம்மனை முப்புராதிகள் சந்தித்து வணங்கினார்கள். ‘‘நீயே எங்களுக்குத் தாய். இனி, நீதான் எங்களை ரட்சிக்க வேண்டும்’’ என்று பிரார்த்தித்துக்கொண்டார்கள்.

அவர்களைப் பரிவுடன் நோக்கிய முத்தாரம்மன், ‘‘ மூவரும் சென்று காண்டவக் காட்டில் கோட்டை கட்டிக்கொள்ளுங்கள். எனது அனுக்கிரகம் உங்களுக்கு எப்போதும் உண்டு’’ என்று அருள் செய்தாள். முப்புராதியர் மூவரும் கோட்டை கட்டினர். அந்தக் கோட்டையில் 108 லிங்கங்களை எழுந்தருளச் செய்தார் நந்திதேவர். அத்துடன், முப்புராதியருக்கு உரியவகையிலான உபதேசங் களையும் செய்துவைத்தார்.

அந்தக் காலத்தில் பூலோகத்தில் புட்கரம் என்றொரு தீவு இருந்தது. அதைச் சிங்கமுகன், சூரன், தாருகன் ஆகிய மூன்றுபேர் ஆட்சி செய்து வந்தார்கள். தவத்தால் பெரும் வரமும் வல்லமையும் பெற்ற இந்த மூவரும் கண்ணில் பட்டோரை யெல்லாம் துன்புறுத்தி வந்தனர். தேவர்களின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம்; அவர்களின் கூட்டம் சிதறடிக்கப்பட்டது; சிக்கிக் கொண்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட்டார்கள். இப்படியான வேதனையில் சிக்கித் தவித்த தேவர்கள் கயிலைக்கு ஓடினார்கள். அங்கே சிவபெருமானின் பாதங்களைப் பணிந்து அவரிடம் சரண்புகுந்தார்கள்.

மூவரில் முக்கியமானவன் தாருகன். அவனை முதலில் அழிக்க வேண்டும்.  தாருகனைக் கொல்ல பத்திரகாளியைப் பணிந்தான் சிவன். காளிதேவி தயாரானாள். பெரும் சமுத்திரத்தைக் கடந்து அசுரரின் தீவினை அடைவது எப்படி என்று யோசித்தாள். வேதாளத்தை அழைத்தாள். அதன் நாக்கை நீட்டச் சொன்னாள். நாக்கின் நுனி தீவைத் தொட்டது. காளி, வேதாளத்தின் நாக்கின் மீது ஏறி நடந்துசென்று தீவை அடைந்தாள்.

காளி போருக்கு வந்திருக்கிறாள் என்பதை அறிந்த தாருகன், ‘ஒரு பெண்ணுடன் போரிட மாட்டேன்’ என்று தனது படைத் தலைவனைப் போருக்கு அனுப்பினான். பத்ரகாளியும் தனக்குப் பதிலாகத் தோழி சித்திரக்கன்னியை அனுப்பி வைத்தாள்.

சித்திரக்கன்னி மிக எளிதாகத் தாருகனின் படையை அழித்தாள். அதனால் வேறுவழியின்றி தாருகனே களம் புகுந்தான். பயங்கர ஆயுதங் களுடனும் ஆக்ரோஷக் கூச்சலுடனும் போரிட வந்தான் தாருகன். காளிதேவி, அவனது எருமைத் தலையில் ஓங்கி அடித்தாள் காளி. ரத்தம் பெருக்கெடுத்தது. அதைச் சேகரித்து வண்டியிலேற் றினாளாம் காளிதேவி. அந்த ரத்தம் வண்டி மலையன், வண்டிமலைச்சியாக உருவெடுத்ததாம்!

அசுரனை வீழ்த்தியபிறகு, தாருகனின் கோட்டைக்குள் புகுந்து அங்கு சிறைப்பட்டிருந்த தேவர்களையும் மீட்டுவந்தாள் காளிதேவி!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனங்களின் சாமிகள் - 20

இந்தச் சமயத்தில் முப்புராதியரும் தங்களின் நிலைமறந்து, அசுர குணம் மேலோங்க தேவர்களுக்குத் துன்பம் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களை அடக்கக் கணபதி, முருகன், சூரியன் ஆகியோரை அனுப்பிவைத்தார் சிவன்.

ஆனாலும் அவர்களை வெல்வது சாத்தியம் இல்லாது போகவே, சிவபெருமான் கோபம் கொண்டார். அவரின் திருமேனி வியர்த்தது. அந்த வியர்வைத் துளியிலிருந்து தோன்றிய வீரபத்திரர் குருவியாக மாறி, முப்புராதியரின் கோட்டைக்குள் சென்று கணபதி, முருகன், சூரியன் ஆகியோரைத் திருப்பி அழைத்து வந்தார்.

முப்புராதியரின் வலிமைக்குக் காரணம், கோட்டைக்குள் இருக்கும் லிங்கங்களே என்பதை அறிந்த ஸ்ரீநாராயணர், அந்தணராக உருவெடுத்துச் சென்று மாயங்கள் பல புரிந்தார். அவற்றைக் கண்டு பிரமிப்பு அடைந்த முப்புராதியரும் அந்தணர் சொற்படியெல்லாம் கேட்டார்கள். ஒரு நிலையில், லிங்கங்களைத் தூக்கிக் கடலில் போடுமாறு அந்தணர் கேட்டுக்கொள்ள, அப்படியே செய்தார்கள் முப்புராதியர். அக்கணமே அந்தணர் மாயமாய் மறைந்தார்; முப்புராதியர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். முப்புராதியரின் கோட்டையை அழிகக்ச் சிவனே வந்தார். ஆயுதங்களுடன் அவர் வந்தாலும் முப்புரத்தைச் சிரித்தே எரித்தார்.

முப்புராதியரின் மீதும் கரிசனமும் அன்பும் கொண்டிருந்த முத்தாரம்மன் சிவபெருமானிடம் அவர்களுக்காக வேண்டிக்கொண்டாள். அதற்கு இணங்கி, ‘‘முப்புராதியர் தெய்வமாக மாறி வழிபாடு பெறட்டும்;  மூன்று நிறச் சேவலும் செங்கிடாவும் பலியாக வாங்கட்டும்’’ என்று வரம் கொடுத்தார் சிவபெருமான். அதன்பிறகு, முத்தாரம் மனும் தனது பரிவாரங்களோடு பூலோகத்துக்கு வந்து கோயில்கொண்டாள் (திரிபுராதியரின் கதை, சிவனார் முப்புரம் எரித்த திருக்கதை வேறுவிதமாகவும் சொல்லப்படுவது உண்டு).

தென்னகத்தில் பல ஊர்களில் கோயில் கொண்டிருக்கும் முத்தாரம்மனுக்கு, பெரும்பாலும் கார்த்திகை மாத (நவம்பர் - டிசம்பரில்)
செவ்வாய்க் கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும். சில கோயில்களில் ஒவ்வொரு  மாதமும் கடைசிச் செவ்வாய் அன்று விசேஷ பூஜைகள் நடத்து கிறார்கள். தினப்பூசை உள்ள கோயில்களும் நிறைய உள்ளன. எல்லாக் கோயில்களிலும் பிரதான தெய்வமாகவே திகழ்கிறாள் முத்தாரம்மன். சுதை அல்லது கல் விக்கிரகமாக, நான்கு திருக் கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப் பாள். காலின் கீழ் சிம்மம் வீற்றிருக்கும். முத்தாரம் மன் கோயிலில் வைரவன், தெய்வக் கன்னி, நாககன்னி ஆகிய துணைத்தெய்வங்களும் அருள்பாலிப்பார்கள்.

முத்தாரம்மன் வைசூரி முதலான வெப்பு நோய்களிலிருந்து பாதுகாப்பவள் என்பது நம்பிக்கை. இந்த நோய்கள் வராமல் இருப்பதற்காக முத்தாரம்மனுக்கு நேர்ச்சை வைக்கும் வழக்கமும் உண்டு. அம்மனின் ஆலயத்தில் பொங்கலிட்டுப் படைப்பது, முளைப்பாரி எடுத்துவந்து சமர்ப் பிப்பது ஆகிய வழிபாடுகளும் ஆத்மார்த்தமாக நடைபெறுகின்றன இந்த அம்மன் குடியிருக்கும் கோயில்களில். மொத்தத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு ஒன்றித் திகழ்கிறாள் முத்தாரம்மன்.

- தரிசிப்போம்...  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism